நல்லதம்பி நல்லதம்பீ

நல்லதம்பி நல்லதம்பீ

ஒருவருடைய பெயரும் குணமும் பொருந்துவது வெகுஅபூர்வம். அப்படிப் பொருந்திய அபூர்வ மனிதர் நண்பர் சி.நல்லதம்பி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பயில்வதற்காக நான் சேர்ந்த 1988இல் அவர் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய ஆய்வு உதவித்தொகை பெறும் ஆய்வாளராகப் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் மேற்பார்வையில் அப்போதுதான் சேர்ந்திருந்தார். அது முதற்கொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாக அவரோடு நெருங்கிய நட்பு. ஓரிட மாணாக்கர் மட்டுமல்ல. ஓரிடப் பணியாளர்கள் நாங்கள். ஆத்தூர் அரசு கல்லூரியில் 1990களின் இறுதியில் மூன்றாண்டுகளும் கடந்த நான்காண்டுகளும் என ஏழாண்டுகளுக்கும் மேலாக அவரோடு ஒன்றாகப் பணியாற்றி இருக்கிறேன். முப்பதாண்டுகளில் கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகள் அன்றாடம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவரது மனோபாவமும் இயல்பும் எனக்கு நன்றாகத் தெரிந்தவை. அவற்றுள் பெரும்பாலும் எனக்கு ஏற்பானவை. அவருக்கு என் மீது அன்பும் மதிப்பும் இருந்தன. ஆகவே எங்கள் நட்பில் சிறுசுணக்கமும் ஏற்பட்டதில்லை.

வாழ்க்கையைச் சிறிதும் பதற்றம் இன்றி மகிழ்ச்சியோடு எதிர்கொண்டவர் அவர். எதிர்காலம் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவர் கொள்கை. தாம் இருக்கும் இடத்தை மகிழ்ச்சிப்படுத்தும் வித்தை அவருக்கு எளிதில் கைவரும். கல்லூரி உணவகத்தில் அவர் இருந்தால் அவரைச் சுற்றி ஆசிரியர்கள் கூட்டமும் இருக்கும். அவருக்கு ரசிகர்களாகப் பல ஆசிரியர்கள் இருந்தனர். அவர் போல் இருக்க முடியவில்லையே என்னும் ஏக்கமும் பலருக்கு இருந்தது. பாவனை ஏதுமின்றி இயல்பில் இருத்தல் எல்லோருக்கும் கைவருவதில்லை. கல்லூரி விழாக்களின் போது மாணவர்களோடு சேர்ந்து குதிப்பார்; நடனம் ஆடுவார். மாணவர்களை ஒருபோதும் கடிந்து ஒருசொல்லும் சொல்ல மாட்டார். வருகைப் பதிவு எடுக்க மாட்டார். வகுப்பில் மாணவர்கள் எப்போதும் உள்ளே வரலாம்; போகலாம். அன்பு கூடும்போது மாணவர் தோளில் கை போட்டு அணைத்துக்கொள்வார். எப்போதும் ‘வாங்க’ என்று மரியாதையுடனே மாணவர்களை அழைப்பார். அக மதிப்பீட்டு மதிப்பெண் போட்டுத் தரச் சொன்னால் எல்லா மாணவர்களுக்கும் 25க்கு 25 போட்டு ஒருசில நிமிடங்களில் கொடுத்துவிடுவார்.

மாணவர்கள் எப்போதும் அவரை அணுகலாம்; எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசலாம். எல்லாவற்றுக்கும் ஆலோசனை வழங்குவார். உயர்கல்விக்கும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கும் செல்ல ஊக்குவிப்பார்.  ‘நம் கல்லூரி மாணவர்கள் முதல் தலைமுறையாக உயர்கல்விக்கு வருபவர்கள். அவர்களிடம் கொஞ்சமேனும் கடுமை காட்டினால்தான் கல்வியைப் பற்றி உணர்வார்கள்’ என்னும் என் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார். ‘கஷ்டத்தோட வர்றாங்க. நாமளும் ஏங்க கஷ்டப்படுத்தணும்’ என்று கடந்துவிடுவார். கல்லூரி நிகழ்வுகளின் போது மாணவரோடு மாணவராக அரங்கின் கடைசிப் பகுதியில் அமர்ந்திருப்பார். மேடையில் பேச விரும்ப மாட்டார். பேச நிர்ப்பந்தம் கொடுத்து அழைத்தால் கடைசியிலிருந்து எழுந்து வருவார். அவர் வந்து மேடையேறி நிற்கும் வரை மாணவர்கள் கைத்தட்டலும் சீழ்க்கையும் ஓயாது. அப்படியோர் வரவேற்பை அவரைத் தவிர எந்த ஆசிரியரும் பெற்று நான் பார்த்ததில்லை.

