ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்

 

ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்

‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூலோடு எனக்கு முப்பதாண்டுகளுக்கு மேலான சம்பந்தம் இருக்கிறது. அது சிறுவரலாறாக விரியும் தன்மை கொண்டது. முனைவர் சந்தனமாரியம்மாள் அவர்களின் ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுதும் இச்சந்தர்ப்பத்தை என்  ‘வரலாற்றுப் பெருமை’ சாற்றப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் பொறுத்துக்கொள்வாராக.

1988ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் எம்.பில். ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். சென்னை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை எனினும் சகிப்புடன் எட்டு ஆண்டுகள் கல்வியின் பொருட்டு அங்கே வாழ்ந்தேன். என் சகிப்புக்கு முக்கியக் காரணம் சென்னை நூலகங்கள். சென்னைப் பல்கலைக்கழக நூலகம், பல்கலைக்கழகத்தின் மெரினா வளாக நூலகம், மறைமலையடிகள் நூலகம், கன்னிமாரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் ஆகியவை எனக்குப் பிடித்த இடங்களாக இருந்தன. நவீன இலக்கியப் படைப்புகள் பலவற்றை அந்நூலகங்களில் வாசித்தேன். பல்வேறு இதழ்களையும் இதழ்த் தொகுப்புகளையும் வாசிக்கும் வாய்ப்பு மிகப்பெரும் மகிழ்ச்சி கொடுத்தது. சிற்றிதழ்கள், ஆய்விதழ்கள், வெகுஜன இதழ்கள் என எல்லாவற்றையும் வாசிப்பேன். கையிலெடுப்பார் யாருமின்றி வாசிக்கப் போட்டியே இல்லாமல் சில இதழ்கள் ஒருபுறமாகக் கிடக்கும். நல்ல கூட்டம் இருக்கும் மாலை நேரத்தில் நூலகத்திற்குச் சென்றால் அவ்விதழ்கள்தான் வாசிக்க கிடைக்கும். அவை மரபுக்கவிதை ஆர்வலர்கள் நடத்திக்கொண்டிருந்த சிறுசிறு இதழ்கள். மரபிலும் எனக்கு ஆர்வம் இருந்ததால் அவற்றையும் வாசிப்பேன். அவற்றில் வரும் சில வெண்பாப் போட்டிகளுக்குச் செய்யுள்கள் எழுதியுமிருக்கிறேன்.

இலக்கின்றிக் கிடைப்பவற்றை எல்லாம் வாசித்துத் திரிந்த அக்காலம் என் வாழ்வின் இளவேனில் பருவம். மறைமலையடிகள் நூலகத்திலோ கன்னிமாரா நூலகத்திலோ ‘புலமை’ இதழ்த் தொகுப்பு கிடைத்தது. அவ்விதழை நடத்தியவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் பொன்.கோதண்டராமன் (பொற்கோ) அவர்கள். அவரைப் பேராசிரியராக அறிவேன். இதழாசிரியராகவும் அவர் இருந்தது எனக்குப் புதிய செய்தி. அவ்விதழில் எனக்கு விருப்பமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். அதில் ஒரு கட்டுரை ‘ஆதியூர் அவதானி பாட்டு: நாடோடி இலக்கியத்தில் ஒரு திருப்பம்’  (புலமை, ஜூலை – செப்டம்பர், 1976) என்னும் தலைப்பிலானது. ஜெ.பார்த்தசாரதி என்பவர் எழுதியிருந்தார். தமிழறிஞர் மு.இராகவய்யங்காரின் பேரர் அவர். அக்கட்டுரையில் அவர், ‘இந்நூலின் பழைய அச்சுப் பிரதியொன்றை என் பாட்டனார், தமிழாராய்ச்சியின் மார்க்கதரிசி, பேராசிரியர் மு.இராகவையங்கார் அவர்கள் என்னிடம் அளித்து அது பற்றிய அறிமுகம் செய்து வைத்தார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  ‘ஆதியூர் அவதானி சரிதம்’  நூலின் ஆசிரியரான வித்வான் சேஷையங்கார் பற்றிச் சில செய்திகளையும் அக்கட்டுரையில் கொடுத்திருந்தார்.  ‘இந்நூலாசிரியர் சென்ற நூற்றாண்டில் கீர்த்தி வாய்ந்த பேராசிரியராகவும் பொறியியல் வல்லுநராகவும் வாழ்ந்து வந்தார் என்பது தவிர அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. இவர் இயற்றிய வேறொரு தமிழ்க் காப்பிய நூல் ‘குணகரம்’ என்பது. இவர் இராமநாதபுரத்தில் பணி புரிந்தபோது தம் குடும்பத்திற்கு அறிமுகமானதாகப் பேராசிரியர் மு.இராகவையங்கார் அவர்கள் கூறியதுண்டு’ என்பன அவர் தரும் தகவல்கள்.

