1
சுவடுகள்
அவர்கள்
ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்
நிழலற்ற நெடுஞ்சாலைகளில்
கொதிக்கும் தாரில்
பதித்துச் சென்ற அடிச்சுவடுகள்
அப்படியே இருக்கின்றன
ராட்சச டயர்களால் அழிபடாச் சுவடுகள்.
—–
2
சுவர்கள்
இறுகச் சாத்தித் தாழிட்ட
வீட்டுச் சுவர்கள் நகர்ந்து நகர்ந்து
சமாதிச் சுவர்களாயின
‘அவ்வளவுதான்
வாழ்ந்து முடித்துவிட்டாய்’
என்கிறது அசரீரி.
—–
3
விஷம்
கொள்ளை நாளாயிற்று
நண்பர்களின் கைப்பிடித்து நடந்து
உறவுகளின் முகம் பார்த்துப் பேசி
தொலைதூரத்தில்
சிறையாக்கப்பட்ட நகரில் இருக்கும்
அருமை மகளின் குரல் மட்டும்தான் கேட்கிறது
என் மூச்சுக்காற்றே சுழன்று சுழன்று
விஷமாகித் தொற்றுகிறது.
(நன்றி: கவிஞர் சுகுமாரன்)
—–
4
என்னால் மூச்சுவிட முடியவில்லை
வெளி சூழ்ந்த நெருப்பு காற்றைத் தீய்த்துவிட்டது
ஓடிப் பொந்துக்குள் புகுந்துகொள்கிறேன்
புகை துரத்திப் பரவி வழியடைக்கிறது
முட்டி
இடித்து
உதைத்து முயல்கிறேன்
முடியவில்லை,
ஐயா, முடியவில்லை
என்னால் மூச்சுவிட முடியவில்லை.
—–
5
இக்காலம்
நொடிதோறும்
அதிர்ச்சிச் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன
கண் வெறித்தும்
காதடைத்தும் போயிற்று
அதிர்ந்து அதிர்ந்து நெஞ்சுத் துடிப்பும்
ரகசிய சமிக்ஞை ஆயிற்று
இது
தொற்றுக் காலமா
கொள்ளைக் காலமா
ஊழிக் காலமா
எல்லாம் கைவிட்ட காலம்.
—–