இல்லை துயில்!

You are currently viewing இல்லை துயில்!

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படத்தில் வரும் ‘நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி’ என்னும் பாடல் பற்றிய விளக்கத்தில் தூக்கம், தூக்கமின்மை பற்றி எழுதியிருந்த பகுதியை வாசித்த என் மாணவர் ஒருவர் இன்னொரு பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தார். வகுப்பில் அடிக்கடி நான் சொல்லும் பாடல் அது. மாணவர்களுக்குச் சுவை தரும் என்பதற்காகச் சொல்வேன். யாப்பிலக்கணம் கற்பிக்கும் போது நேரிசை வெண்பாவுக்குச் சான்றாகவும் அதைக் காட்டுவேன்.

தூக்கத்தைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் வழங்கியுள்ளன. இன்று பெருவழக்காகத் ‘தூக்கம்’ இருக்கிறது. இது பழைய சொல் எனினும் இப்போதைய பொருளில் வரவில்லை. சங்க இலக்கியத்தில் இதன் வினைவடிவமாகிய ‘தூங்கு’ இடம்பெறுகிறது. அது ‘தொங்குதல், சோம்புதல், தாமதித்தல்’ முதலிய பொருள்களில் வருகிறது.

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க

தூங்காது செய்யும் வினை (672)

என்னும் குறள் பலருக்கும் நினைவிருக்கும். இதில் தூங்குதல் – தாமதித்தல் என்னும் பொருளில் வருகிறது.  ‘காலம் தாழ்த்திச் செய்ய வேண்டிய செயலைப் பின் தள்ளிச் செய்க; காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டிய செயலை உடனே செய்க’ என்கிறது குறள். இதில் இன்றைய தூக்கப் பொருள் வரவில்லை. கம்பர்தான் முதலில் கும்பகருணன் தூக்கத்தைப் பற்றி எழுதும்போது ‘சொரிந்த சோரிதன் வாய்வரத் தூங்குவான்’ என்கிறார். ஆகவே இச்சொல் வழங்கினாலும் பிற்காலத்தில்தான் இன்றைய பொருளைக் குறித்திருக்கிறது.

உறக்கம் என்பது பழைய சொல்.

‘உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.  (339)

என்பது குறள்.

இன்னொரு பழைய சொல் ‘துயில்.’

‘தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு. (1103)

எனக் குறளில் இச்சொல் இடம்பெற்றுள்ளது.  ‘துஞ்சுதல்’ என்பதும் பழைய சொல்தான்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.

இக்குறளில் ‘துஞ்சல் – தூங்குதல்’ என்னும் பொருளிலேயே வருகிறது. சங்க இலக்கியத்தில்,   ‘துஞ்சினான்’ என்றால் ‘இறந்தான்’ எனப் பொருள்படுவதுண்டு. குறிப்பாகப் புறநானூற்றில் பாடலின் கீழ் காணப்படும் குறிப்பில் இச்சொல் வருகிறது. இச்சொல் பற்றி உ.வே.சாமிநாதையர் கூறும் சுவையான செய்தி ஒன்றுண்டு. புறநானூற்றின் முப்பத்து நான்காம் பாடலின் கீழ் ‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது’ என்று  குறிப்பு காணப்படுகிறது. பாடல் கிள்ளிவளவனை வாழ்த்துகிறது.

ஒருவனை வாழ்த்தும் பாடலின் கீழ் அவன் இறந்த செய்தியைக் குறிப்பார்களா என்று அவருக்கு ஐயம் ஏற்படுகிறது. ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’ என்னும் நூலை அக்காலத்தில் எழுதிய வி.கனகசபைப் பிள்ளையைத் தொடர்பு கொண்டு தம் ஐயத்தைக் கேட்கிறார். அக்குறிப்பு பிற்காலத்தவர் எழுதியது என்பதால் இறந்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர், மற்றபடி துஞ்சுதல் என்றால் இறத்தல் எனப் பொருளுண்டு என வேறு நூல்களில் இருந்தும் அவர் சான்று காட்டுகிறார். அதன் பிறகே உ.வே.சா. உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

‘கண்வளர்தல்’ என்பதும் தூக்கத்தைக் குறிக்கும். தூக்கத்தை எந்தச் சொல்லால் குறித்தாலும் அச்சொல்லுக்கு இறத்தல் என்றும் பொருள் வருவதால் அது அமங்கலச் சொல்லாயிற்று. மரணத்தை நெடுந்துயில் என்றும் நீண்ட தூக்கம் என்றும் சொல்வது வழக்கம் அல்லவா? ஆகவே மங்கலமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக உருவான சொல் கண்வளர்தல். குழந்தையைத் தாலாட்டும்போது ‘கண்வளராய்’ என்று மங்கலமாகக் குறிப்பிடுவது மரபு.

தூக்கம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். தூக்கமின்மை பற்றித்தான் நான் சொல்ல வந்த பாடல் பேசுகிறது. அது யார் யாருக்கெல்லாம் தூக்கம் வராது என்பதைப் பட்டிலிடுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று நான்மணிக்கடிகை. ஒவ்வொரு பாடலிலும் நான்கு செய்திகளை எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்தது. இப்பாடலில் தூங்காத நால்வரைப் பட்டியலிட்டுச் சொல்கிறது.