வகுப்பு எடுப்பதில் பெருவிருப்பம். கல்லூரிக்கு வந்ததும் முதல் மணி நேரம் அவருக்கு வகுப்பு இல்லை என்றால் இருப்புக் கொள்ளாது. இத்தனைக்கும் கல்லூரி நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக வந்து போட்டித்தேர்வு வகுப்பு ஒன்றை நடத்தியிருப்பார். அப்படியும் முதல் மணிநேரம் சும்மா உட்கார மாட்டார். யாராவது விடுப்பு என்றால் அவர் வகுப்புக்கு உடனே சென்றுவிடுவார். யாருக்காவது ஏதாவது வேலை என்றால் ‘நீங்க பாருங்க. உங்க வகுப்புக்கு நான் போயிர்றன்’ என்று பதிலை எதிர்பார்க்காமல் போய்க்கொண்டேயிருப்பார். சிலசமயம் வகுப்புகள் இருக்கும் பகுதியில் அப்படியே நடப்பார். ஏதாவது வகுப்பில் ஆசிரியர் இல்லை என்றால், அது எந்தத் துறை வகுப்பாக இருந்தாலும் சரி, உள்ளே நுழைந்து வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவார். போட்டித் தேர்வுகளுக்கு மிகச் சிறப்பாக வகுப்பெடுக்கும் திறன் பெற்றிருந்ததாலும் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவு மிக்கிருந்த காரணத்தாலும் எந்த வகுப்பாக இருந்தாலும் மாணவர்களைத் தனக்குள் ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரை விரும்பி வகுப்புக்கு அழைத்துச் செல்லும் மாணவர்கள் பலருண்டு.

நல்லதம்பி நல்லதம்பீ

 

நேரம் பற்றி அதீதக் கவனம் கொண்டவர். தம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதோடு பிறர் நேரத்தை வீணாக்கக் கூடாது என்னும் அக்கறையும் இருக்கும். ஒன்பது மணிக்குக் கல்லூரி என்றால் ஏழரை மணிக்கெல்லாம் வந்துவிடுவார். கல்லூரிக்கும் அவர் ஊருக்கும் ஒன்றரை மணி நேரப் பயணம் இருக்கும். கல்லூரி தொடங்கும் முன் எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை போட்டித்தேர்வு வகுப்பு நடத்துவார். அதற்கென விருப்பப்பட்டுச் சில மாணவர்கள் வருவர். ஒரே ஒரு மாணவர் இருந்தாலும் வகுப்பு நடத்துவார். மாணவரே இல்லை என்றால் வருவார்கள் என நம்பிக்கையோடு வகுப்பில் காத்திருப்பார். ‘பாருங்க, வெறும் பெஞ்சப் பாத்து வகுப்பெடுக்கப் போறீங்க’ என்றால் ‘அதுக்கும் காது இருந்தா எடுக்கலாம் புரபசர்’ என்பார். ஆசிரியர்களில் மூத்தவர், இளையவர், இந்தத் தரத்தில் இருப்பவர் என்னும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் எல்லோரையும் வரிசை வைத்துப் ‘புரபசர்’ என்றோ  ‘சார்’ என்றோ அழைப்பார். கல்லூரி நேரம் முடிந்த பிறகே வளாகத்தை விட்டு வெளியேறுவார். அப்படி ஒரு சுயஒழுங்கு கொண்டவர்.

