தமிழ் முதுகலைப் பாடத்திட்டம் : விவாதத்திற்கான குறிப்புரை

குறிப்பு: பத்தாண்டுகளுக்கு முன்னால்  பல்கலைக்கழகம் ஒன்றுக்கு நான் உருவாக்கிக் கொடுத்த முதுகலைப் பாடத்திட்ட முன்வரைவு இது.

 

தமிழ் முதுகலைப் பாடத்திட்டம் இன்றைய நிலையில் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

  1. தமிழின் இலக்கிய இலக்கணப் பரப்பு பற்றிய உணர்வை உருவாக்கி அவ்வறிவை விரிவாக்கல்.
  1. மொழி, இலக்கியம் தொடர்பான துறைகளில் இன்றைய நடைமுறை வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மாணவரைத் தயாரித்தல்.

தேர்வுக்கு 75 மதிப்பெண், செய்முறைக்கு 25 மதிப்பெண் என்னும்  வகையில் ஒவ்வொரு தாளும் அமையும்.

                      முதற்பருவம்:

தாள் 1: யாப்பும் செய்யுளும்

யாப்பிலக்கணம் தொடர்பான நூல்கள் அறிமுகம், செய்யுள் வகைகளை விரிவாகக் கற்றல், செய்யுளை வாசிக்கும் பயிற்சி, அதற்கேற்ற புணர்ச்சி விதிகள், பா பாவினத்தைக் கண்டறியும் பயிற்சி முதலியவற்றை உள்ளடக்கி இத்தாள் அமைய வேண்டும். பழந்தமிழ் நூல்களைக் கற்க இத்தாள் அடிப்படைப் பயிற்சி வழங்கும்.

செய்முறை: செய்யுள் வகைகளுக்கான சான்றுகளைச் சுயமாகத் தேடித் தொகுத்து வழங்கல்.

 

தாள் 2: பதினெண்கீழ்க்கணக்கு

பழந்தமிழ் இலக்கியங்களை அறிமுக நோக்கில் பட்ட வகுப்பில் கற்றிருப்பர். முதுகலையில் புலமை பெறும் வகையிலும் முழுமை நோக்கிலும் இலக்கியப் பாடத்திட்டம் அமைதல் நல்லது.

திருக்குறள், நாலடியார் ஆகியவற்றைப் பழைய உரையுடன் முழுவதுமாக வைக்கலாம். இத்துடன் பதினெண்கீழ்க்கணக்கின் முழுமையை உணரும்படி வேறு சில நூல்களையும் முழுவதுமாகத் தரலாம். பழைய உரையுடன் பயில்வது மிகவும் முக்கியம். அதிகபட்சம் ஐந்து நூல்கள் இருக்கலாம்.

செய்முறை: பதினெண்கீழ்க்கணக்கு தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்து வழங்குதல்.

 

தாள் 3: காப்பியங்கள்

சிலப்பதிகாரம் அல்லது மணிமேகலை உரையுடன் முழுமையாக. சீவக சிந்தாமணியில் ஓர் இலம்பகம், கம்பராமாயணத்தில் ஒரு காண்டம், வில்லிபாரதத்தில் ஒரு சருக்கம், சூளாமணி, நீலகேசி போன்றவற்றில்  ஏதாவது ஒரு முழுப்பகுதி என அமையலாம்.

செய்முறை: காப்பிய இலக்கணம் தொடர்பான இலக்கண நூல் கருத்துகளைத் தொகுத்துப் பாடப்பகுதியோடு பொருத்திக் காட்டும் கட்டுரை வழங்கல்.

 

தாள் 4: இலக்கியத் திறனாய்வியல்

திறனாய்வுக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தும் நூல் ஒன்றையும் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தித் திறனாய்வு செய்த நூல்கள் சிலவற்றையும் பயில்தல். சி.சு.செல்லப்பாவின் ‘தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது’, சு.ராவின் ‘ந.பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனிதநேயமும்’ போன்ற நூல்கள்.

