கவிதை மாமருந்து : 14

கை விட்டு இறங்கும் கல்

கவிதை மாமருந்து : 14

அன்றாடம் எத்தனையோ சம்பவங்களைச் சந்திக்கிறோம்; கடக்கிறோம்; மறந்தும் போகிறோம். அன்றைக்கு நடந்தவற்றை இரவில் அசை போடும் மனம் கோவையாகச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வர இயலாமல் குழம்புகிறது. எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அது சட்டென வந்து நிற்கும். ஏதோ ஒருவிதமான உறுத்தலை உருவாக்குபவை கட்டாயம் தங்கும். அத்தகையவை ஆழப் பதிந்து காலத்திற்கும் நிற்பதுண்டு. முக்கியமல்லாத சம்பவங்கள் எனக் கருதுபவை ஏராளமாக நடந்தபோதும் பலவற்றை அன்றன்றைக்கே மனம் துறந்துவிடுகிறது. சிலவே துயர் தருவனவாகவும் பழிவாங்கும் உணர்வுகளை ஊட்டுவனவாகவும் நிரந்தரமாக நின்று தொந்தரவு தருகின்றன. அவற்றை எதிர்கொண்டு கடப்பது எளிதல்ல. அதற்குப் பெரும் மனப்பக்குவம் தேவை.

சுலப எதிர்கொள்ளலை எவ்விதம் மேற்கொள்வது என்பதை மையமிட்டே இன்று பல விதமான ஆலோசனைகள், பயிற்சி வகுப்புகள், தியான முறைகள் எனப் பெரும் வியாபாரம் நடக்கிறது. ஆனால் எத்தனையோ விஷயங்களை எளிதில் கடக்கக் கவிதை உதவுகிறது. சாதாரண மனங்களுக்குப் பொருட்டே அல்லாத சம்பவங்கள் பல கவிமனத்திற்கு உவப்பானவையாக இருக்கின்றன. ஒன்றைக் காணும் கோணம், அதற்குள் பொதிந்திருக்கும் அழகைப் பற்றும் சிந்தனை, துணிக்குச் செய்வதைப் போல மொழி வழியாக நிறக்கலவையை ஏற்றுதல் என எல்லாம் செய்து கவிதையாக்கி அச்சம்பவத்தை நிலைநிறுத்திவிடுதல் கவிமனத்திற்கே சாத்தியம். அப்படி உருவான ஒரு கவிதை பதின் வயதிலிருந்து எனக்கு உதவி வருகிறது. அடிக்கடி அக்கவிதையை நினைவு கொள்வதுண்டு. பின்னர் அது ஒரு பழக்கமாகவே மாறிப்போயிற்று. அன்றாடத்தில் காணும் ஒரு சாதாரணச் சம்பவத்தை விவரிப்பது போல நீளும் அக்கவிதை, எதிர்கொள்ளல் குறித்த பெரிய திறப்பை உருவாக்கிவிடும் வல்லமை கொண்டிருக்கிறது. அது கவிஞர் சமயவேல் எழுதிய ‘எதிர்கொள்ளுதல்’ என்னும் கவிதை.

கவிதை மாமருந்து : 14

எளிமையின் கவித்துவ வெளிப்பாடு

கவிஞர் சமயவேல் (1957) 1980களின் இறுதியில் கவிஞராக வெளிப்பட்டவர். 1987இல் வெளியான இவரது முதல் கவிதை நூல் ‘காற்றின் பாடல்.’ சொற்களை நெருக்கி மூச்சு முட்டச் செய்தலே செறிவு என்னும் எண்ணத்தை உடைத்து மிக இயல்பான சொற்களாலும் திருகலற்ற சாதாரணத் தொடரமைப்புகளாலும் உரையாடல் முறையிலும் எழுதிய கவிதைகளைக் கொண்ட தொகுப்பு அது. யாராலும் எழுதிவிட முடியும் என்று தோன்றச் செய்யும் எளிமையுடன் வெளிப்பட்ட இக்கவிதைகள் வாசிப்போரின் குரலுடன் வெகுநேர்த்தியாக இணைந்தன. ‘நான் பாட வேண்டும், இந்தப் பெரும் புல்வெளியை நிரப்பி ஓடுகிற குருமலைக் காற்று நண்பனே நீ பாடு என்கிறது’ என்று சொல்லிப் புதிய குரலாக வெளிப்பட்டவர் அவர். ‘வெயிலும் காடைகளும் என் நண்பர்கள்’, ‘இப்பொழுது நான் இந்த மலையின் குழந்தை’, ‘அதிகாலையைப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி வாயாரப் பாட வேண்டும்’ என்றெல்லாம் இயற்கையோடு இயைந்து கிராமத்துக் குரலெடுத்துப் பாடிய கவிதைகள் தம் கைகளால் வாரியெடுத்துச் சென்று கிறுகிறுக்க வைப்பவை.

