தனியார் நிறுவனத்திலும் இந்தி

 

தனியார் நிறுவனத்திலும் இந்தி

பொதிகைத் தொலைக்காட்சி (DD தமிழ் என்று ‘தமிழ்’ சேர்த்தது சாதனையாம். ‘பொதிகை’ தமிழ் இல்லையோ?) சார்பில் நடைபெற்ற இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். அந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியை விட்டுவிட்டுப் பாடியது தொடர்பான சர்ச்சை பெரிதாகி உள்ளது. அவ்வடியைப் பாடியோர் மறந்துவிட்டுப் பாடியிருக்கலாம்; ஆளுநருக்குப் பிடிக்கும் என்று நினைத்து வேண்டுமென்றே விட்டுமிருக்கலாம். எப்படியோ இப்போது பலகோணப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

‘ஆளுநரா ஆரியரா?’ என்று முதல்வர் கேட்டது இனவாதம் என்றால் ‘திராவிடம்’ என்பதும் இனப்பெயர்தானே? அதை விடுவது, இழிவாகப் பேசுவது இனவாதம் இல்லையா? தமிழ்த்தாய் வாழ்த்தின் முழுப்பகுதியே அதற்கு இடம் கொடுப்பதுதான். ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து’ எனச் சமஸ்கிருதத்தை ‘ஆரிய மொழி’ என்றுதான் மனோன்மணீயம் சுந்தரனார் குறிப்பிடுகிறார்.

இந்த சர்ச்சை பூதாகரத்தில் என்னென்னவோ நடக்கிறது. இந்திக்கு ஆதரவாக ஆளுநர் பேசிய பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியின் கண்டனங்கள் வருகின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் ‘ஒருமொழிக் கொள்கை’ தான் பின்பற்றப்படுகிறது எனப் பல ஆண்டுகளூக்குப் பிறகு உண்மையைச் சொல்கிறார் ப.சிதம்பரம். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்திற்குக் காரணமான காங்கிரஸ் கட்சி இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம் அரசியலில் எப்படியெல்லாம் மாற்றம் நடக்கும் என்பதற்குச் சான்று.

இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியவாதிகள் ‘தெக்கணமும் அதிற் சிறந்த தமிழர்நல் திருநாடும்’ என்றுதான் பாடல் இருந்தது அல்லது அப்படித்தான் பாட வேண்டும் என்கின்றனர்.  ‘நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தூக்குவேன்’ என்கிறாராம் சீமான். எந்த அடையாளமும் அதற்கான தேவை இருக்கும் வரையில்தான் நிலைக்கும். தேவை முடிந்துவிட்டால் அதுவே ஒதுங்கிப் போய்விடும் அல்லது ஒதுக்கப்பட்டுவிடும். திராவிட – ஆரியப் போராட்டத்திற்கு இன்னும் முடிவு வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது முடிவுக்கு வரும் காலத்தில் தமிழ் அடையாளம் மேலெழுந்து வரலாம். எல்லாமே சக மனிதரைச் சமமாக அங்கீகரிக்காத காரணத்தால் ஏற்படும் அடையாளப் போராட்டம்தான். எந்த அடையாளமும் நிரந்தரம் அல்ல.

சரி, இந்த விவாதம் திசை மாறியதில் இந்திக்கு ஆதரவாக ஆளுநரின் பேச்சு அவ்வளவாகக் கவனிக்கப்படவில்லை.

‘யார் மீதும் இந்தி மொழி திணிக்கப்படுவதில்லை. கடந்த ஐம்பது வருடங்களாக இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைத் தனிமைப்படுத்துவதற்கான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. அதற்காகத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் பயன்படுத்தப்பட்டன’ (‘தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு வரவேற்பு’ – ஆளுநர் ரவி, மின்னம்பலம், 18-10-24) என்று ஆளுநர் பேசியிருக்கிறார்.

