வணக்கம். இப்போது இந்திய நேரம் ஒன்று முப்பது மணி…

வணக்கம். இப்போது இந்திய நேரம் ஒன்று முப்பது மணி…

வெளிநாட்டுப் பயணத்தில் தமிழ் – பெருமாள்முருகன்

இதுவரை சில நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் நான் எழுத்தாளர் உறைவிட முகாம் ஒன்றில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றேன். ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் செல்ல எனக்கு விமானப் பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தில் முக்கியமாக நான் உணர்ந்த ஒரு விஷயம் மொழி தொடர்பானது. வெளிநாட்டுப் பயணங்களில் மொழிப் பயன்பாட்டை முழுமையாக உணரும் இடம் விமான நிலையம்.

புரியாத மொழி, புது இடம், என்னென்னவோ நடைமுறைகள் என எப்போதும் பதற்றம் ஏற்படும். ஆனால், விமான நிலையங்களில் பெரும்பாலும் எதையும் யாரிடமும் கேட்க வேண்டிய தேவை நேர்வதில்லை. தேவையான தகவல்களை எல்லா இடங்களிலும் நேர்த்தியாகவும் சரியாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் நிற்கும் இடத்தில் நமக்கு என்ன தகவல் தேவையாக இருக்கும் என்பதை உணர்ந்து கண்ணுக்கு நேரே அந்தத் தகவலை எழுதி வைத்துவிடுகிறார்கள். கண்ணைக் கொஞ்சம் மேலுயர்த்திப் பார்த்து எழுத்து அறிவிப்பு காட்டும் வழியைப் பின்பற்றினால் போதும். போகும் வழியில் எந்தெந்த இடத்தில் நமக்குச் சந்தேகம் வருமோ அங்கெல்லாம் எழுத்தில் அறிவிப்பு தெரியும்.

போகும்போது ப்ராங்க்பர்ட் விமான நிலையத்தின் ஒரு முனையத்தில் இறங்கி தொடர் பயணத்துக்கான விமானத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. இறங்கிய முனையம் ஒன்று; ஏற வேண்டிய முனையம் வேறொன்று. எனினும் சிரமம் ஏதுமில்லை. திருவிழாக் கூட்டத்தில் குழந்தையின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் தாயைப் போல அறிவிப்புப் பலகைகள் அன்போடு கூட்டிச் சென்று வேண்டிய இடத்தில் சேர்த்தன. திரும்பும்போதும் அப்படியே. அமெரிக்காவின் வடகரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சார்லெட் நகரிலிருந்து நியூயார்க் விமான நிலையம் வந்திறங்கினேன். நான் இறங்கிய முனையத்திலிருந்து வேறொரு முனையத்துக்குச் சென்று ப்ராங்க்பர்ட் விமானத்தைப் பிடிக்க வேண்டும். எந்தக் கஷ்டமும் படவில்லை. வழிகாட்டும் அறிவிப்புகளைத் தொடர்ந்து சென்று வெவ்வேறு இடங்களில் மின்னேணியில் ஏறி இறங்கி நடந்து விமான நிலையத்திற்குள் சுற்றும் ரயிலைப் பிடித்து எத்தனையோ முனையங்களைச் சுற்றுலாவாசியின் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே எனக்கான முனையத்தை அடைந்துவிட்டேன். யாரிடமும் ஒருவார்த்தை கேட்க நேரவில்லை. எழுத்து மொழியைச் சரியாகப் பயன்படுத்துவதன் சிறப்பை உணர்ந்தேன்.

பதற்றம் தணித்த மொழி

சில ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் பதற்றத்தைத் தரும் இடமாக எனக்கு விமான நிலையம் இருந்தது. இப்போது அப்படியில்லை. பழகிவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம், மொழிப் பயன்பாட்டின் சிறப்பு. வெளிநாடுகளில் பேச்சு மொழிதான் பிரச்சினை. நம்முடைய ஆங்கில உச்சரிப்பு அவர்களுக்குப் புரியாது; அவர்களின் உச்சரிப்பு சுத்தமாக நமக்குப் புரியாது. ஆங்கிலத் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்திலேயே சப்-டைட்டில் போட்டு உதவுவது போலப் பேச்சையும் யாராவது விளக்கிச் சொன்னால்தான் புரியும். ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலத்தைவிட நம்மைப் போலப் பிற நாட்டினர் பேசும் ஆங்கில உச்சரிப்பு கொஞ்சம் நமக்கு நெருக்கமாக இருக்கும். இந்த நிலையில் எழுத்து மொழி அறிவிப்புகளே பெருந்துணை.