அதை வாசித்து ஓரிரு மாதம் கழிந்த பிறகு 1988 செப்டம்பர் ‘கணையாழி’ இதழில் ‘சிட்டியுடன் ஒரு சந்திப்பு’ என்னும் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை வெளியாகியிருந்தது. அப்போது மாதாமாதம் கணையாழி இதழ் சார்பாக ‘இலக்கிய வாசகர் சந்திப்பு’ நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் மாதச் சந்திப்பில்  ‘சிட்டி (பெ.கோ.சுந்தரராஜன்)’ அவர்கள் பங்கேற்றிருந்தார். அந்நிகழ்வைப் பற்றிய பதிவு அக்கட்டுரை. ‘முதல் தமிழ் நாவல்’ என்னும் தலைப்பில் ‘ஆதியூர் அவதானி சரிதம்’ பற்றிச் சிட்டி பேசியிருந்தார். சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோர் எழுதிய ‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் நூலில்கூடக் குறிப்பிடாத ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூலை லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் சிவபாதசுந்தரம் கண்டு அதன் முழுநகலைச் சிட்டிக்கு அனுப்பியதாகவும் அதுதான் தமிழின் முதல் நாவல் ஆகும் என்றும் சிட்டி அந்நிகழ்வில் பேசியிருந்தார். அதை வாசித்தவுடன் ஜெ.பார்த்தசாரதியின் கட்டுரை எனக்கு நினைவு வந்தது. அக்கட்டுரையைத் தேடி மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு ‘ஆதியூர் அவதானி சரிதம்: இன்னொரு செய்தி’ என்னும் தலைப்பில் சிறுகட்டுரை ஒன்றை எழுதிக் கணையாழிக்கு அனுப்பினேன். அக்கட்டுரை சுருக்கப்பட்டு ஒருபக்க அளவில் கணையாழியில் (ஜனவரி 1989, ப.16) பிரசுரமாயிற்று. ஜெ.பார்த்தசாரதி எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை விவரித்து உரிய மேற்கோள்களுடன் எழுதியிருந்தேன். அதில் முக்கியமான வரி இது: ‘1876இல் வெளியான தமிழின் முதல் ‘நாவல்’ ஆகிய பிரதாப முதலியார் சரித்திரத்துக்கும் முன்னோடியாகச் செய்யுளில் அமைந்த முதற் புதினமாகவும் இதைக் கூறுவது பொருந்தும்.’ ஆதியூர் அவதானி சரிதத்தைத் தமிழின் முதல் நாவலாகக் கூறலாம் என்பது ஜெ.பார்த்தசாரதியின் கருத்து.

