தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக் கூடாது; பாட வேண்டும்’ என்று ஆணை வெளியிட்டனர். பாடுவதில் ஏற்படும் சிக்கல் ஒருபோதும் முழுவதுமாகத் தீர்ந்துவிடாது. ‘கண்டமிதில் – கண்டமதில்’ என்பது போன்ற ஒலிப்புப் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. ஆகவே பதிவு செய்யப்பட்ட பாடலை ஒலிக்க விட்டுவிட்டு அனைவரும் சேர்ந்து பாடும் பழைய முறையே நல்லது.
தமிழ்த்தாய் வாழ்த்தை முன்வைத்து இப்போது நடைபெற்று வரும் விவாதங்கள் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தவையாக இருக்கின்றன. ஆனால் தமிழ் இலக்கியத்தின் நுட்பங்கள் சிலவற்றைப் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்திருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் கலிப்பா வகையைச் சேர்ந்த செய்யுள். ஒரு செய்யுளை மூன்று வடிவங்களில் எழுதலாம்.
வடிவம் 1 : தமிழ் மொழியின் புணர்ச்சி, யாப்பு ஆகிய இலக்கண அடிப்படையில் அமைந்த சந்தி பிரிக்காத வடிவம். இதுதான் மூல வடிவம் ஆகும்.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடு
மத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
வெத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே.
புணர்ச்சியில் சேரும் எழுத்துக்களை எல்லாம் அப்படியே எழுதுதலை இதில் காணலாம். இந்த வடிவத்தில் செய்யுளுக்குரிய சந்தம் (ஓசை) அமைந்திருக்கும். இப்பாடல் துள்ளலோசை கொண்டது.
வடிவம் 2 : பொருள் புரிந்துகொள்வதற்கு வசதியாகச் சந்தி பிரித்து எழுதும் முறை இது.
நீர்ஆரும் கடல்உடுத்த நிலமடந்தைக்(கு) எழில்ஒழுகும்
சீர்ஆரும் வதனம்எனத் திகழ்பரத கண்டம்இதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
தெக்கணமும் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்(து)உலகும் இன்பம்உற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழ்அணங்கே.
இதில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சந்தி பிரித்திருப்பதைப் பார்க்கலாம். சந்தி பிரித்திருந்தாலும் சீர்மாறாத வடிவம் இது. சிலர் சீர் பற்றிக் கவலைப்படாமல் சந்தி பிரித்து எழுதுவதும் உண்டு. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றைச் சந்தி பிரித்து வெளியிட்டுப் புகழ் பெற்றது ‘மர்ரே பதிப்பு.’ அதில் சீர்பிரிப்பு இருக்காது.
வடிவம் 3 : சில இடங்களில் சந்தி பிரித்தும் சில இடங்களில் பிரிக்காமலும் எழுதும் வடிவம். பல முறைகளாகப் பெருகிக் காணப்படுவது இது.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே.
இது ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பில் இருக்கும் வடிவம். ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி அமைந்த சந்திகள் பிரிந்திருக்கின்றன. ‘திருநாடும்’ என்பதன் ஈற்றில் உள்ள ‘ம்’, அடுத்த அடியின் தொடக்கத்தில் ‘அத்திலக’ என்பதில் உள்ள ‘அ’ ஆகிய இரண்டும் இயல்பாகச் சேர்ந்து ‘ம’ என்றாகும். ‘வாசனைபோல்’ என்பதன் இறுதியில் உள்ள ‘ல்’, அடுத்து வரும் ‘அனைத்துலகும்’ என்பதில் உள்ள ‘அ’ ஆகிய இரண்டும் இயல்பாகச் சேர்ந்தும் ‘ல’ என்றாகும். ‘அனைத்துலகும்’ என்பதில் உள்ள ‘ம்’, அடுத்து வரும் ‘இ’ உடன் சேர்ந்து ‘மி’ என்றாகும். அவற்றைப் பிரித்து,
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
என்று அவ்வடி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பிரிக்காமல் இருந்தால்,
மத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
என்றுதான் அவ்வடி இருக்கும். அதே போல ஓரிடத்தில் மட்டும் ‘வெத்திசையும் – எத்திசையும்’ என உடம்படுமெய்யும் பிரிந்திருக்கிறது. இது பெ.சுந்தரம் பிள்ளையின் முதற்பதிப்பிலேயே இருந்த வடிவமா, ச.வையாபுரிப் பிள்ளை கொண்ட வடிவமா என்று தெரியவில்லை. 1933இல் வெளியான சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பிலும் இதே வடிவமே உள்ளது. அதன் பின்னர் வெளியிட்டோர் தமக்கேற்பச் சந்தி பிரித்துள்ளனர். சான்றுக்கு மயிலை சீனி.வேங்கடசாமி சந்தி பிரித்திருக்கும் முறையை மட்டும் தருகிறேன். அது:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறும் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
‘திரவிடநற் றிருநாடும்’ என்பதைத் ‘திரவிடநல் திருநாடும்’ என்று இவர் பிரித்திருப்பதைக் காணலாம். வேறு சில மாற்றங்களும் உள்ளன.
