அஞ்சலி: புலவர் மணியன் என்கிற மு.சுப்பிரமணியன்
(29-04-1936 : 15-06-2020)
தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயின்று பட்டம் பெற்று அதன் மூலமாக அரசுப் பணியை அடைந்து தம் வாழ்நாளைச் சுகமாகக் கழித்துச் செல்வோர் அனேகம். தாம் பெற்ற அறிவைப் பயன்படுத்தி நாளெல்லாம் அரிய வினைகள் செய்து தம் அறிவை நிலைநிறுத்திவிட்டுச் செல்வோர் குறைவு. அத்தகைய குறைவானவர்களில் ஒருவர் புலவர் மணியன் அவர்கள். தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழிக்கு அருகில் இருக்கும் திருமயிலாடி என்னும் ஊரில் பிறந்தவர். தமிழறிஞரான ச.தண்டபாணி தேசிகரின் மாணவர். அரசுப் பள்ளித் தமிழாசிரியராகக் கோவை மாவட்டத்திற்கு வந்தவர் அங்கேயே நிலைகொண்டார்.
அவரை நான் முதலில் அறிந்தது ‘சிலம்புச் செல்வம்’ என்னும் நூல் வழியாகத்தான். சிலப்பதிகாரச் சொல்லடைவு அது. மணிமேகலைக்கும் சொல்லடைவு உருவாக்கியுள்ளார். அகராதியியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும் பல பணிகளைச் செய்திருக்கிறார் என்றும் கோவையில் இருக்கும் என் ஆசிரியர் பேராசிரியர் கமலேசுவரன் வழியாகப் பின்னர் தெரிந்துகொண்டேன். 2004இல் ‘கொங்கு நாட்டுத் தமிழ்’ (Kongu Thamiz Dialact with Etymological notes) என்னும் தலைப்பில் வட்டார வழக்குச் சொல்லகராதி ஒன்றை அவர் வெளியிட்டார். வட்டார வழக்கு அகராதிகளில் சற்றே வேறுபட்டது இது.
வட்டாரச் சொற்களுக்கு வேர்ச்சொல் கண்டறிவது மிகவும் கடினம். அந்த முயற்சியில் ஈடுபட்டு விளக்கம் கொடுத்த அகராதி இது. அவ்வகராதிக்கு ஒரு மதிப்புரை எழுதினேன். அதில் எனக்குத் தோன்றிய சில குறைகளையும் சுட்டிக் காட்டினேன். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் கொங்கு நாட்டில் பல்லாண்டுகள் வாழ்ந்து பெற்ற அனுபவம் கொண்டவர் எனினும் சொற்களைப் புரிந்துகொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். எனினும் அவர் முயற்சியை விதந்துதான் எழுதியிருந்தேன். அம்மதிப்புரை அவருக்குச் சற்றே வருத்தத்தைக் கொடுத்தது. எந்த அகராதியைப் பற்றியும் அப்படிச் சில விமர்சனங்களை வைத்துவிட முடியும் என்பதை அவர் அறியாதவரல்ல. மேலும் இருநூறுக்கும் மேற்பட்ட சொற்களைச் சேர்த்து அதன் இரண்டாம் பதிப்பை உருவாக்கியுள்ளார். அது இப்போது அச்சில் இருக்கிறது.
2000க்குப் பிறகு அதாவது அவர் பணி ஓய்வுக்குப் பிறகு தம் முழுநேரத்தையும் ஆற்றலையும் அகராதி தயாரிக்கும் பணியில் செலவிட்டார். தமிழ் இலக்கியம் சார்ந்த அகராதிகள் அவை. பொள்ளாச்சி மகாலிங்கம் செய்த பேருதவியால் விளைந்த அகராதிகள். ‘மூவர் தேவாரச் சொல்லகராதி’ இரண்டு தொகுதிகள், திருமந்திரச் சொல்லகராதி, நாலாயிர திவ்யப் பிரபந்த வினைச்சொல் அகராதி, பதினோராம் திருமுறைச் சொல்லகராதி ஆகியவை அவரது கடின உழைப்பில் விளைந்தவை. ‘இராமலிங்கக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் ‘திருவருட்பாச் சிறப்பகராதி’ இரண்டு தொகுதிகளை உருவாக்கியுள்ளார். பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘சங்க இலக்கிய வினை வடிவங்கள்’ என்னும் அகராதி புலவர் மணியனார் உழைப்பில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ‘சங்க இலக்கிய சொற்களஞ்சியமும்’ அவர் உருவாக்கியதாகும்.
அவரது அகராதிகள் அனைத்தையும் ஒருசேர ஆராய்ந்து விரிவான கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்னும் எண்ணத்தில் சில ஆண்டுகளாக அவற்றை அவ்வப்போது புரட்டிக் கொண்டிருந்தேன். வேறு சில தேவைகளுக்காகவும் அவரது அகராதிகளைப் பயன்படுத்தினேன். என் கருத்துக்களை அவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தார். அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இப்படித்தான் பலரது பணியைப் பற்றி அவர்கள் வாழ்நாளில் அவர்கள் காண எழுதாமல் விட்டுவிடுகிறோம். இறப்புக்குப் பின் எழுதி ஆறுதல் கொள்கிறோம். அவர் இருக்கும்போதே எழுதியிருந்தால் தம் பணி குறித்த ஒரு மதிப்பீட்டை அறிந்த மகிழ்ச்சி அவருக்குக் கிடைத்திருக்கும். வருத்தமாக இருக்கிறது.
பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில்வோருக்கு அவரது அகராதிகள் பெரிதும் துணை செய்யும். இலக்கியப் பயில்வுக்கு அகராதியைப் பயன்படுத்தும் வழக்கம் எப்போதேனும் உருவாகுமானால் புலவர் மணியன் அவர்களை அப்போது நம் சமூகம் போற்றும். அவருக்கு என் அஞ்சலி.
—–