திருடப் போகலாம் என்று திட்டமிட்டுக் காத்திருக்கும் கள்வர்க்குத் தூக்கம் வராது. அவர் தூங்கினால் தொழில் போய்விடும். இரவுதான் கள்வர் தொழில் நடக்கும் காலம். எல்லோரும் தூங்கட்டும் என்று காத்திருந்து பின் தம் தொழிலைத் தொடங்குவர். தொழில் முடிந்து வந்து சேர விடிகாலை ஆகிவிடும். ஆகவே கள்வர்க்குத் தூக்கம் ஏது?

காதலிப்பவர்க்கும் தூக்கம் இல்லை. பாடல் காதலியின் மேல் உள்ளம் வைக்கும் ஆணுக்குத் தூக்கம் இல்லை என்கிறது.  காதலியைச் சந்திக்க இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிய பிறகு காதலன் செல்வான். இரவுக்குறி என்று அதை அக இலக்கணம் சொல்லும். இரவில் தூங்கிவிட்டால் சந்திக்கும் இன்பம் இல்லையே. இக்காலம் போல் அல்ல அது. மின்விளக்கு இல்லை. கைவிளக்குகளும் இல்லை. இருளில் பல தடைகளைக் கடந்து செல்ல வேண்டும். சென்று கண்டு பேசி மகிழ்ந்து திரும்ப விடிகாலை ஆகிவிடும். காதலில் விழுந்தவனுக்குத் தூக்கம் ஏது?

பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுபவனுக்கும் தூக்கம் இல்லை. அவன் மனதில் பல திட்டங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும். இதைச் செய்தால் பணம் வருமா, அதைச் செய்தல் பணம் வருமா என்று ஏதேதோ யோசித்துக் கொண்டேயிருப்பான். மனம் அடங்கினால்தானே தூக்கப் பிசாசு வந்து பற்றும்? பொருள் ஈட்ட நினைப்பவன் மனம் அடங்காது. பிறகு அவனுக்குத் தூக்கம் ஏது?

சரி, ஒருவன் நிறையப் பணம் சம்பாதித்துவிட்டான். அவன் நன்றாகத் தூங்குவான் என்று நினைப்பீர்கள் தானே? அவனுக்கும் தூக்கம் வராது. சம்பாதித்த பொருள் கைவிட்டுப் போகாமல் காப்பாற்றி வைத்திருக்க வேண்டும். அக்காலத்தில் சேமிப்பை வீட்டில்தான் வைத்திருப்பார்கள். வங்கிகள் இல்லை. ஆகவே திருட வருபவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக அங்கே இங்கே புதைத்து வைப்பதுண்டு. எங்கே புதைத்து வைத்தோம் என்பது மறந்து போனதாலோ புதைத்து வைத்தவர் திடுமென்று இறப்பதாலோ அப்பொருள் மண்ணுக்குள்ளேயே தங்கிவிடும். அதைத்தான் புதையல் என்கிறோம். இந்தக் காலத்தில் பொருளிருப்பவர் எதிலாவது முதலீடு செய்திருந்தால் திரும்ப வருமா, போய்விடுமா என்னும் யோசனை ஓடும் அல்லவா? அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன முடிவெடுப்பாரோ, பங்குச்சந்தையில் போட்ட பணம் பாதுகாப்பாக இருக்குமா, திரும்ப வருமா என்று யோசனை ஓடுபவர்க்குத் தூக்கம் ஏது?

இல்லை துயில்!

இந்த நான்கு செய்திகளைச் சொல்லும் பாடல் இது:

கள்வம்என் பார்க்குத் துயிலில்லை; காதலிமாட்டு

உள்ளம்வைப் பார்க்கும் துயிலில்லை; ஒண்பொருள்

செய்வம்என் பார்க்கும் துயிலில்லை; அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில். (09)

யாப்பிலக்கணத்தில் இன்னிசை வெண்பாவுக்குச் சான்றாக இப்பாடலைச் சொல்வேன். மாணவர்க்கு ஈர்ப்பைக் கூட்டும் பாடல். ‘காதலிமாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயிலில்லை’ என்பது கல்லூரிப் பருவத்தில் அனுபவரீதியாகப் பொருந்தும் தொடர். ஆகவே ரசித்துச் சிரிப்பர். வகுப்பில் ஒரு சலசலப்பும் ஏற்படும்.

—–  26-04-25

Latest comments (1)

T. LAKSHMAN

அருமையாக உள்ளது ஐயா. உறக்கம், துயில், துஞ்சல், தூங்குதல், சோம்புதல், தாமதித்தல்,கண்வளர்தல் கண்வளர்வாய் என்ற பல சொற்களை உறக்கத்திற்கு நிகராக பதிவு செய்திருப்பது சிறப்புங்க ஐயா, நன்றிங்க ஐயா.