கவிதை மாமருந்து: 16

சிறகுகள் பாரம்!

கவிதை மாமருந்து: 16

கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா (1970 – 2019) மறைந்துவிட்டார். அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. எனினும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அறிமுகமும் தொடர்பும் இருந்தன. 2000இல் எழுத்தாளர் சுதேசமித்திரனுடன் இணைந்து அவர் ‘ஆரண்யம்’ என்னும் இதழை மிக அழகிய வடிவமைப்பில் வெளியிட்டார். அவ்விதழுக்கு எழுதும்படி என்னைக் கேட்டார். சிலவற்றை எழுதினேன் என ஞாபகம். ‘பல்கலைக்கழகத்தால் பெற்ற பெரும்பயன்’ என்னும் அனுபவக் கட்டுரை ஒன்று அதில் வெளியாகி மிகுந்த கவனம் பெற்றது. அத்தூண்டுதலே மேலும் சில கட்டுரைகள் எழுதிக் ‘கரித்தாள் தெரியவில்லையா தம்பீ…’ என்னும் அனுபவக் கட்டுரை நூல் உருவாகக் காரணம்.

அக்காலத்தில் கம்பீரமும் அழகும் சேர்ந்து இளமை பொலிந்திருந்தார் ஸ்ரீபதி. இடையிடையே எப்போதேனும் சந்திக்க நேர்ந்தபோது அவர் உடல்நலிவு மனதிற்குத் துயரத்தைக் கொடுத்தது. ஐந்தாறு ஆண்டுகள் அவரைச் சந்திக்கவேயில்லை. கடந்த 2018 ஜூலை மாதம் கோவையில் நடைபெற்ற என் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் வந்திருந்தார். எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவராகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். பெரும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் ‘என்ன ஆச்சு உங்களுக்கு? எப்பேர்ப்பட்ட அழகன் நீங்க. ஏன் இப்படி?’ என்று கேட்டுவிட்டேன். சிரித்துக்கொண்டே ‘கொஞ்சம் ஒடம்பு சரியில்ல. இப்ப சரியாகிட்டுவருது. சரியாயிரும்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவர் நம்பிக்கையைக் காலம் பொய்யாக்கிவிட்டது.

கவிதை மாமருந்து: 16

இந்தத் தொடரில் எழுதவென்று தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் கவிதை நூல் வரிசையில் அவரது ‘பூஜ்யம்’ (தரு வெளியீடு, 1997) தொகுப்பும் இருந்தது. தலைப்பிற்கேற்ப முன்னட்டை வெறுமனே விடப்பட்டுப் பின்னட்டையில் விவரங்கள் இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட நூல் அது. உள்ளே கவிதைகளுக்கும் பூஜ்யத்தில் முடியும்படி எண்ணிட்டு வரிசை கொடுக்கப்பட்டிருக்கும். புத்தக அடுக்கிலிருந்து சட்டென எடுக்க அதன் வடிவமைப்பு மனதில் பதிந்திருப்பது காரணம். அவரது மற்ற நூல்களையும் வாசித்துவிட்டுப் பிறகு எழுதலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து அவர் இல்லாத நிலையில் குற்றவுணர்வுடன் இப்போது எழுத வேண்டியானது. மிகவும் வருந்துகிறேன்.

ஸ்ரீபதியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. இரண்டே இரண்டுதான். ‘பூஜ்யம்’ (1997) தொகுப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து ‘என்பது போலோரு தேஜாவூ’ (உயிர்மை, 2016) என்றொரு தொகுப்பு. முதல் தொகுப்பின் முக்கியக் கவிதைகள் என அவரால் கருதப்பட்ட சிலவற்றையும் இரண்டாம் தொகுப்பின் இறுதியில் சேர்த்துள்ளார். மிகவும் குறைவான கவிதைகளே எழுதியுள்ளார் எனினும் அவர் தொடர்ந்து இயங்கியுள்ளார். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பாடல், ஓவியம், வரைகலை ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டுள்ளார். ஷகிலாவின் சுயசரிதத்தையும் (ஷகிலா சுயசரிதை, உயிர்மை, 2016) குஞ்ஞுண்ணி கவிதைகளையும் (குஞ்ஞுண்ணி குட்டிக் கவிதைகள், புது எழுத்து) மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். மலையாளச் சிறுகதைகள் தொகுப்பு (அதே கதை மீண்டும் ஒருமுறை, எழுத்து பிரசுரம், 2019) ஒன்றும் அவரது பங்களிப்பு. ‘மலையாளக் கரையோரம்’ என்னும் கட்டுரைத் தொகுப்பும் வந்துள்ளது.