செய்முறை: ஏதாவது கோட்பாடு ஒன்றைப் பயன்படுத்தி இலக்கியத் திறனாய்வுக் கட்டுரை எழுதி வழங்கல்.

 

தாள் 5: அகராதியியல்

தமிழ் அகராதி வரலாற்றையும் அகராதி தயாரிப்பு தொடர்பான நுட்பங்களையும் அறியும் முறையில் இத்தாள் இருக்கலாம்.

செய்முறை: குறைந்தபட்சம் நூறு சொற்களைக் கொண்ட அகராதி ஒன்றைத் தயாரித்து வழங்கல்.

 

                இரண்டாம் பருவம்

தாள் 6: தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (இளம்பூரணம்)

உரையை அவசியம் பயில வேண்டும்.

செய்முறை: தொல்காப்பிய உரையாசிரியர்கள் தொடர்பான தகவல்களைத்   திரட்டி வழங்குதல்.

 

தாள் 7: பக்தி இலக்கியமும் புராணங்களும்

யாப்பருங்கலம் நூலில் உள்ளது போன்ற சமண, பௌத்தம் தொடர்பான பாடல்களைத் திரட்டிப் பாடமாக்குதல். சைவ, வைணவ இலக்கியங்களில் சில பகுதிகளை முழுமையாக வைத்தல். பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றில் ஒன்றை முழுமையாகப் பயில்தல்.

செய்முறை: தமிழகத்தில் நிலவிய சமயங்கள், சமயப் பிரிவுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அறிமுகமாக வழங்கல்.

 

தாள் 8: சிற்றிலக்கியங்கள்

முக்கியமான  வகைகளுக்குக் கவித்துவத்தோடு உள்ள  நூல்கள் சிலவற்றை முழுமையாகக் கற்றல்.

செய்முறை: சிற்றிலக்கியம் தொடர்பான இலக்கணம், வகைகளைத் திரட்டிக் கட்டுரை எழுதுதல்.

 

தாள் 9: பதிப்பியல்

தமிழ்ப் பதிப்பு வரலாறு, பதிப்பு நெறிமுறைகள் ஆகியவற்றைக் கற்றல். இன்றைய நூல் தயாரிப்பு முறைகளையும் அறிதல்.

செய்முறை: அதிகபட்சம் நூறு பாடல்கள் உள்ள நூல் (ஏற்கனவே அச்சில் வந்ததாகவும் இருக்கலாம்) ஒன்றைப் பதிப்பு நெறிமுறைகளின்படி உருவாக்கி வழங்கல்.

தாள் 10: சுவடியியல்

ஓலைச்சுவடிகளை வாசித்தல் முதலிய நுட்பங்களைக் கற்றல். வரலாறு, பாதுகாத்தல் தொடர்பானவற்றை அறிதல்.

செய்முறை: ஓலைச்சுவடிகள் கொண்ட நூலகம் ஒன்றைப் பார்வையிட்டு  அறிக்கை வழங்கல்.

 

                மூன்றாம் பருவம்

 

தாள் 11: தொல்காப்பியம் சொல்லதிகாரம் (இளம்பூரணம்)

உரையை முழுமையாகக் கற்றல் அவசியம்.

செய்முறை: தொல்காப்பிய இலக்கணம் இன்றைய தமிழுக்குப் பொருந்துதல், பொருந்தாமை தொடர்பான கட்டுரை வழங்கல்.

 

தாள் 12: சித்தர் பாடல்களும் தனிப்பாடல்களும்

சிலரது பாடல்களை முழுமையாகப் பயில்தல்.

செய்முறை: பதிப்பு நோக்கில் சித்தர் பாடல்கள், தனிப்பாடல் திரட்டுகளை அணுகிக் கட்டுரை தயாரித்தல்.

