இன்று மார்கழி ஏழாம் நாள். திருப்பாவை ஏழாம் பாசுரம் இது:
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
இப்பாசுரம் குறிப்பிடும் ‘ஆனைச்சாத்தன்’ என்பது கரிக்குருவி. கரிச்சான், கரிக்குருவி, வலியன், இரட்டைவால் குருவி என்றெல்லாம் அதற்குப் பல பெயர்கள் உண்டு. சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற கரிசல் இலக்கியத் திருவிழாவில் உரையாற்றிய சோ.தர்மன் இதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதற்கு விளக்கம் சொல்லும் வகையில் எழுத்தாளர் நக்கீரன் முகநூலில் சிறுபதிவு எழுதியிருந்தார். கரிக்குருவியே ஆனைச்சாத்தன் எனக் கண்டறிந்ததில் நாலாயிர திவ்ய பிரபந்த உரையாசிரியர் அண்ணங்கராசாரியார் தொடங்கி பி.எல்.சாமி வரைக்கும் சொல்லி எழுதியிருந்தார். ‘நான் ஏதாவது தவறாகக் கூறியிருந்தால் திருத்திக் கொள்கிறேன்’ என்று சோ.தர்மனும் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டார். ஆரோக்கியமான முறையில் விவாதம் நடைபெற்றது. மகிழ்ச்சி.
அப்பதிவின் பின்னூட்டத்தில் வடகோவை வரதராஜன் ( Vadakovay Varatha Rajan ) கரிக்குருவி பற்றித் தாம் எழுதிய சிறுகட்டுரை ஒன்றின் இணைப்பைப் பகிர்ந்திருந்தார். ‘புதன் தோறும் ஒரு புதிய பறவை’ என்னும் தலைப்பில் வாரம் ஒரு பறவையைப் பற்றிக் கட்டுரை எழுதி வருகிறார். அதில் கரிக்குருவியைப் பற்றி ஒரு கட்டுரை. அக்கட்டுரையில் வரும் பகுதி இது:
‘இயற்கையிலும் பறவைகளிலும் மிகு ஆர்வம் கொண்டிருந்த கு.ப.ராஜகோபாலன் தனது புனைபெயர்களில் ஒன்றாக கரிச்சான் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தார். கு.ப.ரா.வின் எழுத்துகளில் கவரப்பட்ட ஆர்.நாராயணசாமி என்ற எழுத்தாளர் தனது புனைபெயரை ‘கரிச்சான் குஞ்சு’ என வைத்துக்கொண்டார். புல்லையும் அதன் பூக்களையும் கூட நுணுகி விவரிக்கும் இயற்கை நேசர் தி.ஜானகிராமனின் நாவல்களில் கட்டாயம் ஏதோ ஓர் இடத்தில் இப்பறவை வலியன் என்ற பெயரிலோ அல்லது கரிச்சான் என்ற பெயரிலோ இடம்பெறும்.’
கு.ப.ராஜகோபாலனின் புனைபெயர்களில் ஒன்று ‘கரிச்சான்’ என்பது சரி. அவருடைய புனைபெயர்களில் இன்னொன்று ‘பாரத்வாஜன்.’ இரண்டும் கரிக்குருவியைக் குறிக்கும் சொற்கள்தான். கரிச்சான் – தமிழ். பாரத்வாஜன் – சமஸ்கிருதம். கு.ப.ரா. கவிஞராகவும் இருந்ததால் இயற்கை வருணனைகள் அவர் படைப்புகளில் செறிவாகவும் அழகாகவும் அமையும். கரிச்சானைப் பற்றி ‘யோகம் கலைதல்’ என்னும் கவிதையில் இப்படி எழுதுகிறார்:
கரிச்சான் ஒன்று கூரை மேலிருந்து
மருட்சியுடன் மெல்ல மெல்லத் தயங்கி
வரி திறந்து வேதம் பாடக் கேட்டு நான்
அவ்வின்பம் அலையெடுத்த இடத்தைப் பார்க்க
பரிந்து வந்தேன்; பாட்டை நிறுத்திப் பறவை
என்னைக் கண்டு எழுந்தோடி விட்டது!
