புதையுண்ட பெருவாழ்வு!
பெருமாள்முருகன்
நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை
நகர்மயக் காலம் நம்முடையது. எந்தத் திட்டமும் இல்லாத நகர்மயம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மரபு என்று பேசும் பெருமிதத்திற்கு இன்று ஏதேனும் பொருள் இருப்பதாகவே தெரியவில்லை. இயற்கை பற்றிய உணர்வுகூட அற்றவர்களாக மாறிவிட்டோம். நம்மைச் சுற்றி இருக்கும் மரங்களின் பெயர்கள் தெரியவில்லை; அவற்றின் இயல்பு தெரியவில்லை. அன்றாடம் நம்மை நோட்டமிடும் பறவைகளை நாம் அறியவில்லை; அவற்றின் குரல்களை அடையாளம் கொள்ள முடியவில்லை. நம் நிலமோ பெரும் குப்பைக் கிடங்காகிவிட்டது. நீர்நிலைகளின் தன்மைகளைச் சொல்லி முடியாது. ஆறுகள் சாக்கடைகளாகவும் ஏரி, குளங்கள் குடியிருப்புகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறிப் போயின.
இயற்கையின் போக்கைச் சிறிதும் குலைக்காமல் முன்னோர்களால் உருவாக்கப்பட்டவை நீர்நிலைகள். மழை நீர் ஓடிவரும் வழியில் இருக்கும் பள்ளப் பகுதியைச் சிறிது ஆழமாக்கிக் குளம் என்றார்கள். வழியில் சற்றே அகண்டு பின் குறுகிச் செல்லும் இடத்தைத் தேர்ந்தெடுத்து இருபுறமும் உயர்ந்த கரைகளும் நடுவில் மதகும் வைத்து ஏரிகள் என்றார்கள். நீரின் போக்கைத் தொந்தரவு செய்யாமல் பயன்கொள்ளும் வழிமுறைகள் இவை. இன்று நாற்பது வயதுக்கு மேற்பட்டிருப்பவர்கள் இத்தகைய நீர்நிலைகளைப் பார்த்தும் பழகியும் பிணைந்தும் பயன் கொண்டும் வாழ்ந்து வளர்ந்தவர்கள். மழைக்காலம், பனிக்காலம், வேனிற்காலம் என மாறும் பருவங்களின் இயல்புகளைத் துய்த்தவர்கள். அவையெல்லாம் மனதில் படிந்திருக்க ஒவ்வொன்றும் மாறிப் போனதை அக அளவில் ஏற்றுக்கொள்ள இயலாமலும் புற நிர்பந்தத்தால் ஏற்றுக்கொண்டும் வாழ்ந்து கழிப்பவர்கள்.
கிணறும் ஏரியும்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது எனினும் அது எப்படிப்பட்ட மாற்றம் என்பது முக்கியமானது. இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் அதன் இயல்புகளைப் புரிந்து அதாவது இயற்கையோடு இயைந்து வாழ்வது பேறு. என் இளம் வயதில் இரண்டு வகை நீர்நிலைகள் நெருக்கம். ஒன்று, கிணறு. ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கிணறும் தனித்துவம் கொண்டது. கிணறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றம் காட்டும். பலவிதமான ரகசியங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் மாயக்குகை அது. அதைப் பற்றிப் பேசித் தீராது.
இன்னொன்று, ஏரி. இரண்டு ஏரிகளை அறிவேன். ஒன்றைப் பொய்யேரி என்போம். எப்போதோ ஒருகாலத்தில் கட்டப்பட்ட ஏரி, ஒரு வருசம் பெய்த பெருமழை வெள்ளத்தில் உடைப்பெடுத்துக் கரைந்துவிட்டது. அது எந்த வருசம் என்று கேட்டால் என் பாட்டி சொல்வார், ‘அது மனுசன் பொறக்காத காலத்துல.’ ‘ஏரியே மனுசன் கட்டுனதுதான் ஆயா’ என்றால் ‘அப்படிச் சொல்லாத. ரண்டு கரையும் கரையில்ல. சாமியோட கையி. அவரு கொஞ்சம் கைய அப்பிடி இப்பிடி அசச்சா ஏரி ஒடஞ்சுக்கும்.’ ஆக, மனிதனே பிறக்காத காலத்தில் பிறந்து கடவுளின் கைத்தடுப்பில் நின்றிருந்த நீர், அவர் லேசாக அசைத்ததால் உடைப்பெடுத்து வெளியேறிவிட்டதாம். அதுமுதல் அவ்வேரிக்குப் ‘பொய்யேரி’ என்று பெயரானது. இருபுறக் கரைச்சுவடுகள் மட்டும் எங்களுக்குத் தெரியும். அதன் மீது ஏராளமான மரங்களும் மரங்களைப் பற்றியேறும் கொடிகளும் புதர்களும் என அடர்ந்து கிடக்கும். ஆடு மாடுகள் மேய்க்கக் கிடைத்த சிறுவனம் அது.
