தமிழ் உலகச் செம்மொழிகளில் ஒன்று என நாம் தொடை தட்டிக் கொண்டிருந்தாலும் இதை எளிதாக அணுகுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் போதுமான கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. ஓரளவு அகராதிகள் இருக்கின்றன. பல அகராதிகள் புதுப்பிக்கப்படவில்லை. தற்காலத் தமிழில் எத்தனை சொற்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி ஆளாளுக்குக் கணக்குகளை அடித்துவிடுகிறார்கள். ஆதாரமான எந்தப் புள்ளிவிவரமும் இல்லை. இருக்கும் அகராதிகளையும் பயன்படுத்துவோர் குறைவு. ஆங்கிலச் சொற்களுக்குப் பொருள் காண்பதற்குத்தான் அகராதி தேவை என்னும் எண்ணம் பெரும்பாலோருக்கு இருக்கிறது. தமிழ்ச் சொல்லுக்குத் தமிழிலேயே பொருள் பார்க்கவும் அகராதியைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுவதேயில்லை. அதுதான் தாய்மொழி ஆயிற்றே, அதற்கு எதற்கு அகராதி என்னும் அசட்டை.
தமிழ் மனோபாவம் இப்படி இருந்தாலும் அகராதிகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சந்தை மதிப்பு இல்லை என்றாலும் எப்படி அகராதிகள் வருகின்றன? தனிமனித ஆர்வம் இதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. அதைத் தாண்டிச் சில நிறுவனங்கள் எங்காவது ஓரளவு நிதியுதவி பெற்று அகராதிகளை உருவாக்குகின்றன. அப்படியான நிறுவனம்தான் ‘மொழி அறக்கட்டளை.’ அந்நிறுவனம் இதுவரைக்கும் மரபுத்தொடர் அகராதி (1997), தமிழ் நடைக் கையேடு (1999), சொல் வழக்குக் கையேடு (2005) ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர். இறுதியாக வெளியானது ‘தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி’ (2016) ஆகும். அகராதி என்றால் சொல்லுக்குப் பொருள் தருவது என்னும் எண்ணத்தை மாற்றும் நூல்கள் இவை. வெவ்வேறு பயன்பாட்டு வகையில் அகராதி தயாரிக்கலாம் என்பதற்கு இவை சான்று.
தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியா? இப்படி ஒருபொருளில் அகராதி என்பது வியப்பளிக்கும் விஷயம். மெய்ப்புப் பார்க்கும் போது எந்தெந்தச் சொற்களைச் சேர்க்கலாம், எதையெதைப் பிரிக்கலாம் என்னும் குழப்பம் வரும். ‘அதைக் கொண்டு வா’ என்னும் தொடரில் ‘கொண்டு’வைப் பிரிக்க வேண்டும். அது இங்கே முதன்மை வினை. ‘பேசிக்கொண்டு போனான்’ என்றால் ‘கொண்டு’வைச் சேர்க்க வேண்டும். இங்கே துணை வினை. சேர்ந்துதான் வரும். இப்படிப்பட்ட பிரிப்பு, சேர்க்கை பற்றி ஓர் இயல் ‘தமிழ் நடைக் கையேடு’ நூலில் அமைந்திருக்கிறது. அதற்கு மேல் இதென்ன ‘சொற்சேர்க்கை அகராதி’ என்றுதான் நினைத்தேன்.
ஆம். இது தமிழ் மொழிக்கு வேறுபட்ட ஓர் அகராதி. அதேசமயம் நவீன காலப் பயன்பாட்டுக்கு மிகவும் அவசியமானது. நவீன உரைநடையைத் தரவாகக் கொண்டு பெயர்ச்சொற்களைத் தலைப்புச் சொற்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு பெயர்ச்சொல்லின் முன்னும் பின்னும் பெயரடையாகவோ வினையாகவோ எந்தெந்தச் சொற்கள் சேர்ந்து வரும் என வரையறுத்து அவற்றை வரிசையாக்கிச் சான்றுத் தொடர்களையும் கொடுத்துள்ளனர்.
அகராதியின் முதற்சொல் ‘அக்கறை.’ அக்கறை வந்திருக்கிறது/பிறந்திருக்கிறது, அக்கறை ஏற்பட்டிருக்கிறது, அக்கறை கொள், அக்கறை செலுத்து, அக்கறை காட்டு, அக்கறையை வெளிப்படுத்து, அக்கறை எடு, அக்கறையோடு கேள்/விசாரி, அக்கறையுடன் கவனி ஆகிய முறைகளில் இச்சொல்லுடன் வினைச்சொற்கள் சேர்ந்துவரும். வா, ஏற்படு, கொள், செலுத்து, காட்டு, வெளிப்படுத்து, எடு, கேள், விசாரி, கவனி ஆகியவையே அவை. எத்தகைய இடங்களில் இவ்வினைச்சொற்கள் சேர்கின்றன என்பதைச் சான்றுத் தொடர்கள் தெளிவுபடுத்துகின்றன. அதற்கேற்ப ஒவ்வொரு வினைச்சொல்லையும் தனித்துக் கொடுத்துப் பின் சான்றைத் தந்துள்ளனர்.