விமான நிலையத்தில் காத்திருக்க நேரும்போது அங்கிருக்கும் அறிவிப்புப் பலகைகளைத் தேடிச் சென்று வாசிப்பது என் வழக்கம். எத்தகைய அறிவிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளலாம். இன்னொரு முறை எப்போதாவது அவசரமாகப் பார்க்க நேர்ந்தாலும் சட்டென்று புரிந்துகொள்ளலாம். மேலும் மொழிப் பயன்பாட்டை அறிந்துகொள்ளும் ஆர்வமும் எனக்குண்டு.

ஒரு விமான நிலையத்தில் இறங்கி அதற்குள்ளேயே வேறொரு முனையத்துக்குச் சென்று விமானம் மாற வேண்டும் என்றாலும் இப்போதெல்லாம் எனக்குச் சிரமம் இல்லை. இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் இடைவெளி இருந்தால் போதும். நிதானமாக ஒவ்வொன்றையும் வாசித்தறிந்து அம்புக் குறியைப் பின்பற்றி நானாகவே சென்று சேர்ந்துவிடுவேன். நாம் செல்ல வேண்டிய முனையத்துக்குப் பேருந்தில் போக வேண்டும் என்றாலும் ரயிலில் போக வேண்டும் என்றாலும் அறிவிப்பைப் பற்றிக்கொண்டே நிதானமாகச் சென்றால் போதும். சரியான இலக்கை அடைந்துவிடலாம். சில விமான நிலையங்களில் ஏறியும் இறங்கியும் நடந்தும் புகுந்தும் நுழைந்தும் என மாயக்குகைக்குள் போவது போலிருக்கும். எப்படியிருப்பினும் அறிவிப்புகளைத் தொடர்ந்தால் போதும்.

வணக்கம். இப்போது இந்திய நேரம் ஒன்று முப்பது மணி…

மிகப்பெரும் விமான நிலையங்களாகிய ஹாங்காங், இன்சான் (சியோல்), ப்ராங்க்பர்ட், நியூயார்க் முதலியவற்றில்கூட எந்தச் சிரமமும் இல்லாமல் அறிவிப்புகளின் பின்னாலேயே போய் இலக்கை அடைந்திருக்கிறேன். அந்தந்த நாட்டு மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருப்பது பொதுவான வழக்கமாக இருக்கிறது. ஜெர்மன் மொழிக்கும் ஆங்கிலத்துக்கும் ஒரே வரி வடிவம் என்பது சில சமயம் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் சொல்லை வாசிக்கும்போது நமக்குப் பிடிபடவில்லை என்றால் அது ஜெர்மன் எனக் கண்டுகொள்ளலாம். மேலும் முதலில் ஜெர்மன் மொழி; அடுத்தது ஆங்கிலம். அரபு நாடுகளில் அரபி மொழிக்குக் கீழே ஆங்கிலம் இருக்கிறது.

கழிப்பறை என்று சொன்னால் என்ன தவறு?

எல்லா மொழிகளிலுமே ‘இடக்கரடக்கல்’ என்னும் வழக்கம் உண்டு போலும். விமான நிலையங்களில் ஆங்காங்கே கழிப்பறைகள் இருப்பதும் அவை படு தூய்மையாகக் காணப்படுவதும் இன்னொரு சந்தோஷம். கழிப்பறையைக் குறிக்கும் சொல்லுக்கு இடக்கரடக்கல் உள்ளது. ‘டாய்லெட்’ என்று சொல்லும் இடக்கர் வழக்கு இப்போது மாறிவிட்டது. 2010ஆம் ஆண்டு நான் தென்கொரியா போனபோது டாய்லெட்டை ‘ரெஸ்ட் ரூம்’ என்று சொன்னார்கள். அது எனக்கு முதலில் புரியவில்லை. இப்போது அதையும் மாற்றி ‘வாஷ் ரூம் (wash room)’ என்று சொல்லும் வழக்கு வந்திருக்கிறது. தமிழில் ‘ஒப்பனை அறை’ என்று எழுதி வைத்திருந்ததை மாற்றி ‘ஒதுங்கிடம்’ ஆக்கியிருக்கிறார்கள். ஒதுங்கிடம் பொருத்தமான சொல்லாகத்தான் தெரிகிறது.

