இத்தாலியின் வடபகுதியில் உள்ள பிரெசியா என்னும் ஊரில் சங்கீதா வசிக்கிறார். அங்கிருந்து ரயிலில் பிளோரன்ஸ் வர இரண்டரை மணி நேரமாகும். அன்று அதிகாலை ரயிலேறி ஒன்பதரை மணிக்கெல்லாம் ஹோட்டலுக்கு வந்துவிட்டார். நாங்களும் தயாராக இருந்தோம். நேரில் முதல்முறையாகச் சந்திக்கிறோம். வெகுநாள் பழகியவர் போல இயல்பான சந்திப்பாக இருந்தது. இத்தாலிக்கு வேலை நிமித்தம் வந்திருப்பார் என்றிருந்தேன். சமூக ஊடகம் மூலம் அறிமுகமான இத்தாலிக்காரரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு மருமகளாக இத்தாலிக்கு வந்திருக்கிறார்.
அங்கிருக்கும் பள்ளியில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியராகத் தற்காலிகப் பணி. இத்தாலி மொழியில் பட்டப்படிப்புப் படித்திருந்தால்தான் அந்நாட்டில் நிரந்தர வேலை பெற முடியும். பிறமொழி வழி பயின்றவர்களுக்கு அங்கே நிரந்தர வேலை தருவதில்லை. தனியார் நிறுவனங்களில் எப்படி என்று தெரியவில்லை. அரசுப் பணிகளில் அதுதான் விதி. தம் மொழிக்கும் தாய்மொழி வழிக் கல்விக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வெளியிலிருந்து ஒருவர் தம் நாட்டுக்கு வந்தாலும் இத்தாலி வழியில்தான் கற்க வேண்டும். ஆங்கிலத்தை விரும்புவோர் ஒருமொழியாக மட்டும் கற்கலாம். மலேசியாவில் பயின்றவர் சங்கீதா. இத்தாலி மொழி வழியாகப் பயிலவில்லை. ஆகவே தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கணவர், குழந்தையுடன் பிரெசியாவில் வசிக்கிறார்.
வெளிநாடு சென்றால் வீட்டாருக்குச் சில பொருட்கள் வாங்கி வராமல் இருக்க முடியாதே. ஆகவே கடைவீதிகளுக்கு முதலில் சென்றோம். பெருங்கடைகளைத் தவிர்த்தோம். பொருட்களின் விலைதான் காரணம். சாதாரணக் கடைகள், கிறிஸ்துமஸ் சந்தைகள் ஆகியவற்றில் நல்ல பொருட்கள் பல கிடைத்தன. பத்தாம் நூற்றாண்டு பிளோரன்ஸ் நகரக் கடைத்தெருக்களில் அரைநாள் சுற்றி நவீனப் பொருட்களை வாங்கினோம். தோல் கைப்பை ஒன்றைக் கண்ணன் வாங்கினார். பொம்மைகள் உள்ளிட்ட சிலவற்றை நான் வாங்கினேன்.
பிறகு சிறுகுன்றின் மேலிருந்த மிகவும் பழமையான தேவாலயம் ஒன்றைப் பார்த்தோம். அரச குடும்பத்தினருக்காக உருவாக்கிய ஆலயம் அது. குகை போன்ற அறைகளும் எங்கே செல்கிறது என்று அறிய முடியாத விதவிதமான படிக்கட்டுகளும் கொண்ட அதை அழகாகப் பராமரிக்கிறார்கள். எங்கெங்கும் ஓவியக் காட்சிகளும் சிற்பங்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் நின்று பார்த்து அறிந்து சுவைக்க வேண்டுமானால் அதற்கு மட்டும் ஒருநாள் போதாது. உச்சிக்குப் போய்த் தளத்தின் மேல் நின்றால் பிளோரன்ஸ் நகரம் முழுவதும் தெரிகிறது. காற்று வந்து தூக்கிச் செல்ல முனைகிறது. அதனுடன் இயைந்து நகரத்தின் மேல் பறக்கலாம் என்று மனம் பரபரக்கிறது. நகரைச் சுற்றிலும் இருந்த குன்றுகள் அரண்களாகத் தெரிந்தன. குன்றுகள் சூழ்ந்த நகரம் பிளோரன்ஸ் என்பதை அங்கிருந்து பார்த்தபோதே அறிய முடிந்தது.
பிளோரன்ஸ் நகரச் சந்து ஒன்றில் இருந்த பாரம்பரிய இத்தாலிய உணவகம் ஒன்றுக்கு மதிய உணவுக்காகச் சங்கீதா அழைத்துச் சென்றார். அது மிகவும் பிரபலமானது. வெளியிலிருந்து வருவோர் அங்கே உண்ணப் பெரிதும் விரும்புகின்றனர். செல்பேசியில் அழைத்துப் பேசியபோது பதிவு செய்வதில்லை, நேரில் வந்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். எங்களுக்கு முன்னால் பல பேர் காத்திருந்தனர். எங்களுக்கு இடம் கிடைக்கக் கிட்டத்தட்ட அரைமணியிலிருந்து முக்கால் மணி வரை ஆகலாம் எனத் தெரிந்தது. நடை நகரம் அல்லவா? ஓரிடத்திலும் வண்டி ஏறவில்லை. நடந்தே வெகுநேரம் சுற்றித் திரிந்திருந்தோம். ஆகவே இடம் கிடைக்கும்வரை எங்கள் வயிறு கேட்காது. இத்தாலிய மரபுணவை உண்ண வாய்ப்பில்லாமல் போயிற்று.