 

தாள் 13: இக்கால இலக்கியம் 1

நாவல், சிறுகதை ஆகியவற்றில் வகைமாதிரியாக ஐந்தைந்து நூல்களைப் பாடத்தில் வைக்கலாம்.

செய்முறை: நாவல் வரலாறு, சிறுகதை வரலாறு தொடர்பான கட்டுரைகள் எழுதுதல்.

 

தாள் 14: உரைநடை வரலாறு

உரைநடை வரலாறு தொடர்பான நூல் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை நூல், இருபதாம் நூற்றாண்டு உரைநடை நூல் என இரண்டு.  தமிழ் நடைக் கையேடு ஒன்று.

செய்முறை: டிட்டிபி கற்றுச் சான்றிதழ் பெறுதல்.

 

தாள் 15: கல்வெட்டியல்

கல்வெட்டு வரலாறு, அமைப்பு, படியெடுத்தல் உள்ளிடவற்றைக் கற்றல்.

செய்முறை: அருகில் உள்ள கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டுப் படி எடுத்து அறிக்கை வழங்கல்.

 

                 நான்காம் பருவம்

 

தாள் 16: தொல்காப்பியம் பொருளதிகாரம் (இளம்பூரணம்)

உரையுடன் கற்றல் அவசியம்.

செய்முறை: திணைக்கோட்பாடு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வழங்கல்.

தாள் 17: சங்க இலக்கியம்

அகம், புறம் ஆகியவற்றுக்கான வகைமாதிரியாக இருநூல்களைப் பழைய உரையுடன் முழுமையாகப் பாடத்தில் வைத்தல்.

செய்முறை: திணைக்கோட்பாட்டைப் பொருத்திச் சில பாடல்களை விளக்கிக் கட்டுரை தயாரித்தல்.

 

தாள் 18: இக்கால இலக்கியம் 2

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிதை நூல்கள் சிலவற்றையும் புதுக்கவிதை நூல்கள் சிலவற்றையும் முழுமையாகப் பாடத்தில் வைத்தல். அதிகபட்சம் பத்து நூல்கள் இருக்கலாம்.

செய்முறை: இருபதாம் நூற்றாண்டுக் கவிதை வரலாற்றை எழுதி வழங்கல்.

 

தாள் 19: இதழியல்

இதழ்களின் வரலாறு, இதழ்களின் அமைப்பு முறை ஆகியவற்றைச் சான்றுகளுடன் கற்றல்.

செய்முறை: நாளிதழ் அல்லது வார இதழ் அலுவலகம் ஒன்றைப் பத்து நாட்கள் பார்வையிட்டு அறிக்கை வழங்கல்.

 

தாள் 20: ஆய்வேடு

நெறியாளரின் வழிகாட்டுதலில் ஏதாவது ஒரு தலைப்பில் ஆய்வேடு வழங்கல்.

 

கூடுதல் தகுதி: முதுகலை முதலாண்டில் சேர்ந்தவுடன் திராவிட மொழி ஒன்றைப் பயிலத் தொடங்கி இரண்டாமாண்டுக்குள் குறைந்தபட்சம் சான்றிதழ் படிப்பு அளவுக்குத் தேர்ச்சி பெறுதல் வேண்டும். இதையும் கணக்கில் கொண்டுதான் முதுகலைப் பட்டம் வழங்கப்படும்.

———-

குறிப்புகள்:

  1. இப்பாடத்திட்டத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குத் தொடக்கத்திலேயே இரண்டு அல்லது மூன்று நாள் பயிற்சி வழங்கும் பயிலரங்கம் ஒன்றை நடத்தலாம்.
  1. தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் பெரும்பான்மையும் அடித்தட்டு மக்களாக உள்ளனர். ஆகவே மாதாந்திர உதவித்தொகை ஏதாவது வழங்க முடிந்தால் நல்லது.

—————

Add your first comment to this post

Comments are closed.