மனோன்மணீயம் : ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பு

மனோன்மணீயம் : ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பு

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றியவர். ச.வையாபுரிப்பிள்ளை சில ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராக இருந்தார். அச்சமயத்தில் பெ.சுந்தரம்பிள்ளையின் மீது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. சுந்தரம் பிள்ளையின் குடும்பம் திருவனந்தபுரத்தில் வசித்ததையும் அறிந்திருந்தார்.  இப்பின்னணியில் ‘மனோன்மணீயம்’ செய்யுள் நாடக நூலை மறுபதிப்பு செய்யும் பணியில் இறங்கியுள்ளார். அதற்கு சுந்தரம் பிள்ளையின் மகன் நடராஜ பிள்ளையிடம் அனுமதியும் பெற்றிருக்கிறார்.

பிற்காலத்தில் தம் பதிப்புகளுக்கு விரிவான முன்னுரைகளை எழுதிய ச.வை. மனோன்மணீயத்திற்குப் ‘பதிப்பாசிரியர் குறிப்பு’ என்னும் தலைப்பில் சிறுமுன்னுரை மட்டும் எழுதியுள்ளார். கே.என்.சிவராஜப் பிள்ளை எழுதிய நீண்ட ஆங்கில முன்னுரை, பெ.சுந்தரம் பிள்ளையின் ஆங்கில முன்னுரை, அவரே கதைச் சுருக்கமாகத் தமிழில் எழுதிய முன்னுரை, கே.ஜி.சேஷய்யர் என்பவர் ஷேக்ஸ்பியர் நாடகம் குறித்து எழுதிய கட்டுரையின் ஒருபகுதி ஆகியவை அடுத்துள்ளன. நூலின் தொடக்கத்தில் பெ.சுந்தரம் பிள்ளையின் உருவப்படம் உள்ளது. ‘ஆசியரது உருவப்படம் முதற்பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது’ என்று முன்னுரையில் இவ்வரியை மட்டும் தனிப்பத்தியாக அமைத்துக் குறித்துள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆளுமைகளின் புகைப்படம் கிடைப்பது அரிதானது. அதை உணர்ந்து படத்தைச் சேர்த்திருப்பது பதிப்பாசிரியரின் சிறப்பான செயல். அந்தப் படமே பிற்கால நூல்களிலும் காணப்படுகிறது. சற்றே சேய்மைக் காட்சியாக உள்ள இதன் அண்மைக் காட்சிப் படம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1933ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. அதில் அவர் நெற்றியில் நாமம் வரையப்பட்டது போலத் தோன்றுகிறது. ச.வை. பதிப்புப் படத்தில் சுந்தரம் பிள்ளையின் நெற்றியில் நாமம் இல்லை. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட பதிப்பில் நாமம் வரையப்பட்டிருப்பது வியப்பானதுதான். பெ.சுந்தரம் பிள்ளை சைவர் இல்லையா? நாமப் பின்னணி என்னவாக இருக்கும்?  இன்று இணையத்திலும் வெவ்வேறு வணணப் பின்னணியில் அப்படமே கிடைக்கிறது. அவரது வேறு படங்கள் ஏதும் உள்ளனவா என்று தெரியவில்லை. நூல் முகப்பில் அவர் படத்தைச் ச.வை. வைத்தது வரலாற்று முக்கியத்துவம் உடையது.

மனோன்மணீயம் : ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பு

கே.என்.சிவராஜப் பிள்ளை ஏற்கனவே இந்நாடகத்தைப் பற்றி விரிவான கட்டுரை எழுதியிருப்பதை அறிந்து அதை இப்பதிப்பில் சேர்க்கத் தரும்படி ச.வை. கேட்டிருக்கிறார். அக்கட்டுரைப் படியை உடனடியாகக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆகவே புதிதாக விரிவான கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் அவர் எழுதிக் கொடுத்துள்ளார். அது நூலில் இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரை இருப்பதால்தான் நூலைப் பற்றிச் ச.வை. விரிவாக எழுதவில்லை போலும். பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய ஆங்கில முன்னுரையும் தமிழ் முன்னுரையும் அடுத்தடுத்து உள்ளன. பிற்காலத்தில் மனோன்மணீயத்தை வெளியிட்ட பலரும் சிவராஜ பிள்ளையின் கட்டுரையையும் ஆங்கில முன்னுரையையும் விலக்கிவிட்டுத் தமிழ் முன்னுரையை மட்டும் கொடுத்துள்ளனர். சிவராஜ பிள்ளையின் ஆய்வுரையும் பெ.சுந்தரம் பிள்ளையின் முன்னுரையும் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவற்றை ஆங்கிலத்தில் அப்படியே வெளியிடுவதும் தமிழில் மொழிபெயர்ப்பதும் அவசியம்.