கவிதை மாமருந்து: 16

பலவிதப் பொருள்களிலும் நயம் மிக்க கவிதைகளை எழுதிப் பார்க்க வேண்டும் என்னும் இளமையின் துள்ளலார்வம் பொதிந்த கவிதைகள் முதல் தொகுப்பில் இருந்தன. குறியீட்டுத் தன்மையும் உருவகமும் செறிந்த சொற்களும் விரவிய அத்தொகுப்பில் ‘அப்பாரோட அங்கராக்கு’ என்னும் தலைப்பில் கொங்கு வட்டாரப் பேச்சாக அமைந்த ‘தனிமொழி’க் கவிதையும் உண்டு. டீக்கடையில் டீ ஆற்றும் இளம்பெண்ணின் பேச்சாக அமைந்த அக்கவிதை ‘யம்மாடி எவ்ளோ நொர’ என முடியும். இளமையின் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தும் அவ்வியப்புத் தொடர் பலவிதப் பொருள்களை உள்ளடக்கியது. பொதுவெளியில் இயங்கும் பெண்ணை நோக்கி ஆண்கள் ஒழுக்கும் எச்சிலின் திரட்சி என்பது முதன்மை உட்பொருள். அத்தொகுப்பில் காதல் கவிதைகளும் இருந்தன.

இரண்டாம் தொகுப்பில் பெரும்பாலும் காதலும் காமமும் பிரிக்க இயலாமல் பிணைந்திருக்கும்படி எழுதப்பட்ட கவிதைகள். ‘பெருங்காமத்தில் சிறுநாணம் / நதி கலந்த வியர்வையன்று; / உமிழ்நீர் கலந்த வெல்லப்பொடி’ என்பது போன்ற பிரவாகத் தொடர்கள். அவர் தாய் தமிழாசிரியர். அதன் வழியாகப் பெற்ற மரபிலக்கிய இலக்கண அறிவும் அவர் கவிதைகளில் பிரதிபலிக்கின்றன. இளம் வயதில் ஆசிரிய விருத்தங்களையும் எழுதியிருக்கிறார். ஆகவே, சொல்லோசைகளில் அவருக்கு பெருத்த ஈடுபாடு இருந்திருக்கிறது. ஓசை பொருந்திய சொற்களும் தெளிவான தொடர்களும் அவர் கவிதையின் பலம்.

களைத்துப் போய்

ஆயுதமிழந்து நின்றேன்

கனிந்து

“இன்று போய் நாளை வா”

என்றாய்.

என ஒரு சிறுகவிதை. இதில் ‘இன்று போய் நாளை வா’ தொடர் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலை கண்டு வியப்பதைக் காட்டிலும் ‘கனிந்து’ என்னும் சொல் பயன்பாடே அற்புதமாகத் தோன்றுகிறது. எத்தனைதான் விவரித்தாலும் தீராத வெறுமையை ஓசையும் பொருளும் மனநிலையும் ஒருசேரப் பொதிந்து ஒற்றைச் சொல்லில் பற்றிய அற்புதம் அது. காமத்தின் பல்வேறு மனநிலைகளை வெளிப்படுத்தும் இத்தொகுப்பில் பிற கவிதைகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணத்தக்க அளவினவே. ஒருவகையில் ஏமாற்றமாகவும் இருந்தது. தம் வாழ்நாளில் அவர் இன்னும் கொஞ்சம் தேன்துளிகளை வழங்கியிருக்கலாம்.

