அழைக்கும் அசரீரிக் குரல்! – பெருமாள்முருகன்
கவிதை மாமருந்து – 9: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை!
வேறொன்றோடு தம்மை அடையாளப்படுத்திக் காண்பது மனித மனத்தின் இயல்பு. ‘நீங்கள் வேறு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டால் அவ்வப்போதைய மனநிலைக்குத் தகுந்தபடி பதில் சொல்வேன். சிலசமயம் மலை என்பேன்; சிலசமயம் ஆறு என்பேன்; சிலசமயம் வானம் என்பேன்; சிலசமயம் காட்டு மல்லிகை என்பேன்; சிலசமயம் வேப்பமரம் என்பேன். இப்படிப் பல. சிலசமயம் அதுவாகவே ஆகிவிடுவதும் உண்டு.
இப்படி நம்மை இன்னொன்றாக ஆக்கிக்கொள்வதுதான் கவிதையியலில் உருவகம் என்று சொல்லப்படுகிறது. உவமை சொல்லும்போது உவமையும் உவமிக்கும் பொருளும் (உவமேயம்) வேறுவேறாகவே இருக்கின்றன. ஒருபோதும் ஒன்றாவதில்லை. இரண்டுக்கும் ஏதோ ஓர் அம்சம் பொதுவாக இருக்கும்; அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அம்சங்கள் பொதுவாகும். உருவகத்தில் இரண்டும் வேறு வேறல்ல; ஒன்றுதான். ஒரு கவிதைக்குள் அங்கங்கே உருவகம் வருவதுண்டு. ஒரு கவிதை முழுவதுமே உருவகமாக அமைவதுமுண்டு. ஒற்றை உருவகத்தை விளக்குவதே அக்கவிதையின் எழுதுமுறையாக இருக்கும்.
ஒற்றை உருவகமே முழுக் கவிதையாகும் விதம் சிறப்பானது. சிலசமயம் கவிதைக்குள் பொருளும் உருவகப் பொருளும் என இரண்டுமே வரும். இரண்டும் வந்தால் எது எதுவாக உருவகிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்வது எளிது. சிலசமயம் உருவகப் பொருள் மட்டுமே கவிதையில் வரும். அப்போது பொருள் எது என்பது தெளிவாகாது. கவிதை உருவாக்கும் சூழல், சொற்கள், உருவகப் பொருளின் பண்புகள், செயல்கள் முதலிய ஏதேனும் ஒன்றையோ பலவற்றையோ கொண்டு பொருத்திப் பார்த்துக் கவிதைப் பொருளை அனுமானிக்கலாம். அனுமானத்தில் கவிதைப் பொருள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; பலவாக விரியலாம். அவரவர் அனுபவம், வாழ்க்கைப் பார்வை சார்ந்து பொருள் விரிவு உருவாகும்.
மரபில் கவிதைப் பொருளும் உருவகப் பொருளும் இணைந்து வருவது மிகுதி. ஆகவே, ஒற்றைப் பொருள்தான். ஆனால், நவீன கவிதையில் பெரும்பாலும் உருவகப் பொருள் மட்டுமே இடம்பெறும். அது எதன் உருவகம் என்பதைக் கண்டறிவதில் தொடங்குகிறது கவிதை ரசனை. கண்டறிந்த பிறகு ஒவ்வொரு சொல்லையும் இரண்டுக்கும் இணைத்துப் பார்த்துப் பொருத்திக் காண்பதில் ரசனைப் பெருக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு காலத்திலும் உருவகப் பொருள் வேறு எதனோடாவது பொருந்தும் வகையில் பொதுத்தன்மை பெற்றுவிட்டால் அக்கவிதை காலம் கடந்ததாகிறது. உருவகக் கவிதைகள் பல அவ்விதம் என் மனத்தில் பதிந்திருக்கின்றன.
வாழ்க்கையும் ‘சங்கிலி’ டம்ளரும்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அரசுப்பணிக்குத் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றிருந்தேன். அரசியல் காரணங்களால் பணியிடம் வழங்குவது தாமதம் ஆகிக்கொண்டே வந்தது. இத்தனை காலம் எந்தக் கட்டும் இல்லாமல் சுதந்திரமாக இருந்துவிட்டு இப்போது ஒரு தளைக்குள் புகுவதற்கு ஏன் இப்படித் துடிக்கிறோம் என ஒருநாள் கேள்வி வந்தது. அதை யோசித்துக்கொண்டே நான் பயின்ற கல்வி நிறுவனத்துக்குச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் தண்ணீர் குடிக்கச் செல்வது வழக்கம். அவ்விடத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சில்வர் டம்ளர் ஒன்று உண்டு. அன்றைக்கு அதைக் கையில் எடுத்ததும் எனக்கும் அதற்கும் ஏதோ ஒரு பிணைப்பு உருவானது போலத் தோன்றியது.
