செவாலியர் கண்ணன்

 

செவாலியர் கண்ணன்

நண்பர் செவாலியர் கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏதேனும் ஒரு அடைமொழியைப் பெயருக்கு முன் சேர்த்து அழைத்தல் தமிழ் மரபு. இதுவரை காலச்சுவடு பெயரை அடைமொழியாக வைத்துக் குறிப்பிடப்பட்டு வந்தவருக்கு இன்னொரு அடைமொழி அமையும் வகையில், பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் மதிப்புமிகு  ‘செவாலியர்’ விருது கிடைத்திருப்பது மிகவும் சிறப்பு. இந்தியாவைப் பொருத்தவரைக்கும் பதிப்பாளர் ஒருவருக்கு இப்போதுதான் முதன்முதலாக இந்த விருது வழங்கப்படுகிறது என்று நினைக்கிறேன். கண்ணனுக்குக் கிடைத்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட எத்தனையோ எழுத்தாளர்களுக்குப் பலவித விருதுகள் கிடைத்திருக்கின்றன. அத்தகைய விருது நிகழ்ச்சிகளில் மகிழ்வோடு கண்ணன் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். 2012ஆம் ஆண்டு என்னுடைய ‘ஆளண்டாப் பட்சி’ நாவலுக்குக் கோவை, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது. அந்நிகழ்வுக்குக் கண்ணனும் நெய்தல் கிருஷ்ணனும் வந்திருந்தனர். அவ்விருது அறிவிக்கப்பட்ட செய்தியைக் கண்ணனிடம் சொன்னபோது ‘பதிப்பாளருக்கு எதுவும் பணமுடிப்பெல்லாம் கிடையாதா?’ என்று கேட்டார். ‘அப்படி ஒன்னும் இருக்கற மாதிரி தெரியலியே கண்ணன்’ என்றேன்.  ‘அப்ப இனிமே எழுத்தாளருக்குக் கொடுக்கற விருதுத் தொகையில பாதி பதிப்பாளருக்கு அப்படீன்னு ஒப்பந்தத்துல சேத்துருவோம்’ என்றார் கண்ணன். அவர் சிரித்துக்கொண்டே கேலியாகச் சொன்னாலும் அப்போதிருந்து என் மனதில் பதிப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில் விருதுகள், பரிசுகள் நிறையத் தேவை என்னும் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

குறிப்பாகக் கண்ணன் மாதிரியான பதிப்பாளர்கள் பலபடப் பாராட்டப்படவும் போற்றப்படவும் வேண்டும். அவருடைய பணிகளை உடனிருந்து பார்த்த காரணத்தால் இதை உள்ளார்ந்து சொல்கிறேன். பத்திரிகை, பதிப்பு ஆகிய துறைகளுக்கு ஆர்வத்தால் வந்தவர் கண்ணன். கண்ணனின் மூத்த மகன் சாரங்கனிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது ‘கண்ணன் பி.இ. படிச்சாருல்ல? என்ன சப்ஜெக்ட் படிச்சாரு?’ என்று கேட்டேன். ‘ஆமா. எங்கப்பா பி.இ.தான படிச்சாரு?’ என்று சாரங்கன் என்னிடம் திருப்பிக் கேட்டார். பிறகு ‘என்ன சப்ஜெக்ட் படிச்சமுன்னு அவரே மறந்திருப்பாரு’ என்று சாரங்கன் சொன்னார். அந்தளவுக்குப் பத்திரிகைத் துறையிலும் பதிப்புத் தொழிலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கண்ணன்.

அவரைப் பற்றி இருவிஷயங்களை மட்டும் இந்த உரையில் குறிப்பிட விரும்புகிறேன்.