பேச்சு வழக்கில் ஒதுங்குதல், ஒதுக்குப்புறம் ஆகியவை கழிப்பைக் குறித்த தொடர்களில் பயன்படுபவையே. ‘அப்படி ஒதுங்கிட்டு வர்றன் இரு’ என்று சொல்வது சாதாரணம். ‘ஒதுக்குப்புறமாப் போ’ என்று சொல்வதும் கழிப்புக்குத்தான். ‘அவசரம்னு அப்படியே காட்டுப் பக்கம் ஒதுங்கிட்டு வந்தேன்’ என்பதும் வழக்கு. ஒதுங்குதலுக்குப் பாலியல் ரீதியான அர்த்தமும் உண்டு. ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் மலேசியா வாசுதேவன் பாடும் ‘தண்ணி கருத்திருச்சி’ பாடலில் ‘ஊரும் ஒறங்கிருச்சு, நாம ஒதுங்க இடம் கெடச்சிருச்சு’ என்று வரும் ஒதுங்கலுக்குப் பாலுறவு அர்த்தம்தான். இவற்றை எல்லாம்விடக் ‘கழிப்பறை’ என்னும் சொல்லாட்சியே சிறந்தது என நினைக்கிறேன். கழிவுகளைப் பற்றியும் கழிப்பதைப் பற்றியும் ஏனோ ஓர் ஒவ்வாமை உலகம் முழுக்கவும் இருக்கிறது. அதனால்தான் சொற்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ‘டாய்லெட்’ என்றே சொன்னால் என்ன குறைந்துவிடும்?

அதே போல விமான நிலைய ஒலி அறிவிப்புகள், விமானத்துக்குள்ளான ஒலி அறிவிப்புகள் ஆகியவற்றின் மொழியும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இந்த முறை அமெரிக்காவுக்கு ப்ராங்க்பர்ட் வழியாக லுப்தான்ஸா விமானத்தில் சென்றேன். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனம் லுப்தான்ஸா. ஐரோப்பிய யூனியனில் அதுதான் மிகப்பெரும் விமான நிறுவனம். சென்னையிலிருந்து ப்ராங்க்பர்ட் போய் அங்கிருந்து வேறொரு விமானம் மூலமாக நியூயார்க் செல்லும்படி எனக்குப் பயணச்சீட்டு போடப்பட்டிருந்தது. இரண்டுமே லுப்தான்ஸா விமானம்தான். சென்னையில் இரவு இரண்டு மணிக்கு விமானம். வெளிநாடு செல்வதென்றால் ஐந்து மணி நேரம் முன்னதாக விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று விதி சொல்வதால் முன்னிரவிலேயே வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால் அரை மணி நேரத்தில் நடைமுறைகள் முடிந்து உள்ளே வந்து உட்கார்ந்துவிட்டேன்.

வெளிநாட்டு விமான நிலையத்தில் செல்பேசிக்கு சார்ஜ் போட வெகுவாகச் சிரமப்பட நேர்கிறது. தேடித் தேடி இடத்தைக் கண்டடைய அரை மணி நேரம் ஆயிற்று. கண்டடைந்ததும் அவ்வளவுதான். சார்ஜில் வைத்துவிட்டு வெறுமனே உட்கார்ந்து கிடந்தேன். வெகுநேரம் காத்திருந்தும் தூக்கம் இல்லாமலும் விமானத்தில் ஏறி அமர்ந்தேன். என்னருகில் இருந்தவர் இளைஞர். ஜெர்மனிப் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் மாணவர். சென்னையைச் சேர்ந்தவர். இளவயது என்றாலும் நிறைய பேசிக்கொண்டே இருந்தார். தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் எல்லா விவரங்களையும் சில நிமிடங்களில் சொல்லிவிட்டார். ஜெர்மனியில் அவர் பார்க்கும் பகுதி நேர வேலை முதற்கொண்டு ஜெர்மன் கல்வி முறை வரைக்கும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவன் போலக் கொட்டித் தீர்த்துவிட்டார். தமிழ்ச் சொற்கள் என்றாலும் அது கொட்டும்போது ரசிக்க முடியவில்லை. அந்த நள்ளிரவில் மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.