பின்னர் 1994இல் சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் முன்னுரையுடன் ‘ஆதியூர் அவதானி சரிதம் (முதல் தமிழ் நாவல்)’ என விஜயா பதிப்பகத்தின் மூலம் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியானது. அம்முன்னுரையில் ஜெ.பார்த்தசாரதியின்  ‘புலமை’க் கட்டுரையைக் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். ஆய்விதழாகிய ‘புலமை’யில் வெளியாகி அவ்வளவாகப் பொதுவெளியில் கவனம் பெறாத அக்கட்டுரையை கவனத்துக்குக் கொண்டுவந்த என் கட்டுரை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அது பிரச்சினையில்லை. ஆனால் ஜெ.பார்த்தசாரதி ‘செய்யுளில் அமைந்த முதற்புதினம்’ என்று கூறியுள்ளதைச் சுட்டியிருக்க வேண்டும். தங்களுக்கு முன்பே ஒருவர் ஆதியூர் அவதானி சரிதத்தை ‘முதற்புதினம்’ எனக் குறிப்பிட்டதை அவர்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். எனினும் ஜெ.பார்த்தசாரதியின் கட்டுரை அவர்களுக்குச் சில வழிகளில் பயன்பட்டிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி தந்தது. ஆதியூர் அவதானி சரிதத்தை எழுதிய சேஷையங்காரும் நூலின் உள்ளே குறிப்பிடப்படும் ‘நெல்வேலிச் சேஷையங்கார்’ என்பவரும் ஒருவரே எனக் கருதி ஜெ.பார்த்தசாரதி எழுதியுள்ளார். இருவரும் வேறானவர்கள் என்பதைக் குறித்து விரிவாகச் சிட்டி, சிவபாதசுந்தரம் எழுதியுள்ளனர். மேலும் ‘நெல்வேலிச் சேஷையங்கார்’ பற்றி விரிவாக ஆராய்ந்து  தம் பெண்ணுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே மறுமணம் செய்வித்து அதன் காரணமாகப் பலவிதத் தொல்லைகளை அனுபவித்தவர் அவர் என விவரமாகப் பதிவு செய்துள்ளனர்.

இந்நூலை எழுதிய சேஷையங்காரைப் பற்றி மிகக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன.  ‘கீர்த்தி வாய்ந்த பேராசிரியர்’ எனவும்  ‘பொறியியல் வல்லுநர்’ எனவும் கூறுகிறார். அத்தகவல்கள் அவரது பாட்டனாராகிய மு.இராகவையங்கார் மூலம் கிடைத்திருக்கக் கூடும். நூலின் முதற்பக்கத்தில் Professor Sashiengar என்றிருப்பதால் அவர் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் எனத் தெரிகிறது. எந்தக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றினார், எந்தத் துறை சார்ந்த ஆசிரியர் அவர் என்னும் விவரங்கள் தெரியவில்லை. ‘பொறியியல் வல்லுநர்’ எனக் குறிப்பிடப்படுவதால் அத்துறை சார்ந்தவராக அவர் இருக்கக் கூடுமோ என ஐயம் வருகிறது. ஆதியூர் அவதானியின் முதன்மைப் பாத்திரமான ‘வினையாளன்’ மருத்துவத் தொழில் புரிபவர். நூலில் பொறியியல் தொடர்பான செய்திகள் ஏதுமில்லை. தமிழில் ‘வித்துவான் சேஷையங்கார்’ என்றுள்ளது. Professor என்பதற்கு நிகராக ‘வித்துவான்’ என்னும் சொல்லாட்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் அச்சொல் தமிழ் இலக்கியம் பயின்றவர்களை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது போலும்.

அவரது ஆங்கில முன்னுரையின் கீழ் D.S. என்றுள்ளது. தமிழ் முன்னுரையின் கீழ் ‘தூ-வீ-சே’ என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு முன்னெழுத்து அமைய, தமிழில் இரண்டு முன்னெழுத்துக்கள் உள்ளன. இவற்றின் விவரம் தெரியவில்லை. முன்னுரையின் கீழ்ப் பகுதியில் ‘புரிசைப்பாக்கம்’ என ஊர்ப்பெயர் உள்ளது. சென்னையில் உள்ள ‘புரசவாக்கம்’ என்பதுதான் அது என ஊகிக்கலாம். சென்னையில் அவர் பணியாற்றியிருக்கலாம்; அக்காலத்தில் சென்னையில் ‘பிரசிடென்சி கல்லூரி’ மட்டும்தான் இருந்தது எனக் கருதுகிறேன். அக்கல்லூரியில் அவர் பணியாற்றியிருக்கலாம். ஜெ.பார்த்தசாரதியின் கருத்துப்படி ‘இராமநாதபுரத்தில்’ அவர் பணியாற்றினார் என்றும் தெரிகிறது. அது என்ன பணி என அறிய வேண்டியிருக்கிறது.