யார் மீதும் இந்தி மொழி திணிக்கப்படுவதில்லையா? நம் அன்றாட நடமுறைகளில்  இந்தித் திணிப்பைத் தொடர்ந்து எதிர்கொண்டுதான் வருகிறோம். அதைப் பற்றி இடைவிடாமல் பொதுவெளியில் பேசிக்கொண்டே இருந்தாக வேண்டும். இந்தித் திணிப்பை அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். முதல்வர் தம்  அறிக்கையில் ‘ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டப் பெயர்கள், தொடர்வண்டிகளின் பெயர்கள், முன்வைக்கும் முழக்கங்கள் என  ‘எங்கும் இந்தி; எதிலும் இந்தி’ என இந்தியைத் திணிக்கிறார்கள்’ என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். அரசியல் ரீதியாக இப்படி இந்திக்கு எதிராகப் பேச வேண்டியது அவசியம். அதே போல அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சிறுசிறு பிரச்சினைகளிலும் இந்தி ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் பேச வேண்டும். அப்படி ஒரு நிகழ்வைச் சமீபத்தில் எதிர்கொண்டேன்.

இருசக்கர வாகனத்துக்கு ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தேன். முடிவதற்கு ஒருமாதம் முன்னரே நினைவுபடுத்திக் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின. அவை ஆங்கிலத்தில் இருந்தன. வாடிக்கையாளருக்கு இப்படி நினைவூட்டுவது நல்லதுதான். இணையம் வழியாகவே புதுப்பித்துக் கொள்ளலாம் என்று செய்தி சொல்லி இணைப்பையும் கொடுத்திருந்தது. அதைத் தட்டி உள்ளே போனால் பெயர், வண்டி விவரம் எல்லாம் வருகிறது. ஆனால் பணம் செலுத்த முடியவில்லை.

எதைத் தட்டினாலும் அப்படியே உறைந்து போய் நிற்கிறது. இரண்டு வரியில் ஏதோ அறிவிப்பு வந்து அரைநொடியில் ஓடிப் போகிறது. ஒருவழியாக அதைப் பிடித்து நிறுத்தி வாசித்தேன். அருகில் உள்ள அலுவலகத்தை அணுகச் சொல்கிறது. அதற்கு ஏன் இணைப்பை எல்லாம் தருவானேன்? நாமக்கல்லில் ரிலையன்ஸ் அலுவலகம் எதுவும் இல்லை. வண்டி வாங்கிய நிறுவனத்தை அணுகினால் காப்பீட்டைப் புதுப்பித்துத் தருவது எல்லாம் அவர்கள் வேலை இல்லை என்பதைப் போல நடந்துகொள்கிறார்கள். இங்கிருந்து ஈரோட்டுக்கு அனுப்பித்தான் புதுப்பிக்க முடியும்; விவரங்களைக் கொடுத்து முன்பணமாக ஆயிரம் ரூபாயும் தாருங்கள் என்றார்கள்.

இதற்கிடையில் ரிலையன்ஸில் இருந்து அழைப்பு வரத் தொடங்கியது. அழைப்பை எடுத்ததும் இந்திக் குரல் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டேயிருக்கிறது. பதிவு செய்த குரலும் அல்ல. நேரலையில்தான் பேசினார்கள். ஒருநிமிடம் பேசிய பிறகே நாம் பேச இடைவெளி தருகிறார்கள். முன்னெல்லாம் ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆங்கிலம் தெரியாது, தமிழ்தான் தெரியும் என்றால் துண்டித்துவிட்டுத் தமிழில் பேசும் ஒருவரைக் கொஞ்ச நேரத்தில் பேச வைப்பார்கள். இந்த நிறுவனம் என்றில்லை, பொதுவாக இத்தகைய சேவைகளின் இயல்பு இப்படித்தான் இருக்கும். இப்போது எடுத்தவுடன் இந்தியில்தான் பேசுகிறார்கள்.  ‘ஒரே நாடு; ஒரே மொழி’ தனியார் நிறுவனங்களிலும் இப்படி நேரடியாக நடைமுறைக்கு வந்துவிட்டது போல.

