கவிதை மாமருந்து – 10

ஒரு கண முகில் நிழல் – பெருமாள்முருகன்

ஒரு கண முகில் நிழல் - பெருமாள்முருகன்

கவிதை மாமருந்து – 10: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை

நீண்ட இலக்கியத் தொடர்ச்சியுடைய மொழியில் எழுதும் கவிஞர் ஏதோ ஒருவகையில் மரபோடு தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது தவிர்க்க இயலாது. மரபிலக்கியப் பயிற்சி கொண்டிருப்போரின் கவிதைகளில் மரபின் தாக்கத்தை நேரடியாகவே காணலாம். ஏற்கெனவே கையாளப்பட்ட பாடுபொருள்களை அறிந்துகொள்ளவும் அவற்றில் பொருந்துபவற்றை மறு உருவாக்கம் செய்து பார்க்கவும் மரபு பயன்படுகிறது; பழைமையையும் நவீனத்தையும் இயைத்துப் பார்த்து விழுமியங்கள் மீது கேள்விகளை எழுப்பவும் பயன்படுகிறது.

இவற்றில் பல ஆபத்துகளும் அடங்கியிருக்கின்றன. முக்கியமாகப் பழைமையை உயர்வு என்றும் நவீனத்தைக் குறைவு என்றும் கருதிவிடும் மேலோட்டமான ஆபத்துக்கு இடம் கொடுத்துவிட நேரும். பழைய இலக்கியம் மட்டுமே இலக்கியம், இன்றைக்கு எழுதுவது எல்லாம் ஒன்றுமேயில்லை என்னும் அபத்தமான புரிதல் கொண்ட கல்விச் சூழலும் மனோபாவமும் நிலவும் தமிழ் இலக்கிய உலகில் இந்த ஆபத்து நேர்வது சாதாரணம். இந்த ஆபத்தைக் கவிதை என்று ரசித்து ஆர்ப்பரிக்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். பழையது, புதியது என்னும் முரணைக் கவிதைக்குள் கொண்டுவந்து உயர்ந்தது, இழிந்தது என்னும் விழுமியப் பார்வையை வைத்துவிட்டால் படித்து ரசிக்கவும் கைகொட்டிச் சிரித்து மாயவும் பலர் கிடைப்பர்.

இன்னோர் ஆபத்து, மரபிலக்கியத் தாக்கம் பெற்ற கவிதைகளை அவ்விலக்கியப் பயிற்சியுடைய வாசகர்களே உள்வாங்கிக்கொள்ள இயலும் என்பதாகும். கவிதையை வாசிப்பதற்கும் உள்வாங்கிக்கொள்வதற்கும் எந்தப் பிரயாசையும் செய்ய வேண்டியதில்லை; எத்தகைய முன் தயாரிப்பும் தேவையில்லை என்று எண்ணுவதும் நம் சூழலில் மிகுதி. கவிதையானது எல்லாவற்றையும் வெளிப்படையாகக் காட்டி, உரித்துக் கொடுப்பதல்லாமல் ஊட்டியும் விடும் என்று நினைக்கும்படியே நமது கற்பித்தல் முறைகள் உள்ளன. கவிதை வாசிப்பு முறைகளைக் குறித்தோ, அவற்றில் வாசகப் பங்கேற்புக்கான தகுதிகளைப் பற்றியோ நாம் எங்குமே பேசுவதில்லை. மேலும், மரபிலக்கியம் பெரும் செழுமையுடன் இருப்பினும் அவற்றில் பயிற்சியுடையோர் மிகவும் குறைவாகவே இருப்பதுதான் இயல்பு. ஆகவே, மரபிலக்கியப் பயிற்சியை முன்நிபந்தனையாகக் கொண்ட கவிதைகள் பெரும்பாலான வாசகருக்கு அந்நியமாகிப் போகும். மரபின் ஏதோ ஓர் அம்சத்தைத் தம் கவிதையில் பயன்படுத்துவோருக்குக் கத்தி மேல் நடக்கும் சோதனைதான். அதைக் கடந்து கவிதை வெற்றி காண்பது எளிதல்ல.

