கவிதை வாசகர்கள் பெருக வேண்டும்  

You are currently viewing கவிதை வாசகர்கள் பெருக வேண்டும்   

 

அன்பு

அன்பு என்பதே

காண அரிதான உலகில்

கொடூரம் அளப்பரியதாக உளது

ஊசி ஏறிய அவள் கைவிரலில்

ரத்தம் கசிகிறது

துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது

மேலாளன் வருகிறான் அவன்

வணிகப் பேச்சோடு

சிகிச்சைக்கு வேண்டிய அன்பு கூடவா இல்லை

துணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன

மனிதன்

வெற்றுடம்புடன் திரிகிறான்

நகரமெங்கும்

அன்பைத் தேடி

அச்சத்துடன்.

—–                     ஆத்மாநாம்.

ஆத்மாநாம் அறக்கட்டளை வழங்கும் நான்காம் ஆண்டு விருது விழா இது. இதற்குத் தலைமை ஏற்பதில் மகிழ்ச்சி. கவிதைக்கான விருது பெறும் போகன் சங்கருக்கும் கவிதை மொழிபெயர்ப்புக்கான விருதுகளைப் பெறும் கார்த்திகைப் பாண்டியன், அனுராதா ஆனந்த் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எப்போதும் விருதுகள் சர்ச்சைகளையும் உடனழைத்து வருகின்றன. நடுவர் குழுவினர் தங்களுக்கு வேண்டியவருக்குக் கொடுத்துவிட்டார்கள், இலக்கியத் தரமற்ற நூலுக்குக் கிடைத்திருக்கிறது,  இவரை விடவும் இன்னும் நன்றாக எழுதுபவர்கள் எத்தனையோ பேரிருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவருக்குக் கொடுத்ததில் உள்நோக்கம் இருக்கிறது – இப்படியெல்லாம் பலவிதமான சர்ச்சைகள் உருவாகின்றன. சிறியவை முதல் பெரிய விருதுகள் வரைக்கும் சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. ஆனால் எல்லா விருதுகளையும் ஒரே தரத்தில் வைத்து மதிப்பிடுவது சரியானதல்ல. அரசு அதிகார அமைப்புகள் வழங்கும் விருதுகளையும் தனிநபர்கள், அறக்கட்டளைகள் வழங்கும் விருதுகளையும் கட்டாயம் பிரித்துப் பார்க்க முடியும். தனிநபர், அறக்கட்டளைகள் வழங்கும் விருதுகளில் தமக்கெனத் தனித்தன்மையான மதிப்பீடுகளைக் கொண்டவை முக்கியமானவை. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே சர்ச்சைகளைப் பொருட்படுத்த வேண்டும்.

விருது உட்கொண்டிருக்கும் விழுமியங்களைப் புறந்தள்ளிவிட்டுக் கொடுப்பவரை அல்லது பெறுபவரை மட்டும் இலக்காகக் கொண்டு எழும் சர்ச்சைகள் பொருட்படுத்தத் தக்கவையல்ல. ஆத்மாநாம் அறக்கட்டளை விருதின் முதலாண்டின் போது உருவான சர்ச்சைகளைப் பார்த்துவிட்டு நண்பர் சீனிவாசன் நடராஜனிடம்  ‘ஆத்மாநாம் அறக்கட்டளை விருதுக்கென்று நீங்கள் கொண்டிருக்கும் விழுமியங்களைப் பற்றிய அக்கறையற்ற சர்ச்சைகளை எளிதாகக் கடந்து செல்லுங்கள். அறக்கட்டளையின் தொடர் செயல்பாடு அந்த விழுமியங்களை முன்னிறுத்தும். சர்ச்சைகளைப் புறந்தள்ளும்’ என்று சொன்னேன். இந்த நான்கு ஆண்டுகளில் ஆத்மாநாம் அறக்கட்டளை கைக்கொண்டிருக்கும் விழுமியங்கள் எவை என்பதை விருது பெற்றோர் பட்டியலே உணர்த்தும். தனித்தன்மை கொண்ட முக்கியமான விருதாக இது இன்று தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அறக்கட்டளைச் செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இதுவரைக்கும் மூன்று விருதுகளுக்கான நடுவர் குழுவில் இருந்திருக்கிறேன். புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது, சுரா நினைவு நெய்தல் விருது, ஆத்மாநாம் அறக்கட்டளை விருது ஆகியவை. நடுவர் குழுவில் நான் எதிர்பார்ப்பது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று கருத்துச் சுதந்திரம். இரண்டாவது என் கருத்துக்கு மதிப்புக் கிடைத்தல். நடுவர் குழுவில் இருந்தோ வெளியிலிருந்தோ யாரோ முடிவெடுப்பார்கள், ஒப்புதல் மட்டும் நான் தெரிவிக்க வேண்டும் என்றால் அவ்விதமான குழுவில் இருப்பது எனக்கு உவப்பானதல்ல. கருத்தை வெளிப்படையாகச் சொல்லவும் அதைப் பொருட்படுத்தி விரிவாக விவாதிக்கவும் இடம் இருக்க வேண்டும்.