யோசிக்க யோசிக்க அந்த டம்ளரின் இடத்தில் உட்காரத்தான் எனது அலைச்சல் எல்லாம் எனப் புரிந்தது. அதுவும் நானும் ஒன்றுதான். அரசு வேலைக்கான ஆணையைப் பெற்றுச் சேர்ந்து பணியாற்றிய பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பார்த்தால் அந்த டம்ளரின் வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருப்பேன் என எண்ணிச் சோர்ந்துபோனேன். எனினும் அதில் இருக்கும் பாதுகாப்பு ஆசையைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அப்போது என்னைச் சங்கிலி பிணைத்த தண்ணீர் டம்ளராக உருவகித்து ‘மனு’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை (மயானத்தில் நிற்கும் மரம், காலச்சுவடு வெளியீடு, ப.96) எழுதினேன். அதை முழுமையான உருவகக் கவிதை என்று சொல்ல முடியாது. அதில் நான் முதன்மை பெற்றும் டம்ளர் இரண்டாமிடத்திலும் இருக்கும். அச்சமயத்தில் என் நிலைக்கு அவ்விதம் அக்கவிதையைச் சொல்வதுதான் பொருத்தமாகத் தோன்றிற்று.
கிட்டத்தட்ட இருபதாண்டுகள் பணி புரிந்த பிறகும் என்னை அந்தத் தண்ணீர் டம்ளர் விட்டபாடில்லை. மேலும் மேலும் வலுப்பெற்று என்னை உப்புப் படிந்த தண்ணீர் டம்ளராகவே நினைக்க வேண்டியானது. சங்கிலி அனுமதிக்கும் எல்லைக்குள் நடமாட்டம். அதன் விதிகளுக்குப் பொருந்தும் செயல்கள். பொருத்திக்கொள்ள ஓர் இருக்கை. எல்லாவற்றையும் மழித்தெறிந்த மொட்டை மேனியுடனும் முடமான கைகால்களுடனும் இயக்கம். கட்டளைச் சொற்களுக்குப் பழகிய செவிகள். கோரிக்கை, முழக்கம் என்றால் அச்சமுற்று ஒதுங்கல். அவ்வளவுதான். அக்கவிதை விவரிக்கும் வகையில் இப்படித்தான் வாழ்க்கை நகர்ந்து வந்திருக்கிறது.
மகத்துவ எலி!
அக்கவிதை எழுதிய மனநிலையை மீண்டும் பெற வைத்த கவிதை ஒன்றைச் சமீபத்தில் வாசித்தேன். அதுவும் உருவகம்தான். டம்ளர் அல்ல; எலி. எலியோடு என்னைப் பொருத்திக்கொள்வதும் அத்தனை சரியாக இருந்தது. சபரிநாதன் எழுதிய ‘இறுதி விருந்து’ என்னும் கவிதை அது.
சபரிநாதன் கவிதைகள் இதுவரை இரண்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. ‘களம் காலம் ஆட்டம்’ (புது எழுத்து, 2011) என்பது முதல் தொகுப்பு. பரவலாகக் கவனம் பெற்ற ‘வால்’ (மணல்வீடு, 2016) இரண்டாம் தொகுப்பு. மொழிபெயர்ப்பு (உறைபனிக்குக் கீழே, 2010), விமர்சனம் ஆகியவற்றிலும் ஆர்வம்கொண்டவர்.
இவரது கவிதைகள் நவீன வாழ்வைத் தீவிரப் பரிசீலனைக்கு உட்படுத்துவதோடு அதன் மீது கடுமையான விமர்சனங்களையும் வைப்பவை. பால்யம் பற்றிய ஏக்கம் இருப்பினும் அதற்காகப் பழைய வாழ்க்கையை மேன்மைப்படுத்திப் பேசுவதில்லை; இன்றைய காலத்தில் வாழத் தவிக்கும் இளம் மனத்தின் பாடுகள் என்று பொதுவாக இவர் கவிதை உலகைச் சொல்லலாம். மெல்லப் படர்ந்து பரவும் கொடி போல அலங்காரம் ஏதுமற்று கவிதை தன்னை விரித்துச் செல்லும் வகையில் மொழியைக் கையாளுகிறார். நீள்கவிதைகள், பல பகுதிகளைக் கொண்ட கவிதைகள் என வெவ்வேறு சொல்முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்.