எட்டாண்டுகளுக்குப் பிறகு 1995இல் வெளியான ‘அகாலம்’ தொகுப்பும் அதன் தொடர்ச்சியாக அமைந்தது. நகரத்துக் காட்சிகளின் பதிவுகளோடு சற்றே உள்ளடங்கிய தொனியில் இத்தொகுப்பின் கவிதைகள் இருந்தன. அதில் உள்ள ‘எங்களுக்கு ஒரு அறை இருந்தது’ என்னும் கவிதை அக்கால இளைஞர்களுக்கான தேசிய கீதம் போல அமைந்தது; இக்கால இளைஞர்களும் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். ‘அறைகள்’ சுதந்திர வெளியாக அமைவது இப்போது கூடுதலாகியிருக்கிறதே தவிரக் குறையவில்லையே. வீடு விரட்டுகிறது; அறை அரவணைக்கிறது. வீடு இறுக்கத்தின் நிலைக்களன்; அறை நெகிழ்வின் கொள்கலன். இந்த நிலை நீடிக்கும் காலம் வரை அக்கவிதை உயிர்ப்புடன் விளங்கும். சமயவேல் என்னும் பெயரைக் கேட்டவுடன் அக்கவிதையை நினைவு கொள்வோர் பலருண்டு. ‘ஆசிரமம் தெருவில் எங்களுக்கு ஒரு அறை இருந்தது’ எனத் தொடங்கும் கவிதை பதின்பருவ இளைஞர்களின் அறை உலகத்தை விவரித்துச் சென்று இப்படி முடியும்:

அறையை விட்டுக் கிளம்பிக்

குடும்பம் கட்டியிருக்கும் நாங்கள்

வீட்டையும் அறையையும் இணைக்க முடியாமல்

திணறிக்கொண்டிருக்கிறோம்.

இத்தகைய கவிதைகளை எல்லாம் எழுதிய சமயவேல் பத்தாண்டுகளுக்கு மேல் இடைவெளி விட்டு மீண்டும் வந்தார். அரைக்கணத்தின் புத்தகம் (2007), மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010), பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014) ஆகிய கவிதை நூல்களை வெளியாயின. இப்போது கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

‘காற்றின் பாடல்’ தொகுப்பில் இடம்பெற்று, வாசித்த காலந்தொட்டு என் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும் கவிதை இது:

எதிர்கொள்ளுதல்

ஒரு கல்

என் முதுகில் விழுந்தது

வலியோடு நிமிர்ந்து

மரத்தைப் பார்த்தேன்

காற்றில் கிளைகள்

ஆடிச் சிரித்தன

எவரோ எப்போதோ எறிந்து

சிக்கிப் போன கல்லுக்கு

விடுதலை

குனிந்து கல்லை எடுத்தேன்

என் வலி, விசாரம்,

வழியற்ற கோபம் எல்லாம்

கல்லின் முழுமுற்றான மௌனத்தில்

கரைந்து போயின

ஒரு குழந்தையெனக்

கல் கைவிட்டு இறங்கிக்கொள்ள

நான் மீண்டும்

பழம் பொறுக்கத் தொடங்கினேன்.

மரத்தில் சிக்கிய கல்.

