தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, கல்விக்கும் பெங்களூரு பிரபலம். நகருக்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிலும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன; கல்லூரிகளும் அதிகம். கலை அறிவியல் துறைகளில் விதவிதமான படிப்புகள் இங்கே உள்ளன. ஆங்கிலத் துறை உள்ள நிறுவனங்களில் என் படைப்புகளைப் பாடத்தில் வைக்கிறார்கள். ஆய்வுத் திட்டக் கட்டுரை சமர்ப்பிக்க மாணவர்கள் என் நாவல்களைத் தேர்வு செய்கிறார்கள். பாடத்திட்டத்தில் சுதந்திர வாசிப்பு என்றொரு கூறும் உள்ளது. அதற்கும் மாணவர்கள் என் படைப்புகளை வாசிக்கிறார்கள்.
கர்நாடகம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநில மாணவர்கள் இந்நிறுவனங்களில் மிகுதியாகப் பயில்கிறார்கள். அவர்கள் வாசிப்புக்கு என் படைப்புகள் உகந்தவையாக இருக்கின்றன போல. ஆகவே அவ்வப்போது ஏதாவது கல்வி நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கேரளத்திற்கு அடுத்து இலக்கியக் கூட்டங்களுக்காக அதிகம் பயணம் செய்யும் ஊர் பெங்களூருதான். மாணவர்களிடம் பேசுதல் பருவத்தில் விதைப்பது போல என்பதால் எனக்கு விருப்பமானது. பெரும்பாலும் ஒத்துக்கொண்டு பேசச் செல்வேன். சில நிறுவனங்கள் இலக்கிய விழாக்களையும் நடத்துகின்றன. அவற்றில் மாணவர்களும் ஆசிரியர்களும் நல்ல பங்களிப்புகளைச் செய்வார்கள்.
தமிழ்நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள ‘அல்லயன்ஸ் பல்கலைக்கழகம்’ கடந்த ஆண்டு அப்படிச் சிறிதாகத் தொடங்கிய இலக்கிய விழா இவ்வாண்டு பல நாட்டு எழுத்தாளர்களை அழைக்கும் அளவு விரிவாகியிருக்கிறது. ஆசிய இலக்கியத்தை மையமாக வைத்துக் கிட்டத்தட்ட நூற்றிருபது எழுத்தாளர்களை அழைத்து மிகப் பெரிய விழாவை நடத்தினர். பிப்ரவரி 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் விழா. என்னை அழைத்தவர் இந்தியாவில் body building பற்றி Muscular India: Masculinity, Mobility and the New Middle Class என்னும் பிரபலமான நூலை எழுதிய மைக்கேல் பாஸ் (Michiel Bass). நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரும் பேராசிரியருமான அவர் இந்தியாவில் கள ஆய்வு செய்து இந்நூலை எழுதியுள்ளார். அவரை ஏற்கனவே ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சந்தித்திருக்கிறேன். மூன்று நாட்களும் ஒவ்வொரு அமர்வில் பங்கேற்க வேண்டும் என்று அழைத்தார். இரண்டு நாள், இரண்டு அமர்வு போதும் என்று சொன்னேன்.
பல்கலைக்கழக வளாகம் மிகப் பெரிது. கலை அறிவியல், பொறியியல், சட்டம், நிர்வாக மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளைக் கொண்டிருக்கிறது. மரங்களுக்கு இடையே பெரும் பெரும் கட்டிடங்கள் மறைந்திருக்கும் வளாகம். அழகான வடிவமைப்பு. பலவிதமான வசதிகள். கலை அறிவியல் படிப்புகளை ‘லிபரல் ஆர்ட்ஸ்’ என்கிறார்கள். அதைத் தமிழில் ‘சுதந்திரக் கலைகள்’ என்று சொல்லலாமா? தமிழ்நாட்டில் ‘கலைக்கல்லூரி’ என்னும் பெயருக்குள் இவை அடங்கிவிடுகின்றன. இப்போது அது போதவில்லை என்று கருதி ‘கலை அறிவியல் கல்லூரி’ என்கிறார்கள். மருத்துவம், பொறியியல் ஆகியவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தை இத்தகைய கலை இலக்கியப் படிப்புகளுக்குத் தமிழ்நாடு தருவதில்லை. ஆகவே பல மாணவர்கள் பெங்களூருவை நாடிச் செல்கின்றனர். அல்லயன்ஸ் பல்கலைக்கழகத்தில் பலவிதமான கலைப்பாடப் படிப்புகள் உள்ளன. படைப்பிலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பு இருக்கிறது. இரண்டு மூன்று துறைகள் சேர்ந்து ஒருங்கிணைந்த பட்டப்படிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு படிப்புக்கும் செலவாகும் தொகையைக் கேட்டால் தலைசுற்றிவிடும்.
இங்கே தரமான கல்வி கிடைக்கிறது. உயர்கல்வி வாய்ப்புகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கிடைக்கவும் வழிவகை உண்டு. மாணவரின் சகல திறமைகளும் வெளிப்படவும் அவற்றை வளர்த்துக் கொள்ளவும் ஏற்றவாறு பாடத்திட்டமும் பாடத்திட்டம் சாரா நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. அரசு கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியனாகிய எனக்கு என் மாணவர்களை நினைத்துப் பெருவருத்தம் உண்டாயிற்று. இங்கே கிடைக்கும் வசதி வாய்ப்புகளில் பத்தே பத்து விழுக்காடு என் மாணவர்களுக்குக் கிடைத்தால் எவ்வளவோ முன்னேறிவிடுவார்கள் என்று தோன்றியது. பணம் இருப்பவர்களுக்கே தரமான கல்வி என்னும் நிலையை நோக்கித்தான் நாடு செல்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதி எல்லாம் பணத்தின் முன் என்னவாகுமோ தெரியவில்லை.