நான் இடம்பெற்ற விருது ஒவ்வொன்றின் விதிகளும் செயல்பாடுகளும் வித்தியாசமானவை. அவற்றுக்கு உட்பட்டுச் செயல்படும் நடுவர் குழு ஏதோ ஒருவகையில் விவாதித்தே முடிவுகளை வந்தடைகிறது. நடுவர் குழுவுக்குச் சில நிர்ப்பந்தங்கள் வருவதும் இயல்புதான். குழுவுக்குள் இருந்தும்கூட அத்தகைய நிர்ப்பந்தங்கள் வரும். அவற்றை எல்லாம் ஆரோக்கியமான விவாதங்கள் மூலமாகக் கடந்து செல்வதே நடுவர் குழுவின் இயல்பு. நடுவில் குழுவில் சிலர் உரிய துறை சார்ந்த நூல்களை எல்லாம் விரிவாக வாசித்துவிட்டு வருவார்கள். சிலர் ‘பார்த்துக்கொள்ளலாம்’ என்னும் மனோபாவத்துடன் இருப்பார்கள். பொதுவாக விரிவான வாசிப்பு என்னும்  தயாரிப்புடன் வருபவர் விவாதத்தில் முக்கிய இடம்பெறுவதும் அவரது முன்மொழிவுக்கு முக்கியத்துவம் கிடைப்பதும் இயல்பானது.

எல்லாவற்றையும் கடந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் தகுதியுடையவர்களாகவே இருக்கிறார்கள். நான் இருந்த நடுவர் குழுக்களில் நான் சொல்லும் பெயரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என ஒருபோதும் நிர்ப்பந்தம் கொடுத்ததில்லை. இன்னொரு பெயருக்குப் பெரும்பான்மை ஆதரவிருக்கும் பட்சத்தில் அதற்கு ஒத்துப் போவதுதான் சரி. அல்லது அதை மறுக்கும் வலுவான கருத்து எனக்கு இருக்க வேண்டும். என் முன்மொழிவுகள் விருதுகளைப் பெற்றிருக்கின்றன; அல்லது அவை சற்றே பின்னுக்குப் போயிருக்கின்றன. பொதுவாகவே தேர்ந்தெடுக்கப்படும் பெயர் ஒரு நடுவரின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தால் இன்னொரு நடுவரின் பட்டியலில் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் நம் சூழலில் எப்போதும் சர்ச்சைக்குப் பஞ்சமில்லை. சர்ச்சை தவிர்க்க இயலாதது எனினும் தொடர்ந்தும் வன்மையாகவும் சர்ச்சைகள் ஏற்படுவதன் காரணம் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். அதற்குக் காரணமாக நான் கருதுவது  ‘ஏற்பு.’ வாழ்க்கை பெரிய வனம் போன்றது. ஏராளமான இயற்கை ரகசியங்கள் நிறைந்த வனம். அதில் சில ரகசியங்களை இலக்கியம் வெளிப்படுத்துகிறது. மேலும் ரகசியங்கள் நிறைந்தது வனம் என்னும் உணர்வையும் இலக்கியம் கொடுக்கிறது. வனத்தை அறிவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை; ஒவ்வொரு வழி; ஒவ்வொரு முயற்சி. பார்வை, வழி, முயற்சி ஆகியவற்றை ஏற்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கிறது. சூழல் சார்ந்து சிந்திக்காமல் தனிநபர் விருப்பு வெறுப்புகளை வைத்தே பார்த்தல்தான் சிக்கலுக்குக் காரணமாகிறது.