வினைக்கு அடுத்து இச்சொல்லுக்கு முன்னால் சேரும் பெயரடை, பெயர் ஆகியவற்றை வரிசைப்படுத்திக் கொடுத்துள்ளனர். முழு அக்கறை, பெரும் அக்கறை, போதிய அக்கறை, கூடுதல் அக்கறை, மிகுந்த அக்கறை, தீவிர அக்கறை, உண்மையான அக்கறை, சமூக அக்கறை, தனிப்பட்ட அக்கறை, துளி அக்கறை ஆகியவை அவை. முன்னொட்டாக வருபவற்றிற்குச் சான்றுத் தொடர்கள் இல்லை. அவற்றையும் கொடுத்திருந்தால் சூழல் சார்ந்த பொருண்மையில் எந்தச் சொல் எவ்விடத்தில் பயன்படும் எனத் தெளிவுபட்டிருக்கும். அகராதிச் சுருக்கம் கருதி அவற்றை விட்டிருக்கலாம்.
இவை மட்டுமல்ல, ஒவ்வொரு சொற்சேர்க்கைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பும் உள்ளது. ஆகவே இருமொழி அகராதி வகையில் சேர்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பு எதற்கு? சொற்சேர்க்கை பற்றிய குழப்பம் தமிழ் மொழியைக் கற்பவர்களுக்கு வரும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்போருக்கு வரும். இவ்விரு வகையினர்க்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு பயன்படும். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்போரும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்போரும் இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
கையில் ஓர் அகராதி இருந்தாலும் அதைப் பலருக்குப் பயன்படுத்தத் தெரிவதில்லை. காரணம் அகராதி என்றாலே சொல்லுக்குப் பொருள் தருவதுதான் என்ற ஒற்றைப் பார்வை. வெவ்வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்தும் வகையில் பலவகை அகராதிகள் உள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நூலின் முன்பகுதியில் உள்ள முன்னுரை முதலியவற்றை வாசித்தால் தெளிவாகும். பெரும்பாலோர் அதை வாசிப்பதில்லை. வாசிக்காதோர் கையில் அகராதி இருப்பது நாய் பெற்ற தெங்கம்பழம் போலத்தான்.
இவ்வகராதிக்கும் விரிவான முன்னுரையை இதன் முதன்மைப் பதிப்பாசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் எழுதியிருக்கிறார். அகராதியின் இரண்டு நோக்கங்களை முதலில் கூறுகிறார். ஒவ்வொரு நோக்கத்தையும் இவ்வகராதி எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறது என்னும் கோணத்தில் இதன் அமைப்பை விவரிக்கிறார். பதிவு அமைப்பு விளக்கமும் அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வகராதியைப் பயன்படுத்துவோர் நான்கைந்து முறை இம்முன்னுரையை வாசிக்க வேண்டும்; அட்டவணையைப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதன்பின் அகராதியைப் பயன்படுத்துவது எளிது.
ஆங்கிலத்தில் Heavy rain, Strong wind என்னும் வழக்குகள் இருக்கின்றன. அவற்றைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? பலத்த மழை, பலத்த காற்று என இரண்டுக்கும் ‘பலத்த’ போடலாம். ஆனால் கனமழை, கனத்த மழை என்றும் எழுதலாம். கனத்த காற்று, கன காற்று எனச் சொல்லலாமா? அது சரியாக வராது. பலத்த காற்றுதான். இத்தகைய விளக்கங்கள் முன்னுரையில் இருக்கின்றன.
இன்று தாய்மொழி எனினும் தமிழைப் பிழையற எழுதுவோர் குறைவு. எந்தச் சொல்லுடன் பொருத்தமான இன்னொரு சொல் சேரும் என்பதைப் பற்றிக் குழப்பம் நிறைந்திருக்கிறது. அக்குழப்பத்தைப் போக்கும் அகராதி இது. அதே போல இன்று ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்போர் தேவையும் மிகுந்து வருகிறது. மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இவ்வகராதி மிகச் சிறந்த கருவி நூலாக விளங்கும்.
அகராதித் துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட அறிஞர் பா.ரா.சுப்பிரமணியன் தலைமையில் தகுதியானவர்களைக் கொண்ட குழு இவ்வகராதியை உருவாக்கியுள்ளது. 2016இல் வெளியான இதன் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு இப்போது வெளிவந்திருக்கிறது. பாரதி புத்தகாலயம் வெளியீடு. விலை: ரூ.625/-
—– 28-12-24
மிகவும் பயனுள்ள மற்றும் பின்பற்றும் அவசியம் உணர்த்தும் கட்டுரை. மகிழ்ச்சி ஐயா.