இன்னொரு ஏரி என் பால்யத்தில் கட்டப்பட்டது. எந்திரங்கள் இல்லாத காலம். பெருந்திரளான மக்கள் எங்கெங்கிருந்தோ வந்து சேர்ந்து ஆண்டுக்கணக்கில் தங்கி ஏரியைக் கட்டினார்கள். எங்கள் கண்முன்னே மண் திட்டுக்களான இருபெரும் கரைகளும் எழும்பி வந்தன. பின்னர் ஏரியை மட்டும் தனியாக விட்டுவிட்டு மக்கள் திரள் வேறெங்கோ கிளம்பிப் போய்விட்டது. ஏரிக்கு நாங்களே துணை. ஓடி விளையாடவும் சறுக்கல் விடவும் என எத்தனையோ விளையாட்டுக்களுக்குக் கரைகள் களமாகின. அடிப்பகுதியிலிருந்து பார்த்தால் கரை இருக்கும் உயரம் அதிசயிக்க வைக்கும். அதன் மேல் ஏறிவிட்டால் வானத்தைத் தொட்டுவிடலாம் எனத் தோன்றும். முதல் வருசம் நீர் நிறைந்து நின்றபோது ஏரியைப் பார்க்க எப்போதும் கூட்டம் இருக்கும். எப்படியோ மீன்களும் பறவைகளும் வந்து பல்லுயிர்க் காட்சிச்சாலையாக ஏரி விளங்கியது. ஏரி உடையாமல் எந்நேரமும் காவல் காக்க முனியப்ப சாமி கோயில். சிறுகணமும் மூடாமல் திறந்த விழிகளோடு எப்படித்தான் அவர் காலகாலமாய் நிற்கிறாரோ. அப்புறம் ஏரியின் பலவகைக் காட்சிச் சித்திரங்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு காட்சி.
திடுமெனக் காட்சி மாற்றம். ஏரியை ஒட்டி நகர் விரிவாக்கம். சாக்கடைத் தேங்கல். கொசுப் பெருக்கம் எனக் காரணம் காட்டி ஏரியை உடைத்தெறிந்தன இயந்திரங்கள். ஏரிப் பரப்புக்குள் குப்பைக் குழிகளும் இடுகாடும் வந்தன. இன்றைக்கு அது ஏரி என்று சொன்னால் சிரிப்பார்கள். ஏரிக்கு அருகில் இருந்த பாறை வெளிதான் வெகுகாலம் என் படிப்பறை. காற்றில் அசையும் பனை ஓலைகள். பறவைக் குரல்கள். இவற்றினூடே வாய் விட்டுச் சத்தமாகப் படிக்கும் என் குரலும் இணையும். இப்போது ஏரி இல்லை; ஏரியைத் தெரிந்தவர்களுக்கு ஏரியின் சுவடுகள் தெரியும். மற்றவர்கள் ஏரியைக் கற்பனை செய்வதுகூடக் கடினம். இந்த மாற்றத்தை எப்படிச் செரிப்பது? இதை இயல்பென்று ஏற்றுக்கொள்ள எவ்வளவு முயன்றாலும் முடியவில்லையே.
எனக்கு மட்டுமல்ல. என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு இத்தகைய அனுபவமும் விசனமும் இருக்கின்றன. அனைவருடைய அனுபவத்திற்குமான பொதுக்குரலாவது கவிதை. ஒரு கவிதை நம் அனுபவத்தை நினைவுகூரும்; அசை போடச் செய்யும். வெறும் நினைவுகூரலும் அசை போடலுமாக மட்டும் அது நின்றுவிடுவதில்லை. அவ்வனுபவத்தின் வேவ்வேறு நிலைக் கோணத்தைக் காணும் பார்வைகளையும் கவிதை உட்கொண்டிருக்கும். வாழ்க்கை அனுபவமும் கவிதை வாசிப்பு அனுபவமும் கூடினால் நினைவுகூரலையும் அசை போடலையும் பார்வைகளையும் எளிதாக உள்வாங்கலாம். நாம் கவிதையிடம் கோருவதைப் போலவே நம்மிடமும் கவிதை சிலவற்றைக் கோரும். இரண்டு கோரிக்கைகளும் இணையும் புள்ளியில் கவிதை துலக்கம் பெறும். அவ்விதம் பொதுக்குரலாக ஒலிக்கும் ‘ஏரி’ தொடர்பான கவிதையை எழுதியவர் ஸ்ரீநேசன்.