புத்தக உருவாக்கம் என்றால் வடிவமைத்தல், அச்சிடுதல், விநியோகித்தல் ஆகியவற்றை மட்டும் செய்யும் பதிப்பாளர் அல்ல கண்ணன். புத்தகத்திற்கான மையப்பொருள் சார்ந்து திட்டமிடும் பதிப்பாளர் அவர். அப்படி அவரது கருத்திலிருந்து உருவான எனது இரு நூல்களைக் குறிப்பிடலாம். நானும் அவருமாக 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தியா முழுக்கப் பல இலக்கிய விழாக்களில் திகட்டும் அளவுக்குப் பங்கேற்றோம். அவற்றில் பேசும்போது என் அம்மாவைக் குறித்துப் பல விஷயங்களை என்னையும் அறியாமல் சொல்லியிருக்கிறேன். அவற்றைக் கவனித்திருந்த கண்ணன் ‘உங்க அம்மாவப் பத்தி ஒரு புத்தகம் எழுதுங்க’ என்றார். முதலில் அவர் கேலி செய்கிறார் என்று சிரித்துக் கடந்தேன். ஆனால் அதை அடிக்கடி நினைவூட்டி அது ஒரு புத்தகக் கருத்தாக்கம் என்பதை உணரச் செய்தார். பிறகு ‘தோன்றாத்துணை’ என்னும் தலைப்பில் அந்த நூலை எழுதினேன். என் புனைவல்லா எழுத்துக்களில் அது மிக முக்கியமான நூலாக அமைந்தது. அந்த நூலை எழுதிய பிறகு அம்மாவைப் பற்றிய என் பேச்சு குறைந்தது. அந்த நூலை எழுதியது ஒருவகையில் உளவியல் ரீதியாகவும் எனக்குப் பயன்பட்டிருக்கிறது என்று சொல்வேன்.

செயற்பாட்டாளரான பெசவாடா வில்சன் அவர்கள் 2018ஆம் ஆண்டு குடும்பத்துடன் டெல்லிக்கு வந்து சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும் என்று அன்பாக அழைத்தார். அவரது அழைப்பை ஏற்றுச் சென்றோம். அதை அறிந்த கண்ணன் ‘வில்சன் நல்லாத் தமிழ் பேசுவாருல்ல. முடிஞ்சா அவருகிட்ட ஒரு பேட்டி எடுத்துக்கிட்டு வாங்க’ என்றார். ‘சுற்றுலா போகும்போதுகூட உங்க முதலாளி வேல வெக்கறாரா?’ என்று என் குடும்பத்தினர் கேலி செய்தனர். அப்போது வில்சனை நான் செய்த நேர்காணல் மிகச் சிறப்பாக அமைந்தது. அதன் முக்கியப் பகுதிகள் காலச்சுவடு இதழில் வெளியாயின. அந்நேர்காணல் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. ‘காலச்சுவடு பொறுப்பாசிரியாக நான் இருக்கும் காலத்தில் வந்த மிக முக்கியமான நேர்காணலாக அதைச் சொல்வேன்’ என்று சுகுமாரன் ஒருமுறை சொன்னார். மீண்டும் ஓரிருமுறை டெல்லி செல்ல வாய்த்தபோது கண்ணன் வழிகாட்டுதல்படி இன்னும் சில மணி நேரம் வில்சனை நேர்காணல் செய்தேன். இப்போது அது ஒருநூலாக உருப்பெற்று வருகிறது.

மையப்பொருள் சார்ந்து நூல்களைத் திட்டமிடுவது போலவே வாசக நோக்கில் நூல்களை உருவாக்குவதும் அவர் இயல்பு. எனது இருசிறுகதைகளை மையமாகக் கொண்டு ’சேத்துமான்’ என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது.  ‘எந்தக் கதை, எந்த நூலில் இருக்கிறது’ என்றெல்லாம் வாசகர்கள் கேட்டவண்ணம் இருந்தனர். வாசகத் தேவையைக் கருத்தில் கொண்டு அந்தக் கதைகளை மட்டும் சிறுநூலாக வெளியிடலாம் என்று கண்ணன் சொன்னார். முன்னுரைகளுடன் ‘சேத்துமான் கதைகள்’ என்னும் தலைப்பில் இப்போது நூல் வெளிவந்து வாசக ஏற்பையும் பெற்றிருக்கிறது.

பத்திரிகையாளராகவும் பதிப்பாளராகவும் கண்ணனின் இயல்புகளை இப்படிப் பட்டியலிட முடியும். மாதொருபாகன் பிரச்சினையில் உடன் நின்றது, என் நூல்கள் மொழியாக்கம் என்பவை எல்லாம் அனைவரும் அறிந்ததே. எழுத்தாளர்களை மிகவும் மதிக்கும் பதிப்பாளர் அவர். அவருக்கு இவ்விருது கிடைத்திருப்பது மிகவும் பொருத்தம். செவாலியர் கண்ணன் வாழ்க!

—–   06-08-22