உயிரைவிட உணவு முக்கியமா?

பகுதி 1

உயிரைவிட உணவு முக்கியமா?

‘உயிரைவிட உணவு முக்கியம்’ என்னும் வாசகத்தைச் சிலரது முகநூல் பதிவுகளில் காண்கிறேன். இவ்விதம் பசி பற்றியும் பசியால் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் அக்கறையுடன் கூடிய பதிவுகள் பல வருகின்றன. நண்பர்கள் பேசும்போது இத்தகைய கவலையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பசி, உணவு ஆகியவற்றைப் பற்றி இந்த ஊரடங்கு நெருக்கடி காலத்தில் நாம் பல கோணங்களில் பேச வேண்டியிருக்கிறது. அதற்கு இத்தகைய நெருக்கடி கால அனுபவங்களைப் பேசும் இலக்கிய நூல்கள் சில புரிதல்களைத் தரும் என்று நினைக்கிறேன்.

நாட்டுப்புறப் பாடல்கள், மரபிலக்கியம் ஆகியவற்றில் கொள்ளைநோய் பற்றிப் பேசும் தனித்த பாடல்களோ நூல்களோ இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. தேடிப் பார்க்க வேண்டும். ஆனால் பஞ்சம் பற்றிய பல நூல்கள் கிடைக்கின்றன. பஞ்சக் கும்மி, பஞ்சலட்சணத் திருமுக விலாசம் என்னும் தலைப்புகளில் நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலும் சிற்றிலக்கிய வகையாகவும் எழுதப்பட்ட நூல்கள் அவை. பஞ்ச காலத்திற்கும் கொள்ளை நோய்க் காலத்திற்கும் ஏதேனும் வகையில் தொடர்பு இருக்கிறதா?  ‘கிருமிங்க கொண்டுவர்ற பெருநோய்கள் எல்லாத்தையும்விட பயங்கரமான கொள்ளைநோய், பஞ்சம்தான்’ என்று கி.ராஜநாராயணன் (26-04-20, தமிழ் இந்து) சொல்கிறார். பஞ்ச காலத்தில் மக்களின் முதன்மையான பிரச்சினை உயிர்தான்; உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உணவு தேடலே வேலை.

உயிர் முக்கியமா, உணவு முக்கியமா என்று கேட்டால் எல்லோரும் ‘உயிர்தான் முக்கியம்’ என்றே சொல்வார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தானே உணவு? உயிரை விட்டுவிட்டு உணவைப் பெற்று என்ன பயன்? பஞ்ச காலத்தில் மக்களுடைய முக்கியமான பிரச்சினை உயிரைக் காப்பாற்றிக் கொள்வதாகவே இருந்திருக்கிறது. பஞ்ச காலத்தில் உயிரைக் காப்பாற்றி வைத்துக் கொண்டால் பஞ்சம் முடிந்தவுடன் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம் என்பது மக்கள் எண்ணம். சேமிப்பில் இருக்கும் அல்லது அவ்வப்போது கிடைக்கும் தானியங்களை முடிந்தவரை அதிகபட்ச நாள்வரை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கேற்ப உணவை எளிமையாகச் சமைப்பது, உண்பதை இருவேளையாகவும் ஒருவேளையாகவும் குறைத்துக் கொள்வது, குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பவை பயன் நாட்களை நீட்டிக்க மேற்கொள்ளும் செயல்கள்.

கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்பது, கசப்புக் கீரைகளை உண்பது, புளியங்கொட்டையை ஊற வைத்துத் தின்பது என்பவை அடுத்த கட்டங்கள். அதைக் கடந்து எதுவும் கிடைக்காத நிலை ஏற்படும்போது சுயநலம் பெருகுகிறது. தன்னுயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே நோக்கமாக இருக்கிறது. உறவுகள், சொந்தம், பாசம் எல்லாம் தன்னுயிர்க்கு முன்னால் நிற்பதில்லை. சுயநலம் பெருகிவிட்டால் எந்தச் சட்டதிட்டங்களும் செல்லுபடியாகாது. எங்கும் கலகம். அமைதி அற்ற நிலை.

