ஒளி
முருகேசுவின் தந்தை இறந்து ஐந்து நாட்களாயின. மிகச்சிறு விபத்து. பழைய டிவிஎஸ் 50 வண்டி வைத்திருந்தார். பல வருசங்களாக அதில்தான் அவர் பயணம். மெதுவாகவே போவார். ஒருநாள் வண்டியில் அவர் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு பேருந்து கடந்து போயிற்றாம். பிறகு ஒரு லாரி போயிற்றாம். கார், பைக்குகள் எல்லாம் அவரை முந்திவிட்டுப் போயினவாம். ஒரு மிதிவண்டியும் அவரைக் கடந்தது. ஒருவன் வேகமாக நடந்து வந்தானாம். அவனுக்கு என்ன அவசரமோ என்று வழிவிட்டு ஒதுங்கி அவன் போன பிறகு வண்டியை ஓட்டினாராம். அப்படித்தான் அவர் வண்டி ஓட்டும் வேகத்தைக் கேலி செய்வார்கள். ‘தள்ளிக்கிட்டுப் போறதும் அவரு ஓட்டறதும் ஒன்னுதான்’ என்பார்கள். ஆனால் மரணம் எந்த வடிவத்தில் வரும் என்று யாருக்குத் தெரியும்? வண்டியில் கண்மண் தெரியாமல் பறக்கிறவனை மரணம் நெருங்குவதில்லை. நடக்கிறவனை மரணம் வாரிக்கொண்டு போய்விடுகிறது. முருகேசுவின் தந்தைக்கும் அப்படித்தான் ஆயிற்று.
வீட்டில் இரண்டு எருமைகள் இருந்தன. ஒன்று கறவை. மற்றொன்று சினை. காலையில் கறந்த பாலை நான்கு வீடுகளுக்குக் கொண்டுபோய்க் கொடுத்து வருவார். வழக்கமான டீக்கடையில் நின்று கொஞ்ச நேரம் பேசுவார். ஒரு டீயும் குடிப்பார். அங்கே சில நண்பர்கள் உண்டு. அவர்களோடு பேசிவிட்டு வரும்போது எட்டு மணி ஆகிவிடும். ஊர் வழியாகச் செல்லும் சிற்றுந்தை ஏதாவது ஓரிடத்தில் கடக்க நேரும். அப்படித்தான் அன்றைக்குக் காலை நேரம். முதன்மைச் சாலையிலிருந்து ஊருக்குப் பிரியும் பஞ்சாயத்துச் சாலையில் வண்டியில் வந்து கொண்டிருந்தார். வழியில் சிறுபாலம் ஒன்றுண்டு. அதனடியே இருந்தது வாய்க்காலாம். ஏதோ ஒருகாலத்தில் தண்ணீர் போனதுண்டாம். இப்போது கோழிக்கறிக் கடைக்காரர்கள் இறகுகள், குடல்கள் செறிந்த கழிவுகளை எல்லாம் கொண்டு வந்து கொட்டும் இடமாக இருந்தது.
வாய்க்காலில் கொட்டுகிறோம் என்று அவர்களுக்கும் தோன்றவில்லை; அவ்விடம் வந்ததும் மூக்கைப் பிடித்துக்கொண்டு நகரும் மக்களுக்கும் தோன்றவில்லை. வாய்க்காலின் ஆயுள் முடிந்துவிட்டிருந்தது. கோழிக்கறிக் கழிவுகளைத் தின்பதற்கு எப்போதும் நாய்கள் கூட்டம் திரிந்து கொண்டிருக்கும். அவ்விடத்தைக் கடக்கும்போது ரொம்பவும் எச்சரிக்கையாகவே போவார். ஒரு நாய் சக நாயோடு சண்டை போடும்போது உலகத்தில் நடக்கும் வேறு எதுவும் அதன் கவனத்திற்கு வரவே வராது. அப்படி நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு கண்மண் தெரியாமல் வண்டியில் வந்து விழுந்துவிடலாம். சிலருக்கு அப்படி நடந்திருக்கிறது. அதனால் மிகவும் எச்சரிக்கையாகவே அவ்விடத்தைக் கடப்பார்.