இந்தியில் பேசிய குரல்களுக்கு ‘எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்’ என்று ஆங்கிலத்தில் சொன்னேன். பொதுவாக அப்படிச் சொன்னால் உடனே ஆங்கிலத்தில் பேசுவார்கள். தமிழ் மட்டும்தான் எனக்குத் தெரியும் என்று சொன்னால் இன்னொருவர் பேசுவார் என்று ஆங்கிலத்தில் சொல்லி அழைப்பைத் துண்டிப்பார்கள். கொஞ்ச நேரத்தில் தமிழில் பேசும் ஒருவர் அழைப்பார். இப்போதோ அப்படியில்லை. இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுவதற்கே ‘மீண்டும் அழைக்கிறோம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். சரி, ஆங்கிலத்தில் பேசும் குரல் அழைக்கும் என்று பார்த்தால் அப்படி ஒன்று வரவேயில்லை.

ஒருநாளைக்கு மூன்று நான்கு முறை அழைப்பு வரும். எல்லோரும் இந்தியில்தான் பேசினார்கள். ‘ஆங்கிலம் அல்லது தமிழ்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிச் சலித்துவிட்டது. ஒருகட்டத்தில் தமிழிலேயே ‘தமிழில் பேசுங்கள்’ என்று சொல்ல ஆரம்பித்தேன். ஆங்கில அழைப்பும் வரவில்லை; தமிழ் அழைப்பும் வரவில்லை. அந்த எண் வந்தாலே எடுப்பதையும் நிறுத்தினேன். இந்த முறை ரிலையன்ஸ் காப்பீடு போடக் கூடாது என்று முடிவெடுத்து ‘யுனைடெட் இந்தியா’வை அணுகினேன்.

வண்டிப் பதிவுச் சான்றிதழைப் பார்த்துவிட்டு ‘வண்டி எடுத்துப் பதினைந்து ஆண்டுகள் முடியப் போகிறது. அதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் புதுப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகே காப்பீடு செய்ய முடியும்’ என்று சொன்னார்கள். பதினைந்து ஆண்டு விவகாரம் எனக்குத் தெரியாது. உடனே அதற்கு ஏற்பாடு செய்தேன். அது ஓரிரு நாட்களில் முடிந்து யுனைடெட் இந்தியாவில் காப்பீட்டையும் புதுப்பித்துக் கொண்டேன்.

தனியார் நிறுவனத்திலும் இந்தி

வணிக நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் முக்கியம்; மொழி அல்ல. எந்த மொழியில் சேவையைக் கேட்டாலும் செய்ய வேண்டும். அப்போதுதானே லாபம் கிடைக்கும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் தன் முதல்மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் காரணம் என்னவாக இருக்கும்? நிர்ப்பந்தமா? தெரியவில்லை. ஆனால் இது இந்தித் திணிப்பின் ஒருவழிமுறைதான். செல்பேசிகளில் தமிழ் மொழியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். தமிழ் விசைப்பலகை எல்லா நிறுவனச் செல்பேசிகளிலுமே இருக்கின்றன.

நண்பர் கே.ஆர்.அதியமான் தம் முகநூல் பதிவில் ‘மத்திய அரசு நிறுவனங்கள், துறைகளில் மட்டும் இந்தி திணிப்பு சாத்தியம். தனியார் துறையில் சாத்தியம் இல்லை’ (19-10-24) என்கிறார். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ரிலையன்ஸ் அனுபவம் ஏமாற்றமாக இருந்தது. இந்தியில் பேச வேண்டும் என ஒன்றிய அரசு ஏதேனும் வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறதோ? தனியார் நிறுவனங்களும் ஏன் இந்தியைத் தூக்கிக் கொண்டு இங்கே வருகின்றன?