வியந்தும் விரித்தும் எழுதத்தக்கவை என அவருடைய சில கவிதைகளை மனதில் கொண்டேன். அப்பட்டியலில் ‘கிளித்தளை’, ‘கால அவஸ்தை’ ஆகிய இரு கவிதைகள் இறுதிச்சுற்றில் முட்டி மோதின. ‘கிளித்தளை’யில் கிளி; ‘கால அவஸ்தை’யில் குருவி. கிளியும் குருவியும் மோதியதில் கிளி சற்றே உயரப் பறந்து கனியைப் பற்றிக்கொண்டது. கிளியும் உருவகம்; குருவியும் உருவகம். குருவியை நோக்கி மிகுந்த கரிசனத்தோடு ‘குருவீ, கூட்டுக்குப் போயிரு’ என்று இறைஞ்சும் குரலும் கூண்டுக்குள் நிம்மதி காணும் கிளியைப் போற்றும் குரலும் ஒன்றேதான். கிளியும் குருவியும் பறவைகளல்ல. அவை கவிதைக்குள் தம்மை உணர்த்தாமல் அலைக்கழியும் மனிதனை உணர்த்துகின்றன. அதுவே உருவகத்தின் இயல்பு. ‘கிளித்தளை’ கவிதையைப் பார்க்கலாம்.

தளை என்னும் சொல் கட்டு எனப் பொருள்படும். ‘அடிமைத் தளை’ என்னும் சொல்லாட்சி பாரதியாருடையது. கட்டுண்டு கிடத்தல் விரிந்து சிறை என்றும் பொருள் தரும். கயிறு, விலங்கு, சிறை ஆகிய பொருள்களையும் ‘தமிழ் – தமிழ் அகரமுதலி’ (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1985) தருகிறது. இங்கு ‘கிளிச்சிறை’ எனக் கொள்ளலாம். ஏன் சிறை என்பதைப் பயன்படுத்தாமல் தளையைப் போட்டிருக்கிறார்? சிறை நேர்பொருள் கொடுத்து ஒற்றைக்குள் சுருங்கிவிடும். தளை அப்படியல்ல. கட்டிலிருந்து விரியும் தன்மை கொண்டது. கவிதைக்குள் கூண்டு வருகிறது. ஆனால், அது சிறையாக உணரப்படவில்லை; விடுதலையாகிறது. ஆகவே ‘கிளித்தளை’ என்னும் தலைப்பு செறிவுடையதாக அமைகிறது. இதோ கவிதை:

கிளித்தளை

கம்பிகளுக்கிடையில் பழைய வானம் தெரிகிறது

இன்றைய வானம் இதற்குள் மட்டுமே.

பழைய வானம் பயப்படுத்தியிருந்தது

இருள் பூசிப் பயங்காட்டி

சிறகுகளின் எல்லையைக் கட்டுப்படுத்தியிருந்தது.

துணை அருகில் இருந்தாலும் கூடு தூரம்தானே

ரகசியக் கூட்டுக்குத் திரும்பும்வரை

இளைப்பாறவும் பயம்.

எங்கும் கற்களும் அம்புகளும்

மேல்நோக்கிப் பாய்ந்துகொண்டேயிருக்கின்றன.

சிறகுகள் பாரம்.

பிய்த்துப் போட்டுவிட்டால் பரவாயில்லை.

இப்போது கூடு இல்லை. கூண்டு.

வானமும் இல்லை. கூண்டு.

நேரத்துக்கு நெல்லும் பழமும் உண்டு.

எப்போதாவது சீட்டெடுத்துக் கொடுத்தல் தொழில்

வானமும் தெரிகிறது. வயிறும் நிறைகிறது.

நானா அடிமை

காற்றாடக் கூண்டை மரத்தில் தொங்கவிட்டுத்

தன் கூண்டுக்குள் போய் அடைந்துகொள்கிறான்

அடிமை.

கவிதை மாமருந்து: 16

சிறகுகளும் கூண்டும்

கவிதையில் ஒன்றுக்கொன்று முரண்படும் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி சிறகுகளோடு சுதந்திரமாகத் திரிந்த கிளியின் வாழ்க்கை; இரண்டாம் பகுதி கூண்டுக்குள் அடைபட்ட கிளியின் சிறை வாழ்க்கை. இப்படிச் சொல்வது கவிதைப் பொருளுக்கு முரணானது; பொதுப்புத்தி சார்ந்தது. இந்தப் பொதுப்புத்தியைப் புரட்டுகிறது கவிதை. சிறகுகளோடு வானில் திரிந்த காலத்தைச் சிறை என்றும் கூண்டுக்குள் அடைபட்ட காலத்தைச் சுதந்திரம் என்றும் கொண்டால் கவிதைப் பொருளைப் பிடிக்கலாம். சிறகுக் காலத்தைப் ‘பயம்’ என்றும் கூண்டுக் காலத்தைப் ‘பாதுகாப்பு’ என்றும் கொள்வது இன்னும் பொருந்தும்.