அன்றைக்கும் அப்படித்தான் போனார். பாலத்து மேல் போகும்போதே சிற்றுந்து வந்துவிட்டது. அவருக்குப் பின்னால் வந்த சிற்றுந்து ஓட்டுநர் ஒலி எழுப்பி அவருக்கு வணக்கம் சொன்னார். தினசரி வழக்கம் அது. அவரும் சிரித்துக்கொண்டே கையைக் காட்டினார். சிற்றுந்து அவரைக் கடந்த அதே கணத்தில் நாயொன்று சாலை கடந்ததைக் கவனிக்க முடியவில்லை. ஒரே நொடியில் வண்டி நாய் மேல் மோதிக் கீழே விழுந்தார். கைகள் தாமாக இரண்டு பிரேக்கையும் அழுத்திவிட்டதில் எகிறிப் போய் வண்டிக்கு முன்னால் அவர் விழுந்திருந்தார். சிற்றுந்தில் போனவர்கள் பின் கண்ணாடி வழியாகப் பார்த்து இறங்கி ஓடி வந்தார்கள். பெரிய அடியில்லை. அங்கங்கே சிராய்ப்புகள். முகத்திலும் தலையிலும் சிறுசிறு காயங்கள். ஊன்றிய இடக்கையில் வலி. எலும்பு முறிவாக இல்லை. ரத்தக் கட்டுத்தான். விபத்து நடந்த பிறகும் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார்.
வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள். கட்டிலில் உட்கார்ந்து தண்ணீர் கேட்டார். அம்மா கொண்டுவரப் போனார். பார்த்து விசாரிக்க வந்தவர்களிடம் சிரிக்கப் பேசினார். பேசிக்கொண்டே தலைப்பக்கம் கையைக் கொண்டு போனார். பேசப் பேசவே சட்டெனத் தலை சாய்ந்து உயிர் பிரிந்துவிட்டது. இப்படி உயிர் பிரிவதை நேரில் பார்த்தவர்கள் ‘மனுச வாழ்க்க என்ன போ’ என்று விரக்தியுடன் அக்காட்சியை விவரித்தார்கள். தலையில் உள்ளடி பட்டிருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். மருத்துவமனைக்குப் போயிருந்து ஒரு சிலநாள் மருந்து மாத்திரை என்று கவனித்துப் பார்த்தபின் இறந்திருந்தால் ‘பார்த்தோம்’ என்னும் நிறைவாவது கிடைத்திருக்கும். ஒன்றும் இல்லாமல் நிமிச நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.
முருகேசனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவர் அவன்மேல் அப்படி ஒரு பிரியம் வைத்திருந்தார். அவ்வளவாக வெளிக்காட்ட மாட்டார். சிறுசிறு சொற்கள் கனிந்து வரும். செயலை உறுத்தலாக்க மாட்டார். அதை அவனும் உணர்ந்திருந்ததால் பிரியத்தை ஒருபோதும் துயருக்கு ஆளாக்கியதில்லை. ‘தாய்க்குத் தலைமகன், தந்தைக்குக் கடைமகன்’ என்னும் வழக்கப்படி அவருக்கு முருகேசு கொள்ளிக்குடம் சுமந்து மண் தள்ளினான். கொள்ளிக்குடத்தைத் தோளில் வைத்துச் சுற்றியபோது பெருங்குரலெடுத்து ‘அப்பாஅ…’ என்று கத்திவிட்டான். அவன் அப்படி அழுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவன் அண்ணன்களுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. மூத்தண்ணன் ‘நம்ம கையிலயா இருக்குது? நாங்கெல்லாம் இருக்கறம், அழுவாதடா’ என்று அருகில் வந்து கையைப் பற்றிக்கொண்டார். அப்போது அண்ணனுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை என்பதை அவன் கவனித்தான். அழுகை ஒரு தொற்றுநோய். பார்ப்பவர்கள், சொல்பவர்கள், கேட்பவர்கள் எல்லோரையும் சட்டெனப் பற்றிக் கொள்ளும் கொடூரத் தொற்றுநோய். இடுகாட்டுக்கு வந்தவர்கள் எல்லாருக்குமே கண் கலங்கிற்று. ‘சின்னப்பையன் அப்படி அழுதானாமா’ என்பதே ஊரெங்கும் பேச்சானது.
