‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’

சமூகப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு வகையிலான, வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வொருவருமே தங்கள் சொந்தக் கருத்தை வைத்துக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில்  அதை அடுத்தவரின் தொண்டையில் திணிக்க முடியாது.

– மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை வாசகம்.

கருத்துரிமைக்கு எல்லாக் காலத்திலும் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. எனினும் பல்வேறு கட்டங்களைக் கடந்து ஜனநாயகம்  ‘தழைத்தோங்கி’ நவீன சமூகமாக உருவாகிவிட்ட இக்காலத்திலும் பிரச்சினைகள் தொடர்கின்றன என்பதுதான் துயரம். இத்துயரத்தை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே கருத்துரிமை தொடர்பான உரையாடலையும் விவாதத்தையும் பல தளங்களில் நிகழ்த்த வேண்டியுள்ளது.  கருத்துரிமையை வரையறுத்தல், கருத்துரிமை தொடர்பான சட்டங்களைப் பரிசீலித்தல், கருத்துரிமைப் பிரச்சினையில் அரசு அமைப்பின் நிலைப்பாடுகளை விமர்சித்தல், கருத்துரிமை பற்றி நிலவும் சமூக மனோபாவங்களைப் புரிந்துகொள்ளுதல், அம்மனோபாவங்களின் மீது இடையீடு நிகழ்த்துதல், கருத்துரிமை குறித்துச் சிந்தித்த அறிஞர்களின் எண்ணங்களை உள்வாங்குதல், இலக்கியம் அரசியல் உள்ளிட்ட பல துறைகளிலும் அவ்வவ்போது ஏற்படும் கருத்துரிமைப் பிரச்சினைகளைப் பல கோணங்களில் காணுதல் என இவ்வுரையாடலும் விவாதமும் விரிவானவை. அவற்றை மேற்கொள்வதற்கான திறந்த மனநிலை ஏற்படுமானால் சமூகப் பொதுப்புத்தியில் சில அசைவுகளை ஏற்படுத்த முடியும்.

கருத்துரிமைக்கு எல்லை என்று எதுவும் இல்லை. மனதில் உதிக்கும் எண்ணங்களை எந்த மறைப்புமின்றிப் பொதுவெளியில் வைப்பதற்கான உரிமை ஒருவருக்குக் கிடைக்க வேண்டும். உண்மை, சிந்தனை, உயர்ந்த ஒழுக்க நெறி, சமூக விழுமியங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சாதி, மதம், இனம், மொழி முதலியவற்றைப் பற்றிய ஆதரவு, விமர்சன, எதிர்ப்புக் கருத்துக்களுக்குத் தாராளமாக இடம் இருக்க வேண்டும். அதுதான் மேன்மையான சமூகத்தின் இயல்பாக இருக்கும். ஒரு சமூகத்தின் நிலையை மதிப்பிட எதைவிடவும் கருத்துரிமை என்னும் அளவுகோல் மிகவும் சரியானது என்று நினைக்கிறேன்.

அந்த அளவுகோலைப் பயன்படுத்தும்போது நாம் முக்கியமாகக் கருதிப் பார்க்க வேண்டியவை எதிர்வினைகள். ஒரு கருத்து வெளிப்படுகையில் அதன் சூழல், பின்னணி, பொருத்தப்பாடு, நோக்கம், வெளிப்பாட்டு வடிவம், வெளிப்படுத்தியுள்ள முறை என அனைத்தையும் கணக்கில் கொண்டு பரிசீலிக்கும் வகையில் எதிர்வினைகள் எழ வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான உரையாடல் நிகழும். இன்றைக்கு இவையெல்லாம் வெறும் எதிர்பார்ப்புகள்தான். நடைமுறையோ வேறுவிதமாக இருக்கிறது.

