‘கடற்கரய்’ என்னும் பெயர் 2000இல் கவிஞராக அறிமுகமான போது பெயரும் அதை எழுதும் முறையும் வித்தியாசமாகத் தோன்றின. ‘பழமலய்’ அவர்களின் குழுவிலிருந்தோ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் குழு ஒன்றிலிருந்தோ இவர் வந்திருக்கக் கூடும் என அனுமானித்தேன். பின்னர் பத்திரிகையாளராகத் தெரிய வந்தார். சமீப காலமாகத் தொகுப்பாசிரியராக, ஆய்வாளராக, பேச்சாளராகப் பன்முகம் காட்டி வசீகரிக்கிறார். கவிதையை விட்டுவிட்டாரோ என்று எண்ணிய சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளோடு இப்போது மீண்டு வருகிறார்.
கடற்கரயின் மொத்தத் தொகுப்புகளையும் வாசித்து அவர் கவிதை உலகை மதிப்பிட இப்போது கால அவகாசம் போதவில்லை. ஜனவரி 2022 புத்தகக் கண்காட்சியை நோக்கி ஓட வேண்டியிருக்கும் இச்சமயத்தில் அது சாத்தியமில்லை. ஏற்கனவே வாசித்தவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து எழுதுவதும் இயலாது. அத்தகைய நினைவாற்றல் எனக்கில்லை. இத்தொகுப்புக் கவிதைகளை மட்டும் வாசித்து மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சிறுமுன்னுரை எழுதுகிறேன்.
கவிதையைப் பொருள் கொள்ள, நயம் பாராட்ட, விமர்சிக்க, எடுத்து விளக்கத் தமிழ் இலக்கணம் பல கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது. நவீனக் கோட்பாடுகள் பலவும் வெளியிலிருந்து நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன. இவற்றில் எதையும் பெரிதாகப் பயன்படுத்தத் தேவையில்லாத இலகு கவிதை கடற்கரயினுடையது. கவிதையின் அடிப்படை ஆதார அணியாகிய உவமைகளை வேண்டுமானால் அங்கங்கே பயன்படுத்துகிறார். வேறு திருகல்களோ உள் நுட்பங்களோ ஏதுமில்லை. நேரடித்தன்மையே இலகு கவிதைகளின் இயல்பு. சில கவிதைகளில் ஓரிரு அடிகள் கூடுதலாகப் பேசிவிடுவதாகத் தோன்றுவதைத் தவிர வேறேதும் குறையாகத் தெரியவில்லை.
இன்றைய கவிதை செறிவு, சிக்கனம், குறியீடு, படிமம், உருவகம் எல்லாவற்றையும் உதறிவிட்டிருக்கிறது. அவற்றில் எதுவுமே இல்லாமல் சொற்களைக் கொண்டு கண்ணாமூச்சி காட்டுகிறது. வாசித்து முடித்த பிறகு ஏதேனும் உள்ளே ஒளிந்திருக்குமோ தவற விட்டுவிட்டோமோ என்று மீண்டும் மீண்டும் தேடினாலும் ஏமாற்றம் தான். பழைய எதிர்பார்ப்புகளை எல்லாம் உதறிவிட்டு வரச் சொல்லிக் கவிதை அழைக்கிறது. கவிதை மொழிக்கும் உரைநடைக்குமான மெல்லிய கோடுகூட அழிந்து போய்விட்ட மாதிரி தெரிகிறது. பல சமயங்களில் முடிவுப் பகுதியே அதைக் கவிதையாக்குகின்றது.
கடற்கரயின் இந்தத் தொகுப்பில் அரசியல் கவிதைகள் உட்பட பலவும் உள்ளன. அப்பாவைப் பற்றிய கவிதைகள் அளவிலும் குரலிலும் தனித்துத் தெரிகின்றன. துக்கம் விசாரிக்க வந்த நெருங்கிய நண்பரிடம் மெல்லிய குரலில் தன் அப்பாவைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் உரையாடல் தன்மையில் அக்கவிதைகள் உள்ளன. ‘நண்பா’ என்று விளித்தும் அதில் சில கவிதைகள் பேசுகின்றன. முன்னிலையை நோக்கிப் பேசும் கூற்றுமுறையை ஒருகாலத்திலும் கவிதை விடாது.
‘அப்பா’ என்னும் தலைப்பில் உள்ள கவிதையைப் பற்றிக் கொஞ்சம் சொல்லலாம். இதுவும் முன்னிலையை நோக்கிப் பேசுவதுதான். ஆனால் முன்னிலையில் இருப்பவர் யார் என்று தெரியவில்லை. நண்பரா, உறவினரா, பொதுமனிதரா? யாராகவும் இருக்கலாம். முன்னிலையில் இருப்பவர் கேட்பவர்தானே? அவருக்குக் குரல் கிடையாது. அதனால்தான் கிளி, புறா, மரம், மேகம் என்று அஃறிணைப் பொருட்களும் முன்னிலையாகின்றன. அப்பாவின் துஷ்டிக்கு வந்தவர்கள் கேட்கும் கேள்விகளில் தொடங்குகிறது கவிதை. பொதுவாகப் பலரும் கேட்கும் கேள்வி ‘வயது என்ன?’ என்பது. எதனால் நிகழ்ந்தது, உடல்நிலை சரியில்லையா, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றீர்களா – இவையெல்லாம் அடுத்தடுத்து வரும் கேள்விகள். இப்படி அடுத்தடுத்துக் கேள்விகள் வரும்போது ஒருகட்டத்தில் பதில் சொல்ல இயலாத சூழல் வந்துவிடும். சொல்லிச் சொல்லி ஓய்ந்து போயிருப்போம். அல்லது இவற்றுக்கு அர்த்தம் இல்லாமல் போய்ப் பதிலே நம்மிடம் இருக்காது.