பழந்தமிழ் இலக்கியப் பாடுபொருள்களையும் தொடர்களையும் எடுத்துப் பகடிக்காகப் பயன்படுத்திய கவிதைகள் சிலவும் கவிஞர்கள் சிலரும் வெற்றி கண்டிருக்கிறார்கள். உடனே நினைவுக்கு வருபவர்கள் இருவர். சி.மணியின் கவிதைகளில் மரபின் செல்வாக்கு பெருமளவு உண்டு. அவர் கவிதைத் தலைப்புகளே ‘தலைவன் கூற்று’, ‘தலைவி கூற்று’, ‘இரவச்சம்’ என்றெல்லாம் அமையும். பழந்தமிழ் இலக்கிய மரபுகள் குறித்துக் குறைந்தபட்ச அறிவேனும் இருந்தால்தான் அவர் கவிதைகளுக்குள் நுழைய முடியும். அவர் எழுதி மேற்கோளாகவே மாறிவிட்ட மிகவும் பிரபலமான அடிகள் இவை:

அன்று மணிக்கதவை

தாயர் அடைக்கவும்

மகளிர் திறக்கவும்

செய்தார் மாறிமாறி.

என்றும்

புலவர் அடைப்ப

கவிஞர் திறப்பர்.

இக்கவிதையைப் புரிந்துகொள்ள தாயர் அடைத்தலும் மகளிர் திறத்தலும் என்னும் உலா இலக்கிய மரபை அறிந்திருத்தல் அவசியம். சி.மணியின் கவிதைகளில் இத்தன்மையைப் பலவாகக் காணலாம்.

இன்னொருவர் மீரா. மீராவின் ‘எனக்கும் உனக்கும் ஒரே ஊர், வாசுதேவ நல்லூர்’ என்று தொடங்கும் கவிதை ‘செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே’ என்னும் பிரபலமான சங்க இலக்கியத் தொடரையும் அப்பாட்டின் பாடுபொருளையும் பகடியாகக் கையாண்டு வெற்றி பெற்றதாகும். இதிலும் பழைமையின் உயர்வு, நவீனத்தின் இழிவு என்னும் முரண் இருப்பினும் சாதி மனநிலையை விமர்சிக்கும் காரணத்தாலும் பெரும்பாலான நடைமுறை வாழ்வைப் பேசியதாலும் பரவலாகக் கவனம் பெற்றது. ‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ என்னும் குறுந்தொகைப் பாடலைப் பயிலும் யாருக்கும் மீராவின் கவிதையும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது. செம்புலப் பெயல்நீர் போல என்னும் குறுந்தொகை அடிகளின் பொருள் அறிந்தவர்க்கே மீராவின் கவிதை சுவைக்கும்.

கவிதை மாமருந்து – 10

இந்த மண்ணில் ஓர் இளங்கவி

பகடிக்காக அல்லாமல் காத்திரமாகவே மரபிலக்கியத்தைப் பயன் கொண்டு வெற்றி பெற்றவர்கள் அரிதினும் அரிது. அவ்வகையில் குறிப்பிடத்தக்க தனிக்குரல் என்று கவிஞர் ராஜசுந்தரராஜன் அவர்களைச் சொல்லலாம். அவரைக் கண்டுபிடித்தவர் கவிஞர் மீரா என்பதும் முக்கியமான செய்தி. ராஜசுந்தரராஜன் 1980களில் எழுத வந்தவர். முதல் கவிதைத் தொகுப்பு ‘உயிர் மீட்சி’ 1986ஆம் ஆண்டு வெளியாயிற்று. ஒரு கட்டத்துக்குள் வேர்க்கிழங்கின் ஓவியத்தை அட்டையாகக் கொண்ட மிகச் சிறிய தொகுப்பு அது. அன்னம் வெளியிட்ட பல நூல்களின் வடிவ அழகு பிரசித்தம். ‘உயிர்மீட்சி’யும் அதற்குச் சாட்சி. அத்தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியவர் சுந்தர ராமசாமி. ‘இந்த மண்ணில் ஒரு இளங்கவி’ என்னும் தலைப்புடைய அவ்வுரையின் முதல் வரி ‘சமீப காலத்தில் தமிழில் தோன்றியுள்ள ஓர் இளங்கவி ராஜசுந்தரராஜன்’ என்று தொடங்கும். ‘சங்க காலக் கவிதையின் பொதுத்தன்மை மீண்டும் இப்போது இங்கு தோன்றி, இக்காலங்களுக்குரிய பாதிப்புகளையும் பெற்றுக்கொண்டு, தம் தொழிலைத் தொடர்வதுபோல் இருக்கின்றன இவரது கவிதைகள்’ என்று சொல்கிறார் சுந்தர ராமசாமி.

அவரது மிகச் சிறந்த அறிமுகத்துடன் முதல் கவிதைத் தொகுப்பு வெளியான போதும் தொடர் இயக்கம் இன்மையால் ராஜசுந்தரராஜன் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. எனினும் அத்தொகுப்பை வாசித்தவர் மனங்களில் அதற்கு ஓர் இடம் இருந்தது என்பதை மறுக்க முடியாது. தமிழ் இலக்கியம் பயிலும் கல்லூரி மாணவனாக நான் இருந்த காலத்தில் வாங்கி வாசித்த அத்தொகுப்பின் பல கவிதைகள் என்னுள் ஆழமாகப் பதிந்திருந்தன. தொகுப்பின் முதல் கவிதையே பெரும் உத்வேகம் கொடுப்பதாக இருந்தது. அதன் தலைப்பு ‘ஆற்றுப்படை.’