இலக்கிய விழாவின் முதல் நாள் அமர்வு ‘வாய்ஸஸ் ஆப் த வெர்னாகுலர்’ என்னும் தலைப்பில் நடந்தது. வசுதேந்த்ரா (கன்னடம்), வி.ஜே.ஜேம்ஸ் (மலையாளம்), சந்தன் பாண்டே (இந்தி) ஆகியோருடன் நானும் பங்கேற்றேன். கன்னட எழுத்தாளராகிய வசுதேந்த்ரா சிறுபதிப்பகம் ஒன்றையும் நடத்துபவர். ஏற்கனவே எனக்கு நல்ல அறிமுகம். அவருடைய அம்மாவைப் பற்றிக் கன்னடத்தில் எழுதிய நூலை மலிவு விலையில் வெளியிட்டிருக்கிறார். அது பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கிறது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு வரவிருக்கிறது. நாவல், சிறுகதை எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். இலக்கிய விழாக்களில் சரமாரியாகப் பேசும் திறன் கொண்டவர்.
வி.ஜே.ஜேம்ஸ் மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். விண்வெளித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அறிவியல் அறிஞர். அவர் எழுதிய ‘ஆண்டிகிளாக்’ நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி 2021ஆம் ஆண்டு ஜேசிபி பரிசின் இறுதிப்பட்டியலில் இருந்தது. தத்துவார்த்த விசாரணை கொண்ட படைப்புகளை எழுதுகிறார். ஆறேழு நாவல்களையும் பல சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அவர் படைப்புகள் எதுவும் இன்னும் தமிழில் வரவில்லை என்பது ஆச்சரியம். ‘யாரும் கேட்கவில்லை’ என்றார். ஆண்டிகிளாக் நாவலை யாரேனும் மொழிபெயர்த்தால் நல்லது. அவரைக் கேரள நிகழ்வுகளில் சந்தித்ததில்லை; இங்குதான் முதலில் சந்தித்தேன்.
சந்தன் பாண்டே பெங்களூருவில் வசிக்கும் இந்தி எழுத்தாளர். சிறுகதை, நாவல் ஆகியவற்றை எழுதுபவர். ஆங்கிலத்தில் ஒருநாவல் மொழிபெயர்ப்பாகி உள்ளது. அவரிடம் இந்தி இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் அமர்வை ஒருங்கிணைத்தவர் அப்பல்கலைக்கழகப் பேராசிரியர் லிஜூ குரியகோஸ். ‘வெர்னாகுலர் லிட்டரேச்சர்’ என்று இந்திய மொழி இலக்கியங்களை அடையாளப்படுத்துவது எப்படிச் சரியாகும் என்னும் கேள்வியை முன்வைத்தேன். அது பேசுபொருளாயிற்று. ஒருங்கிணைப்பாளர் அதற்குப் பின் ‘இந்திய மொழிகள்’ என்றும் ‘இந்திய மொழி இலக்கியம்’ என்றும் சொல்லத் தலைப்பட்டார். அவரையறியாமல் இயல்பாக ‘வெர்னாகுலர்’ வந்தாலும் சுதாரித்து மாற்றிக்கொண்டார்.
ரீஜனல், வெர்னாகுலர் என்றெல்லாம் சொல்வது ஆங்கில இலக்கியத்தை முதன்மையாகக் கருதுவோர் இயல்பு. அப்படித்தான் மரபாகச் சொல்லி வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் சொல்முறையாக இருந்து இன்றுவரை அதுவே வழங்கி வருகிறது. உலகச் செம்மொழிகளில் ஒன்று தமிழ். இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய வளம் கொண்டது. அதை ரீஜனல் லாங்க்வேஜ் என்றும் அதில் எழுதுவதை வெர்னாகுலர் லிட்டரேச்சர் என்றும் சொல்வது எப்படிச் சரியாகும் என்னும் என் கேள்வி அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது. இந்த வழக்கு எழும் இடங்களில் எல்லாம் என் கருத்தை வலுவாக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஊதும் சங்கை ஊதுவோம்.
நாற்பத்தைந்து நிமிடத்தில் ஐவர் பேச வேண்டும் என்றால் ஆளுக்கு ஏழெட்டு நிமிடம் கிடைத்தால் அதிகம். அதிலும் சிலர் மற்றவர்களின் நேரத்தைப் பறித்துக்கொள்ளும் பேச்சாளர்களாக இருப்பார்கள். இத்தகைய அமர்வுகளில் என் கருத்தை முடிந்த அளவு சுருக்கமாகத் தெரிவித்துப் பிறருக்கு வழிவிடுவதே என் வழக்கம். அதே போல உரையாளர்களுக்குள் விவாதம் ஏற்பட்டால் அதற்கு முடிவு இருக்காது. ஒவ்வொருவர் கருத்தையும் வெளிப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஐவர் பேசிய பிறகும் பார்வையாளர் கேள்விகளுக்கு நேரம் கிடைத்தது. திருப்தியான அமர்வு.
—– 25-02-25
“இங்கே கிடைக்கும் வசதி வாய்ப்புகளில் பத்தே பத்து விழுக்காடு என் மாணவர்களுக்குக் கிடைத்தால் எவ்வளவோ முன்னேறிவிடுவார்கள் என்று தோன்றியது. பணம் இருப்பவர்களுக்கே தரமான கல்வி என்னும் நிலையை நோக்கித்தான் நாடு செல்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதி எல்லாம் பணத்தின் முன் என்னவாகுமோ தெரியவில்லை’
சிறப்புங்கய்யா நன்றியய்யா