அவர் இறப்பை எப்படிக் கடப்பதென அவனுக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றிய நினைவுக்குள்ளேயே உழன்றான். இரண்டாவது நாளே அம்மா இயல்பாகிவிட்டாள். யாராவது துக்கம் விசாரிக்க வந்தால் மட்டும் முகத்தைத் துயரமாக்கிக் கொண்டாள். முந்தானைச் சேலையை மடித்து வாய்மேல் வைத்துக்கொண்டு கமுக்கமான குரலில் நடந்த சம்பவத்தைத் துல்லியமாக விவரித்தாள். ‘எனக்கு ஒன்னுமில்ல, உழுந்த அதட்டிதான்’ என்று எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார் எனவும் ‘முருகேசு மூஞ்சியப் பாத்துக்கூட கவலப்படாத, உங்கடமைய முடிக்காத அத்தன சீக்கிரம் சாவ மாட்டனய்யானு சொன்னாரே’ என்றும் கூறி அம்மா பொங்கி அழும்போது வந்தவர்கள் கொஞ்சம் சங்கடப்பட்டார்கள். அப்பா எப்போது அப்படிச் சொன்னார் என்று அவனுக்குத் தெரியவில்லை. அம்மாவால் இப்படியெல்லாம் இட்டுக்கட்ட முடிகிறதே என்று ஆச்சர்யப்பட்டான்.
அம்மாவை வெள்ளைச் சேலை கட்டிக்கொள்ளச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. சிலர் காவிச்சேலை கொடுத்துவிடலாம் என்றார்கள். அப்படி எதையும் கட்டச் சொல்வார்களோ என்று அம்மா பயந்து கொண்டிருந்தார். அதனால் மூத்த மகனிடம் ‘நான் சாயச்சீலயே கட்டிக்கறன் பையா… பத்திருபது கெடக்குது அதெல்லாம் தூக்கிப் போட்டுட்டுப் புதுசு வாங்குனா செலவாவும். எதுக்கு அது?’ என்று மெல்லச் சொன்னார். அண்ணன் அதை மற்றவர்களிடம் நயமாகச் சொல்லிச் சாயச்சீலை கட்டிக்கொள்ளச் சம்மதம் வாங்கிவிட்டார். ‘அந்தக் காலம் மசக்காலம். அப்ப எல்லாம் புருசன் செத்துப் போயிட்டா பொண்டாட்டி சின்ன வயசா இருந்தாலும் வெள்ளச் சேலதான். இன்னைக்கு நாகரிகம் பெருத்துப் போன காலம். இன்னைக்குக் கெழவிகூட வெள்ளச்சீல வேண்டாங்கறாப்பா’ என்று சிலர் முணுமுணுத்தாலும் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் அம்மாவை யாரும் வற்புறுத்தவில்லை. அது அம்மாவுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது.
இரண்டாம் நாளுக்குப் பிறகு அவன் உடன்பிறப்புகள் அந்த வேலை, இந்த வேலை என்று மெல்ல நழுவித் தங்கள் வீடுகளுக்குப் போய் வேலைகளைப் பார்த்துவிட்டு இரவில் பேருக்கு வந்தார்கள். நாள் முழுக்க இங்கேயே உட்கார்ந்திருந்தால் போன அப்பன் திரும்பியா வரப் போகிறார்? அவரவர்களுக்கு வேலை இருந்தது. இன்னும் சிலநாள் அவரைப் பற்றி ஆளுக்கொரு விஷயத்தைப் பேசுவார்கள். அவ்வளவுதான். ‘கடைசியானுக்கு மட்டும் கலியாணம் பண்ணிப் பாத்திட்டுப் போயிருக்கப் படாதா’ என்று முருகேசுவைக் கட்டிக்கொண்டு பலபேர் அழுதார்கள். எல்லாம் முடிந்தபின் வந்தவர்களும் அதையே சொல்லி அவனைச் சோகமாகப் பார்த்தார்கள். கல்யாணக் காட்சியைப் பார்த்திருந்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைத்திருக்கக் கூடும் என்றும் அது தன்னால் தடைபட்டுவிட்டது என்றும் அவனுக்கே தோன்றத் தொடங்கியது.