ஆனால் இயற்கை ஈடுபாட்டின் காரணமாக மட்டுமே அவர் இப்புனைபெயர்களை வைத்துக் கொண்டாரா என்றால் அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இன்னொரு காரணமும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. பிராமணர்களில் பாரத்வாஜ கோத்திரம் என்றொரு பிரிவு உண்டு. அக்கோத்திரத்தைச் சேர்ந்தவர் கு.ப.ரா.. பறவைகள் குலச்சின்னங்களாக அமைவது உலக அளவிலேயே வழக்கம்தான். கொங்கு வேளாளர்களிடையே காடை, ஆந்தை முதலிய பறவைப் பெயர்களில் குலங்கள் உண்டு. அது போல கரிச்சானைக் குலச்சின்னமாகக் கொண்டது பாரத்வாஜ கோத்திரம். சப்தரிஷிகளில் ஒருவர் பாரத்வாஜர். அவர் வழி வந்தோர் என்னும் புராணக்கதையும் உண்டு. அதற்குள் நான் செல்லவில்லை.
தம் கோத்திரத்தைக் குறிக்கும் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இருமொழிப் பெயர்களையும் புனைபெயர்களாகக் கு.ப.ரா. கொண்டிருந்தார். கு.ப.ரா.வோடான நட்பு, அவரது வழிகாட்டுதல் ஆகியவற்றால் எழுத்தார்வம் பெற்றவர் ஆர்.நாராயணசாமி. தம் குருநாதரின் புனைபெயரோடு ‘குஞ்சு’ சேர்த்துக் ‘கரிச்சான் குஞ்சு’ எனப் புனைபெயர் வைத்துக் கொண்டார். தி.ஜானகிராமன் எழுத்துக்களில் கரிச்சான் ஆங்காங்கே இடம்பெறுவது உண்டு. அவரும் கு.ப.ரா.வின் சீடர்தான். தம் ஆசிரியரை அவர் ஒருபோதும் மறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவரை நினைவுகூரும் பொருட்டுக் கரிச்சானைப் பற்றித் தம் படைப்புகளில் எழுதியிருக்கவும் வாய்ப்புண்டு. கரிச்சான் குஞ்சுவும் தி.ஜானகிராமனும் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. தாம் குருவாகக் கருதிய கு.ப.ரா. மேலான ஈடுபாடுதான் கரிச்சான் மீதும் கவனம் செலுத்த வைத்திருக்கிறது.
குலப்பெயரைத் தம் பெயரோடு இணைத்துக் கொள்ளும் மரபு பழந்தமிழ் உரையாசிரியராகிய நச்சினார்க்கினியரிடமே தொடங்குகிறது. அவர் ஊர் மதுரை. குலம் பாரத்வாஜ கோத்திரம். பெயர் நச்சினார்க்கினியர். உ.வே.சா. பதிப்பித்தப் பத்துப்பாட்டு நூலில் ‘பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்’ என்றுள்ளது. அவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது தெளிவு. சீவக சிந்தாமணிப் பதிப்பில் ‘நச்சினார்க்கினியர்’ என்று மட்டும் குறிப்பிடும் பின்னர் ஊர், குலப்பெயர் ஆகியவற்றையும் சேர்த்துள்ளார். அவற்றைச் சுவடிகள் மூலம் அறிந்து சேர்த்திருக்கலாம்.
கலைக்களஞ்சிய உருவாக்க வரலாற்றில் முதன்மை இடம்பெற்ற அறிஞர் ம.ப.பெரியசாமித் தூரன். இப்போது முழுமையாக இப்படிக் குறிப்பிட்டாலும் இதழ்களிலும் நூல்களிலும் ‘பெ.தூரன்’ என்னும் புனைபெயரையே பயன்படுத்தினார். பெரியசாமி என்னும் அவர் இயற்பெயரின் சுருக்கம் ‘பெ’ என்னும் எழுத்து. தூரன் என்பது அவரது குலப்பெயர். அவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்; கொங்கு வேளாளர் சாதியினர். அச்சாதியில் பறவை, மரம், செடி, பயிர்களின் பெயர்களில் குலங்கள் உண்டு. துவரன் என்பதன் வழக்கு வடிவம் தூரன். துவரஞ் (பருப்பு) செடியைக் குலச்சின்னமாகக் கொண்டவர்கள் தூரன் கூட்டத்தார். அவர்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை துவரம் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தனர். குலச்சின்னத்தைத் தெய்வமாகக் கருதுவதால் அதை உண்பதில்லை.
கு.ப.ராஜகோபாலன், ம.ப.பெரியசாமித் தூரன் ஆகியோரைத் தவிரத் தம் குலப்பெயரைப் புனைபெயராகக் கொண்ட எழுத்தாளர்கள் உள்ளனரா?
—– 23-12-23