ஆதியூர் அவதானி சரிதத்திற்கு முன் ‘குணாகரம்’ என்னும் நூல் ஒன்றை அவர் எழுதியிருப்பதாக அவரே கூறுகிறார். அந்நூலைக் ‘காவியம்’ என்கிறார். ‘பழம் பண்டிதர் மனதில் புதுக்கருத்துக் கொள்ளாது. புதுக்கலையில் தேர்ந்தோர்க்குப் பழம் பாஷை விள்ளாது’ என்கிறார். அது செய்யுளில் எழுதப்பட்ட நூல் எனத் தெரிகிறது. ஜான் முர்டாக்கின் ‘Tamil Printed Books’ என்னும் நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் அச்சு நூல்களின் பட்டியலைத் தருவதாகும். அது 1865இல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘குணாகரம்’ இடம்பெறவில்லை. ஆகவே 1866க்கும் 1875க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் அவர் அந்நூலை இயற்றியிருக்க வேண்டும். அந்நூலின் பிரதி எங்கேனும் கிடைக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.

நூலில் ‘ஆசிரிய விருத்தம்’ என்னும் தலைப்பில் சமர்ப்பணம் ஒன்று உள்ளது. தம் ஆசிரியருக்கு இந்நூலைக் காணிக்கையாக்கும் செய்தியைப் பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைத்திருக்கிறார். அதன் முதல் இரண்டடிகள் விக்டோரியா மகாராணியைப் போற்றி அவர் ‘நாட்டிய இருங்கலை’ படிப்பைப் பற்றிப் பேசுகிறது. ‘இருங்கலை வகுப்பு’ என்பது எந்தக் கல்வியைக் குறிக்கிறது எனத் தெளிவாகவில்லை. அடுத்த அடி அவ்வகுப்புக்கு அதிகாரியிருந்து  ‘யூணர் கல்வியை முதல் நேயமாய் ஈங்களித்த நிபுணராம் அயர்பர்ட்டன் பௌவல் துரை’ என்பவரைக் குறிப்பிடுகிறது. இதில் ‘யூணர் கல்வி’ என்பது என்னவென்று விளங்கவில்லை.  ‘அத்துரையிடம் கற்ற மாணாக்கர் கூட்டத்துள் ஓர் ஏழையாகிய நான்’ எனத் தன்னைப் பற்றிச் சொல்லி  ‘இச்சிறுநூல் அவரது பண்பிற்கும் மிக்க பேரன்பிற்கும் ஈடாப் பரிந்து இங்கிதம் செய்வனே’ எனக் காணிக்கை ஆக்குகிறது. தம் ஆசிரியருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் என்பது விளங்குகிறதே தவிர, கல்வி நிறுவனத்தின் பெயர், கல்வி உள்ளிட்ட எதுவும் விளங்கவில்லை.

ஆனால் இதே சமர்ப்பணம் ஆங்கிலத்தில் இன்னும் சற்றே தெளிவாக உள்ளது. ‘EYRE BURTON POWELL ESQUIRE, MA; C.S.I.’ என அவர் பெயர் காணப்படுகிறது. அவர் சென்னை, பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்பதும் தற்போது ‘DERECTOR OF PUBLIC INSTRUCTION’ என்னும் பதவி வகிப்பவர் என்பதும் அதில் கிடைக்கும் கூடுதல் தகவல்கள். அப்படியானால் சென்னை, பிரசிடென்சி கல்லூரியில் சேஷையங்கார் பயின்றிருக்கிறார் என்பது தெரிகிறது. தெளிவும் தெளிவற்றதுமான இவையே நூல் குறிப்புகளைக் கொண்டு நாம் பெறும் தகவல்கள். எனினும் இத்தகவல்களை வைத்துக்கொண்டு மிக முயன்று பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆவணங்களில் தேடினால் அவரைப் பற்றிய விவரம் ஓரளவுக்குக் கிடைத்துவிடும் எனத் தோன்றுகிறது.