இயற்கை சார்ந்த கவி மனம்
ஸ்ரீநேசனின் முதல் தொகுப்பு ‘காலத்தின் முன் ஒரு செடி’ (2002). அதற்கு எட்டாண்டுகளுக்குப் பிறகு வெளியான இரண்டாம் தொகுப்பு ‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ (2010). நேசனின் கவி மனம் இயற்கை சார்ந்தது. அது இயற்கையை விலகி நின்று காணும் பார்வையாளர் மனம் அல்ல. இயற்கையோடு கலந்து வாழும் மனம். விவசாய மனம் என்று சொல்லலாமா? விவசாயியும் தன் பங்குக்கு இயற்கையை அழிக்கவும் அல்லது அதன் இயல்பை மாற்றவும் செய்கிறான். இயற்கையிடமிருந்து உலகியல் பயன்களைப் பெறுவதே அவன் நோக்கம். நேசனுடையதை விவசாய வாழ்வின் மூலம் பெற்ற கவிமனம் என்று சொல்வது வேண்டுமானால் பொருந்தலாம். அது இயற்கையின் அம்சங்களோடு கலந்து புதையுண்டு போகும் நிலையை உணர்ந்து நெகிழ்ச்சியுறும் மனம். உணர்வுநிலையும் நெகிழ்ச்சியும் பிணைந்து உருவாகும் கவிதை மனம். ஏரியின் பரப்பு முழுவதையும் அளாவி அதன் ஒவ்வோர் அம்சத்தோடும் இரண்டறக் கலக்கும் விதமாய் அவர் எழுதிய கவிதைகள் பல. அவற்றிலிருந்து என்னை ஈர்த்த ஒரு கவிதை: (பொருள் கொள்ளும் வசதிக்காகப் பத்தி பிரித்துக் கொடுத்திருக்கிறேன்.)
நகரத்துக்கடியில் புதையுண்ட ஏரி
ஓர் ஒப்பாரியைப் போல்
இந்தக் கவிதை தொனித்துவிடக் கூடாது
ஏனெனில் ஓர் ஏரி ஒருபோதும் அதை விரும்புவதில்லை
அது மரித்து நாளாகிவிட்ட தெனினும்
வேனிற்கால வெடிப்புகளில் பாய்ந்து உறங்கி
இன்று காயமுற்றுக் குரோதமடைந்த சூரிய ஒளி
இந்தக் கைப்பிடிச் சுவரின் மேல்
தள்ளாடுகிறதைப் பாருங்கள்
பெட்ரோல் பங்கிலிருந்து கிளம்பும் வாகனத்தை
ஏர்மாடுகள் ஒருநாளும் வழிமறிக்கப் போவதில்லை
ஏனெனில்
நோஞ்சான் விவசாயி இத்தகைய எதிர்காலத்தைப் பற்றி
கற்பனை கண்டிருக்கவே முடியாது
சிமென்ட் சாலை விளிம்புகளில் குடியேறிய
மக்களின் பொந்துகளில்
நண்டுகளின் ஆன்மாக்கள் பிராண்டுகின்றன
பின் திகைக்கின்றன
அருகே பாதாளச் சாக்கடையில் முடங்கிக் கிடக்கும்
மதகு நீர்ச் சலசலப்பின் ஓசை
ஒருபோதும் அவற்றுக்குக் கேட்பதாயில்லை
எண்ணற்ற பறவைகள் அலைந்து கொண்டிருக்கின்றன
அந்த உன்னிப் புதர்ச் செடிகளுக்கும் இந்தக்
குரோட்டன்களுக்குமிடையே
அகாலத்தில் இல்லம் திரும்பும் ஒற்றை ஆளை
இந்நகரை நினைவில் கொண்டுள்ள அந்நாளைய
கிராமத்துக் குடிமகனின் கடைசி ஆவி
இடைமறித்து மிரட்டுகிறது
இந்நள்ளிரவில்
இதோ அந்த இரட்டை நட்சத்திரங்கள் நினைவுகூர்கின்றன
அந்நாளின் இருண்ட ஏரி நீரின் மேல்
தாம் மிக அழகாகப் பிரதிபலிக்கப்பட்டதை.
இக்கவிதை அந்நாள் x இந்நாள் என்னும் முரண் அமைப்பைக் கொண்டுள்ளது. ‘நகரத்துக்கடியில் புதையுண்ட ஏரி’ என்னும் தலைப்பிலேயே முரண் தொடங்குகிறது. ஏரி மரித்துப் போய் நாளாகிவிட்டது. ஆனால், அதன் இருப்புக் காலம் சாதாரணமானதல்ல. தனக்கென்று தனித்தன்மைகள் கொண்டு பல்லுயிர்களைப் புரந்த பேருருவம் அது. யாரோ தனக்காக ஒப்பாரி வைப்பதை அது விரும்புமா? கவிஞன் பாடும் கையறுநிலைக் கவிதையாகவே இருப்பினும் ஏரி ஏற்றுக்கொள்ளாது. சாதாரண உயிர்களுக்கு ஒப்பாரி பொருந்தக்கூடும். பெருவாழ்வு வாழ்ந்து மரித்த மனிதரைப் போற்றுவதுதானே சரி. ஏரியும் அப்படித்தான். ஆகவே, கவிதை தொடக்கத்திலேயே இது ஒப்பாரி அல்ல என்னும் எச்சரிக்கையையும் அது ஏன் என்னும் விளக்கத்தையும் கொடுத்து நுழைகிறது. அதன் பிறகு சில காட்சி அடுக்குகள்.