தன்னைத் தவிர மற்றமையை ஏற்பதற்கான விரிந்த மனம் ஏன் இலக்கியச் சூழலில்கூட இல்லை என்பது பெரிதும் ஆராய்வதற்கு உரியது. மற்றமையை ஏற்கத் தயாரில்லாத மனநிலையை இந்தச் சாதிய சமூக அமைப்பு நமக்குள் படிய வைத்திருக்கிறதோ என்று தோன்றுகின்றது. நான் இங்கே குறிப்பிட விரும்புவது சாதி பார்த்தல் என்பதை அல்ல. நெடுங்காலமாக நிலவி வரும் சாதிய சமூக அமைப்புக்குள் வாழும் ஒருவருக்கு அது வழங்கியிருக்கும் மனோபாவத்தை நோக்கிச் செல்ல விரும்புகிறேன். மற்றமையைத் தனக்குச் சமமாக வைத்து ஏற்காமைதானே சாதியத்தின் உட்கிடை. அது நமக்கு மரபுரிமையாக வழங்கியிருக்கும் மனோபாவத்துடன்தான் நாம் ஒவ்வொருவருமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகின்றது. அதைக் கடப்பது அத்தனை சுலபமல்ல எனினும் கடந்தாகத்தான் வேண்டும். அதற்கு முயல வேண்டும். விருது பெறுபவரின் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுதல் என்பது அத்தகைய முயற்சிக்குச் சிறிதளவாவது உதவும் எனக் கருதுகிறேன்.

ஏனென்றால் எனக்கு இலக்கியத்தின் எந்த வடிவத்தை விடவும் கவிதை பற்றிய நம்பிக்கை மிகுதி. எப்பேர்ப்பட்ட மனத்தையும் சற்றே இளக்கவும் பரிசீலனையைத் தூண்டவும் கவிதை உதவும் என நம்புகிறேன். ஆகவேதான் கவிதையை இன்னும் விரிவான தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன்.  நவீன கவிதை புரியவில்லை என்னும் குரல்களை அன்றாடம் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள், இலக்கியம் கற்கும் மாணவர்கள் ஆகியவர்களுக்குத்தான் இந்தப் புரிதல் சிக்கல் இருக்கிறது என ஒருகட்டம் வரைக்கும் எண்ணியிருந்தேன். பின்னர் கவிதை வாசிப்புப் பயிற்சியற்ற இளம் வாசகர்களுக்கும் அந்தச் சிக்கல் இருப்பதை உணர்ந்தேன். இப்போது என் அனுமானம் இன்னும் விரிவடைந்து தேர்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும்கூட இந்தப் புரிதல் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது என்னும் முடிவுக்கு வந்திருக்கிறேன். என்ன, ஆசிரியர்களும் மாணவர்களும் ‘எங்களுக்குப் புரியவில்லை’ என வெளிப்படையாகச் சொல்கிறார்கள். கவிதை வாசகர்களும் கவிஞர்களும் அப்படிச் சொல்லாமல் புரிந்தது போலப் பாவனை செய்கிறார்கள். அதுதான் வேறுபாடு.