நிர்வாகப் பணிகள், எழுத்துப் பணிகள், வகுப்பாசிரியர் பொறுப்பு முதலிய எதுவும் அவருக்குச் சரிவராது. ஒருநாளுக்கு ஐந்து மணி நேரமும் வகுப்பு என்றாலும் தயக்கம் இல்லாமல் எடுப்பார். 1990களின் இறுதியில் ஆத்தூர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போது இளங்கலை வரலாற்றுப் பாட வகுப்பில் தமிழ் வழி, ஆங்கில வழி ஆகிய இரண்டும் இருந்தன. ஒவ்வொன்றிலும் அறுபது அறுபது மாணவர்கள். முதலாண்டு, இரண்டாமாண்டு என இரு வகுப்புகள். ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் நூற்றிருபது மாணவர்களையும் ஒரே வகுப்பில் வைத்துப் பாடம் நடத்த வேண்டும். மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் சத்தத்தை மீறிக் கத்தும் வலு நமக்கு வேண்டும். ஒரு பருவத்தில் அந்த வகுப்புக்குப் பாடம் எடுப்பவர் அடுத்த பருவத்தில் மாற்றிக் கொடுத்துவிடும்படி கேட்பார்கள். அந்த வகுப்பு மட்டும் வேண்டாம் என்பதுதான் ஆசிரியர்களின் வேண்டுகோள். எந்த வகுப்பு என்றாலும் ‘நான் போகிறேன்’ என்பார் நல்லதம்பி. ஒரு பருவத்தில் இரண்டு வரலாற்று வகுப்புகளுக்கும் அவரையே அனுப்பினோம். மாணவர்களை அன்பாக அடக்கும் வல்லமை கொண்டவர். சத்தம் போடும் மாணவரைச் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து வெளியே விடுவார். செல்லமாக முதுகில் அடிப்பார். மாணவர்கள் அவர் மேல் கோபித்துக் கொண்டதேயில்லை. அவர் சாதாரணமாகவே பெருங்குரலெடுத்துப் பேசுபவர். ஆனால் அடுத்தடுத்து இரண்டு மணி நேரம் வரும்போது பேசி ஓய்ந்து அறைக்கு வருவார். அவர் சோர்வைப் பார்த்துவிட்டு அடுத்த பருவத்தில் நண்பர் காசிமாரியப்பன் தான் ஒரு வகுப்பைப் பகிர்ந்துகொண்டார்.

தனக்கு இந்தப் பாடம், இந்த நேரம், இந்த வகுப்பு என்று கேட்டதேயில்லை. எல்லோருக்கும் ஒதுக்கியது போக மீதமிருக்கும் வகுப்புகளைத் தனக்குப் போடும்படி சொல்வார். கல்லூரிக்கு விடுப்பு எடுத்ததே இல்லை.  ‘நாம விடுப்பு எடுத்தம்னா அது மாணவன ஏமாத்தறது’ என்பார். ‘அரசாங்கம் கொடுத்திருக்கற உரிமைதானே’ என்றால் ‘அதுக்காக எடுக்கலாமா? நம்மள நம்பித்தான பையன் வர்றான், நாம லீவு போட்டுட்டா அவன் ஏமாந்து போக மாட்டானா?’ என்று கேட்பார். மிக அரிதாக ஓரிரு நாள் மாற்றுப் பணியில் சென்றிருக்கிறார். அதுவும் மாணவர்களுக்குத் தேர்வுக்கு முன்னான படிப்பு விடுமுறை, வகுப்பு ரத்து போன்ற நாட்களாகத் தேர்வு செய்துகொள்வார். அப்படி மாற்றுப்பணியில் செல்வதும் வகுப்பு எடுக்கத்தான்.

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று NET/JRF போட்டித் தேர்வுக்கான வகுப்புகளை எடுத்தார். சனி, ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை நாட்களிலும்தான் வகுப்புகளை ஒத்துக்கொள்வார். அப்படி அவர் எடுத்த வகுப்புகளில் பங்கேற்று அத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் ஆத்தூர் அரசு கல்லூரியில் இருந்து மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். ஆங்கிலத்தில் இருக்கும் பொதுத்தாளுக்குத்தான் அவர் வகுப்பெடுப்பார். தமிழ் மட்டுமல்லாமல் பிற துறை மாணவர்களும் அவர் வகுப்பில் பங்கேற்றுப் பயனடைந்திருக்கிறார்கள். பொதுத்தாளில் தேர்ச்சி பெற்றுவிடும் பல மாணவர்கள் முதன்மைப் பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போய்விடுகிறார்கள் என்று வருந்துவார்.

பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்துச் சேர்க்க வேண்டும் என்னும் மனோபாவம் சிறிதும் இல்லாதவர். தன் வேலைவாய்ப்பு, ஊதியம் ஆகியவற்றில் சிறிதும் அக்கறை அற்றவர். சில ஆண்டுகள் அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல்கலைக்கழகத்திலும் அப்படியே பணியாற்றினார். சுயநிதிக் கல்லூரி ஒன்றிலும் சில ஆண்டுகள் பணியில் இருந்தார். அனுபவச் சான்றிதழ் பெறுவதில் நேர்ந்த சிரமங்களால் ‘எனக்கு நிரந்தரப் பணியே வேண்டாம்’ என்றிருந்தார். நண்பர்களின் வற்புறுத்தலால் அனுபவச் சான்று பெற்றுத் தாமதமாகவே நிரந்தரப் பணிக்கு வந்தார். 1999 ஆம் ஆண்டு என்று நினைவு. அப்போது ஆத்தூர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளருக்கான நேர்முகத் தேர்வு நடந்து நல்லதம்பி தேர்வு செய்யப்பட்டார். அவர் பணியில் சேரவில்லை என்றால் அவருக்கு அடுத்து இருந்தவருக்கு வாய்ப்புக் கிடைக்கும். அடுத்திருந்தவர் குடும்ப நிலையைக் கவனத்தில் கொண்டு ‘நான் பணியில் சேரவில்லை; அவருக்குக் கொடுங்கள்’ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு வெளியேறிப் போனார்.

தன் ஊதியம் பற்றியும் கவலைப்பட மாட்டார். அகவிலைப்படி, ஊதிய உயர்வு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் ஆசிரியர் கூட்டத்தில் அவர் இருக்கவே மாட்டார். அவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியவும் தெரியாது. அவருக்குரிய ஊதியப் பலன்கள் கிடைக்காத போதும் ‘அது அலுவலகப் பணி. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்றுதான் சொல்வார். பிற இடங்களுக்குப் போய் வகுப்புகள் எடுக்கும்போதும் அதற்குரிய தொகை பற்றிப் பேசுவதில்லை. வங்கிக் கணக்கைக் கொடுத்து ‘உங்களால் என்ன முடியுமோ, அதைப் போடுங்கள்’ என்று சொல்வார். மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இவருக்குக் கொடுக்காதவரும் உண்டு. அதிகப் பணம் வாங்கி முழுவதையும் தாமே வைத்துக் கொண்டவர்களும் உண்டு. ‘வைத்து வாழட்டும்’ என்று பெருந்தன்மையாகச் சொல்வார். எங்கு போனாலும் குறிப்பிட்ட நேரத்திற்குப் போய்ச் சேர்ந்து வகுப்பெடுத்துவிட்டு வந்து கொண்டேயிருப்பார். தங்கல், உணவு ஆகியவற்றுக்கு யாரையும் சார்ந்திருக்க விரும்ப மாட்டார்.

நான் கேட்டுக்கொண்டேன் என்பதற்காக இரண்டே இரண்டு மாணவர்களுக்காக நாமக்கல்லுக்குத் தினம் வந்து வகுப்பெடுத்தார். போக்குவரத்துச் செலவுக்குக்கூடக் கட்டாயப்படுத்தித்தான் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.  ‘நீங்கள் அந்த மாணவர்கள் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறையை நான் மதிக்க வேண்டும். பணம் வாங்கினால் மதிக்காத மாதிரி ஆகிவிடும்’ என்று சொன்னார். தொடர் பயணம் செய்தார். பேருந்துப் பயணம்தான். ‘நமக்கு வயதாகிறது. பேருந்தில் போக வேண்டாம். ரயிலில் பயணம் செய்யுங்கள்’ என்று நான் வற்புறுத்திச் சொல்லியிருக்கிறேன். அழைப்பவர்களே அவருக்குப் பதிவு செய்து கொடுத்துவிடுவார்கள். ஏனோ அவருக்குப் பேருந்துதான் வசதியாக இருந்தது. ‘ஏறிப் போய்க்கொண்டே இருக்கலாம்’ என்பார்.