அவரை இன்னும் நன்றாகக் கவனித்திருக்க வேண்டும், அவருக்கு இன்னும் பலவற்றை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும், அவரோடு இன்னும் பல வார்த்தைகள் பேசியிருக்க வேண்டும், அவரை இன்னும் சில இடங்களுக்குக் கூட்டிப் போயிருக்க வேண்டும் – இப்படி எத்தனையோ இன்னும்கள் அவனுக்குள் தோன்றின. அவரால்தான் அவன் கல்லூரிக்குப் போய்ப் படிக்க முடிந்திருக்கிறது. குடும்பத்தில் முதல் ஆளாகக் கல்லூரியில் கால் எடுத்து வைத்தவன் அவன்தான். அவனுக்குப் படிக்கும் ஆசை இருந்ததை உணர்ந்து ‘போ’ என்று அனுப்பினார். அண்ணன்கள்கூட அதை அவ்வளவாக விரும்பவில்லை. ‘படிப்புக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டார்கள். ‘இன்னமே சம்பந்தம் வந்திரும்’ என்று சிரித்தார் அப்பன்.
முருகேசுவால் பழைய மாதிரி சாப்பிட முடியவில்லை. உடன் உட்கார்ந்து சாப்பிடும் அவர் முகமும் ஏதாவது ஒரு பதார்த்தத்தை எடுத்து அவன் வட்டிலில் போடும் அவர் கையும் நினைவுக்கு வந்தன. கறி ஆக்கும் நாளில் அவனுக்குப் பிடித்த மாவுக்கறித் துண்டுகளை எடுத்து ஊட்டிவிடாத குறையாகத் தருவார். ‘எலும்புக்கறியும் நல்லாச் சாப்பிடோணும். அதுதான் காலுக்கு வலுவு தரும்’ என்பார். நல்லி எலும்பைத் தட்டிவிட்டு உறிஞ்சக் கொடுப்பார். அருகில் அவர் இருப்பது போலவும் ‘நல்லாச் சாப்பிடு’ என்று சொல்வது போலவும் சிலசமயம் தோன்றுகிறது. சிலசமயம் அவர் இடம் வெறுமையாகத் தெரிகிறது. சோற்றில் கை அளைகிறதே தவிர உள்ளே இறங்கவில்லை.
அவனால் தூங்கவும் முடியவில்லை. அவர் கட்டிலும் அவன் கட்டிலும் அருகருகேதான். அன்றன்றைக்கு நடக்கும் விஷயங்களை கதை போல விலாவாரியாக அவனிடம் சொல்வார். அவர் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவருக்கு ஒரு அபிப்ராயம் இருந்தது. ஒரு சம்பவத்தை அவரைப் போல யாராலும் சொல்ல முடியாது என்று நினைப்பான். அவர் பேசப் பேசவே தூங்கிப் போய்விடுவான். காலையில் சிரித்துக்கொண்டே ‘எதுவரைக்கும்யா கேட்ட?’ என்பார். அவனுக்கு வெட்கமாக இருக்கும். ‘ஆமா, இந்த வயசுல நல்லாத் தூங்கோணும்’ என்பார். ஏதாவது கனவில் பிதற்றினாலோ புரண்டு படுத்தாலோ ‘என்னய்யா’ என்று குரல் கொடுப்பார். அந்தக் குரல் அத்தனை தைரியத்தைக் கொடுக்கும். அவர் தூங்குவாரோ மாட்டாரோ என்றிருக்கும். சிறுசத்தமும் விழிப்பைக் கொடுக்கும் கோழித்தூக்கம்தான் அவருடையது.