நவீன கவிதை புரியாமை தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் நாம் யோசித்தாக வேண்டும். ஒரு கவிதைத் தொகுப்பை அதிகபட்சமாக முந்நூறு படிகள் அச்சிட்டு வெளியிட்டு நூறு பேர், இருநூறு பேர் என்னும் குழுவுக்குள் மட்டும் வாசித்துப் பேசிச் சண்டையிட்டு அதற்குள்ளேயே முடிந்து போய்விடும் குறுகிய ஆயுள் கொண்டதாகக் கவிதையின் வாழ்வு இருக்கக் கூடாது. சமகாலத்திற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றும் வல்லமை கொண்ட கவிதை இன்னும் விரிந்த தளத்திற்குப் போய்ச் சேர வேண்டும். அவ்வகையில் கவிதை புரிதல் தொடர்பாகக் கவிஞர்கள் முன்னெடுக்க வேண்டியது என்னும் நோக்கில் ஒரே ஒரு கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்.

நம் மரபிலக்கியம் பற்றி இத்தகைய புரியாமைப் புகார்கள் இப்போது வெகுகுறைவு. ஓலைச்சுவடியில் அந்நூல்கள் இருந்த காலம் வரைக்கும் அதற்கும் மிகக் குறுகிய வாசகர்களே இருந்தார்கள். மரபிலக்கிய வாசகர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் பெருகியமைக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது அச்சுச் சாதன வளர்ச்சி. ஆனால் அச்சு வசதி வந்தபோது ஓலைச்சுவடியில் இருப்பதை அப்படியே அச்சிட்டார்கள். ஒருவகையில் சொன்னால் ஓலைச்சுவடியும் அச்சுப் புத்தகமும் ஒரே மாதிரி இருந்தன எனலாம். அதற்குப் பின் அச்சுச் சாதனத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியாக உருவான பதிப்பு முறைகளே மரபிலக்கியம் பரவக் காரணமாயின. பதிப்பிலும் ‘பிரிப்பு’ என்னும் செயல்பாடுதான் மரபிலக்கியம் பரவப் பெரும் காரணம்.

பதிப்பாசிரியர்கள் பதிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரிப்புப் பணியைச் செய்தனர். முதலில் ஒன்றோடு ஒன்று கலந்து தொடர்ச்சியாகக் கிடந்த செய்யுள்களைத் தனித்தனியாகப் பிரித்து அச்சில் கொடுத்தனர். பின்னர் ஒவ்வொரு செய்யுளிலும் தொடர்ந்து எழுதப்பட்டிருந்த அடிகளைத் தனித்தனியாகப் பிரித்தனர். அதற்குப் பிறகு ஒவ்வொரு அடியிலும் சேர்ந்திருந்த  சீர்களைத் தனித்தனியாகப் பிரித்தனர்.  அடுத்துச் சீர்களுக்குள் சேர்ந்திருந்த சொற்களைத் தனிப்படுத்திச் சந்தி பிரித்தனர். சந்தி பிரிப்புக்குப் பின் நிறுத்தற் குறிகளால் தொடர்களைப் பிரித்துப் பொருள் வரையறையை நோக்கி நகர்த்தினர்.  ஒவ்வொரு பிரிப்பும் மரபிலக்கியத்தை நோக்கி ஒவ்வொரு அடிவைப்பை வாசகரிடம் தூண்டியது. ஒவ்வொரு பிரிப்பும் தெளிவுக்குக் காரணமாயிற்று.

மரபிலக்கியத்தின் தன்மையும் நவீன இலக்கியத்தின் தன்மையும் வெவ்வேறானவைதான். எனினும் பொருள் வரையறை இரண்டிலும் முக்கியமே எனக் கருதுகிறேன். பொருள் வரையறை புலப்படா விட்டால் வாசக மனம் விலகி ஓடுவதைத் தவிர்க்க இயலாது. கவிதைக்குப் பொருள் வரையறை செய்ய முடியாது அல்லது பல பொருள் தருவது கவிதை என்னும் வாதத்தை ஓரளவிற்கே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் என்னதான் முயன்றாலும் துரதிர்ஷ்டவசமாகப் பெரும்பாலான கவிதைகள் ஒரு பொருள் மட்டுமே தருபவையாகத்தான் இருக்கின்றன. அந்த ஒருபொருளை உணர்வதற்கும் கவிதை எழுதுமுறையின் காரணமாக நாம் பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது.