எதிர்வினைகளின் நோக்கம் அரசியல், சுயநலம், தன்னகங்காரம், பழிவாங்குதல் என ஏதாவது ஒன்றாகவோ பலவாகவோ அமைகிறது. சமூகப் பொதுமனத்தின் அறியாமை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. உயிருக்கும் உடைமைக்குமான அச்சுறுத்தலாகவே எதிர்வினைகள் வடிவம் பெறுகின்றன. ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிப்பதும் புவிவெளியிலிருந்து அகற்றுவதுமான வன்முறை நோக்குகளே எதிர்வினைகளாகப் பெருகுகின்றன. இந்நிலையில் கருத்துரிமை பற்றிய உரையாடல் காத்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் ஒருபடியாகவே கண்ணனின் ‘எது கருத்துச் சுதந்திரம்?’ என்னும் இந்நூலைக் காண்கிறேன்.

இன்று தமிழ்ச் சூழலில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் முக்கியமான பதிப்பாளராகக் கண்ணன் இருக்கிறார். உலகம் எங்கும் தமிழ் நூல்களைக் கொண்டு சேர்க்கும் பெருமுயற்சியில் வெற்றி கண்டு வருகிறார்.  பதிப்பகத்தை முன்னெடுக்கும் நிர்வாகத் திறனும் சூழலைக் கணிக்கும் அவதானமும் பல்வேறு வகைப்பட்ட திட்டங்களும் கொண்ட பதிப்பாளர் அவர். ஆனால் அவரது இயல்பு  ‘பத்திரிகையாளர்’ என்னும் வரையறைக்குள் அடங்கக் கூடியது என்பது என் கணிப்பு. இப்போது அவர் எழுதுவது குறைந்துவிட்டாலும் காலச்சுவடு இதழ் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்து அவர் எழுதி வந்துள்ளார். பிற இதழ்களிலும் அவரது எழுத்துக்கள் வெளியாகியுள்ளன. அவை சில நூல்களாகவும் வெளியாகியுள்ளன. அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவன் என்னும் முறையிலும் அவரோடு உரையாடிக் கொண்டிருப்பவன் என்னும் நிலையிலும் என் மதிப்பீடு அமைகிறது. ஒரு பத்திரிகையாளருக்குரிய அரசியல் ஈடுபாடும் சமூகப் பார்வையும் இணைந்து விரிந்த பரப்பிலான ஆர்வம் அவருடையது. எனினும் தம் எழுத்து எல்லையைச் சுருக்கிக் கொண்டு சிலவற்றைப் பற்றி மட்டும் தொடர்ந்து எழுதுவது எனத் தீர்மானித்துக் கொண்டுள்ளார்.

அவ்வெல்லைக்குள் கருத்துரிமை முக்கியமான இடம் வகிக்கிறது.  கருத்துச் சுதந்திரம் பற்றிய தனது ஆர்வமே காலச்சுவடு இதழின் மறுபிறப்பிற்குக் காரணம் என்றும் தன் செயல்பாடுகளைக் ‘கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டம்’ என்றும் இந்நூலில் அவர் கூறுகிறார். காலச்சுவடு இதழில் ‘விவாதம்’ என்னும் பகுதியைத் தொடங்கியதன் நோக்கமே  ‘கருத்துச் சுதந்திரம்தான்’ என்றும் சொல்கிறார். கருத்துரிமை தொடர்பான விஷயங்களில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தித் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். கருத்துரிமையின் பக்கம் நின்று அதற்கு எதிரானவற்றைப் பொருட்படுத்தி விவாதிக்கும் தன்மையைக் கண்ணனின் எழுத்துக்களில் காணலாம். கருத்துரிமையை ஆதரிப்போரின் முரண்களையும் அவர்களது கருத்தில் வெளிப்படும் நுட்பமான சார்புகளையும் தயங்காமல் வெளிப்படுத்துகிறார்.

‘கருத்துச் சுதந்திரம் என்பது முற்போக்கான கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் மட்டும் அல்ல. தாம் வெறுக்கும் கருத்துக்களைப் பிறர் வெளியிடும் சுதந்திரத்திற்காகவும் போராடுபவர்களே உண்மையான கருத்துச் சுதந்திரவாதிகள்.’

