தேர்தல்: கழிப்பறைப் பிரச்சினையைப் பேசலாமா?

 

 

தேர்தல்: கழிப்பறைப் பிரச்சினையைப் பேசலாமா?

 

1996ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தேன். அதன்பின் நடைபெற்ற 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிப் பெரும்பான்மையான தேர்தல்களில் அலுவலராகப் பணியாற்றியுள்ளேன். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகிய மூன்றுவகைத் தேர்தல் பணிகளுக்கும் சென்றுள்ளேன். பலவிதமான வாக்குச்சாவடிகள். பேருந்து வசதி ஏதுமற்ற உள்ளடங்கிய கிராமங்களுக்குச் சில கல் தொலைவு நடந்து சென்று சேர வேண்டியிருந்ததும் உண்டு. நெரிசல் மிக்க நகரச் சந்தடியிலும் இருந்ததுண்டு. எல்லா ஊர்களிலும் பள்ளிக்கூடங்களில்தான் வாக்குச்சாவடிகள். ஒரு பள்ளியில் குறைந்தது இரண்டு வாக்குச்சாவடிகள். ஏழெட்டு வாக்குச்சாவடிகள் ஒரே பள்ளியில் அமைந்திருந்ததையும் கண்டிருக்கிறேன்.

தேர்தல் அலுவலர்கள் இரண்டு இரவுகளும் ஒரு பகலும் அந்த வாக்குச்சாவடியில் கழிக்க வேண்டும். அவர்களுக்குரிய முக்கியமான பிரச்சினை குளியலறை, கழிப்பறை, தூங்க ஓர் இடம் ஆகியவை அமைவதுதான். வாக்குச்சாவடி அமைந்திருக்கும் அறையிலேயே படுத்துக்கொள்வார்கள். அப்போதுதான் பொருள்களுக்குப் பாதுகாப்பு. ஒரே இடத்தில் நிச்சயம் இரண்டு வாக்குச்சாவடிகள் இருக்கும் என்பதால் ஒன்றில் பெண்களும் இன்னொன்றில் ஆண்களும் படுத்துக்கொள்வார்கள். கிராமப்புறப் பள்ளிகளில் ஒரு துண்டை விரித்துப் போட்டு வெட்டவெளியில் படுத்து ஆனந்தமாகத் தூங்கலாம். கோடைகாலத்தில் தேர்தல் வருவதால் அந்த ஆனந்தம் கிடைக்கும். அறைக்குள் படுத்தே பழக்கமானவர்களுக்குக் கஷ்டம். மின்விசிறி இருக்காது; இருந்தாலும் ஓடாது. வியர்த்துக் கிடக்க வேண்டியதுதான். இரவு நல்ல தூக்கம் இல்லை என்றால் மறுநாள் பகல் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வது கடினம். நகரப் பள்ளிகளில் கொசுத்தொல்லை மிகுதி. வெளியில் படுக்கவே முடியாது. அறைக்குள் மின்விசிறி ஓடினால் அதிர்ஷ்டம். சிலர் கொசுவத்திச் சுருள்களைக் கையோடு கொண்டு வந்துவிடுவார்கள். நல்ல தூக்கம் வருகிறதோ இல்லையோ தூங்குவதற்கு ஓரிடம் அமைந்துவிடும்.

குளியலுக்கும் கழியலுக்கும் அலைக்கழிவது பெரும்பாடு. பள்ளியில் குளியலறை இருக்காது. கழிப்பறை இருக்கும்; சுத்தம் இருக்காது. குழாய் இருக்கும்; நீர் வராது. கிராமமாக இருந்தால் அருகில் இருக்கும் தண்ணீர்த்தொட்டிக்குப் போய்க் குளிக்கலாம். விவசாய நிலங்களில் கிணற்றுக்கு அருகிலேயே தண்ணீர்த் தொட்டி இருக்கும். முதல்நாளே அதை விசாரித்து வைத்துக்கொண்டால் மறுநாள் காலையில் போய்க் குளித்துவரலாம். வாய்ப்பில்லை என்றால் குளிக்காமலே இருந்துவிடலாம். குளிக்காமல் முடியாது என்று அலட்டுபவர்கள் பாடு கஷ்டம். முகம் கழுவிக்கொள்ள வசதி இருந்தால் போதும். சில இடங்களில் அதுவே கஷ்டம்தான்.  ஏதேனும் புதர் மறைவிலோ விவசாய நிலத்திற்குள்ளோ கழியலையும் முடித்துக்கொள்ளலாம். பெண்களுக்கு அவை சாத்தியமில்லை. அருகில் ஏதாவது வீட்டைத் தேட வேண்டும். அனுமதிக்கும் பெரிய மனம் கொண்ட சில வீட்டுக்காரர்கள் எங்கும் கிடைப்பார்கள். முதல்நாள் மதியத்திற்கு மேல் வாக்குச்சாவடிக்குப் போனதும் குளியலறை, கழிப்பறை ஏற்பாடு செய்துகொள்ள அலைவதுதான் முக்கியமான பணி. அவை அமைந்துவிட்டால் நிம்மதியோடு பணியாற்றலாம்.