இன்றைய சூழலில் பொதுவெளி என்பது அச்சுறுத்தலாகவே இருக்கிறது. இயற்கையும் தம்மைப் போன்ற மனிதர்களும் நிறைத்திருக்கும் பொதுவெளி ஆசுவாசம் தருவதாக இருக்க வேண்டும். அப்படியில்லை. சாலை, அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதிகள், கோயில்கள் என நாம் அன்றாடம் புழங்க நேரும் பொதுவிடங்கள் அனைத்துமே ஏதோ ஒரு அச்சத்தை உள் பொதிந்து வைத்திருக்கின்றன. வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஒருவர் வீடு திரும்பும்வரை வீட்டிலுள்ளோர் அச்சத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்க நேர்கிறது. ஒருகாலத்தில் பொதுவெளியைச் சுதந்திரமானதாகவும் சந்தோஷம் தருவதாகவும் கருதியிருந்தோம். இன்றைக்கு அப்படியில்லை. கூண்டுக்குள் அடைபடுவதே சந்தோசமாக இருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்ததும் கிடைக்கும் ஆசுவாசத்தை எந்தப் பொதுவெளியும் தருவதில்லை.

கூண்டுக்குள் அடைபட்டுவிட்ட கிளிக்குப் பொதுவெளி என்பது ‘பழைய வானம்.’ பழைய வானம் எத்தகைய உணர்வைக் கொடுத்தது என்பதைக் கவிதை விவரிக்கிறது. இருள் பூசிப் பயங்காட்டியிருந்தது; அதனால் சிறகுகளின் எல்லையைக் கட்டுப்படுத்தியிருந்தது. சிறகு இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம் என்பது சாத்தியமா? பழகிய எல்லையைத் தவிர வேறொரு பகுதிக்குள் போக முடியுமா? துணை அருகில் இருப்பினும் மனமெல்லாம் கூட்டைப் பற்றியே நினைத்திருக்கிறது. எப்போது போய்க் கூட்டைச் சேர்வோம் என்றே யோசனை. பிறரறியாத வகையில் ரகசியமாகக் கட்டப்படும் கூடு. கூட்டை அடையப் பறக்கும்போது சற்றே இளைப்பாறிச் செல்லலாம் என்று நிற்கவும் பயம். எங்கும் கற்களும் அம்புகளும் மேல்நோக்கிப் பாய்ந்து கொண்டேயிருக்கின்றன. அந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதே பெரிய பிரச்சினை. பறந்து கொண்டே இருந்தால் இலக்குகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. இளைப்பாற அமர்ந்தாலோ இலக்காகிவிடும் வாய்ப்பு மிகுதி. இப்படிப் பறந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? சிறகுகள் பாரம். பிய்த்துப் போட்டுவிட்டுச் சற்றே எங்காவது அமர்ந்தால் பரவாயில்லை. ஆகவே சிறகுகளால் அளந்திருந்த அந்தப் பழைய வானம் பயப்படுத்தியிருந்தது என்கிறது கவிதை. சிறகையும் சுதந்திரத்தையும் அவாவும் மனதிற்கு இக்கவிதை கொடுக்கும் சித்திரம் அதிர்ச்சியானதுதான். அதைவிடவும் அதிர்ச்சி தருவது கூண்டு வாழ்க்கை பற்றிய பகுதி.