என்றைக்காவது கொஞ்சம் குடித்துவிட்டு வருவார். அன்றைக்கு அவர் வார்த்தைகள் எல்லாம் பிரியத்தில் முக்கி எடுத்தவையாக வரும். ‘கடசி காலத்துல நீதான் என்னயப் பாக்கோணும். உங்கண்ணனுங்கள எல்லாம் நான் நம்புல’ என்பார். அவனுக்குச் சின்ன வயதில் வந்த நோய் ஒவ்வொன்றும் அவருக்கு நினைவில் இருந்தன. அதை வயது, நோய், பார்த்த மருத்துவம், பட்ட கஷ்டம் எல்லாவற்றோடும் சேர்த்துக் கதை போலச் சொல்வார். எத்தனையோ முறை தன் சாவை அப்பாதான் தள்ளிப் போட்டிருக்கிறார் என்று அவனுக்குத் தோன்றும். நோய்களுக்குத் தப்பித்தலே மனித வாழ்க்கை என்பதாக உணர்வான்.
எல்லாமே அவருடைய நினைவைக் கொண்டிருந்தன. அவனுக்கு அம்மா ஆறுதல் சொல்லிப் பார்த்தாள். வெளியே அனுப்ப முயன்றாள். அப்பாவை விட்டு அவனால் எங்கும் நகர முடியவில்லை. ஐந்தாம் நாள் மாலை அவன் நண்பன் பக்கத்து ஊரிலிருந்து வந்தான். அமைதியாகக் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவன் மெல்லப் பேச்செடுத்தான். ‘நாம எதிர்பார்த்துக்கிட்டிருந்த தளபதி படம் இன்னைக்கு ரிலீசுடா. டிக்கெட் வாங்கி வெச்சிருக்கறன். இப்ப நீ இருக்கற நெலமைல கூப்பிடக் கூடாது. ஆனாலும் இப்படியே எத்தன நாளைக்கு இருப்ப. வா… போயிட்டு வரலாம். கொஞ்சம் மனசுக்குத் தெம்பா இருக்கும்’ என்றான். நண்பன் மெல்லப் பேசினாலும் அங்கே இருந்தவர்களுக்கு எல்லாம் கேட்டது. அந்த இடத்துக்குப் பொருத்தமில்லாத பேச்சு என்பதாலோ என்னவோ எல்லோரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்கள்.
வீட்டுக்குள் கதவுக்கு நேராக அவர் படம் வைத்து அதற்குப் பூப் போட்டிருந்தது. பித்தளைச் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து படத்திற்கு முன்னால் அம்மா வைத்தார். அப்பா இரவில் வீட்டுக்கு வந்து போவார் என்றும் அவருக்குத் தாகமாக இருக்கும், குடிக்கத் தண்ணீர் வைத்தால் குடித்துவிட்டுப் போவார் என்றும் தினமும் மாலையில் அந்த வேலை நடக்கும். முதல் இரண்டு நாட்கள் காலையில் ஓடி ஓடிச் சொம்புத் தண்ணீரைப் பார்த்தார்கள். வைத்ததிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குறைந்திருக்கிறது என்று சொன்னார்கள். மீதத் தண்ணீரைச் செடியடியில் ஊற்றினார்கள். அச்செடி நன்றாக வளரும் என்றார்கள். அவர் வந்து போக வசதியாக இரவு முழுவதும் கதவைத் திறந்து வைத்திருந்தார்கள். சொம்புத் தண்ணீரை வைத்துக் கொண்டிருந்தபோதே வெளியே நடந்த பேச்சை அம்மா கேட்டிருந்தார்.