இந்தச் சட்டமன்றத் தேர்தல் பணியின் போதும் குளியலுக்கும் கழிப்பறைக்கும் பட்ட பாடுகளைப் பற்றி பலர் முகநூலில் பதிவு செய்திருந்தனர். கவிஞர் கரிகாலன் (Karikalan  வெகுதூரத்தில் இருந்த  ஆற்றுக்குச் சென்று கடமைகளை முடித்ததை எழுதியிருந்தார்.  தோழர் உதயலட்சுமி (Udaya Lakshmi) தாம் பட்ட கஷ்டங்களை விரிவாகப் பதிவு செய்திருந்தார். சுகிர்தராணியும் எழுதியிருந்தார். இன்னும் பல பதிவுகளையும் பார்த்தேன். தோழர் மதிவண்ணன்  இதையொட்டி எழுதியிருந்த பதிவு முக்கியமானது. ‘தேர்தல் பணிக்காக ஒன்னேகால் நாள் மட்டுமே போய் பணியாற்றிவிட்டு வந்த வாக்குச்சுவடிகளில் (பெரும்பாலும் அரசுப்பள்ளிகள்) கழிவறை வசதிகள் இல்லை எனக் கண்ணைக் கசக்கும் ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே!’ என்று விளித்து ‘அவ்வாறான இடங்களில் பயிலும் மாணவிகள், மாணவர்கள் அந்தச் சிறிய வயதில் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருந்தால் அச்சிறாருக்கு மட்டுமல்ல, தங்களுக்குமே இது போன்ற தருணங்களில் இந்தச் சிரமங்கள் இருக்க மாட்டா என உணருவதில்லை. இருக்கும் காலம் வரை சுயநலமாய் இருந்துவிட்டு, வேண்டிய போது மட்டும் முனகுவதால் என்ன பயன்?’ என்று பதிவிட்டிருந்தார். அவர் கேள்வியில் நியாயம் இருக்கிறது. இத்தேர்தலில் அலுவலர் பணிக்கு நான் செல்லவில்லை என்றாலும் வாக்குச்சாவடி சார்ந்து சிலவற்றைச் செய்ய முடிந்தது.

நான் முதல்வராகப் பணியாற்றும் கல்லூரியில் மூன்று வாக்குச்சாவடிகள். வாக்குச்சாவடி அறைகளைத் தயார்ப்படுத்தும் பணிக்காக இரு ஆசிரியர்களைப் பொறுப்பாக நியமித்தேன்.  அவற்றைப் பார்வையிடக் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறையினர் எனச் சில மாதங்களுக்கு முன்னிருந்தே வந்து கொண்டிருந்தனர். வாக்குச்சாவடி எண்ணை அறைச்சுவரில் புதிதாக எழுதினர். மின்சார வசதியைப் பரிசோதித்தனர். வகுப்பறைகளில் பொதுவாக ப்ள்க் பாயிண்ட்டுகள் வைப்பதில்லை. ஆகவே அது வேண்டும் என்று கேட்டனர். ஏற்பாடு செய்து கொடுத்தோம். அவர்கள் கேட்காமலே விளக்குகள், விசிறிகள் ஆகியவை இயங்குகின்றனவா எனப் பரிசோதித்தோம். பெரும்பாலும் விசிறிகள் ஓடும். விளக்குகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பகல் நேரத்தில்தான் கல்லூரி என்பதால் விளக்குகளுக்கான அவசியமில்லை. இப்போது விளக்குகளைச் சரிசெய்தோம்.