அவரது ‘இறுதி விருந்து’ கவிதை:
இறுதி விருந்து
மகத்துவ எலியே
நின் நீநெடுங்குகை நீங்கி
வெளியே வா
வாசனை தெரிகிறதா அதே தான்…
பனையெண்ணை நறுமணம்
புலன்களைக் கூர் தீட்டிக் கவனி
அது ஒரு பழம்பெரும் மெதுவடை
அப்படித்தான்
சுவரோரமாகவே ஓடி வா
தரை விரிப்புகளில் இடித்துக்கொள்ளாதே
இடப்பக்கம் திரும்பு
இப்போது வலப்பக்கமாய் ஒரு
லாடத் திருப்பம்
பைய்ய நேரே நட
கண்டுபிடித்தாயிற்று அல்லவா
எதிரிடும் சின்ன இடைவெளியைப் பயன்படுத்து
யாருமில்லை வா உள்ளே
ஆஹா வந்தே விட்டாய்
ஏனிந்த அவசரம் இது
உனக்கென்றே அவதரித்த வடை
அச்சமும் நடுக்கமும்
கதம் கதம் உன்
வாழ்நாளிற்கு இது போதும்.
(வால், ப.65)
‘மகத்துவ எலியே’ என விளியில் தொடங்குகிறது கவிதை. விளிக்கும் குரல் யாருடையது? எலிப்பொறியின் குரலாக இருக்கலாம்; பொறியை வைத்தவரின் குரலாக இருக்கலாம்; எலிப்பொறியைக் கண்டறிந்த காலத்திலிருந்து தொடர்ந்து ஒலித்து வரும் அசரீரிக் குரல் என்றும் கொள்ளலாம். பொறிக்குள் மாட்ட வைக்க முயலும் குரல் வெறுமனே பெயர் சொல்லி அழைப்பதில்லை. அப்படி அழைத்தால் யாருக்கும் பிடிப்பதில்லை. ஆகவேதான் ‘எலி’ அழைப்பில் ‘மகத்துவ எலி’ ஆகிறது. ‘நின் நீ(ள்)நெடுங்குகை நீங்கி வெளியே வா’ என்று வெளியே வரச் சொல்லிக் குரல் அழைக்கிறது. பதுங்கியிருக்கும் இடம் சாதாரணமானதல்ல; நீள்நெடுங்குகை.
அழைப்பு எதற்கு? எலி சற்றே வெளியே வருகிறது. அதன் மூக்கு ஒரு வாசனையை நுகர்கிறது. இதை அறிந்த குரல் ‘வாசனை தெரிகிறதா, அதேதான்…’ என்று அழைப்பை நீட்டுகிறது. எதன் வாசனை அது? பனையெண்ணெய் நறுமணம் வீசும் மெதுவடை. பொறியில் வைப்பதற்கு வீட்டில் தனியாக வடை சுடுவதில்லை. குறைந்த விலைக்குக் கிடைக்கும் சாலையோரக் கடையில் ரேசன் கடைப் பனையெண்ணெய் கொண்டு சுட்ட வடை போதும். அந்த எண்ணெய்தான் ஈர்க்கும் வாசனை கொண்டது. ஆகவே கவிதை ‘பனையெண்ணை நறுமணம்’ என்று சொல்லிவிட்டு எலியை விளித்துப் ‘புலன்களைக் கூர் தீட்டிக் கவனி’ என்கிறது. மணம் வீசும் பொருளை ‘அது ஒரு பழம்பெரும் மெதுவடை’ என விவரிக்கிறது.
‘அது ஒரு வடை’ என்றால் போதாதா? ‘பழம்பெரும்’ என்னும் அடைமொழி எதற்கு? எலிப்பொறிக்கு உகந்தது வடைதான்; இன்றைக்கல்ல, காலகாலமாய் வடைதான். இத்தகைய அடைமொழிகள்தான் உருவகப் பொருளைக் கவிதைப் பொருளாக அடையாளம் காண உதவுபவை. எலியை ஈர்க்கும் பழம்பெரும் மெதுவடை என்னவாக இருக்கும்?
வாசனையால் ஈர்க்கப்பட்டாலும் வடையை உடனே அடைந்துவிட முடியாது. அதற்கு எத்தனையோ வழிகளைக் கடந்து செல்ல வேண்டும். குரல் சொல்கிறது: ‘அப்படித்தான் சுவரோரமாகவே ஓடி வா, தரை விரிப்புகளில் இடித்துக்கொள்ளாதே, இடப்பக்கம் திரும்பு, இப்போது வலப்பக்கமாய் ஒரு லாடத் திருப்பம், பைய்ய நேரே நட.’ ஒவ்வொரு வழியாய்க் கடந்து வடை இருக்கும் இடத்தைக் கண்டடைந்துவிட்டது எலி. இப்போது குரல் ‘கண்டுபிடித்தாயிற்று அல்லவா’ என்று குதூகலத்தோடு சொல்கிறது. மீண்டும் வழிகாட்டுகிறது. ‘எதிரிடும் சின்ன இடைவெளியைப் பயன்படுத்து.’ தயக்கத்தைப் போக்கத் தைரியம் தந்து பொறிக்குள் அழைக்கிறது. ‘யாருமில்லை வா உள்ளே.’ எலி இப்போது பொறிக்குள் வந்துவிட்டது. ‘ஆஹா வந்தே விட்டாய்’ என்று உற்சாகம் பெருகக் குரல் கூத்தாடுகிறது.
