நலம் விசாரிப்பு
பேச்சைத் தொடங்கும் உபாயம்
தீவிரத்தைச் சொல்லும் முன்
தயக்கத்தை நீட்டிக்கும் கருவி
அன்பை உணர்த்துவதாய்க் காட்டும்
காரியசித்தி
பழக்க தோஷம்
வெற்றுச் சடங்கு
நலம் விசாரிப்புச் சொற்களைப்
பாவனைகளின் கிடங்கிலிருந்து
அவ்வவ்போது கை கொள்ளாமல் அள்ளி
ஊதாரியைப் போல வீசி வீசி எறிந்திருக்கிறோம்
உள்ளுக்குள் பொங்கும் ஊற்றை
அடைக்க முடியாத கொண்டாட்டத்தோடு
நலம் இல்லாதவரின் கை பற்றி
நலம் விசாரித்திருக்கிறோம்
நலமாயிருக்கக் கூடாது என்றே
நம் இறையிடம் இறைஞ்சியபடி
‘நலமா?’ என்றதும் உண்டு
நெகிழ்ச்சி கூடி விசாரித்த கணம் அபூர்வம்
இப்போது
நம் உரையாடலே நலம் விசாரிப்புத்தான்
ஒவ்வொரு சொல்லிலும் பதற்றம்
ஒவ்வொரு விசாரிப்பிலும் பரபரப்பு
ஒன்றும் இருக்கக் கூடாது கடவுளே
யாருக்கும் வரக் கூடாது இறையே
பாதுகாப்பு பாதுகாப்பு
பாதுகாப்பே மந்திரம்
எல்லாம்
தொற்றின் கருணை.
—–