கவிதை மாமருந்து : 14

‘ஒரு கல் என் முதுகில் விழுந்தது’ என அதிர்வூட்டலுடன் கவிதை தொடங்குகிறது. எங்கிருந்து வந்த கல்? யார் எறிந்த கல்? எவ்விதம் முதுகில் விழுந்தது கல்? ஏன் முதுகில் விழ வேண்டும் கல்? கல் விழுந்த பின் என்னவாயிற்று? முன்னோக்கி வரும் கல்லை எதிர்கொள்வது எளிது; பின்னிருந்து வரும் கல்லை எவ்வாறு எதிர்கொள்வது? எல்லாக் கேள்விகளுக்கும் கவிதையை மேற்கொண்டு படிக்கும்போது விடை கிடைக்கிறது. கவிதைசொல்லி இருக்குமிடம் ஒரு மரத்தடி என்பதும் பழம் பொறுக்கும் வேலை நடக்கிறது என்பதும் கவிதை வழியாகத் தெரியவருகிறது. எப்போதோ எவரோ எறிந்து மரத்தில் சிக்கிப்போன கல் என்னும் விவரம் கிடைக்கிறது. இப்படி ஒரு சம்பவம் பலருக்கும் நேர்ந்திருக்கும்.

புளி, மா உள்ளிட்ட பழ மரங்களில் எல்லா நேரமும் ஏறிப் பறிக்க முடியாது. மேலும் நுனிக்கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பழங்களை மரத்தில் ஏறினாலும் பறிப்பது கடினமே. ஒரே வழி, கல்லால் எறிந்து பறிப்பதுதான். சரியாகக் குறி வைத்துக் கல்லெறிதல் ஒரு பயிற்சி. பழத்தை நோக்கி எறிந்த கற்கள் மரத்தின் அடியிலும் சுற்றிலும் விழுந்து குவியலாகக் கிடப்பதைக் கொண்டே அம்மரத்தின் மவுசை அறியலாம். பொதுவிடத்தில் இருக்கும் பழமரம் கல்லடி படாமல் தப்பிக்க முடியுமா? அர்ச்சுனன் போலப் பழத்தின் காம்பைக் குறி வைத்து அடித்துப் பழத்தை வீழ்த்தும் திறம் கிராமத்துச் சிறுவர்கள் பலருக்கும் உண்டு.

அவ்வாறு பழத்தைக் குறி வைத்து மரத்தைச் சுற்றிப் பல திசையிலிருந்தும் எறியப்படும் கற்கள் எல்லாமே பழத்தை வீழ்த்துவதில்லை. சில கற்கள் எதிலும் படாமல் எதிர்த்திசையில் போய் விழும். சில கற்கள் மரக் கிளைகளில் பட்டுத் தெறித்து எறிபவர் மீதே வந்து தாக்கும். சில கற்கள் மரத்தடியில் நின்று பழம் பொறுக்கும் யார் தலையிலோ முதுகிலோ போய் விழும். சில கற்கள் மேலே போகும்; திரும்பி வராது. அதாவது மரத்தை நோக்கிச் செல்லும் கல் மரத்தில் இருக்கும் பிளவு, அடர்கிளை, கிளை வெட்டப்பட்டதால் உண்டான வடுவில் இருக்கும் இடுக்கு, பொந்து ஆகியவற்றில் போய்ப் பட்டு அதற்குள்ளேயே சிக்கிக்கொள்ளும். காற்று அசைப்பதாலும் காலப்போக்கில் பிடிப்பின் இறுக்கம் தளர்வதாலும் எதிர்பாராக் கணமொன்றில் கல் விடுபட்டுக் கனிந்த பழம் காம்பிலிருந்து நழுவி விழுவதைப் போலக் கீழே விழும். அப்போது மரத்தடியில் பழம் பொறுக்கிக்கொண்டிருப்பவர் மேல் அக்கல் விழுவதற்கும் வாய்ப்புண்டு. இது சாதாரணமான சம்பவம்தான். இச்சம்பவத்தைக் கவிதை காட்டும் கோணம் வேறு.

முதுகில் கல் விழும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மரத்தைச் சுற்றிலும் கல்லெறிவோர் எவருமில்லை. அப்படி இருந்திருப்பின் எச்சரிக்கையோடு மரத்தடிக்குச் சென்றிருக்கலாம். யாருமில்லாத மரத்தடியில் குனிந்து பழம் பொறுக்கும்போது எங்கிருந்தோ ஒரு கல் வந்து விழுகிறது. நழுவினாலும் விசை கூடி வருவதால் பழம் விழுந்தாலே வலிக்கும். கல் விழுந்தால் பெருவலிதான். வலியோடு நிமிர்ந்து மரத்தைப் பார்க்கிறார் கவிதைசொல்லி. ஒருவருக்குத் துயர் என்றால், வலி என்றால் ஓடி வந்து உதவுபவர் அரிது. கை கொட்டிச் சிரிக்கப் பலர் இருப்பர். ‘காற்றில் கிளைகள் ஆடிச் சிரித்தன’ என்கிறது கவிதை.

