கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம், ஞானாலயா நூலகம் எனப் பலவற்றுக்கும் சென்று பழைய இதழ்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பக்கம் பக்கமாகப் புரட்டி வாசித்துக் கு.ப.ரா.வின் கதைகளைத் திரட்டினேன். அவர் காலத்தில் வெளியான தொகுப்புகளையும் மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட நூல்களையும் அரிதின் முயன்று சேகரித்து ஒப்பிட்டுப் பார்த்தேன்.
இடைப்பட்ட காலத்தில் அ.சதீஷ் ‘கு.ப.ரா. கதைகள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார். அத்தொகுப்பிலும் பல குறைபாடுகள் இருந்தன. பத்திரிகைகளில் இருந்து சேகரித்த கதைகள், நூல்களின் முதல் பதிப்புகள், இறப்புக்குப் பிறகு வெளிவந்த நூல் பதிப்புகள், அ.சதீஷ் பதிப்பு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுக் கு.ப.ரா. கதைகளில் நேர்ந்திருந்த குழப்பங்களை எல்லாம் போக்கிக் கதைகளின் காலவரிசையை ஒருவாறாகத் தயாரித்தேன். நூலின் முன்பகுதி, பின்னிணைப்பு ஆகியவற்றை உருவாக்கப் பட்ட பாடு பெரிது. இவையெல்லாம் இன்று சொல்லும் போது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இந்த வேலைகளுக்குச் செலவளித்த காலம் என் ஆயுளில் கணிசமானது.
இன்று ஒருவர் என் பதிப்பை அடியொற்றிக் ‘கு.ப.ரா. கதைகள்’ என்னும் மின்னூலை உருவாக்கி இணையத்தில் இலவசமாக வழங்குகிறார். ஓரிரு நாளுக்குப் பிறகு விலை வைத்து விற்கக்கூடும். என் பதிப்புரை, முன்னுரைகளை நீக்கிவிட்டுக் க.நா.சு., ந.பிச்சமூர்த்தி ஆகியோர் கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறார். நூலின் அட்டையைப் போலி செய்திருக்கிறார். கதைகளின் மூலபாடமும் காலவரிசையும் என் பதிப்பில் உள்ளவையே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் கல்யாணராமன் வழியாகக் கண்டடைந்த கு.ப.ரா.வின் ‘வேறு நினைப்பு’ என்னும் புதிய கதை ஒன்றைக் காலச்சுவடு இதழில் வெளியிட்டேன். அக்கதையையும் எடுத்துச் சேர்த்துக் கொண்டார். என் பதிப்புக்கும் காலச்சுவடுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதை ‘அறிவுத் திருட்டு’ என்று நான் கருதுகிறேன். இல்லை, கு.ப.ரா.வின் கதைகளுக்கு நீங்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்று அவர் கேட்கிறார்.
பிற நூல்களுக்கும் என் பதிப்புக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு கதைகளின் மூலபாடம். ‘கனகாம்பரம்’ தொகுப்பின் முதல் பதிப்பு என்னைத் தவிர வேறு யாருக்கும் இதுவரை கிடைக்கவில்லை. அத்தொகுப்பின் மூலபாடத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறேன். அதே போல நான் பார்த்துச் சேகரித்த புதிய கதைகள் நூலில் உள்ளன. என் பதிப்புக்கென உருவாக்கிய காலவரிசை பிற பதிப்புகளில் இல்லை. தலைப்பகராதியைப் பின்னிணைப்பில் கொண்டதும் என் பதிப்புத்தான். இவ்வளவையும் அப்படியே பயன் கொண்டிருக்கும் மின்னூல் பதிப்பாளர் ‘எதற்கும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது’ என்று சட்டம் பேசுகிறார். சட்டம் அவருக்குச் சாதகமாக இருக்கலாம். பதிப்பு அறம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதுவேனும் எனக்குச் சாதகமாக இருக்காதா?
பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடித் தொகுத்துப் பிறருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்றால் எதற்குக் காலத்தையும் சிந்தனையையும் வீணாக்க வேண்டும்? சில நகாசு வேலைகள் செய்து ஒருவருடைய உழைப்பை இன்னொருவர் எளிதாகத் தமதாக்கிக் கொள்ள முடியுமானால் ஏன் உழைக்க வேண்டும்? இலவசமாகக் கிடைக்கிறதென்று புளகாங்கிதம் கொண்டு வாசகத் தரப்பு இதை ஆதரிக்குமானால் எதற்கு எழுத வேண்டும்?
—– 25-11-21