தேர்தலுக்கு ஒருவாரம் முன்னால்  மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் என அறைக்கலன்கள் தேவை எனக் கூறினர். ஒவ்வொரு அறைக்கும் எத்தனை தேவை எனப் பட்டியல் கொடுங்கள் எனக் கேட்டேன். பல வாக்குச்சாவடிகளைப் பார்வையிடச் செல்லும் அவர்களிடம் அப்படி ஒரு தேவைப்பட்டியல் இல்லை.  ‘அதிகபட்சம் எத்தனை எத்தனை தேவை என்றாவது சொல்லுங்கள்’ என்றேன். என் முன்னாலேயே கணக்குப் போட்டனர். ஒவ்வொரு அலுவலருக்கும் ஒவ்வொரு மேஜை, ஒவ்வொரு நாற்காலி; இயந்திரங்களை வைப்பதற்கான மேஜைகள்; முகவர்கள் அமர்வதற்குப் பெஞ்சுகள் என ஒருவாறாக எண்ணிக்கையைக் கூறினர். தாளில் குறித்துக் கொண்டேன். வகுப்பறைகளில் இருந்த பெஞ்சுகள், டெஸ்குகளை வெளியே எடுத்தோம். ஆசிரியர்கள் பயன்படுத்தும் மேஜைகளைக் கேட்டு வாங்கினோம். ஒவ்வொரு மேஜையின் உள்புறத்திலும் உரிய ஆசிரியரின் பெயரை எழுதி வைத்தோம். பிறகு ஒப்படைக்க வசதியாக இருக்கும் என்பதற்காக.

கல்லூரியில் நிறையவே கழிப்பறைகள் உள்ளன. அவற்றைப் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலமாக நன்றாகப் பராமரிக்கவும் செய்கிறோம். அவற்றில் வாக்குச்சாவடிக்கு அருகில் இருக்கும் கழிப்பறைகளைப் பார்த்தோம். மூன்று வாக்குச்சாவடிக்கு நந்நான்கு பேர் வீதம் பன்னிரண்டு பேர் வருவர். கொரானோ தடுப்புப் பணிக்கான தன்னார்வலர்கள், பாதுகாப்புப் பணிக்கான முன்னாள் இராணுவத்தினர், காவலர்கள் எனக் கணக்கிட்டால் இருபது முதல் இருபத்தைந்து பேர் வரை தங்குவர் எனக் கணக்கிட்டோம். ஆண்களுக்கான பெரிய கழிவறை ஒன்றையும் பெண்களுக்கான பெரிய கழிவறை ஒன்றையும் தேர்வு செய்தோம். அவற்றுக்குத் தண்ணீர் வரும் குழாய்களை எல்லாம் பரிசோதித்தோம். சில ஒழுகல்களைச் சரிசெய்தோம்.  பொதுப்பணித்துறையினர் உதவினர்; எம் கல்லூரிப் பணியாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். எல்லோருமே தேர்தல் பணிக்குச் சென்று  கஷ்டங்களை  அனுபவித்திருந்ததால் ‘யான் பெற்ற துன்பம் வையகம் பெறக் கூடாது’ என்றே கருதினர். ஒவ்வொருவரும் தத்தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டே பணிகளை மேற்கொண்டனர்.

சிறுநீர் கழிப்பதற்கான தனியிடம், பேஷின் உள்ள கழிப்பறைகள் எல்லாம் இருந்தன. குளியலறை இல்லை. கல்லூரியில் ஆசிரியர்களோ மாணவர்களோ குளிப்பதற்கான தேவையில்லை. ஆகவே குளியலறை வைப்பதில்லை என்பது புரிந்தது. ஆண்கள் கழிப்பறையில் ஓர் அறை பேஷின் இல்லாமல் இருந்தது. சரி, அதைக் குளியலறையாகக் கொள்ளலாம். மகளிர் கழிப்பறையில் குளியலறை ஆக்குவதற்கான வாய்ப்பு ஏதுமில்லை. பெண் பேராசிரியர்கள் இருவரை அழைத்து  ‘என்ன செய்யலாம்?’ என்று கேட்டேன். குளிப்பதற்கு வாளியும் கோப்பையும் வைத்துவிடலாம் என்றும் கழிப்பறையையே குளியலறையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர்கள் சொன்னார்கள். எனக்குத் திருப்தி வரவில்லை. ஆனால் குளிக்க வாளியும் கோப்பையும் தேவை என்பதை அவர்கள் பேச்சே நினைவுபடுத்தியது. கொரானோ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வாங்கியிருந்த அலுமினிய வாளிகள், கோப்பைகளை உரிய இடங்களில் வைத்தோம். தேர்தலுக்குப் பிறகு பார்த்ததில் அவற்றில் ஒன்று காணாமல் போனதும் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கத் தேடியதும் தனிக்கதை.