‘பிறரின் கருத்துரிமையை மறுப்பவர்களுக்குச் சமத்துவம், மனித உரிமை பற்றி எல்லாம் பேசும் அருகதையே இல்லை. தாம் முன்வைக்கும் கருத்தின் அறச்சார்பு மீது பற்றுறுதி கொண்டவர்கள் பிறர் கருத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.’

‘நம்மைச் சுற்றியும் நமக்கு உள்ளேயும் சகிப்பின்மை மண்டிக் கிடக்கிறது.’

‘கருத்துச் சுதந்திரம் என்பது தமிழர்களுக்கு உவப்பானது அல்ல. கருத்துச் சுதந்திரம் பற்றி ஒரு தமிழன் பேசுகையில் தன் கருத்தைச் சொல்லும் சுதந்திரம், அதிகாரம் மிக்கோர் தமது கருத்தைச் சொல்லும் சுதந்திரம், தனக்கு உவப்பான கருத்தைப் பிறர் சொல்லக் கேட்கும் சுதந்திரம், பெரும்பான்மையின் கருத்துக்கான சுதந்திரம் என்றே பொருள் கொள்கின்றனர்.’

மேற்கண்ட கூற்றுக்கள் சாதாரணமாக எழுந்தவை அல்ல. சமகாலத்தில் கருத்துரிமைக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீவிரமாகக் கருதிப் பரிசீலித்ததன் காரணமாக எழுந்தவை. நோம் சோம்ஸ்கியின் கருத்துரிமைச் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கண்ணன் தமிழிலிருந்து மிகுதியும் சுட்டுவது பெரியாரைத்தான். கருத்துரிமையைப் பெரிதும் பயன்படுத்தியவரும் அனுமதித்தவரும் பெரியார். கருத்துரிமைப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டவர் எவரையும் ஈர்ப்பவர் பெரியார்.

கருத்துரிமை தொடர்பான புதிய புரிதல்களையும் கொடுக்கிறார் கண்ணன்.  ‘மாதொருபாகன்’ பிரச்சினையின்போது அந்நாவல் பிரதிகளை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அது எனக்கு மிகுந்த மனச்சோர்வைக் கொடுத்தது. புத்தகத்தைக் கலைமகளின் அடையாளமாகக் கருதிப் பூசை செய்து வழிபடும் மரபுள்ள சமூகத்தில், அவ்வழிபாட்டை ஆதரிப்பவர்களே எரிப்பில் ஈடுபடுகிறார்களே என்பதாலும் அந்நாவலை என் உடைமையாகக் கருதியிருந்த காரணத்தாலும் எனக்கு மன நெருக்கடி மிகுந்தது. அச்சமயத்தில் கண்ணன் எழுதிய ‘நூல் எரிக்கும் சுதந்திரம்’ என்னும் கட்டுரை உணர்ச்சி நிலையிலிருந்து என்னை மீட்டு அறிவார்த்தமாகச் சிந்திக்க வைத்தது. நூல் எரிப்பை ‘அந்நூலின் மீது வைக்கப்படும் இறுதி விமர்சனம் என்று கொள்ளலாம்’ என்னும் அவரது கருத்து எனக்குப் பெரிய விடுவிப்பைக் கொடுத்தது. ‘ஒரு நூல் என்பது உள்ளடக்கம்தான். அச்சிட்ட புத்தகம் அதன் ஒரு உருவம் மட்டும்தான்’ என்றும் அவர் சொல்லியிருந்தார். புத்தகத்தின் மீதான புனித பிம்பத்தைச் சிதைக்கும் இக்கருத்து முக்கியமானதாகப் பட்டது.