அந்தச் சமயத்தில் விமானத்துக்குள் அறிவிப்பு. முதலில் ஜெர்மன் மொழி. அடுத்து ஆங்கிலம். ஜெர்மனியர்களின் ஆங்கில உச்சரிப்பு ஓரளவுக்கு நமக்குப் புரியும். ஆகவே கவனித்துக் கேட்டேன். அது முடிந்ததும் ‘வணக்கம்’ என வெளிநாட்டு ஆண் குரல் ஒன்று தொடங்கியது. விமான அறிவிப்பில் முதல் முறையாகத் தமிழைக் கேட்கிறேன். அதுவும் அயல் குரலில். சோர்வு ஓடிப் போன இடம் தெரியவில்லை. ஒரே மொழி சோர்வையும் தருகிறது; சோர்வைப் போக்கவும் செய்கிறது. நிமிர்ந்து உட்கார்ந்து அறிவிப்பைக் கவனித்தேன்.

இது ‘இந்தி’யர்கள் செய்த வேலை! – பெருமாள்முருகன்

இது ‘இந்தி’யர்கள் செய்த வேலை! - பெருமாள்முருகன்

பொது இடங்களில் மொழிப் பயன்பாடு: மகிழ்ச்சியும் சங்கடமும்!

 

தமிழ் அறிவிப்பைக் கேட்டதும் அருகில் இருந்த மாணவருக்கும் வியப்பு. ‘வணக்கம். இப்போது இந்திய நேரம் இரவு ஒன்று முப்பது மணி…’ எனத் தெளிவான உச்சரிப்புடன் நீண்டு சென்றது அறிவிப்பு. அதோடு முடிந்துவிடவில்லை. ப்ராங்க்பர்ட் சென்று சேரும் வரை வந்த அறிவிப்பு ஒவ்வொன்றும் தமிழிலும் செய்யப்பட்டது. சிலவற்றைச் செல்பேசியில் பதிவும் செய்து வைத்துக்கொண்டேன்.

சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளவும்’, ‘சீட் பெல்ட்டை அவிழ்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

எகானமி கிளாசிலிருந்து ஹெட்செட்டை வாங்கிக்கொள்ளுவோம், ஹெட்செட்டைச் சுற்றி வைக்காமல் இருந்தால் எடுத்துக்கொள்ளச் சுலபமாக இருக்கும்.

லுப்தான்ஸா விமானத்தில் பயணம் செய்ததற்காக கேப்டன்… மற்றும் … சார்பாகத் தாங்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘இந்த நாள் இனியதாகவும் தங்கள் தொடர்பயணம் பாதுகாப்பானதாகவும் அமைய அன்புடன் வாழ்த்துகிறோம்.’

ப்ராங்க்பர்ட்டில் இப்போது நேரம் எட்டு மணி அஞ்சு நிமிடங்கள்.

மேலுள்ள பெட்டகங்களைத் திறக்கும்போது ஜாக்கிரதையாகத் திறக்கவும், நன்றி.

இப்படி எல்லா அறிவிப்புகளும் தமிழில் அழகாகச் சொல்லப்பட்டன. பதிவு செய்யப்பட்ட குரல் அல்ல அது. அவ்வப்போது உடனுக்குடன் பேசியதுதான். ‘வாங்கிக்கொள்ளுவோம்’, ‘அஞ்சு நிமிடங்கள்’ எனப் பேச்சு வழக்குத் தன்மைகளும் குரலில் வெளிப்பட்டமையும் அவ்வப்போது சிறு தடுமாற்றம் ஏற்பட்டுப் பின் திருத்திப் பேசியமையமையுமாக அமைந்த அந்த அறிவிப்புகள் எனக்குப் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தின. பைகளை வைக்கும் பரணுக்குப் ‘பெட்டகம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். திறந்து மூட அழகான கதவு அமைந்த பெட்டகம்தான் அது. தமிழைக் கேட்பதில் பல சந்தோஷங்கள். தகவல்கள் நமக்கு உடனே புரிகின்றன என்பது ஒரு விஷயம். நம் மொழி வெளிநாட்டார் உச்சரிப்பில் பெறும் அழகு இன்னொரு விஷயம்.