மின்னம்பலம் இணைய இதழில் ‘கவிதை மாமருந்து’ என்னும் தலைப்பில் நவீன கவிதைகளைக் குறித்துத் தொடர் ஒன்றை எழுதி வருகிறேன். மாணவர்களையும் தொடக்க நிலை வாசகர்களையும் கருத்தில் கொண்டு கவிதையைத் தேர்வு செய்கிறேன். தேர்வின் போது கவிதைக்குப் பொருள் வரையறை செய்துகொள்ள முயல்கிறேன். அதற்கு நவீன கவிதையின் இன்றைய எழுதுமுறை பெரும் தடையாக இருக்கிறது. தலைப்பின்மை, தெளிவற்ற தொடர்கள், பொருத்தமற்ற அடி பிரிப்புகள், பத்தி பிரிக்காமை, நிறுத்தற் குறியிடாமை ஆகியவையே இன்றைய கவிதை எழுதுமுறையின் இயல்புகளாக இருக்கின்றன. இத்தகைய எழுதுமுறை கவிதையை நோக்கி வாசகர்களை ஈர்ப்பதில்லை. மாறாக விலகி ஓடச் செய்கின்றன.

தலைப்பிட்டுக் கொள்வது, தொடர்களை ஒழுங்குபடுத்துவது, அடிகளைப் பொருத்தமாகப் பிரிப்பது, பத்தி பிரித்துக்கொள்வது, நிறுத்தற் குறியிடுவது உள்ளிட்ட இந்த வேலைகள் எல்லாம் வாசகருடையவை என்று பொறுப்பை வாசகரிடம் தள்ளிவிடுவது சரியானதல்ல. உண்மையில் இவற்றைச் செய்துகொண்டு வாசிக்கும்போது பெரும்பாலான கவிதைகளுக்குப் பெரும் வெளிச்சம் கிடைக்கிறது. வாசகர்கள் எல்லோரும் இத்தகைய வேலைகளைச் செய்துகொள்ளும் பயிற்சி உடையவர்களாக இருக்க மாட்டார்கள். இருப்பினும் செய்துகொள்ளும் பொறுமை இருக்காது. எழுதுமுறையில் கவனம் கொள்ளும் கவிஞர்களின் கவிதைகள் இப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவதையும் கணிசமான வாசகர்களைச் சென்றடைவதையும் காண்கிறேன். ஆகவே கவிஞர்கள்தான் இந்தக் கடமையைச் செய்தாக வேண்டியவர்கள். அவர்கள் கவிதை எழுதுமுறையில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கருதுகிறேன். அதன் வழியாகக் கவிதை வாசகர் எண்ணிக்கையைக் கணிசமாகக் கூட்ட முடியும் என்பது என் நம்பிக்கை. கவிதை வாசகர்கள் பெருக வேண்டும் என்பது என் ஆசை.

போகன் சங்கரின் ஒரு கவிதையோடு என் உரையை முடிக்கிறேன்.

நீ வாசிக்கிறவரை

இந்தப் புல்லாங்குழலில்

இசை

ஒளிந்துகொண்டிருந்தது

எனக்குத் தெரியாது

 

இது

புல்லாங்குழல்

என்றே எனக்குத் தெரியாது.

அனைவருக்கும் நன்றி.

——

(20-10-18 அன்று சென்னையில் நடைபெறும் ஆத்மாநாம் அறக்கட்டளை விருது வழங்கும் விழாவிற்கான தலைமையுரை.)