பின்னிணைப்பில் ஆசிரியர் எழுதிய விவரணக் குறிப்புகளோடு கூடுதலாகச் சிலவற்றை எழுதி ச.வை. சேர்த்திருக்கிறார். அப்பகுதியில்தான் முதற்பதிப்புப் பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அரும்பத அகராதி ஒன்றைச் ச.வை. உருவாக்கிச் சேர்த்துள்ளார். இரகசிய வழி ஆங்கிலக் கதை மூலமும் உள்ளது. இவை அந்நூலை வாசிப்போருக்கும் ஆராய்ச்சி செய்வோருக்கும் பெரிதும் உதவுபவை.

ச.வை. எழுதியுள்ள முன்னுரை சிறுத்த கடுகெனினும் காரத்திற்குக் குறைவில்லை.  நன்றி தெரிவித்தலாகச் சில பத்திகளும் இப்பதிப்பில் தாம் செய்துள்ளவற்றைக் கூறும் சில பத்திகளும் உள்ளன. அவற்றுக்கிடையே மனோன்மணீயம் நாடகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் பலவற்றை விரிக்கும் ஒருபத்தி இடம்பெற்றுள்ளது முக்கியமானது. ‘கமலாம்பாள் சரித்திரம்’ எழுதிய பி.ஆ.ராஜமையர் இந்நூலுக்குக் கிறித்தவக் கல்லூரி இதழில் மதிப்புரை எழுதினார் என்பதும் ஜி.யு.போப் இந்நூலுக்கு மதிப்புரை எழுதினார் என்பதும் இந்நாடகம் பாடத்தில் வைக்கப்பட்ட தகவல்களும் முக்கியமானவை.

வையாபுரிப்பிள்ளை பதிப்புகளின் தனித்தன்மை மூலபாடவியல் நோக்குத்தான். சி.வை.தா., உ.வே.சா. முதலிய பதிப்பாசிரியர்களும் பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டிருந்தனர் எனினும் அதைத் தம் பதிப்புகளில் ஆய்வு முறையியலாகப் பயன்படுத்தியவர் வையாபுரிப் பிள்ளையே. அந்நோக்கு அவர் பதிப்பித்த முதல் நூலாகிய மனோன்மணீயத்திலேயே வெளிப்படுகிறது.

1891இல் சுந்தரம்பிள்ளை வெளியிட்ட முதற்பதிப்பே வையாபுரிப்பிள்ளை பதிப்புக்கு ஆதாரம். ஆனால் அதை அப்படியே அச்சிடவில்லை. அது வெளியான முப்பது ஆண்டுகளில் கிடைத்திருக்கும் கவனம், பாடநூல் பயன்பாடு, இலக்கிய மதிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆராய்ச்சிப் பதிப்பாக வர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பதிப்பித்திருக்கிறார். சரியான பாடத்துடன் உரிய முன்னிணைப்பு, பின்னிணைப்புகளையும் சேர்த்திருக்கிறார்.

1897ஆம் ஆண்டு வரை சுந்தரம் பிள்ளை வாழ்ந்தார். 1891க்கும் 1897க்கும் இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் மனோன்மணீயம் நாடகத்தின் சில பகுதிகளைச் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடத்தில் வைத்தனர். பாடத்தில் இடம்பெறுவது மதிப்பாகக் கருதப்பட்ட காலம் அது. பாடநூல்கள் தரத்துடனும் சிறந்த உரைகளுடனும் வெளியிடப்பட்டுள்ளன. ‘மனோன்மணீயம்’ நாடகத்தின் முதலிரு அங்கங்கள் 1893ஆம் ஆண்டு பாடத்தில் இடம்பெற்றபோது தமிழறிஞர்களான வை.மு.சடகோப ராமாநுசாச்சாரியார், கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.  பின்னர் 1896ஆம் ஆண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய அங்கங்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டுப் பாடநூலில் இடம்பெற்றுள்ளன.

பாடப்பகுதி மட்டும் சிறுநூலாக அப்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் சுந்தரம் பிள்ளையே சில திருத்தங்களைச் செய்துள்ளார். ஆசிரியர் தம் வாழ்நாளிலே செய்த திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நெறிமுறை அடிப்படையில் பாடநூல் வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அத்திருத்தங்களை எல்லாம் வையாபுரிப் பிள்ளை தம் பதிப்பில் மேற்கொண்டார். அது மட்டுமல்ல, ஆசிரியர் திருத்திய இடங்கள் எவை என ஆய்வாளர்களுக்குத் தெரிய வேண்டியது அவசியம் எனக் கருதி ஒப்பு நோக்கிப் பார்க்க விரும்புவோருக்கு வசதியாக முதற்பதிப்புப் பாடங்களையும் பின்னிணைப்புப் பகுதியில் தவறாமல் கொடுத்துள்ளார். ஒருபதிப்புக்குப் பாடநூல்களும் ஆதாரமாக அமைந்ததைக் கண்டு வியக்க வேண்டியுள்ளது.