17 ஜூன் 1970இல் வெளியிட்ட அரசாணையில் இருக்கும் வடிவம் இது:
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
தனிச்சொல்லாக நிற்கும்போது ‘ம்’ எழுத்தில் முடிபவற்றைச் செய்யுளிலும் அப்படியே பிரித்துக் கொடுத்திருக்கும் முறை இதில் உள்ளது. நீராரும், கெழிலொழுகும், சீராரும், பிறைநுதலும், தெக்கணமும், திருநாடும், அனைத்துலகும் ஆகிய சொற்களைக் கவனித்தால் விளங்கும். தரித்தநறுந், இருந்தபெருந் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் ‘ம்’ இல்லை. புணர்ச்சி விதிப்படி வரும் ‘ந்’ உள்ளது.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசிலா ஆகியோர் பாடியதுதான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மெட்டு எனக் கருதுகிறேன். அவர்கள் பாடிய முறை இது:
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே
உன்சீர் இளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே.
இதில் ‘ம்’ எழுத்தில் முடியும் அனைத்துச் சொற்களும் அவ்விதமே பாடப்படுவதைக் கவனிக்கலாம்.
சில இடங்களில் சந்தி பிரித்தும் சில இடங்களில் பிரிக்காமலும் உள்ள வடிவத்தில் இப்படிப் பலமுறைகள் உள்ளன. இவற்றில் எதையும் தவறென்று கூற முடியாது. பயன்படுத்துவோர் வசதிக்காகவோ, தேவைக்காகவோ தான் செய்யுளைச் சந்தி பிரிக்கிறோம். ஓரிடத்தில் சந்தி பிரிக்காமல் இருந்தாலே எனக்குப் புரிகிறது, சந்தம் நன்றாக இருக்கிறது என்று தோன்றினால் அதை அப்படியே வைத்துக்கொள்ளலாம். ஒருவர் தமக்கு எங்கு வேண்டுமோ அங்கு சந்தி பிரித்துப் பயன்படுத்தலாம்.
இந்தச் செய்யுளுக்கு மட்டுமல்ல. தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் உள்ள அனைத்துச் செய்யுள்களுக்கும் இப்படி மூன்று வகை வடிவங்கள் உள்ளன. முதல் வடிவம் இலக்கணமும் இலக்கியமும் பழுதறக் கற்றுத் தேர்ந்த புலமையோர்க்கானது. இரண்டாம் வடிவம் பொருள் அறியும் வேட்கை கொண்ட சாதாரணர்களுக்கானது. இத்தனைதான் என்று வரையறுத்துக் கூறவியலாத பலமுறைகள் உடைய மூன்றாம் வடிவம் அனைவரும் வெவ்வேறு தேவைகளுக்காகக் கையாள்வது. தமிழ்ச் செய்யுளை இப்படியெல்லாம் இருப்பதைக் காண்பதும் அறிந்துகொள்வதும் தமிழ் இலக்கியக் கல்வி கற்போருக்குப் பெரிதும் உதவும்.
000
சரி, நம் பங்குக்கு நாமும் ஒரு சர்ச்சையைத் தொடங்கி வைத்து இந்தக் கட்டுரையை முடிப்போம். ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பு, கழகப் பதிப்பு, மயிலை சீனி.வேங்கடசாமி பதிப்பு ஆகியவற்றில் உள்ள வடிவங்களை உற்று நோக்கினால் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்’ என்றிருப்பதைக் கவனிக்கலாம். அதாவது ‘திராவிடம்’ அல்ல; ‘திரவிடம்.’ பெ.சுந்தரம் பிள்ளை ‘திரவிடநல் திருநாடும்’ என்றுதான் எழுதியுள்ளார். எப்போது குறில் நெடிலாயிற்று என்று தெரியவில்லை. ச.வை., கழகம், மயிலை ஆகியோர் பதிப்புகளில் இருப்பது ‘திரவிடம்’ தான். பிறர் பதிப்புகளில் ‘திராவிடம்’ என்றுள்ளது. இப்பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்பதற்கு முன்னிருந்த மூல வடிவம் ‘திரவிடம்’ என்றும் வாழ்த்தாக ஏற்ற பின் மாறிய வடிவம் ‘திராவிடம்’ என்றும் சொல்லலாமா? தெரியவில்லை. இது ஒரு கருதுகோள்தான்.
—– 27-10-24.
பயனுள்ள கட்டுரை ஐயா. நிறைய தகவல்கள்!