தடிமரம் தொற்றி ஏறுதல்தானே

கடினம், அது கழிந்தால்

முடிமரம் உலுக்கக்

கிளைகள் படி அமைக்கும்.

இவ்வளவுதான் கவிதை. தடிமரம் தொற்றி ஏறும் கடினத்தை அனுபவித்துக்கொண்டிருந்த அந்த வயதில் முடிமரம் பற்றிய கனவை விதைத்த கவிதை. நானும் என் நண்பனும் இக்கவிதையை வாசித்துவிட்டு எங்கள் யாப்பறிவைக் கொண்டு மூன்றாம், நான்காம் அடிகள்,

முடிமரம் உலுக்கக் கிளைகள்

படி அமைக்கும்

என்றிருந்தால் நான்கடியிலும் எதுகை அமைந்திருக்குமே, ஏன் கவிஞர் அப்படிச் செய்யாமல் விட்டார், மரபுக் கவிதையல்ல இது என்று காட்ட வேண்டிக் கிளைகளைக் கீழே கொண்டு வந்திருப்பாரோ என்றெல்லாம் விவாதித்த நினைவிருக்கிறது. மரபிலக்கியப் பயிற்சியோடு கொஞ்சம் யாப்பிலக்கணமும் தெரிந்திருந்தால் ராஜசுந்தரராஜனின் கவிதைகள் பலாச் சுளைகள் எனச் சுவைப்பன.

‘திறவுகோல்’ என்னும் தலைப்பிலான கவிதை இது:

தேடிக் கண்டுபிடித்துத்

திறந்தேனா,

திரு இருந்தது

தெள்?

தேடுகிறேன்.

இக்கவிதையைப் பொருள் கொள்ளத் திருக்குறளின் ஒரு குறள் தெரிந்திருப்பது அவசியம். ‘இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ என்னும் குறள். இக்குறளில் வரும் திரு, தெள் ஆகிய சொற்களைக் கொண்டு ‘திறவுகோல்’ கவிதையை அமைத்துள்ளார். இக்குறளோ இச்சொற்களின் பொருளோ தெரியாமல் போனால் கவிதை புரிவது கடினம். வறட்சி, பாலை என்னும் தலைப்புகளில் அவர் எழுதியுள்ள கவிதைகளில் தமிழ் அக இலக்கிய மரபில் பிரிவைச் சுட்டும் பாலைக் காட்சிகளின் பெருந்தாக்கத்தைக் காணலாம். ‘வறண்டு போன காற்றுத் தீண்டி வாகை நெற்றுகள் புலம்பல்’ என்று அவர் எழுதும்போது அகநானூற்றில் வரும் ‘வாகை வெண்ணெற்று ஒலிக்கும் வேய்பயில் அழுவம்’ என்னும் காட்சி நினைவில் எழுந்து காலத்தை அழித்துவிடுகிறது. பெரும்பாலும் மரபின் தாக்கமற்ற ஒரு கவிதைகூட ராஜசுந்தரராஜனிடம் இல்லை என்றே சொல்லலாம்.

கவிதை மாமருந்து – 10

அத்தொகுப்புக்குப் பிறகு அவர் எழுதிய கவிதைகளையும் சேர்த்து வெகுகாலத்துக்குப் பின் 2002இல் ‘முகவீதி’ என்னும் தொகுப்பு தமிழினி பதிப்பகம் மூலமாக வெளியாயிற்று. அப்படியும் பெரிய தொகுப்பு அல்ல அது. அந்த நெடுங்கால இடைவெளியில் அவர் எழுதியவை மிகவும் குறைவானவைதான். எனினும், அவர் பாணி தனித்துவமானது என்பதைக் காட்டும் மொத்தத் தொகுப்பு அது. ராஜசுந்தரராஜன் மரபிலக்கியப் பாடுபொருளையும் தொடர்களையும் காத்திரமாகப் பயன்படுத்துபவர் என்பதோடு கவிதையின் செறிவான வடிவத்துக்கு மரபான சொற்களையும் தொடர்களையும் கையாள்பவர். மரபின் சில பாடுபொருள்களைப் புதுப்பித்துத் தருவதும் நவீனமாக்குவதும் அவர் கவிதைகளில் நிகழும். அக இலக்கிய மரபுகளைப் பெரிதும் தம் கவிப்பொருள்களுக்கு எடுத்து இயைத்திருக்கிறார்.