பிற்பகல் நேரம் ஒரு அருங்காட்சியகத்திற்குச் செல்லச் சங்கீதா இணைய வழியில் முன்கூட்டியே பதிவு செய்திருந்தார். அப்படிப் பதிவு செய்துதான் செல்ல முடியும். பிற்பகல் இரண்டரை மணி முதல் இரண்டே முக்கால் மணிக்குள் உள்ளே செல்ல அனுமதி. அருங்காட்சியகத்திற்குள் வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முன்பதிவும் நேரம் ஒதுக்கலும் என்னும் முறையை வைத்திருக்கிறார்கள். நேரமும் பிரச்சினையாக இருந்ததால் காத்திருக்காமல் வேறொரு இத்தாலிய உணவகம் சென்று உண்டோம். அங்கும் நல்ல கூட்டம். எனினும் இடம் கிடைத்தது. வழக்கம் போல் இத்தாலியின் மரபு ஒயின் ஒன்றைப் பருகிப் பார்த்தோம்.
எங்கும் ஒயின் கிடைப்பது பற்றிப் பேச்சு வந்தபோது சங்கீதா தம் மாமியாரைப் பற்றிச் சொன்னார். இத்தாலிக் கிராமம் ஒன்றில் மாமியாரும் மாமனாரும் வசிக்கிறார்கள். ஒருமுறை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மாமியார் ‘தாகமாக இருக்கிறது’ என்றாராம். சரி, தண்ணீர் குடிப்பார் என்று பார்த்தால் அவர் கையில் எடுத்தது ஒயினாம். அந்தளவு ஒயின் அவர்கள் வாழ்வோடு ஒன்றியிருக்கிறது. வெளிநாட்டுப் பெண்ணைத் தம் மகன் திருமணம் செய்து கொண்டதைப் பற்றி அவர்களுக்கு ஏதும் வருத்தம் இருக்கிறதா என்று கேட்டேன். அப்படி எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். மலேசியாவையும் தம் குடும்பத்தையும் பிரிந்திருக்கும் வருத்தம் சங்கீதாவுக்குத்தான் இருக்கிறது என்று உணர்ந்தேன்.
நகரின் நடுவில் மிகப் பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருக்கும் உபிஸி அருங்காட்சியகம் (Ufizi Museum) செல்லத்தான் பதிவு செய்திருந்தார். அது கலை அருங்காட்சியகம். அதைப் பார்த்தால் பிளோரன்ஸை ஏன் கலை நகரம் என்று சொல்கிறார்கள் என்பது புரியும். எங்கெங்கும் ஓவியங்களும் சிற்பங்களும் கொண்ட காட்சியகம். மைக்கேல் ஏஞ்சலோ உள்ளிட்ட மாபெரும் மேதைகளின் படைப்புகள் தனித்தனி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் வரலாற்றையும் அறியவும் அதன் நுட்பத்தை உணரவும் கலை வல்லாளர் ஒருவரின் துணை தேவை. பிரமிப்பு மிஞ்ச வெகுநேரம் பார்வையிட்டோம்.
தம் பண்பாட்டை, கலைகளை நவீன முறையில் பாதுகாத்து வைத்துள்ளனர். அதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை கூடி வருமானம் தருகிறது. கூட்டம் கூடுவதால் அதற்கேற்ற வகையில் நேரத்தை ஒதுக்கிக் கட்டுப்படுத்துகின்றனர். பராமரிப்பில் பெருங்கவனம் செலுத்துகின்றனர். பணியாளர்கள் எண்ணிக்கை அவசியமான அளவுக்கு இருக்கிறது. அதனால் பிளோரன்ஸ் நகரம் தொடர்ந்து தம் பழமையைப் பேணியும் பயணிகளை ஈர்த்தும் நிலைத்திருக்கிறது.
சங்கீதாவின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது. எனினும் கணவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி மாலை வரை எங்களுடன் இருந்தார். அருங்காட்சியகத்தில் நடந்து சோர்ந்த பிறகு வெளியே வந்தோம். சங்கீதா விடைபெற்று ரயிலைப் பிடிக்கச் சென்றார். இலக்கியம் வழங்கிய கொடை இந்த அன்பு.
—– 24-02-25
நானும் இத்தாலிக்கு சென்றேன். ஆனால் மிக விரும்பிய பிளாரன்ஸ் நகர் செல்ல இயலவில்லை. உங்கள் எழுத்துக்கள் வழியே பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி. ஒரே கல்லில் 2 மாங்கனி.
மனிதர்கள் நாடுகள் எனும் கோடுகளைத் தாண்டி அன்பால் இணைகிறார்கள்