பெரியாரும் அம்பேத்காரும் எதிர்ப்பின் அடையாளமாக நூல்களையும் சட்டப் பிரிவுகளையும் எரித்ததை அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.  இராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் எரிக்கும் போராட்டத்தைப் பெரியார் செய்தார். ஆனால் அவற்றை இயற்றிய ஆசிரியர்கள் இன்றைக்கு இல்லை. ஒரு நூலை இயற்றியவர் உயிரோடிருக்கும் காலத்திலேயே அந்நூல் எரிக்கப்படுவதையும் எப்போதோ இயற்றிய நூல் ஒன்றையோ யாருக்கும் சொந்தமில்லாத பொதுச்சட்டத்தையோ எரிப்பதையும் சமமாகக் கருத முடியுமா என்னும் கேள்வி எனக்குள் எழுந்தது.  எரிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கம்பருக்கும் சேக்கிழாருக்கும் கிடையாதே. அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க முடியாது; வழக்குத் தொடுக்க இயலாது. ஒருவேளை, அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் இத்தகைய எதிர்ப்பு உருவாகியிருக்குமானால் அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டிருப்பார்கள் என்றும் என் யோசனை ஓடியது. ‘ஒரு வாசகர் அல்லது ஒரு இயக்கம் ஒரு நூலை எரிப்பது அவர்தம் கருத்து, செயல்பாட்டுச் சுதந்திரம் சார்ந்ததுதான்’ என்னும் கண்ணனின் கருத்து ஏற்புடையதுதான். என்றாலும் நூலாசிரியரின் வாழ்நாளில் எரிப்பு நிகழ்வதற்கும் வாழ்நாளுக்குப் பிறகு எரிப்பு நடப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கருதிப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. நூலாசிரியரின் வாழ்நாளில் எரிப்பு என்பதற்கு ‘மாதொருபாகனைத்’ தவிர வேறொரு உதாரணம் எனக்குக் கிட்டவில்லை. இருப்பின் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் எரிக்கும் காலத்தில் அவற்றின் ஆசிரியர்கள் இல்லை. எனினும் ‘ஒரு நூல் என்பது உள்ளடக்கம்தான்’ என்பதால் கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய நூல்களின் மீது பக்தியும் பற்றும் கொண்ட ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் இன்றும் உள்ளனர். ஆகவே அவற்றை எரிக்கும்போது அந்த ஆர்வலர்களின் மனம் புண்பட்டிருக்குமே, அதைக் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டுமல்லவா என்னும் கேள்வியும் எழுகிறது. நூலாசிரியர் பாதிக்கப்படுவது போல ஆர்வலர் எவரும் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை. மேலும் புண்படுதல் என்பதற்கான வரையறை என்ன?  ‘இதன் காரணமாக என் மனம் புண்பட்டுவிட்டது’ என்று ஒருவர் சொல்வது அளவுகோல் ஆகுமா? அப்படியானால் எந்தக் கருத்தையும் எவரும் சொல்ல முடியாதே.

‘பொது வாழ்க்கையிலே அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’ என்கிறார் பெரியார். ‘அப்படிப் புண்படும் மனசு’ ஒரு கருத்தைப் பரிசீலிக்கத் தவறிவிடுகிறது. பெரியார் பகுத்தறிவுச் சிந்தையும் பெரிய மனமும் படைத்தவர். கருத்துரிமையைப் போற்றும் சமூகம் சொல்லிக்கொள்ள வேண்டிய தாரக மந்திரம் ‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’ என்பதுதான்.  ‘மனம் புண்படாமல் இருக்கும் உரிமை என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது’ என்பது கண்ணனின் கருத்து. ஒரு கருத்து யாரையாவது புண்படுத்தத்தான் செய்யும். எந்தக் கருத்து தன்னைப் புண்படுத்துகிறதோ அதைப் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளும் சகிப்பு மனம் வாய்ப்பது தனக்கும் நல்லது, சமூக நலனுக்கும் அவசியமானது. ஒரு கருத்தைப் பரிசீலிக்கும் போதுதான் கருத்து மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும்.

பொதுவெளிக்கு வரும் எல்லாவற்றையும் கருத்து என்று எண்ணி எதிர்வினை ஆற்றுவதை எப்படிப் பார்ப்பது? ஒன்றைக் கருத்தாகப் பார்ப்பது நல்லதே. அப்போதுதான் ‘கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது’ நடக்கும். அதேசமயம் எல்லாவற்றையும் ஒரு குளுவைக்குள் அடக்கிவிடுவது போலக் கருத்தைப் பாவிக்க முடியாது. ஒன்றின் வெளிப்பாட்டு வடிவம் பற்றிய புரிதல் தேவை.  ‘எல்லா வெளிப்பாடுகளையுமே கருத்துக்களாக அணுகும் ஒரு பார்வை நவீனத் தமிழ்ப் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சிறுகதைகள், கவிதைகள், ஓவியங்கள், இசை எல்லாமே தமிழ்ச் சமூகத்தால் கருத்துக்களாகச் சுருக்கப்பட்டு உள்வாங்கப்படுகின்றன’ என்று சொல்லும் கண்ணனின் பார்வை முக்கியமானது. மாதொருபாகன் வழக்குத் தீர்ப்பில் முன்வைக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் ஒன்று இது:

‘கலை, இலக்கியம் ஆகியவற்றை ரசிப்பதில் உருவாகும் மோதல்களைக் கையாளும் விஷயத்தில் அதிகாரிகளுக்கு முறையான புரிதலை  ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.’

கலை இலக்கிய ரசனை சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினருக்கும் தேவை. கலை, இலக்கியங்கள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. கருத்தை மட்டும் சுமக்கும் வாகனமும் அல்ல. அவை தரும் அனுபவ விரிவைப் படைப்பு வடிவத்தின் நுட்பத்தைப் புரிந்துகொள்ளும்போதே பெற முடியும். ‘ஒரு படைப்பாளியின் படைப்பும் கருத்தும் அதனதன் தளத்திலேயே மறுக்கப்பட வேண்டும்’, ‘ஒரு நூலை, ஒரு கருத்தை இன்னொரு நூலாலும் கருத்தாலும் எதிர்கொள்வதே உத்தமம்’ என்று கண்ணன் முன்வைக்கும் எண்ணங்கள் நடைமுறைக்கு வர வேண்டும். அதற்குக் கலை இலக்கிய ரசனைப் பயிற்சி பெரிதும் உதவும். ரசனையைக் கலையாகப் பயிலும் சமூகத்தில் கருத்துரிமை உயர்ந்து விளங்கும். கருத்துரிமையின் கூறுகள் மேம்படுவதற்குக் கலை இலக்கியப் பயில்வே சிறந்த தீர்வு.

இவ்விதம் பல எண்ணங்களைக் கிளர்த்தும் இந்நூல் கருத்துரிமைப் பிரச்சினைகள் உருவான காலத்திலேயே உடனடி எதிர்வினையாகக் கண்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இப்பிரச்சினையை மேலும் விரிவான தளத்தில் விவாதிக்க ஒரு திறப்பாக இந்நூல் பயன்படும். இதற்கு என்னை அணிந்துரை எழுதும்படி கண்ணன் கேட்டுக்கொண்டார். மாதொருபாகன் பிரச்சினைக்குப் பிறகு கருத்துரிமை தொடர்பாக அவர் தொடர்ந்து சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது எண்ணங்கள் கூர்மைப்பட அப்பிரச்சினை காரணமாக இருந்திருக்கிறது. அப்பிரச்சினைக்குப் பிறகு கருத்துரிமைத் தளத்தில் நானும் கவனம் செலுத்தி வருகிறேன். ஆகவே இந்நூலுக்கு நான் அணிந்துரை வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்று கருதியுள்ளார்.

கருத்துரிமை பற்றிச் சட்டரீதியிலும் கோட்பாட்டு அடிப்படையிலும் ஆங்கிலத்தில் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழில் ஏற்கனவே சிறுசிறு வெளியீடுகள் வந்துள்ளன. இதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. விரிவாக எழுதப்பட்ட தனிநூல் இல்லை. அவ்வகையில் கருத்துரிமை குறித்துத்  தமிழில் வெளியாகும் முதல் நூல், முன்னோடி நூல் இது. முன்னோடி நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தமை மகிழ்ச்சி தருகிறது.

——

பயன்பட்ட நூல்:

வீ.பா.கணேசன் (மொ.ஆ.), வழக்கு எண் 1215/2015, ‘மாதொருபாகன்’ வழக்குத் தீர்ப்புரை, 2016, சென்னை, பாரதி புத்தகாலயம்.

 

17-12-19                                                                                   பெருமாள்முருகன்