நான் தமிழ் விசைப்பலகையைப் பெரிதும் பயன்படுத்துகிறேன். பெயர்ப்பதிவு அனைத்துமே தமிழில்தான் இருக்கிறது. குறுஞ்செய்திகள், புலனச் செய்திகள் அனைத்தும் தமிழில்தான் அனுப்புகிறேன். மின்னஞ்சலும் பெரும்பாலும் தமிழ்தான். தமிழில் பேசினால் தானாகத் தட்டச்சு செய்து கொள்ளும் வசதியையும் பயன்கொள்கிறேன்.  சிறுகுறிப்புகள், குறுங்கட்டுரைகள் ஆகியவற்றைச் செல்பேசி மூலமே தயாரித்துவிட முடிகிறது. நான் வைத்திருக்கும் செல்பேசி ரெட்மீ. நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் தங்கள் செல்பேசியில் தமிழ் விசைப்பலகையைப் பயன்படுத்தும்படி ஆலோசனை சொல்கிறேன். சிலருக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று செய்முறை விளக்கமும் கொடுத்திருக்கிறேன்.  ‘தமிழ் என் உயிர்’ என்று பேசினால் போதாது. கவனமான செயல்பாடுகள் வேண்டும்.

ஒருமொழியைப் பயன்படுத்துவோர் மிகுதியானால்தான் செல்பேசி நிறுவனங்கள் அம்மொழியில் கூடுதல் வசதிகளைத் தருவார்கள். தமிழைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக வேண்டும் என்னும் அவாவில் பலருக்கும் பரிந்துரைக்கிறேன். தமிழை ஆங்கில எழுத்தில் ஒலிபெயர்த்து வரும் செய்திகளை நிர்ப்பந்தம் என்றால் தவிர வாசிப்பதில்லை. தாய்மொழி உணர்வு நமக்குக் குறைந்துகொண்டே வருகிறது. அதைக் குறைப்பதிலும் அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைத்துத் திணிப்பதிலும் அதிகாரம் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

அப்படித்தான் பல மாநிலங்களில் இந்தியைத் திணித்துப் பிற மொழிகளை ஓரங்கட்டி வருகிறார்கள். பீகார் இன்று இந்தி பேசும் மாநிலமாக அடையாளப்படுகிறது. ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவராக இருந்து இன்று அரசியலில் கால் பதித்திருக்கும் கன்னையா குமாரிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது ‘என் தாய்மொழி போஜ்புரி. இந்தி அல்ல. இந்தி எங்கள் மொழியை விழுங்கிவிட்டது’ என்று சொன்னார். இந்தியை அனுமதித்த பல மாநிலங்களில் இதுதான் நிலை. கர்நாடகத்தின் பெங்களூருவிலும் மகாராட்டிரத்தின் மும்பையிலும் இந்தி பேசுவது இயல்பாக இருக்கிறது. ‘இந்தி இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது’ எனப் பொதுமனதில் பதிய வைத்துப் பல வகைகளில் பரப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அம்முயற்சியை அவர்கள் கைவிடவேயில்லை. ஆளுநர் மட்டுமல்ல, பி.ஏ.கிருஷ்ணன் போன்றவர்களும் தம் கண்களை இறுகக் கட்டிக்கொண்டு இப்படிச் சொல்கிறார்கள்:

‘இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. ஆனால் இன்று இந்தியாவில் மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரே மொழி அதுதான். அதன் வளர்ச்சி அரசு திணிப்பினால் நிகழவில்லை. இந்திய மக்கள் விரும்பியதால் நிகழ்ந்தது.’ (முகநூல் பதிவு, 16-09-24)

நான் விரும்பவில்லையே ஐயா? என்னை ஏன் நிர்ப்பந்திக்கிறீர்கள்? நிர்ப்பந்திப்பது தானே திணிப்பு? ஆதிக்கம்?

—–   20-10-24

Latest comments (1)

அஸ்வின் குமார்

நானும் என்னுடைய அலைபேசியின் மொழியாக தமிழைத்தான் பயன்படுத்துகிறேன். அதை காணும் பலர் ஆச்சரியம் அடைகிறார்கள். ஒருவகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் மற்றவர்கள் நம்மை விசித்திரமாக பார்க்கிறார்களோ என்ற உணர்வும் இருந்தது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலைமை.
உங்களுடைய இந்த கட்டுரையின் மூலம் அந்த உணர்வு நீங்கியது.
நன்றி