விமானம் எங்கிருந்து புறப்படுகிறதோ அவ்வூரில் பேசப்படும் மொழியினரே பெரும்பாலும் பயணம் செய்வார்கள்; அல்லது போய்ச் சேரும் ஊரார் பேசும் மொழியினரே பெரும்பாலும் இருப்பார்கள். இருதரப்பும் கணிசமாக இருக்கலாம். ஆக இரண்டு ஊர்களின் மொழியும் வெவ்வேறாக இருப்பின் இரண்டு மொழிகளிலும் அறிவிப்பு செய்வது சரி. பயணிகளுக்கு அவர்களுக்கான மொழியில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மிகவும் உயர்ந்தது. அது மட்டுமல்ல, மொழியைப் பற்றிய அறிவுபூர்வமான பார்வை அதற்குள் இயங்குகிறது என்று சொல்லலாம். மொழியின் அடிப்படைப் பயன் கருத்துப் பரிமாற்றம். அறிவிப்புகளின் நோக்கமே உடனடியாக ஒரு விஷயத்தைக் கொண்டுசேர்ப்பதும் உணர்த்துவதும்தான். அப்படியிருக்க, ஒருவரிடம் அவருக்குப் புரியாத மொழியில் சொல்வதும் ஒன்றுதான்; சொல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். புரியாத மொழி அறிவிப்புக்கு ஆதிக்கத்தைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை.

உள்ளூர் விமானங்களில் நிலை என்ன?

சென்னையிலிருந்து புறப்படும் இந்திய விமானங்களில் உள்நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில்தான் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. அதிலும் பெருங்கொடுமை, சென்னையிலிருந்து திருச்சிக்கும் மதுரைக்கும் கோயம்புத்தூருக்கும் செல்லும் விமானங்களிலும் இந்தியும் ஆங்கிலமும்தான்.

அவ்விமானங்களில் செல்வோரில் தொண்ணூறு விழுக்காட்டினர் நிச்சயம் தமிழ் தெரிந்தவர்களாகவே இருப்பர். தமிழ்நாட்டுக்குள் செல்லும் விமானங்களில்கூடத் தமிழ் இல்லை என்றால் மொழியைப் பற்றிய புரிதல் எத்தனை கீழாக இங்கே நிலவுகிறது என்பதை அறிகிறோம்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கும் ஷார்ஜாவுக்கும் விமானங்கள் செல்கின்றன. இவற்றில் பயணம் செய்வோரில் கிட்டத்தட்ட எழுபத்தைந்து விழுக்காட்டினர் கட்டட வேலை உள்ளிட்ட உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள். அவர்களுக்கு இந்தியும் தெரியாது; ஆங்கிலமும் புரியாது. தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள். ஆனால், அந்த உணர்வேயின்றி அவ்விமானங்களிலும் இந்தி, ஆங்கில அறிவிப்புகள்தான்; தமிழ் கிடையாது. யாருக்கோ ஏதோ சொல்கிறார்கள், நமக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்று பயணிகள் இருக்கிறார்கள். தொலைவிலிருந்து கேட்கும் குரைப்புக்கு இருக்கும் அர்த்தம்கூட இத்தகைய புரியாத மொழி அறிவிப்புக்குக் கிடையாது.

வணக்கம். இப்போது இந்திய நேரம் ஒன்று முப்பது மணி…

பன்மொழிகள் கொண்ட தேசம் இது. ஒவ்வொரு மொழிக்கும் தனி மாநிலம் இருக்கிறது. அம்மாநில மொழிக்கு ஆட்சிமொழி அந்தஸ்தும் இருக்கிறது. இத்தகைய நாட்டில் மொழிப் பயன்பாட்டில் சமத்தன்மையும் அறிவுபூர்வமான செயல்பாடும் இருக்க வேண்டும். நாம் விரும்பியோ, விரும்பாமலோ சில நூற்றாண்டு ஆங்கிலேய ஆட்சியின் காரணமாக ஆங்கில மொழியைக் குறைந்தபட்சம் கற்றுக்கொள்பவர்களாகவும் அதன் செல்வாக்கைத் தவிர்க்க இயலாதவர்களாகவும் இருக்கிறோம். அம்மொழி இன்று உலக அளவில் பெரும்பயன்பாட்டில் இருப்பதையும் மறுக்க இயலாது.

ஆகவே, பொதுவிடங்களில் ஆங்கிலத்தைப் பொதுமொழியாகப் பயன்படுத்திக்கொண்டு அந்தந்த மாநில மொழிகளுக்கும் உரிய இடத்தை வழங்குவதுதான் பொருத்தமானதாக இருக்க முடியும். அதைத் தவிர்த்து ஒரே மாநிலத்துக்குள் நடக்கும் போக்குவரத்தில்கூட அந்த மாநில மொழிக்கு உரிய இடம் இல்லை என்பது மொழித்திணிப்பு, ஆதிக்கம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான். லுப்தான்ஸாவில் ஜெர்மனி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளில் அறிவிக்கிறார்கள். அது போல ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழிகளிலும் அறிவிக்கலாமே. புரியாத மொழிகளை ஏதோ கூச்சல் என்று காதை அடைத்துக்கொண்டு பயணம் செய்து தொலைக்கலாம். அதற்கும் வழியில்லை.