வெளியே வந்த அம்மாவின் பேச்சு அமைதியை உடைத்தது. ‘போயிட்டு வாடா. உங்கப்பனுக்கும் இவன் நடிச்ச படம் ரொம்பப் புடிக்கும். போயிட்டு வா.’ பிறகு அங்கிருந்த ஒவ்வொருவரும் அம்மாவை வழிமொழிந்தார்கள். பெரியவர் ஒருவர் சொன்னார், ‘உங்கப்பனுக்குப் புடிச்ச பிராந்திப் பாட்டில குழித் தலமாட்டுல வெச்சம். அது மாதிரிதான் இதுவும். அவனுக்குப் புடிச்ச படத்த நீ பாத்திட்டு வா. அவனுக்குச் சந்தோசமாயிரும். ஒன்னும் தப்பில்ல.’ வரவிருக்கும் அந்தப் படத்தைப் பற்றி நான்கைந்து நாட்களுக்கு முன் அவனோடு பேசினார். ‘இந்தப் படம் பெரியளவுக்கு ஓடுச்சின்னா தளபதி அரசியலுக்கு வந்திருவாரா?’ என அவர் கேட்டதும் படம் வெளியானதும் இருவரும் சேர்ந்து போகலாம் எனப் பேசியதும் நினைவுக்கு வந்தன. தளபதியை இன்னொரு எம்ஜிஆர் என்று அவர் கருதினார். ‘காதலுக்கு மரியாதை’ பார்த்ததில் இருந்து பிடித்துப் போயிற்று. ‘தாய் தந்தைக்கு மதிப்புக் குடுக்கோணும், அவுங்க சொல்லுக்கு மரியாத குடுக்கோணும்னு சொல்ற அருமையான படம்’ என்று எப்போது அதைப் பற்றிப் பேச்சு வந்தாலும் சொல்வார்.
எனினும் தயக்கத்தோடே கிளம்பினான். அப்பா இறந்து ஒருவாரம்கூட ஆகவில்லை, அதற்குள் படம் பார்ப்பது நல்ல மனநிலையா என்பதைப் பற்றி அவனுக்குள் கேள்வி வந்தது. ‘பாரு, அதுக்குள்ள சோடி போட்டுக்கிட்டுப் படம் பாக்கப் போறான்’ என்று யாராவது சொல்வார்களோ? நண்பன் எதை எதையோ சொல்லிக் கொண்டு வந்தான். நண்பன் சைக்கிளில் வந்திருந்தான். அவனிடமும் சைக்கிள் இருந்தது. அதை எடுக்கையில் ‘காலேஜ் போக வண்டி வேணுமின்னா சொல்லு. வாங்கிக் குடுக்கறன்’ என்று அவர் சொன்னதும் அவன் ‘இப்ப வேண்டாம்பா. முடிச்சுட்டு வாங்கிக்கறேன்’ என்று சொன்னதும் மனதில் ஓடி நெகிழ்த்தின. வண்டி வாங்கியிருக்கலாமோ என்று தோன்றியது. வண்டியை எடுக்கும் போதெல்லாம் அவர் நினைவு வரும்.
டிவிஎஸ் 50ஐ அவர் இறந்த அடுத்த நாளே ஒரு மெக்கானிக்கை வரவைத்து ‘வந்த விலைக்கு விற்றுவிடச் சொல்லிக்’ கொடுத்தனுப்பி விட்டான் சின்னண்ணன். அப்பாவின் நினைவாக அதையாவது வைத்திருக்கலாம். ‘ஒருசுரக் காவு வாங்குன வண்டிய ஊட்டுல வெச்சிருக்கக் கூடாது’ என்று அம்மா சொன்னார். ‘இது அவரோட போவட்டும். இது இருந்தாப் பாக்கறப்பெல்லாம் இதுல போயித்தான செத்தாருன்னு அவரு நெனப்பாவே இருக்கும். குடுத்துத் தொலச்சிரு’ என்று மூத்தண்ணன் சொன்னான். முருகேசுக்கு மட்டும் வண்டி இருந்தால் அவர் இருப்பது போல நினைத்துக் கொள்ளலாமே என்று தோன்றியது. அவர் நினைவால் அவன் தான் பித்துப் பிடித்தது போலிருக்கிறான் என்றும் அதை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும்போது அவன் பேச்சு எடுபட வாய்ப்பில்லை. ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டான்.