விழுந்தது ‘எவரோ எப்போதோ எறிந்து சிக்கிப் போன கல்.’ இப்போது என்னவாயிற்று? அந்தக் கல்லுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. கல் முதுகில் விழுந்ததால் ஏற்பட்ட வலியை விடவும் அக்கல்லுக்குக் கிடைத்த விடுதலை முக்கியமல்லவா? கவிப்பார்வை அப்படித்தான் காணும். விடுதலை பெற்ற கல்லைக் குனிந்து எடுத்துக் காண்கிறார் கவிதைசொல்லி. கல் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அது திட்டமிட்டு முதுகில் வந்து விழவில்லை. அது விழுந்த இடத்தில் முதுகு இருந்தது. அதற்குக் கல் பொறுப்பாக முடியாது. பொறுப்பாகவே இருப்பினும் கல்லின் இயல்பு எதிர்வினை காட்டுவதல்ல. அது முழு முற்றான மௌனம் கொண்டிருக்கிறது. அதன் மௌனம் கவிதைசொல்லியின் வலி, விசாரம், வழியற்ற கோபம் எல்லாவற்றையும் கரைத்துவிடுகிறது.

இனிக் கல்லை என்ன செய்வது? அதன் மேல் கோபப்பட்டுப் பலனில்லை. அது ஏன் வந்து விழுந்தது என்பது போன்ற விசாரக் கேள்விகளுக்கும் அதனிடமிருந்து பதில் கிடைக்கப் போவதில்லை. ‘கல்லு மாதிரி நிக்கிறான்’ என்று சொல்கிறோமே, அப்படி அது கல். அதை என்ன செய்ய முடியும்? கோபத்தில் தூக்கி வீசலாம். அப்போதும் அது கல்லாகவே கிடக்கும். இந்நிலையில் கல்லைக் கை கீழே விடுகிறது. கல் அழகாக ஒரு குழந்தையைப் போலத் தரையில் இறங்கிக்கொள்கிறது. இனி என்ன? கவிதை ‘நான் மீண்டும் பழம் பொறுக்கத் தொடங்கினேன்’ என்று முடிகிறது. பழம் பொறுக்குதல் என்றால் வெறுமனே அச்செயலை மட்டுமே குறிப்பதில்லை. வயிற்றுப்பாட்டுக்கு வேலை செய்தலைக் குறிக்கும் குறியீடு அது. கவிஞர் சுகுமாரனின் கவிதைகளிலும் இந்தப் பழம் பொறுக்குதல் இடம்பெற்றிருக்கிறது. ‘என் கிளிக்குப் பழங்கள் பொறுக்கப் போனேன் வழக்கம் போல’ என்பது அவரது கவிதை வரி. வலியை மறந்து, விசாரத்தை விட்டு, கோபத்திலிருந்து விடுபட்டு அன்றாட அலுவல்களில் வழக்கம் போல ஈடுபடுதலே பழம் பொறுக்குதல்.

இக்கவிதையை மரத்தடியில் பழம் பொறுக்குபவன் முதுகில் விழுந்த கல்லைப் பற்றியது என்று மட்டும் வாசித்தால் பொருளுமில்லை; நயமுமில்லை. ‘எதிர்கொள்ளுதல்’ என்னும் தலைப்பு கவிதையை வாசிக்கும் திறப்பைத் தருகிறது. கல் முதுகில் விழுதலும் அதனால் உண்டாகும் வலியும் துயர்கள். துயர்களை எதிர்கொள்ளுதல் பற்றியது கவிதை. ஒரு துயர் எப்போதோ யாரோ எறிந்த கல்லுக்குக் கிடைத்த சுதந்திரம் போல நம்மை வந்தடையலாம். அதைப் பற்றி விசாரம் கொண்டு பயனில்லை. வலியைப் பொறுத்துக்கொண்டு விழுந்த கல்லை ஒரு குழந்தையைப் போலக் கீழே இறக்கிவிட்டுப் பழம் பொறுக்குவதுதான் சரியான எதிர்கொள்ளல். எல்லாத் துயர்களையும் இவ்விதம் எதிர்கொண்டால் வாழ்வது எளிதாகும்.

—–
நன்றி: மின்னம்பலம், 2019/06/01