வேனிற்கால ஏரியில் நீரில்லை. நீர் நின்ற நிலப் பரப்புக்குள் வெடிப்புகள். சூரிய ஒளி அவ்வெடிப்புகளுக்குள் பாய்ந்து ஓய்வெடுக்கும்; உறங்கும். இன்று அவ்வெடிப்புகள் இல்லை. வெடிப்புகளைத் தேடிக் கிடைக்காமல் எதெதிலோ பட்டுக் காயமடைந்த சூரிய ஒளி ஏரியின் மேல் உருவாகியுள்ள வீட்டுக் கைப்பிடிச் சுவர்களில் பட்டுத் தள்ளாடுகிறது. அதன் எரிப்பில் தன் உறக்கத்துக்கான இடத்தைப் பறித்துக்கொண்டதால் உண்டான குரோதம்.
அடுத்த காட்சி பெட்ரோல் பங்கிலிருந்து கிளம்பும் வாகனங்கள் பற்றியது. ஏற்கனவே அங்கே வாகனமாய் இருந்தவை ஏர் மாடுகள். வாகனங்கள் பெட்ரோல் ஏற்றிக்கொள்ளும் அவ்விடங்களில் நின்றுதான் மாடுகள் ஏரி நீரைப் பருகின. தம் இடத்தைப் பறித்துக்கொண்ட வாகனங்களை வழிமறிக்க ஏர் மாடுகள் இல்லை. மாடுகள் இல்லாத ஓர் எதிர்காலம் வருமென்று அறியாத நோஞ்சான் விவசாயியிடம் எதிர்கொள்ளும் திட்டம் ஏதுமில்லை.
ஏரியின் மண் பரப்பு இன்று சிமென்ட் சாலைக்குள் அடைபட்டுவிட்டது. சாலையை ஒட்டிக் கட்டப்பட்ட பொந்து வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள். ஏற்கனவே அங்கிருந்த பொந்துகள் நண்டு வளைகள். அவற்றில் வசித்த நண்டுகளின் ஆன்மாக்கள் வெளியேற முயன்று பிராண்டுகின்றன. வழியற்றுப் பின் திகைக்கின்றன. உள்ளே பாதாள சாக்கடை நீர் ஓடும் சத்தம் அவற்றுக்குக் கேட்பதேயில்லை. ஏனெனில் அது நீருமல்ல; நீரோட்டமும் அல்ல. அழுக்கில் முடங்கிக் கிடக்கும் சாதாரணச் சலசலப்பு.
ஏரியில் ஜீவித்திருந்த எண்ணற்ற பறவைகள் இப்போது அலைந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே அவற்றிற்குப் பாதுகாப்புக் கொடுத்தவை உன்னிப் புதர்ச்செடிகள். இப்போதைய வீடுகளில் இருப்பவை குரோட்டன்கள். இரண்டுக்கும் இயைபைக் காண முடியாமல் பறவைகள் அலைகின்றன.
இந்நகரத்தில் வசிக்கும் ஒருவன் அகாலத்தில் திரும்பும்போது அவனுக்கு ஏற்படும் அச்சம் உண்மையானதுதான். ஆம், ஏரியைச் சார்ந்து வாழ்ந்த கிராமத்துக் குடிமகன் ஒருவனின் கடைசி ஆவி தம் வாழ்க்கை பறி போனதை நினைத்து அலைகிறது. அகாலத்தில் திரும்பும் மனிதனை மிரட்டுவது அதுதான்.
நள்ளிரவில் ஒளிரும் இரட்டை நட்சத்திரங்களுக்கு அந்த ஏரி நீரில் தாம் அழகாகப் பிரதிபலிக்கப்பட்ட காலம் இன்னும் நினைவில் இருக்கிறது.
இக்கவிதை தரும் முக்கியமான பார்வை ஏரியின் வாழ்வைப் பற்றியது. அது பெருவாழ்வு. நகரம் அதன் மேல் அமர்ந்துவிட்ட போதிலும் மறந்துவிட முடியாத அர்த்தம் பொதிந்த வாழ்வு. அந்த வாழ்வை மீட்டெடுக்கச் சொல்லவில்லை கவிதை. அதை உணரச் சொல்லிக் கேட்கிறது.
*
Add your first comment to this post