ஊரிலிருந்து திரையரங்கிற்குச் செல்ல நான்கு கல் தொலைவு. போகும் வழியில்தான் இடுகாடு. அப்பாவின் புதைகுழி தெரிந்தது. ஒரு வேம்படியில் குளிர்ச்சியாகப் படுத்திருந்தார். பூமாலைகள் காய்ந்திருந்தன. தலைமாட்டில் வைத்திருந்த பிராந்திப் பாட்டிலை மறுநாளே காணோம். அன்றைக்கே குடித்துவிட்டார் என்றும் எட்டாம் நாள் காரியத்தின்போது இன்னொரு பாட்டில் வாங்கி வைக்க வேண்டும் என்றும் பேசிக்கொண்டார்கள். எப்போதாவது ஒருநாள் பிராந்தி மட்டும் கொஞ்சமாகக் குடிப்பார். அவரோடு குடிப்பவர்கள் ‘ஒரு பொட்டுத் தொட்டு நாக்குல வெச்சிக்கிட்டு நானும் குடிக்கறன்னு சொல்றானப்பா’ என்றோ ‘மோந்து பாக்கத்தான் வர்றான்’ என்றோ சொல்லிக் கேலி செய்வார்கள். குழியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனான். அருகில் போய்ப் பார்க்க நேரமில்லை. அவசரமாகப் போனால்தான் படத்தை முதலிலிருந்து பார்க்க முடியும். படம் பார்த்துவிட்டு வரும்போது சற்றே இடுகாட்டின் அருகே நின்று அப்பாவின் குழியைப் பார்த்துப் படத்தின் கதையைக் கொஞ்ச நேரம் சொல்லிவிட்டு வரலாம். அவர் ஆன்மா சாந்தியடையும் என்று சொல்லித் தன் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.
படம் நன்றாகவே இருந்தது. தளபதி அரசியலுக்கு வரலாம் என்று உறுதியாகச் சொல்லத்தக்க படம். அப்பா பார்த்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பார். எந்தெந்தக் காட்சியைப் பற்றி அவர் என்னென்ன விதமாக அபிப்ராயம் சொல்வார் என்று யோசித்துக்கொண்டே வந்தான். எப்படியும் அவருக்குக் கதை சொல்லிவிடலாம் என்னும் எண்ணத்தோடு நண்பனிடம் விடைபெற்றுக் கொண்டு சைக்கிளை மிதித்தான். இருள் அடர்த்தியில் பழக்கத்தின் காரணமாக ஊகித்துத் தடமறிந்து ஓட்டினான்.
இடுகாட்டின் அருகில் வந்தபோது இருள் இன்னும் வலுவாகத் திரண்டு இறுகி நின்றிருந்தது. மரங்கள் வானுயரம் ஏறி நின்றன. எருக்கின் மணம் பரவிய மெல்லிய காற்று அவனைச் சூழ்ந்தது. சிலிர்த்துக் குளிர் ஏற அவனையறியாமல் உடல் நடுங்கியது. ஹேண்டில்பாரில் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்தான். சைக்கிள் ஏதோ கல்லில் பட்டுத் தடுமாறிற்று. ‘என்னய்யா…படம் நல்லாருந்துதா?’ என்னும் அப்பாவின் குரல் அவன் காதுகளை உரசியது. அது அவர் குரல்தான். ‘வாய்யா… கத சொல்லு வாய்யா.’ இன்னும் நெருங்கி வாஞ்சையோடு அழைத்தது குரல். ‘வாய்யா’ என்னும் சொல் விதவிதமாக ஒலித்தது. அவன் காதுக்குள் ரகசியம் போல அழைத்ததும் உடல் சிலிர்த்துப் போனான். தலை வேர்த்து ஜிவ்வென்று ஏறிற்று. கால்களில் எப்படித்தான் சக்தி கூடியதோ தெரியவில்லை. அதுநாள் வரை அத்தனை வேகமாக அவன் சைக்கிளை மிதித்ததே இல்லை. இருபுறமும் காற்று விர்ரென்று சத்தம் போட ஒரே ஜோரில் வீட்டு வாசலுக்கு வந்து சைக்கிளை நிறுத்திவிட்டு மூச்சு வாங்கினான்.
வீட்டுக்கு முன்னால் நல்ல வெளிச்சம் இருந்தது. வந்த தடத்து இருளைத் திரும்பிப் பார்த்தான். இருளுக்குள் அப்பாவின் உருவம் அசைந்து ‘வாய்யா’ என்று பிரியமாகக் கூப்பிடுவது நன்றாகக் கேட்டது. கூப்பிட்டுக் கொண்டு பின்னாலேயே வந்துவிட்டார். சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு ‘அம்மா அம்மா…’ என்று கத்திக்கொண்டே வெளிச்சத்திற்குள் ஓடினான்.
—-