ச.வை. மேற்கொண்ட இந்தப் பதிப்பு முறை பழந்தமிழ் இலக்கியத்திற்குப் பொருந்தாது; சாத்தியமும் இல்லை. மூல நூலாசிரியர் எழுதிய நூற்படி கிடைக்க வாய்ப்பில்லை. அவர் காலத்தில் என்னென்ன திருத்தங்கள் செய்தார், அவருக்குப் பின் பிறர் செய்த திருத்தங்கள் எவை என்று பகுத்தறியவும் இயலாது. வெவ்வேறு சுவடிகளில் இருக்கும் பாட வேறுபாடுகள் அனைத்தையும் பட்டியலிட்டுக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் நவீன இலக்கியப் பதிப்புக்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. ஆசிரியரின் வாழ்நாளை அறியமுடியும். அச்சுப் பிரதிகள் கிடைப்பதால் திருத்தங்களையும் கண்டறிய இயலும். ஆசிரியர் செய்த திருத்தங்கள் எவை, அவரது காலத்திற்குப் பிறகு மற்றவர்கள் செய்த திருத்தங்கள் எவை என வேறுபடுத்திக் காண முடியும். இந்த வேறுபாட்டை வையாபுரிப் பிள்ளை உணர்ந்து மனோன்மணீயப் பதிப்பை உருவாக்கியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செயல்பட்ட நவீன இலக்கியப் பதிப்பாசிரியர்கள் இம்முறையைப் பின்பற்றியுள்ளனர். பாரதியார் கவிதைகளில் அச்சில் வந்த சிலவற்றிற்கு அவர்தம் கையெழுத்துப் பிரதியில் செய்த திருத்தங்கள் கிடைக்கின்றன. இதழில் வந்த வடிவத்திற்கும் நூலாகும் போது இருக்கும் வடிவத்திற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அத்திருத்தங்களைப் பதிப்பாசிரியர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். அதே போலப் புதுமைப்பித்தன் கதைகளைப் பதிப்பித்த ஆ.இரா.வேங்கடாசலபதியும் இம்முறையைப் பின்பற்றியுள்ளார்.

அவர் தம் பதிப்பில் ‘…புதுமைப்பித்தன் வாழ்நாளில் வெளியான நூற்பதிப்புகள் மூலபாடமாகக் கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்தோ, திருத்தியோ, அவருடைய ஒப்புதல் பெற்றோ அப்பதிப்புகள் வந்திருக்கின்றன எனக் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதழ்களில் வெளியான முந்தைய வடிவங்களை வேறுபாடமாகக் கொண்டு பாட வேறுபாடுகள் வழங்கப்பட்டுள்ளன’ (ப.28) என்று தாம் பாடம் கொண்ட முறையை விவரித்துள்ளார்.

ஆசிரியரின் வாழ்நாளில் வந்த இறுதிப் பதிப்பை மூலபாடமாகக் கொண்டு முந்தைய வடிவங்களைப் பாட வேறுபாடுகளாகக் காட்டும் முறை இது. ஆசிரியரின் வாழ்நாளுக்குப் பிறகு பிறர் செய்த பாடவேறுபாடுகள் இப்பதிப்பில் இடம்பெறுவதில்லை. மூலப் பிரதிக்கு அவை அவசியமில்லை. நவீன இலக்கியப் பதிப்புகளுக்கு இத்தகையதோர் முறையியலை முதலில் உருவாக்கியவர் ச.வையாபுரிப் பிள்ளை என்பதை மனோன்மணீயப் பதிப்பு காட்டுகிறது.

மனோன்மணீயம் : ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பு

செய்யுளைச் சந்தி பிரித்துப் பதிப்பிக்க வேண்டும் என்பது ச.வையாபுரிப் பிள்ளைக்குப் பிற்காலத்தில் உருவான பார்வை என்று தோன்றுகிறது. இப்பதிப்பில் செய்யுளுக்குச் சந்தி பிரிப்பு இல்லை. ச.வை.யின் பதிப்பு முறையியல் தொடங்கியதற்கும் வளர்ச்சி பெற்ற விதத்திற்கும் சிறந்த சான்றாக உள்ள இப்பதிப்பு வெளியாகி நூறாண்டு கழிந்துவிட்டது. இக்காலகட்டத்தில் இந்நூல் பெற்ற சிறப்புகளை எல்லாம் உட்கொண்டு ச.வை.யின் பதிப்பை மேலும் மேம்படுத்தும் புதிய பதிப்பு வர வேண்டியது அவசியம். அவர் பெயரைக் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் சிலவற்றை விட்டும் சிலவற்றைச் சேர்த்தும் அப்பதிப்பை ஒருநூற்றாண்டு காலம் தமிழ்ச் சமூகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அவர் பணிக்கு நியாயம் செய்வது போலப் புதிய பதிப்பு அமைய வேண்டும் என்பது என் ஆசை.

 

—–    24-10-24

Latest comments (2)