சிறந்ததைத் தேர்ந்து பெருந்தேன் இழைக்கும் இயல்புள்ளவர். தரமான விலையுயர்ந்த உடைகளை உடுத்துவார். சுவை உணர்ந்து நல்ல உணவகங்களைத் தேடிச் சென்று உண்பார். எல்லாவற்றுக்கும் பிறரையும் ஆற்றுப்படுத்துவார். என் உடைகள் அவருக்குப் பிடித்தமானவை அல்ல. எனக்குப் பலபடச் சொல்லியும் சில முறை சட்டைகள் வாங்கிக் கொடுத்தும் பார்த்தார். என்னால் மாற முடியவில்லை. கல்லூரியில் துறை ஆசிரியர்கள் ஆறேழு பேர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்ணுவோம். அவர் உணவு எடுத்து வர மாட்டார். எங்கள் மாணவரும் சக ஆசிரியருமான அம்பேத்கார் அவருக்கெனச் சேர்த்து உணவு கொண்டு வருவார். அதை ஈடு கட்டும் வகையில் தினமும் முட்டைப் பொரியல், ஆம்லெட், பழங்கள் என்று உணவகத்திலிருந்து வரவைத்துவிடுவார். பிறரிடமிருந்து ஒரு பைசாவும் பெற மாட்டார். ஐந்தாறு பேர் உணவகம் சென்றாலும் எல்லோருக்கும் முன்னால் அவரிடமிருந்துதான் பணம் நீளும். துறையில் ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளும் செலவுகளில் அவர் பங்குதான் முதலிலும் உடனேயும் வரும். அவரைவிட அதிக ஊதியம் பெறுவோர் சிலர் தம் பங்கைக் கொடுக்காமலும் கொடுப்பது போலப் பாவனை செய்தும்  நடந்து கொள்வதுண்டு. அப்போது ‘நான் சேர்த்துக் கொடுத்துவிடுகிறேன்’ என்று முன்வருவார்.

நல்லதம்பி நல்லதம்பீ

அவருக்குக் குறிப்பிட்ட தத்துவத்திலோ அரசியலிலோ ஆர்வம் ஏதுமில்லை. அப்படி வாசித்துக் கற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் அவருக்கு இயல்பிலேயே பல்வேறு ஒழுங்குகளும் மீறல்களும் அமைந்திருந்தன. சுயசிந்தனை உடையவராக இருந்தார். சக மனிதர்களை மதிப்பது மிகவும் முக்கியம் என்பது அவர் கொள்கை. யாரையும் மதித்தும் அங்கீகரித்தும் பேசுவார். அவ்வாறு நடக்காதவர்களைப் புறக்கணித்து ஒதுங்கிவிடுவார். யார் வணக்கம் சொன்னாலும் தலையைக்கூட ஆட்டாத கல்லூரி முதல்வர் ஒருவர் இருந்தார். ‘இனிமேல் அவருக்கு நான் வணக்கம் சொல்ல மாட்டேன்’ என்று முடிவெடுத்து அறிவித்தார். முதல்வர் நேர்ப்படும் போது வேறுபக்கம் திரும்பியபடி சென்றுவிடும் வழக்கத்தை அவர் இடமாறுதலில் செல்லும் வரை கடைபிடித்தார். நேர்மை வழுவாத நடத்தை அவருடைய வாழ்முறை. இந்தக் காலத்தில் இப்படி ஒருவர் இருக்க முடியுமா என்னும் வியப்பு ஏற்படும் வகையில் அவர் நடத்தை இருக்கும். அதில் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொண்டதில்லை.

அவர் முனைவர் பட்டம் முடித்த காலத்தில் அவரது நெறியாளரும் பேராசிரியருமாகிய வீ.அரசு அவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் பணிக்கு நல்லதம்பியைப் பரிந்துரைத்தார். ‘பரிந்துரையால் கிடைக்கும் பணிக்கு நான் போக மாட்டேன்’ என்று சொல்லி நேர்முகத் தேர்வுக்கே செல்லவில்லை. குறுக்கு வழிகள், அநியாயம், ஊழல் எல்லாமும் நடப்பதை அறிந்து வைத்திருப்பார். அவற்றைப் பற்றிப் பேசவும் செய்வார். அவற்றில் ஈடுபடுபவர்கள் பக்கம் அண்டாமலும் அவர்களைப் புறக்கணித்தும் ஒதுங்கிவிடுதல் அவர் வழக்கம். தன்னளவில் எல்லாவற்றிலும் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். மற்றவர்கள் அப்படி இல்லாத பட்சத்தில் ‘அது இழிவு என்பது அவர்களுக்குத் தெரியாதா’ என்பார். ஒவ்வொருவரும் சுய ஒழுங்கு கொண்டிருக்க வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு.

இன்னும் சொல்ல எவ்வளவோ. நிலச்சுமையென வாழ்வோர் பலரிருக்க புவிப்பெருமையென வாழ்ந்த அவருக்கு என் அஞ்சலி.

—–  08-08-20