துக்க விசாரிப்பில் ஏதாவது பேச வேண்டுமே எனக் கேள்வி கேட்பவர்கள் ஒருபுறம். இறந்தவரைப் பற்றிய தம் நினைவுகளைப் பகிர்ந்து கொள்பவர்கள் இன்னொரு புறம். நேற்றுக் காலை பார்த்துவிட்டுச் சென்றவர், எப்படிச் சாத்தியம் என்று அங்கலாய்க்கிறார். ஒருவர் கதறுகிறார். இவையெல்லாம் சாதாரணமாக நடப்பவை. அவற்றைக் கடந்து கவிதை அடுத்த பகுதிக்குள் நுழைகிறது. இறந்தவரின் மகனாகிய கவிதைசொல்லியிடம் அப்பாவின் சாயல் இருப்பதாகச் சொல்கிறார்கள் சிலர். கவிதைசொல்லியை மகிழ்விக்கும் நோக்கில் அவர்கள் அப்படிச் சொல்லக்கூடும். ஆனால் அது அத்தனை உவப்பாக இல்லை.
அப்பாவிடமிருந்து தன்னை விலக்கித் தனித்துத் தெரியத் தொடங்க வேண்டும் என்பதே எல்லா மகன்களின் விருப்பம். ஆனால் உறவும் சமூகமும் அதற்கு அத்தனை எளிதாக அனுமதிப்பதில்லை. அப்பாவைப் போல எனச் சிலர் சொல்லும் போது என்ன நேர்கிறது? ‘என் அடையாளம் உடைகிறது’ என்கிறார் கவிதைசொல்லி. அப்படி அவர்கள் சொல்வது ஒரு பீதியைக் கிளப்புகிறது என்கிறார். அப்பாவைப் போல மகன் இருப்பது சகஜம்தானே? தோற்றம், சாயல் மட்டும் போதுமா? அப்பாவின் உடம்பு, தோற்றம், மனம், செயல் எதுவும் மகன்களுக்குத் தேவைப்படுவதில்லை. சொல்லப் போனால் அப்பாவே தேவைப்படுவதில்லை. அப்பா இல்லை என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் சந்தோசப்படாத மகன் ஏது?
‘எனக்கான பொருளை யாரோ எடுத்துக்கொண்ட ஒரு அவமானம்’ என்கிறார். அப்பாவாக இருந்தாலும் அடையாளத்தை எடுத்துக்கொள்பவர் யாரோ தான். கடைசியில் ஒரு கேள்வி எஞ்சுகிறது. ‘இந்த அப்பாக்கள் ஏன் நம் அடையாளத்தை ஒரேநாளில் எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்?’ பிறப்பிலிருந்து தந்தையை வைத்தே சமூகம் ஒருவரை அடையாளப்படுத்துகிறது. இவர் மகன் என்று சொல்கிறது. பள்ளிக்குப் போனாலும் அப்பா பெயர்தான் அடையாளம். ஏதாவது பிரச்சினை என்றாலும் ‘அப்பாவைக் கூட்டி வா’ என்றுதான் கட்டளை போடுகிறார்கள். முகவரிகளில் எல்லாம் அப்பா பெயர் வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘எப்பேர்ப்பட்ட அப்பாவுக்குப் பிள்ளை’ என்றோ ‘அப்பேர்ப்பட்ட அப்பாவுக்கு இப்பேர்ப்பட்ட பிள்ளை’ என்றோ போற்றலும் தூற்றலும் அப்பாவுக்கே போகிறது.
ஒருகட்டத்தில் அப்பாவின் அடையாளத்திலிருந்து விடுபட்டு வைராக்கியமாக, பிடிவாதமாகத் தன் சுய அடையாளத்தைப் பெறுவதற்குப் பிள்ளைகள் முயல்கிறார்கள். அது அத்தனை எளிதாகச் சாத்தியப்படுவதில்லை. இடப்பெயர்வு ஓரளவு உதவுகிறது. செய்யும் வேலை சிலருக்கு உதவுகிறது. எத்தனையோ பாடுபட்டு அப்பாவின் அடையாளத்திலிருந்து விடுபட்டு ஒருவன் தன்னடையாளத்தை அடைய வேண்டியிருக்கிறது. ஆனாலும் என்ன? தனக்கென உருவாக்கிக் கொண்ட அடையாளம் அத்தனையும் அப்பா இறந்த ஒரே நாளில் அழிந்து போகிறது. அப்பாவின் சாயல் அவனுக்கு வந்து சேர்கிறது. அவனை யாரும் காண்பதில்லை. அவன் அப்பாவையே காண்கிறார்கள். இது மிகப் பெரிய சிக்கல். அப்பாவின் இறப்பை விடவும் துக்கம் தருவது இந்த அடையாள இழப்புத்தான்.
எந்த ஜோடனையும் இல்லாமல் இத்தனை விஷயத்தை அறிதலாக இந்தக் கவிதை வழங்குகிறது. தன்னடையாள இழப்பைப் பேசும் இத்தகைய பல கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது.
—– 11-02-25
(2021ஆம் ஆண்டு வெளியான ‘வானத்தின் கீழே ஒரு வீடு’ கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை.)
ஒரேநாளில் தன்னடையாள இழப்பு அனுபவத்தில் உணர்ந்தேன் ஐயா.மிகுந்த மன வருத்தத்தை தவிர என்ன சொல்வது.