பெண்கள்  கழிப்பறைக்குள் தண்ணீர்த்தொட்டி ஒன்று இருந்தது. அதில் திருகுகுழாயும் இருந்தது. கதவைத் தாழிட்டுக் கொண்டு அந்தத் தொட்டியிலும் குளித்துக் கொள்ளலாம் என்றும் பெண்கள் யோசனை சொன்னார்கள். குளியலறைச் சுவர்களுக்குள் குளித்துப் பழகியவர்கள் என்னதான் பொதுக்கதவைத் தாழிட்டுக் கொண்டாலும் தண்ணீர்த் தொட்டிக்கு அருகில் நின்று குளிப்பதை வெட்டவெளியி போல உணர மாட்டார்களா என்பதும் பல கழிப்பறைகள் உள்ள போது ஒருவர் மட்டும் தாழிட்டுக் கொண்டால் மற்றாவர்கள் காத்திருக்க வேண்டுமே என்பதும் என் எண்ணம்.  என் முகத்தில் திருப்தியில்லை என்பதை அறிந்த பெண் பேராசிரியர்கள் ‘ஒவ்வொரு எடத்துல ஒன்னுமே இருக்காது சார், நாம இவ்வளவு பண்ணித் தர்றம், போதும் சார்’ என்றார்கள். என்றாலும் பிற கழிப்பறைகளையும் பரிசோதித்தோம். வேறொன்றில் பேஷின் வைக்காத ஓர் அறை இருந்தது. அது சற்றே தூரத்தில் இருந்தாலும் பரவாயில்லை, அதைக் குளியலறையாகப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லலாம் என்று முடிவெடுத்தோம். இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்கும் போது குளியலறை உருவாக்க வேண்டும் என்று நினைவில் கொண்டேன்.

கழிப்பறைகளுக்குச் செல்லும் பாதையிலும் கழிப்பறைக்குள்ளும் விளக்குகள் எரியவில்லை. இணைப்புகள் இருக்கின்றன. இரவில் பயன்படுத்தும் தேவை இல்லாததால் விளக்குகள் எரிகிறதா என்று அதுவரை கவனிக்கவில்லை. கல்லூரியில் இயந்திரக் கம்மியர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் விளக்குகளைப் பற்றி நினைவூட்டினார். அவ்விளக்குகளைப் பரிசோதித்து எத்தனை காலமாயிற்றோ தெரியவில்லை. முழுமையாக மாற்ற வேண்டியிருந்தால் உடனே முடியுமா என்று கொஞ்சம் சோர்ந்து போனேன். ‘பாக்கறன் சார்’ என்று சொன்ன இயந்திரக் கம்மியர் சிறுசிறு பழுது நீக்கம் மூலமாகவே விளக்குகள் சிலவற்றை எரியச் செய்துவிட்டு என்னை அழைத்துக் காட்டினார். ஏழெட்டுக் கழிப்பறைகளும் சிறுநீர்க் கழிப்பிடங்களும் கொண்ட பெரிய பகுதிக்கு ஒரே ஒரு குழல்விளக்குத்தான். கழிப்பறைகளின் மேல்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் ஒரே விளக்கு நல்ல வெளிச்சம் கொடுத்தது. வழிகளிலும் போதுமான அளவு விளக்குகள் எரிந்தன. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் காலையில் ஒருமுறை கழிப்பறைகளைச் சுத்தம் செய்து தரும்படி சொன்னேன். அலுவலர் ஒருவர் சுய ஆர்வத்தில் வாசனைத் திரவியம் ஒன்றையும் தெளித்து வைத்தார். ஒரு முயற்சி எடுக்கும் போது ஒவ்வொருவரும் முன்வந்து தமக்கென்று ஒரு பங்கை எடுத்துக்கொண்டு அதை நிறைவேற்றுவார்கள் என்பதை உணர்ந்தேன்.

இந்தப் பணிகள் சாதாரணமானவைதான்.  வீட்டுக்கு விருந்தினர் ஒருவர் வருகிறார் என்றால் அவருக்காக என்று சொல்லிக்கொண்டு வீட்டைத் தயார் செய்வோம் அல்லவா? ஊரில் திருவிழா என்றால் வீட்டைச் சுத்தம் செய்வோம் அல்லவா? அது போலத்தான். தேர்தல் திருவிழா என்றுதானே சொல்கிறார்கள்? வாக்குச்சாவடியைச் சாக்காக வைத்துக்கொண்டு சிறுசிறு பழுதுகளை எல்லாம் சரிசெய்தோம். கல்லூரியில் எல்லோரும் ஒத்துழைத்தார்கள். என் எண்ணத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டார்கள். அவர்களிடம் அடிக்கடி நான் சொன்ன ஒரே ஒரு வாசகம்: ‘நம்ம கல்லூரிக்கு வர்றவங்க எல்லா வசதியும் நல்லா இருக்குதுன்னு சொல்லனும். கல்லூரிக்கு நல்ல பேர் கிடைக்கணும்.’