சரி, ஆதியூர் அவதானி சரிதம் என்ன வகையான நூல்? தமிழின் முதல் நாவல்தானா? நூலாசிரியர் சேஷையங்கார் இந்நூலுக்கு ஆங்கிலத்தில் இரு தலைப்புகள் தருகிறார். ‘ATHIYUR AVADHANI OR THE SELF – MADE MAN’ என்பதாகும். தமிழில் ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்னும் ஒரு தலைப்புத்தான். எனினும் தமிழ் நாவல்களுக்கு இரு தலைப்புகள் தரும் முறை இந்நூலிலேயே தொடங்கியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைப்புக்குக் கீழே ‘An Original Tamil Novel’ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நவீனமாக வியற்றிய கட்டுரைக் கதை’ என்றுள்ளது. அவருக்கு ஆங்கில நாவல்களை வாசிக்கும் பழக்கமும் அதனால் நாவலைப் பற்றிய அபிப்ராயமும் இருந்திருக்கிறது என்பதும் முன்னுரையில் தெரிகிறது. ஆங்கிலத்தில் உரைநடையில்தான் நாவல் எழுதுவார்கள் என்பதையும் ஆனால் தான் செய்யுள் வடிவில் எழுதுகிறோம் என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். தமிழில் உரைநடை பெருவழக்காகவில்லை என்பதால் மக்களிடையே  மிகவும் பிரபலமாக விளங்கும் பாடல் வடிவில் இக்கதையை எழுதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் எழுதியதை நாவல் என அவர் குறிப்பிடுவதால் அது நாவலாகிவிடுமா என்னும் கேள்வி எழுகிறது.

சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர் ‘விக்ரம் சேட்’டின் கவிதை நடை நாவலோடு ஒப்பிட்டு இதையும் நாவலாக ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர். அத்தனை சிரமம் எடுத்து இதை நாவலென நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இந்நூல் வெளியான 1875 வரை உரைநடையில் நாவல் உருவாகவில்லை. தாம் புதிதாக எழுதுவதை உரைநடையில் எழுதினால் தமிழில் வரவேற்பிருக்காது என அவர் கருதியுள்ளார். ஆகவே பொருள் புதிதாக இருப்பினும் அக்காலத்தில் மக்களிடம் பிரபலமான செய்யுள் நடையில், அம்மானைப் பாடல் வடிவத்தில் இக்கதையை எழுத அவர் தீர்மானித்துள்ளார். ஆகவே வழக்கமான அம்மானைப் பாடல் வடிவம்; ஆனால் நவீன வாழ்க்கை என்னும் புதிய பொருள் எனத் தேர்ந்து கொண்டுள்ளார். அம்மானைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட நூல் இது எனக் கொள்ள நினைக்கிறேன். ஆகவே எல்லோராலும் தமிழின் முதல் நாவல் என ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலுக்கு மாற்றாக இதை முதல் நாவல் என முன்னிறுத்துவது தேவையில்லை.

இந்நூல் வெளியிடப்பட்டபோது ‘தமிழின் முதல் நாவலை எழுதிய வேதநாயகம் பிள்ளை கிறித்தவர்; பார்ப்பனர் அல்லாதவர். அவரிடத்தில் சேஷையங்கார் என்னும் பிராமணரைக் கொண்டு வந்து இருத்தும் முயற்சி இது’ என எழுந்த விமர்சனத்தை நினைவில் கொள்கிறேன்.  நான் அப்படிக் கருதவில்லை என்றாலும் ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூலை  ‘அம்மானை’ என்றே மதிப்பிடுவேன். என் அளவுகோலில் நாவலின் அடிப்படைப் பண்பு ‘உரைநடை’ என்பதுதான்.

இவ்வாறு என் கருத்து இருப்பினும் ’தொடக்க காலத் தமிழ்ப் புதினங்களில் பெண் சித்திரிப்பு’ என்னும் தலைப்பில் என் மனைவி  பி.எழிலரசி முனைவர் பட்ட ஆய்வு செய்தபோது இந்நூலையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளச் சொல்லிப் பரிந்துரைத்தேன். பத்தொன்பதாம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டும் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் மருத்துவம் பயில்தல், கைம்பெண் மறுமணம் உள்ளிட்ட முற்போக்குக் கருத்துக்களை முன்வைத்தும் எழுதப்பட்ட இந்நூலிலிருந்து பெண் சித்திரிப்பு பற்றிய பல தகவல்களைப் பெற முடியும் என்பது என் நம்பிக்கை. அதற்கேற்ப அவரது ஆய்வேட்டில் இந்நூல் குறித்து விரிவாகவே எழுதியுள்ளார். அதை அவரது நெறியாளர் பேராசிரியர் வீ.அரசு அவர்களும் அங்கீகரித்தார்.