எலிக்கு அதுவெல்லாம் தெரிவதில்லை. வடையைக் கண்டதும் நாவூற அதைக் கடித்து இழுக்க முயல்கிறது. குரல் இப்போது சாந்தமாகச் சொல்கிறது. ‘ஏனிந்த அவசரம் இது உனக்கென்றே அவதரித்த வடை.’ நீள்நெடுங்குகைக்குள் நிம்மதியாக இருந்த எலிக்குப் புது இடமும் வெளிச்சமும் அச்சம் தரும்; நடுக்கம் கொடுக்கும். குரல் சொல்கிறது. ‘அச்சமும் நடுக்கமும் கதம் கதம்.’ அச்சமும் நடுக்கமும் போகட்டும் போகட்டும் என மீண்டும் தைரியம் கொடுக்கும் குரலில்தான் எத்தனை பெருமிதம். பொறிக்குள் மாட்டிவிட்ட மகிழ்ச்சி பொங்கும் பெருமிதம் அது. அதுதான் ‘கதம் கதம்’ எனக் குதிக்கிறது. பொறிக்குள் இருக்கும் அந்த வடையை ‘உன் வாழ்நாளிற்கு இது போதும்’* என்று உணர்த்துகிறது குரல். எப்படி இந்த வடை வாழ்நாளிற்குப் போதும்? இதுவும் உருவகப் பொருளாகிய எலியைக் கடந்து வேறொரு கவிதைப் பொருள் இதில் இருக்கிறது என்பதை உணர்த்தும் குறிப்பாகும்.
முன்னர் சொன்ன ‘வேலை’யின் குரல்தான் கவிதையின் அழைப்புக் குரல். அது வாசனையைப் பரவ விட்டு, ஆசை காட்டிப் பலவிதமாக அழைக்கிறது. அதற்குள் போய் விழுவதற்குத்தான் எத்தனை வகையான வழிகாட்டல்கள். படிப்பு, பயிற்சி, தேர்வுகள், நேர்முகம் என்று பல கட்டங்களைக் கடந்து சென்றுதானே அந்தப் பொறியைக் காண வேண்டும்? உள்ளே நுழைந்துவிட்டால் வடையைக் கொரித்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் கிடக்க வேண்டியதுதான். எத்தனையோ காலமாக மனிதர்களை ஈர்த்தபடியிருக்கும் பழம்பெரும் வடை அது. பின் ஏது விடுதலை? ஆகவே பொறிக்குள் கிடைக்கும் வடைதான் ‘இறுதி விருந்து.’ நிறுவன வேலையை வடையாக்கி எலியை நானாக்கி இக்கவிதையின் உருவகத்தைப் பொருள்படுத்திக்கொள்கிறேன். வேலையை பூதம் (விடுமுறை தரும் பூதம்) என்று உருவகிப்பார் ஞானக்கூத்தன். பொதுவாகவே வேலை என்பது எல்லோருக்கும் பொறிதான். கவிமனம் கொண்டவர்களே அதை உணர்கிறார்கள்.
பல வடிவங்கள் எடுக்கும் வடை
இது மட்டுமல்ல. வடை சிலருக்குத் திருமணத்தை நினைவுபடுத்தலாம். வீடு என்று அர்த்தமாகலாம். காதல் என்றும் கொள்ளலாம். சில நாட்களுக்கு முன் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தேன். அப்போது வீட்டில் பிறருக்குச் சமைக்கும் உணவின் வாசனை என்னை அப்படி ஈர்க்கும். அவ்வாசனையைப் பிடித்துக்கொண்டு எலி போலப் போனால் பொறிக்குள் மாட்ட வேண்டியதுதான். இப்படிச் சிறு விஷயத்திலிருந்து வேலை போன்ற பெரிய விஷயம் வரைக்கும் யார் எதில் மாட்டிக்கொண்டிருக்கிறார்களோ அதுவாக வடை அர்த்தமாகும். எல்லோரையும் வந்து மாட்டச் சொல்லி அழைக்கும் அந்தக் குரல் அடையாளம் காண முடியாத வாழ்க்கை என்னும் அசரீரிதான்.