‘இந்தி’யர்கள் செய்த வேலை

கடந்த ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரத்துக்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் கிடைக்கும் வசதியாகிய இலவச வைஃபை சேவையைப் பயன்படுத்த முயன்றேன். இணைப்பு கிடைப்பதற்கு நாட்டின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். இந்தியாவின் பெயரைத் தேடினால் கிடைக்கவில்லை. திரும்பத் திரும்பத் தேடுகிறேன். கிடைக்கவேயில்லை. நாடுகளின் நெடும் பட்டியலில் இந்தியாவின் பெயர் எப்படி விடுபட முடியும்? பல நாடுகளின் பெயர்கள் அந்தந்த நாட்டு மொழியில் இருப்பதைக் கண்டு ஒருவேளை இந்தியாவின் பெயரை இந்தி மொழியில் கொடுத்திருப்பார்களா என்னும் ஐயத்துடன் தேடினேன். ஆம், இந்தி மொழியில்தான் இந்தியாவின் பெயர் கிடைத்தது. அதுவும் ‘இந்தியா’ என்றிருக்கவில்லை. ‘பாரத்’ என்றிருந்தது. அதை நினைவில் கொண்டு இந்த முறை ப்ராங்க்பர்ட் போனபோது தேடி இந்தி எழுத்தில் இருந்த ‘பாரத்’ என்பதைக் கொடுத்து வைஃபை இணைப்புப் பெற்றேன். இந்த இந்தித் திணிப்பு வேலையை ஜெர்மானியர்கள் செய்திருக்க முடியாது. ‘இந்தி’யர்கள் செய்த வேலையாகவே இருக்க முடியும். ‘INDIA’ என்று கொடுத்திருந்தால் தானே இந்தியர்கள் அனைவரும் பயன் பெற முடியும்?

பல மொழிகளின் தேசம் என்னும் பெயருக்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது. ஏதோ இந்தி மொழியின் வரிவடிவத்தில் சில எழுத்துகளை என்னால் அடையாளம் காண முடிந்த காரணத்தால் இணைய வசதியைப் பெற முடிந்தது. அதுவும் ‘பாரத்’ என்னும் பெயரில் இருக்கும் என்பதை நாம் அனுமானிக்க முடியுமா? மொழி ஆதிக்கம் என்னும் வெறி தோன்றியவுடன் அறிவு ஓடிவிடுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் உரிய இடத்தையும் மதிப்பையும் கொடுப்பதுதான் மொழிகளின் செயல்பாட்டையும் மொழி பேசும் மக்களின் உணர்வையும் உணர்ந்த அறிவுச் செயல்பாடாக இருக்க முடியும். ஆதிக்கச் செயல்பாடு ஒருபோதும் இணக்கத்திற்கு உதவாது. அதுவும் மொழி ஆதிக்க உணர்வு ஒற்றுமையைச் சிதைக்கும் அடிப்படைக் காரணமாகும்.

லுப்தான்ஸா விமானத்தில் தமிழைக் கேட்ட பரவசம் எனக்குள் இன்னும் நீடிக்கிறது.

ஜெர்மானியர்கள் மேல் எனக்கு அபரிமிதமான மதிப்பு உருவானது. விமானப் பணிப்பெண் என் இருக்கைக்கு அருகில் வந்தபோது தமிழில் அறிவிப்பு செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்து நன்றி கூறினேன். பிறர் நம் மொழியைப் பயன்படுத்தும்போது நம் மகிழ்ச்சியையும் அங்கீகரிப்பையும் சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் முயற்சியை நாம் பயன்கொள்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வகையில் நன்றி சொல்வது அத்தகைய அறிவிப்புகள் தொடர்வதற்குச் சிறுபங்கையேனும் ஆற்றும் என்னும் நம்பிக்கை.

—–

(மின்னம்பலம் இணைய இதழில் 20-12-18, 21-12-18 ஆகிய இருநாட்களில் இருபகுதிகளாக வெளியான கட்டுரை.)