‘செம்புலப் பெயல்நீர்’ என்னும் தொடரைக் கையாண்டு அவர் எழுதியுள்ள கவிதை இது:

முகில் நிழல்

கிணற்றுநீர் இறைத்து எனக்குக்

குளிக்கத் தர

என் கொழுந்திகள் மனமொருங்கா

ஆறுகுளம் வறண்ட ஊரிலிருந்து

வருகிறேன்.

தன் குறுக்கு வினாக்களால்

நிலைநிறுத்தப்படுகிறது என் ஒழுக்கம்

என்று நம்பிவருகிற என் மனைவி

வசம் போகிறேன்.

இப்பயண வண்டியில்

சிறுதொலைவு என்னோடு

செம்புலப் பெயல்நீர் செய்தாய்

நீ வாழி தோழி.

உன் நினைவில் உயிர்த்தெழும்

என் இனிவரும் நாட்கள்.

கிராமத்துப் பாதையொன்றில் சிறு வாகனத்தில் சென்ற ஒருவரின் கூற்று இது. மரபுப்படி ‘தலைவன் கூற்று’ என்று சொல்லலாம். வழியில் ‘லிஃப்ட்’ கேட்டுச் சிறுதொலைவு அத்தலைவனுடன் பயணம் செய்த பெண்ணொருத்தியின் நினைவைப் போற்றுகிறது கவிதை. ‘முகில் நிழல்’ என்னும் தலைப்பு அச்சிறுதொலைவு இன்பத்தைக் குறிக்கிறது. பெருவெயிலில் வாடித் துன்புறும் சமயத்தில் வானில் ஏகும் மேகத்தின் நிழல் ஒரு கணம் தழுவி இன்பம் ஊட்டிவிட்டுப் போகிறதல்லவா, அதுதான். அவ்வனுபவத்தை ‘இப்பயண வண்டியில் சிறுதொலைவு என்னோடு செம்புலப் பெயல்நீர் செய்தாய், நீ வாழி தோழி’ என்கிறது கவிதை. ‘செம்புலப் பெயல்நீர் செய்தாய்’ என்றால் அதன் அடுத்த பகுதியையும் கூட்டி ‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்தாய்’ எனப் பொருள் கோடல் வேண்டும். இப்பகுதியின் முன்னும் பின்னும் வருபவை கவிதைக்குக் கூடுதல்தன். ‘உன் நினைவில் உயிர்த்தெழும் என் இனிவரும் நாட்கள்’ என்பது கண நேர நிழல், அன்பு என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்று சொல்கிறது. அப்படித்தான் இக்கவிதை அக்கணத்தை நிலைநிறுத்திவிட்டது.

கவிதையின் முன்னிரு பகுதிகள் கொழுந்திகள், மனைவி ஆகியோரைப் பற்றிய மனப்பதிவுகளாக அமைகின்றன. ஆறு குளம் எல்லாம் வறண்ட ஊர் அது. கிணற்று நீர் இறைத்துத் தரக் கொழுந்திகள் மனம் ஒப்பாத ஊர். ஆறு, குளம், கிணறு என்பவை (காதல் அல்லது) காமத்தின் குறியீடுகள் எனக் கொள்ளலாம். மனைவியோ தம் குறுக்கு வினாக்களால் கணவனின் ஒழுக்கத்தை நிலைநிறுத்திவிட முடியும் என நம்புபவர். பொதுவாகப் பெண்களிடம் இயல்பாகப் பேசக்கூட முடியாத சூழல் நம்முடையது. எதிர்பால் உரையாடல்களுக்கே வாய்ப்பற்ற நிலை. உறவுப் பெண்களோ ஓடி ஒளிபவர்கள். மனைவிக்கோ எப்போதும் குறுக்கு வினாக்கள். இந்நிலையில் வழியில் எதிர்ப்பட்ட பெண்ணோடு சிறிதுதூரம் சுதந்திரமாகப் பேச வாய்க்கிறது. அது நீங்காத நினைவாகிறது.

ஆணும் பெண்ணும் சுதந்திரமாக நாலு வார்த்தை பேசிக்கொண்டால் என்னவாகிவிடும்? ஏன் அதுகூட அனுமதிக்கப்படாத வாழ்க்கையாக இருக்கிறது இது? இந்த நீங்காத நினைவாகிய ஒரு கண முகில் நிழலை நம் சூழலின் பாலியல் அணுகல்கள் உட்பட இன்னும் பலபடப் பேச வாய்ப்பிருக்கிறது.

—–             நன்றி: மின்னம்பலம், 15-01-19