கவிஞர் இசைக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினத்தை ஒட்டித் தில்லியில் நடைபெற்ற ‘இந்தியக் கவி சம்மேளனம்’ நிகழ்வில் தமிழின் சார்பாகக் கவிதை வாசித்திருக்கிறார். வரும் குடியரசு தினத்தன்று வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது. மகிழ்ச்சி. தலைநகரப் பயணம் சிறந்திருக்கும் என நம்புகிறேன். ‘வருக வருக’ சுவரொட்டிகள்; வரவேற்புப் பதாகைகள்; சால்வைகள், பதக்கங்கள் எல்லாம் பெற்று நாடு (ஐயா, தமிழ்நாடு) திரும்பியுள்ள அவருக்கு மீண்டும் வாழ்த்துக்கள். சினமில்லா, சீற்றம் கொள்ளாக் கவிஞர் என்று நம்பி அவரை மேற்கோள் காட்டி இச்சிறு கட்டுரையை எழுதுகிறேன்.
அப்பயணத்தைப் பற்றி அவர் எழுதிய முகநூல் குறிப்பு ஒன்று கவனத்தை ஈர்த்தது. அது:
“ஏங்க டெல்லி போயிட்டு பத்திரமா திரும்பிருவீங்களா..?” என்று கவலை தொனிக்க கேட்டார் மனைவி.
” எனக்கு ஜெயமோகனத் தெரியும்… ஜெயமோகனுக்குக் கமலஹாசனத் தெரியும்… கமலஹாசனுக்குத் கெஜ்ரிவாலத் தெரியும்… பார்க்கப் போனா கெஜ்ரிவாலே எனக்கு ரெண்டு விட்ட ப்ரெண்டு தாமா…” என்று ஆற்றுப்படுத்தி வைத்துள்ளேன் (06-01-23).
கணவன் பத்திரமாகத் திரும்புவாரா என்று கவலைப்பட்ட மனைவியை ‘ஆற்றுப்படுத்தி’ வைத்துள்ளாராம். அதாவது ‘ஆறுதல் கூறி’ என்னும் பொருளில் சொல்கிறார் என்று நினைக்கிறேன். ஆற்றுப்படுத்தலுக்கு ‘ஆறுதல்’ என்று அர்த்தம் உள்ளதா?
சமீப காலமாக ‘ஆற்றுப்படுத்து’ என்னும் சொல்லை ‘ஆறுதல்’ பொருளில் பலர் பயன்படுத்துவதைக் காண்கிறேன். இணையத்தில் உடனடியாகக் கிடைத்த சில சான்றுகள்:
சான்று 1 : ‘கற்றது தமிழ்’ திரைப்படம் குறித்த விமர்சனம் ஒன்றில் இப்பகுதி வருகிறது:
உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயக்காலின் அசுரத்தனத்தால் ஜீவாவின் தாடியைப் போல பெருகியிருக்கும் ஐடி நிறுவனங்களையும், தமிழ் கற்றுக்கொண்டு வேலை கிடைக்காமலும், கிடைத்த வேலையை தக்கவைக்க முடியாமலும் போராடும் இளைஞனை ஒப்புமைப்படுத்துகிறார் ராம். அந்த இளைஞன் அதிகாரத்தின் லட்டிகளைக் கண்டு, புனையப்படும் பொய் வழக்குகளைக் கண்டும் ஓடிக்கொண்டிருக்கும்போது அவனை ஆற்றுப்படுத்து மூச்சுவிட சொல்கிறது காதல். (https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/878742-jiiva-starrer-ram-directorial-kattradhu-thamizh-movie-celebrated-15-years.html )
காதல் அவனுக்கு ஆறுதல் கொடுத்து மூச்சுவிடச் சொல்கிறது என்பது பொருள்.
சான்று 2: பாரம்பரியக் கலைகள் தொடர்பான ‘தினகரன்’ கட்டுரையில் வரும் பகுதி:
உலகமயமாக்கம் என்ற எண்ணக்கரு உதயமானாலும் இன்று பண்பாட்டுத் தனித்துவமானது எல்லா நாடுகளிலும் எல்லா இனத்தவர்களிடையேயும் பரவலாகப் பேணப்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது. இன்று சினிமா, தொலைக்காட்சி நாடகம் என்பன வீட்டுக்குள் உள் நுழைந்திருந்தாலும் பாரம்பரியக் கலையை நுகர்வதற்காக இன்று மக்கள் வீட்டை விட்டு நிகழிடத்திற்கு வந்து தம் மனதை ஆற்றுப்படுத்திக் கொள்கின்றனர்.