பார்வையிட வந்த அலுவலர்கள் அரசியல்வாதிகளின் பெயர் பொறித்த கல்வெட்டுகளை மறைக்கச் சொன்னார்கள்; கல்லூரி நுழைவாயிலுக்கு நேராக இருந்த அண்ணா சிலையைத் துணியைப் போட்டு மூடச் சொன்னார்கள். கழிப்பறை, குளியலறை பற்றி ஒருவருமே கேட்கவில்லை. அவ்வசதிகளைப் பற்றி நானாகச் சொன்ன போதும் அக்கரை இல்லாமலே  கேட்டார்கள். வாக்குச்சாவடி அறைகளைப் பார்வையிட்ட எவரும் கழிப்பறைகளைப் பார்வையிட வேண்டும் என்று கேட்கவில்லை. அவ்வசதிகளைச் செய்ய வேண்டும் என்றும் யாரும் சொல்லவும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை வாக்குச்சாவடி அறைதான் முக்கியம். மற்றவற்றை அலுவலர்களே பார்த்துக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கழிப்பறைப் பிரச்சினையைப் பொதுவெளியில் பேசுவதில் எல்லோருக்கும் தயக்கம் இருக்கிறது.  பார்வையிட வருவோர் அடிப்படை வசதிகளைப் பற்றியும் விசாரிக்க வேண்டும். விசாரித்தால் நிறுவனத்தைச் சேர்ந்தோர் குறைந்தபட்ச முயற்சியையாவது எடுப்பார்கள். அதிகாரிகள் விசாரிக்கிறார்கள் என்றால் அதற்குக் கட்டாயம் விளைவுகள் இருக்கும்.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு ஒருமுறை கல்லூரிக்குச் சென்றேன். தேர்தல் பணிக்காக வந்திருந்த அலுவலர்கள், காவலர்கள் என எல்லோரையும் பார்த்துப் பேசினேன். பெண்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் இருந்தனர். பிற்பகலிலேயே அங்கு வந்துவிட்ட பலர் கழிப்பறைகளைப் பயன்படுத்தியிருந்தனர். எல்லோரும் வசதிகள் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். ஏதேனும் தேவை என்றால் இரவுக் காவலரிடம் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு வந்தேன்.

இவற்றை எந்தப் பெருமைக்காகவும் சொல்லவில்லை. வாக்குச்சாவடி இருக்கும் கல்வி நிறுவனம் பள்ளியாக இருந்தாலும் கல்லூரியாக இருந்தாலும் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சிறிது முயற்சி எடுத்தால் போதும்; இவ்வசதிகள் எல்லாவற்றையும் தாராளமாகச் செய்து தரலாம் என்னும் நோக்கத்தில் தான் இவற்றைச் சொல்கிறேன். செலவு அதிகமாகாது. கட்டிடப்  பராமரிப்புக்கென அரசு நிதி ஒதுக்கீடு இருக்கிறது. பள்ளிகளுக்கு மிகவும் குறைந்த அளவு ஒதுக்கீடே இருக்கலாம். என்றாலும் வேறு வழிகள் இருக்கின்றன. பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியிலிருந்து செலவு செய்யலாம். ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளலாம். உள்ளூர்ப் பிரமுகர்களிடம் இந்தப் பணிகளைச் செய்து தாருங்கள் என்றும் கேட்கலாம். வழிகள் எத்தனையோ இருக்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெரும்பாலும் கழிப்பறை வசதிகள் இருக்கின்றன. பல்வேறு திட்டங்கள் மூலமாகக் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் அவற்றைப் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டி வைத்திருப்பார்கள். மாணவர்கள் பயன்படுத்தினால் ‘அசிங்கம் பண்ணி விடுவார்கள்’ என்று நினைப்பார்கள். ஆசிரியர்களுக்கென்று இருக்கும் கழிப்பறைகளைப் பூட்டி வைத்துக்கொள்வார்கள். இருக்கும் கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்க மாட்டார்கள். பராமரிப்பது பெரிய விஷயமல்ல. அதற்குக் குறைந்தபட்ச முயற்சி போதுமானது. ஆனால் பராமரிப்பை அரசுதான் செய்ய வேண்டும் என்பார்கள். அரசு என்பது கண்ணுக்குப் புலப்படாத நுண்பொருள் அல்ல. அரசுப்பணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அதன் அங்கம்தான். அங்கங்கள் அசைய வேண்டும். அவ்வளவுதான்.

—–  14-04-2021