அத்தகைய ஒருநிலையைப் ‘பஞ்சலட்சணத் திருமுக விலாசம்’ என்னும் நூல் காட்டுகிறது. புதுமைப்பித்தனைக் கவர்ந்த நூல்களில் இதுவும் ஒன்று எனப் ‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூலில் சி.ரகுநாதன் குறிப்பிடுகிறார். மேலும் இந்நூலை விரிவாக அறிமுகப்படுத்தித் தம் ‘சமுதாய இலக்கியம்’ என்னும் நூலில் கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார். கு.அழகிரிசாமியும் இந்நூலை அறிமுகப்படுத்தும் வகையில் கட்டுரை எழுதி இந்நூலில் ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரமும் செய்துள்ளார். எழுத்தாளர் பலரையும் கவர்ந்த இந்நூல் முதலில் 1900ஆம் ஆண்டு அச்சில் வந்தது எனத் தெரிகிறது. அதன் பிறகு 1932, 1943, 1956, 1961 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பாகியுள்ளது. சமீபத்தில் இந்நூலை விரிவான முன்னுரை, பின்னிணைப்புகள் ஆகியவற்றுடன் முனைவர் ம.பெ.சீனிவாசன் அவர்கள் (2014, சென்னை, கவிதா பப்ளிகேஷன், விலை ரூ.200) பதிப்பித்துள்ளார்.

1876ஆம் ஆண்டு ஏற்பட்ட தாது வருசப் பஞ்சத்தைப் பற்றி எழுதப்பட்ட நூல் இது. பஞ்ச காலத்தில் தாம் கண்டதை அதன்பின் இருபது ஆண்டுகள் கழித்துப் ‘பிரமனூர் வில்லியப்ப பிள்ளை’ என்னும் புலவர் இயற்றியிருக்கிறார். சிவகங்கைப் பகுதியை ஆட்சி செய்த விஜயரகுநாத துரைசிங்க மகாராஜா (1898 – 1941) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் உணவுக்காக மக்கள் ஈடுபட்ட செயல்களைப் பற்றி இந்நூல் விரிவாகப் பேசியுள்ளது. அச்செயல்கள்:

 1. மாடு ஆடுகளைக் கொண்டு போய் விலை கூறினர்; வாங்குவாரில்லை.
 2. வட்டில் செம்பு குண்டான் தட்டுடன் சருவச்சட்டி கொட்டுக்கூடை தளவாடம் என மட்டில்லாப் பாத்திரங்களைக் கொண்டு பஜாரில் விலை கூறினர்.
 3. அயலார் மனைச் சோற்றுப் பானை திருடினர்.
 4. மற்றோர் எக்கேடு உற்றாலும் நமக்கென்ன என்றே மக்களுடன் வேண்டும் மனையாள் தனையும் விட்டோடினர்.
 5. மகளிரை மாரியம்மன் வேடமிட்டு ஆட வைத்துப் பிழைத்தனர்.
 6. அயலாரோடு மனைவியை உறவாட விட்டு வருமானம் ஈட்டினர்.
 7. குண்டித் துணியும் குடிக்கத் தெளிவும் இன்றிக் ‘கண்டி’க்கு ஓடினர்.
 8. யாசகத்துக்கு ஓடியலைந்து லவ்வோ லவ்வோ என்று ஊசலெனச் சுற்றி உழன்றனர்.
 9. பார்ப்பு முதல் பள்ளுப்பறை நடுங்கப் பட்டப்பகல் ஊரைக் கொள்ளையடித்தனர்.
 10. செந்தவிட்டைக் கிண்டி அதைத் தின்றதினால் மூலக் கடுப்பெடுத்து முக்கிக் கவின் அழிந்து வாலற்ற மந்தி வடிவானார்.
 11. வாழைக் கிழங்கு தனை மாவாக்கிக் கிண்டிய அக்கூழைக் குடித்தனர்.
 12. அத்திப்பழம் ஆல் அரசம் பழம் அருந்தினர்.
 13. கற்றாழை மடலைக் கண்ணுற்று உவகையுடன் உற்றருந்தினர்.
 14. வாகை நெல்லி பூவரசு ஆர் முன்னை புளி மாதளை இலுப்பை மா அரசு ஆல் அத்தி மருதோன்றி மேவு குழை முற்றும் சனங்கள் அதை மொய்த்து உணலால் அத்தருக்கள் நற்றளிர் இல்லாமல் போயின.
 15. மைந்தரை ஒவ்வொன்றாய் விலை கூறி விற்றுத் திரிந்தார் வெகுமாதர்.
 16. தான் ஈன்ற புன்சிசுவைச் சற்றும் அபிமானம் இன்றிக் கானீந்து சென்றார்.

 

இவ்வாறு பல்வேறு செயல்களையும் காட்சிகளையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

—– (தொடரும்)