பாரம்பரியக் கலையை அதன் நிகழ்விடத்திற்குக் காண வந்து மக்கள் தம் மனதை ‘ஆறுதல் படுத்திக்’ கொள்கின்றனர் என்பதுதான் பொருள். ‘ஆறுதல் படுத்தி’ என்று எழுதுவது அவ்வளவாக வழக்கில் இல்லை. ஆகவே ‘இன்று மக்கள் வீட்டை விட்டு நிகழிடத்திற்கு வந்து ஆறுதல் கொள்கின்றனர்’ என்று எழுதினாலே போதும். ஆற்றுப்படுத்துதல் இங்கும் ‘ஆறுதல்’ பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்று 3 : ‘காலம்’ பற்றிய கட்டுரை ஒன்றில் இடம்பெறும் பகுதி: (ஒற்று, நிறுத்தற் குறிகள் என் உபயம்.)
இவ்வாறு காலத்தைக் குறித்துரைத்த நம்மவர்கள் ‘என்ன செய்வது, எல்லாம் காலம் செய்த கோலம்’ என்று கூறி ஆற்றுப்படுத்துவதற்கும் காலம் என்ற சொல்லைக் கையாள்கின்றனர்.
‘எல்லாம் காலம் செய்த கோலம்’ என்று சொல்லி ஆறுதல் கொள்வதற்கும் காலம் என்ற சொல்லைக் கையாள்கின்றனர்’ என்பதே பொருத்தம். இங்கும் ‘ஆற்றுப்படுத்துதல்’ என்பது ‘ஆறுதல்’ பொருளிலேயே வருகிறது.
ஆற்றுப்படுத்துதலும் ஆறுதல் கூறுவதும் ஒன்றா? ஆற்றுப்படுத்தல் என்னும் சொல்லுக்கு ஆறுதல் எனப் பொருள் உண்டா?
அறு என்னும் வினையடியின் முதல் நீண்டு ‘ஆறு’ என்னும் தொழிற்பெயர் உருவாகிறது. நீர் அறுத்துச் செல்வதால் ஆறு. அதே போல நிலத்தை ஊடறுத்துச் செல்வதால் வழி என ஆறு பொருள்படுகிறது. தொல்காப்பியத்திலேயே ‘வழி’ப் பொருளில் ‘ஆற்றிடைக் காட்சி’ என வருகிறது. பருண்மையான பாதையை வழி குறித்தது. பின்னர் வளர்ச்சி பெற்று நுண்மையாகவும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. ஒருவருக்கு ‘வழி சொல்லுதல்’ கண்ணுக்குத் தெரியும் பாதையைக் குறிக்கிறது. ஒருவருக்கு ‘வழிகாட்டுதல்’ என்பது அவரது பிரச்சினைக்குத் தீர்வு சொல்வதாகிறது.
சங்க இலக்கியத்தில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன. புறநானூற்றில் ‘ஆற்றுப்படை’த் துறையில் அமைந்த பாடல்கள் பலவும் உள்ளன. ஆற்றுப்படை இலக்கியம் ‘வழி சொல்லுதல்’, ‘வழிகாட்டுதல்’ ஆகிய இருபொருள்களையும் உட்கொண்டது. வறுமையில் இருக்கும் கலைஞனுக்கு ‘இந்த வள்ளலைச் சென்று சந்தித்தால் உன் பிரச்சினை தீரும்’ எனச் சொல்வது ‘வழிகாட்டுதல்.’ அந்த வள்ளலின் நாட்டுக்குச் செல்லும் பாதையை விவரித்தல் ‘வழி சொல்லுதல்.’ இரண்டும் காட்சிரீதியாக இவ்விலக்கியத்தில் இடம்பெறும்.
ஆறுதல் என்பதற்குத் தணிதல், அமைதியாதல், புண் காய்தல், அடங்குதல் ஆகிய பொருள்களை அகராதிகள் தருகின்றன. ‘வருத்தத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மனம் மீளத் தெம்பு தருவது; தேறுதல்’ என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. ‘ஆற்றுப்படுத்து’ என்பதற்கு ‘ஒன்றை அல்லது ஒருவரை வழிநடத்துதல்; நெறிப்படுத்துதல்’ என அதே அகராதி கூறுகிறது. ‘ஆறு’ எண் உட்படப் பல பொருள்களில் வரும் சொல். ஆற்றுப்படுத்தலும் ஆறுதலும் வேறு வேறு. கவிஞர் இசை தம் மனைவிக்கு ஆறுதல் கூறிச் சமாதனப்படுத்தியிருப்பார் என்றே நினைக்கிறேன். ஒருவேளை அவர் ‘ஆற்றுப்படுத்தி’ (நெறிப்படுத்தி, வழிகாட்டி) இருப்பார் என்றால் ‘அது ஆணாதிக்கவாதியின் செயலய்யா’ என்று சொல்லிவிடுவோம்.
—–