‘இப்போது கூடு இல்லை; கூண்டு. வானமும் இல்லை; கூண்டு’ என்று இரண்டுக்குமான வேறுபாட்டைச் சொல்லும் கவிதை கூண்டு வாழ்க்கையைப் பற்றி விவரிக்கிறது. கூண்டில் எப்பேர்ப்பட்ட வசதிகள் எல்லாமோ கிடைக்கின்றன. நேரத்துக்கு உணவு; நெல்லும் பழமும். வேலைகூடப் பெரிதாக இல்லை. எப்போதாவது சீட்டெடுத்துக் கொடுத்தல்தான். நாம் ஒருமணி நேரத்தில் செய்யக்கூடிய வேலையை ஒருநாள் முழுக்கச் செய்வதுண்டு. அலுவலக நேரம் என்று இருக்கிறதல்லவா? வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நேரம் முழுக்க அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். சில கிளிகள் நாள் முழுக்கச் சீட்டெடுத்துக் கொடுத்தபடியே இருக்க வேண்டியிருக்கிறது. அவை பாவம்தான்.

சரி, எப்படியோ சீட்டெடுத்துக் கொடுத்துவிடலாம். இந்தக் கூண்டு வாழ்க்கையில் வானமும் இருக்கிறது. கூண்டுக் கம்பிகளுக்கிடையே அண்ணாந்து பார்த்தால் துண்டு வானம் தெரியத்தான் செய்யும். பார்த்துக்கொண்டால் போதும். துண்டை வைத்து விரிவைக் கற்பனை செய்துகொண்டால் போகிறது. ஆக, வானமும் தெரிகிறது; வயிறும் நிறைகிறது. வேறென்ன வேண்டும்? கற்களும் அம்புகளும் வீசப்படும் வான்வெளியில் சிறகுடன் அலையும் வாழ்வா, வானமும் தெரிய வயிறும் நிறையும் கூண்டு வாழ்வா, எது பாதுகாப்பானது? எது நல்லது? எது சிறந்தது?

சிலர் சொல்கிறார்கள், ‘கூண்டு வாழ்க்கை அடிமை வாழ்க்கை.’ எப்போதாவது சீட்டெடுத்துக் கொடுத்துக்கொண்டு நேரத்துக்கு நெல்லும் பழமும் உண்டபடி துண்டு வானத்தைப் பார்த்து நிறைவெய்தும் கிளி கேட்கிறது, ‘நானா அடிமை?’ கிளி அடிமை இல்லையா? தன்னை அடிமை என்று சொல்பவர்களைப் பார்த்து மேலும் சொல்கிறது கிளி. சீட்டெடுக்கும் வேலை முடிந்தவுடன் கூண்டைக் கொண்டுபோய் மரத்தில் மாட்டுகிறார்கள். கம்பிகளுக்குள் புகுந்து வருகிறது ஆனந்தக் காற்று. ஆனால் கூண்டை மரத்தில் மாட்டுபவன் என்ன செய்கிறான்? தன் கூண்டுக்குள் போய் அடைந்துகொள்கிறான். பகலெல்லாம் கூண்டுக்கிளியைக் கண்காணிக்கும் வேலை; இரவில் உறங்க ஒரு கூண்டு. ஆம், எத்தனை பெரிய வீடாக இருப்பினும் கிளியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்தால் அது கூண்டுதானே. கிளிக்கூண்டை ஒப்பிடும்போது அதைப் பெரிய கூண்டு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சுதந்திர வாழ்க்கை பற்றிப் பேசுபவர்களை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பி வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கச் செய்கிறது கவிதை. கூண்டு வாழ்வைப் போற்றும் கவிதையா இது? வெளியை ஏன் இத்தனை பயமுடையதாக வைத்திருக்கிறோம் நாம்? கற்களும் அம்புகளும் எல்லாப்புறமிருந்தும் பாயும் என்றால் அது எப்படிச் சுதந்திர வெளியாகும்? அங்கே சிறகுக்கு என்ன அர்த்தம்? வெளியைத் தவிர்த்துக் கூண்டுக்குள் அடைபவரைப் பார்த்து ஏளனம் செய்ய நமக்கு என்ன அருகதை இருக்கிறது? பெரும்பான்மை மனம் கூண்டைத்தானே விரும்புகிறது?

ஸ்ரீபதி இக்கவிதை மூலம் முடிவற்ற கேள்விகளை எழுப்பியபடியே இருக்கிறார். ஆம், இருக்கிறார்.
—–
நன்றி: மின்னம்பலம், 14-07-2019