நகராட்சியாக இருந்த நாமக்கல் இவ்வாண்டு மாநகராட்சி ஆயிற்று. அதற்காகப் பல ஊராட்சிகளை நகரத்துடன் இணைத்தனர். அதனால் சொத்து வரி உயர்வு, ஊராட்சிகளில் வசித்தவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்ட வாய்ப்பின்மை என எதிர்மறை விளைவுகள் பல. சில நல்ல விஷயங்களாவது நடக்கும் என்றிருந்தோம். குறிப்பாகப் புதைசாக்கடைத் திட்டம் மாநகராட்சிப் பகுதி முழுவதற்கும் விரிவாகும் என்றார்கள். கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் என எதுவும் இல்லாத தெருக்களே நாமக்கல்லில் மிகுதி. புதைசாக்கடைத் திட்டம் இதற்கொரு முடிவைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். நிதி ஒதுக்கீடு முடிந்து பெரிய நிறுவனம் ஒன்று இவ்வேலைக்கான ஒப்பந்தத்தை எடுத்தனர். அது வடநாட்டு நிறுவனம். தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் என்ன ஆனார்கள், அரசு ஏன் வடநாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது என்று தெரியவில்லை.
வடநாட்டு ஒப்பந்ததாரர் என்பதால் வேலைக்கென குஜராத், ஜார்கண்ட், பீகார் முதலிய வடமாநிலத் தொழிலாளர்கள் வந்துள்ளனர். மேற்பார்வையாளர், பொறியாளர், ஜேசிபி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் அனைவரும் வடக்கர்தான். எந்த வேலைக்கும் தமிழர் ஒருவரும் கிடைக்கவில்லை போல. சரி, தமிழ்ச் சமூகம் முழுவதும் உடல் உழைப்பு வேலைகளிலிருந்து விடுபட்டு முன்னேறி மூளை உழைப்பு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர் என்று ஆறுதல் கொள்வோம். கடந்த ஓராண்டாக வேலை நடக்கிறது. வந்து தெருவைப் பறிக்கிறார்கள். நன்றாக இருந்தவற்றை எல்லாம் குழியும் குண்டுமாக மாற்றிவிட்டுப் போய்விடுகிறார்கள். மீண்டும் எப்போது வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
எங்கள் தெருவில் கடந்த பிப்ரவரி மாதம் வந்து தோண்டிக் குழாய் பதித்தார்கள். அதை அப்படியே பாதியில் விட்டுவிட்டுப் போய்விட்டனர். இரண்டு மூன்று இடங்களில் குடிநீர்க் குழாயை உடைத்திருந்தனர். அதையும் சரிசெய்யவில்லை. தெருவில் குடிநீர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. மாநகராட்சிக்குச் சொன்னால் புதைசாக்கடை வேலைக்கு வருவோர் போட்டுத் தருவார்கள் என்றார்கள். ஒப்பந்த மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள் யாரையும் பிடிக்கவே முடியவில்லை. தம் கைப்பேசி எண்ணை அவர்கள் ஒருவருக்கும் தருவதில்லை. தந்தாலும் இந்தியில் பேசினால் யாருக்கும் புரியாது.
தார்ச்சாலையாக இருந்ததை மண்சாலையாக மாற்றியதுதான் நடந்தது. குடிநீர் வெள்ளம் ஓடியது. அப்படியே சகித்துக்கொண்டு நடமாடினோம். மீண்டும் வருவார்கள், சரி செய்வார்கள் என்று சொன்னார்கள். வரவேயில்லை. எட்டு மாதம் கடந்து இப்போதுதான் வந்தார்கள். மீண்டும் குழி தோண்டல்; நூறு அடிக்கொரு சந்தி இணைப்பு. பறித்த மண் எதையும் சமப்படுத்திச் சரிசெய்யவில்லை. மேற்பார்வையாளர் பேசுவது இந்தியா பீகாரியா என்று தெரியவில்லை. அவருக்கும் சரி, வாகன ஓட்டுநர் முதலிய யாருக்கும் ஒருவார்த்தைகூட ஆங்கிலமும் தெரியவில்லை; தமிழும் தெரியவில்லை. தெருவில் இருப்போர் என்ன சொன்னாலும் அவர்களுக்குப் புரியவில்லை. தலையை ஆட்டுகிறார்கள். கிளம்பி விடுகிறார்கள். வேண்டுமென்றே இந்தியில் பேசுகிறார்கள் என்றுதான் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.
தெருவில் மழைநீர் செல்லும் வழியை மண் போட்டு மூடிவிட்டார்கள். எல்லா வீடுகளின் முன்னும் மழைநீர் தேங்கி நிற்கிறது. களிமண் பகுதி. கொஞ்சம் மழை பெய்தாலே சேறு குழப்பும். வாகனத்தைத் தள்ளிக்கொண்டு சேற்றில் கால் வைத்துத்தான் போக வேண்டும். பள்ளிச் சிறுவர்கள் ஒவ்வொரு வீட்டின் வாசற்படி ஓரமாகத் தாவிச் செல்கின்றனர். புதிதாக வருவோர் குழியில் வண்டியை விட்டு மேலேற்ற முடியாமல் யாரையாவது துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது.
தமிழ்த் தெரிந்தவர் ஒருவரை உடன் வைத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று விதி இருப்பதாக மாநகராட்சி அலுவலகத்தில் சொன்னார்கள். ஆனால் அப்படி ஒருவரும் வருவதேயில்லை. மக்களுக்கு நன்மை செய்யத்தானே புதைசாக்கடைத் திட்டம்? அப்படியானால் தெருவாசிகளின் கருத்தைக் கேட்டு அவர்களுக்கு உகந்த வகையில் செய்து கொடுக்க வேண்டுமல்லவா? இத்தகைய திட்டம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் மூலம் வருமானம் தருவதற்குத் தானோ?
(அவலம் தொடரும்)
—–
பேரவலம் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் அல்ல!, அனைத்து மாவட்டங்களிலும் இப்படித்தான் பிரச்சினைகளை பார்க்கிறோம், குடிமை சமூகம் வாய் மூடி மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால்..அவலம் தொடரும்..