அதன்பின் 2013ஆம் ஆண்டு தமிழ் இந்து நாளிதழின் இணைப்பு இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்த நண்பர் அரவிந்தன், தமிழ் நவீன இலக்கிய வரலாறு குறித்துத் தொடர் ஒன்றை எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதில் ‘ஆதியூர் அவதானி சரிதம்’ பற்றிச் சிறுகட்டுரை எழுதினேன். அக்கட்டுரையே இந்நூலாசிரியர் முனைவர் சந்தனமாரியம்மாள் அவர்கள் என்னிடம் முன்னுரை கேட்கக் காரணம். வெகுஜன இதழ்களின் செல்வாக்குப் பெரிதுதான்.

*******

முனைவர் சந்தனமாரியம்மாள் எழுதியுள்ள ‘கதைக் கவிதை மரபும் ஆதியூர் அவதானி சரிதமும்’ என்னும் இந்நூல் எனக்கு முதலில் வியப்பளித்தது. ஆதியூர் அவதானி சரிதத்தைத் தமிழ்ச் சமூகம் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என நான் கருதியிருந்தமைக்கு மாறாக இவ்வொரு நூலை மட்டும் ஆய்வுப்பொருளாகக் கொண்டு முனைவர் பட்ட ஆய்வு செய்திருக்கிறார் என்பதுதான் வியப்புக்குக் காரணம். சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோர் இதைத் தமிழின் முதல் நாவல் என நிரூபிக்க முயன்றிருப்பதைக் கருத்தில் கொண்டு அப்பிரச்சினைக்குள் தம் கருத்தைச் செலுத்தி இந்நூலைக்  ‘கதைக் கவிதை’ எனக் கருதித் தம் ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.  இதற்குப் பின்னர் உருவான நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், தீனதயாளு ஆகிய நாவல்களுடன் ஒப்பிட்டு விரிவாக ஆய்ந்துள்ளார். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாவலுக்குரிய கூறுகள் அமைந்திருப்பினும் செய்யுள் வடிவம் கொண்டிருப்பதால் ‘கதைக் கவிதை’ எனச் சொல்வதில் ஆய்வாளருக்கு விருப்பம் இருப்பதை அறிய முடிகிறது.

நவீன இலக்கிய ஆய்வுகள் இலக்கற்றுப் போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் குறிப்பிட்ட ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது தொடர்பாக நிலவும் பிரச்சினையை ஆய்வுச் சிக்கலாகக் கொண்டு தம் ஆய்வை நிகழ்த்தியிருக்கும் முனைவர் சந்தனமாரியம்மாள் பாராட்டுதலுக்கு உரியவர். ஒரே ஒரு நூல்தான் ஆய்வுக்கான முதன்மை ஆதாரம் எனினும் அதை நுணுகிக் கற்று ஒப்பியல் ஆய்வு அணுகுமுறையைத் திறம்படப் பயன்படுத்தியுள்ளார். ஆய்வின் மொழிநடை விவாத முறையில் அமைந்து பெரிதும் ஈர்க்கிறது. இவ்வாய்வு ஆதியூர் அவதானி சரிதம் தொடர்பான உரையாடலைத் தமிழ்ச் சமூகத்தில் மீண்டும் தொடங்கி வைக்கும் என நம்புகிறேன். இந்நூலைப் பல கோணங்களில் ஆய்வு செய்ய இவரது நூல் நல்ல தொடக்கமாக இருக்கும். அவ்வகையில் தூண்டுதலை வழங்கும் நல்லதோர் ஆய்வு நூலை வழங்கியிருக்கும் முனைவர் சந்தனமாரியம்மாள் அவர்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரியதாகுக. வாழ்க வாழ்க.

27-12-19                                                                                                                                                                                பெருமாள்முருகன்

நாமக்கல்.