‘வீதி’ உலா

 

‘வீதி’ உலா ‘வீதி’ உலா

 

புதுக்கோட்டை ‘வீதி’ அமைப்பின் நூறாவது நிகழ்வைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்வு 01 அக்டோபர் 2022 அன்று முழுநாள் நடைபெற்றது. உரைகள், பாராட்டுகள், விருதுகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய உண்மையான கொண்டாட்டம். மாலை நிகழ்வில் ‘பேருரை’ நிகழ்த்தச் சென்றேன். இந்நிகழ்வில் நான் பங்கேற்க மூன்று காரணங்கள்.

என் மாணவர் நா. அருள்முருகன் சில ஆண்டுகள் புதுக்கோட்டையில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றினார். அதிகாரிக்குரிய அலுவலக எல்லையோடு முடக்கிக் கொள்ளாமல் ஆசிரியர்களோடும் இலக்கிய ஆர்வலர்களோடு தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு செயல்களைச் செய்தார். அவற்றுள் ஒன்று ‘வீதி’ அமைப்பைத் தொடங்கியது. மாணவர் முன்னின்று தொடங்கிய அமைப்பின் நூறாவது நிகழ்வுக்குச் செல்வதைக் கடமையாகக் கருதினேன்.

2005ஆம் ஆண்டில் ‘கூடு’ என்னும் அமைப்பைத் தொடங்கி எங்கள் வீட்டு மாடியில் நடத்தி வருகிறோம். சிலசமயம் தொடர்ந்தும் இடைவிட்டும் நடைபெறும் அதன் நிகழ்வு ஒன்றுக்கு அருள்முருகன் வந்தார். அவருடன் புதுக்கோட்டை நண்பர்களும் வந்தனர். அந்நிகழ்வு கொடுத்த உத்வேகத்தில் நாமும் ‘வீதியில் கூடுவோம்’ என்னும் எண்ணம் உருவாக அவர்கள் தொடங்கிய அமைப்பு ‘வீதி.’ அதுவும் என்னைப் புதுக்கோட்டைக்கு இழுத்துச் சென்றது.

30 செப்டம்பர் 2022 அன்று விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தேன். அதற்கு அடுத்த நாள் இந்நிகழ்வு. நண்பர்களின் அழைப்பு குறியீடு போல மனதில் தோன்றியது. மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன்.

நம் இலக்கிய நிகழ்வுகளில் நேர மேலாண்மை அறவே கிடையாது. வாழ்த்துரையாளர்கள் நேரத்தை விழுங்கிவிடுவார்கள். சிறப்புரை பேசுபவரைக் ‘கால்மணி நேரத்தில் முடியுங்கள்’ என்பார்கள். வெகுதூரம் பயணம் செய்து செல்வது கால்மணி நேரப் பேச்சுக்குத்தானா என்று வெறுப்பு ஏற்படும். சிற்றுரை ஆற்றக்கூட வாய்ப்பில்லாமல் சுருக்கவுரை கூறி முடிக்க நேரும். ‘முக்கால் மணியிலிருந்து ஒருமணி நேரம் வரை எனக்குக் கொடுக்க முடியுமானால் வருகிறேன்’ என்று முன்கூட்டியே சொல்லி உறுதி வாங்கிக்கொண்டே இப்போதெல்லாம் நிகழ்வுக்குச் செல்கிறேன். கிட்டத்தட்ட நூற்றைம்பது கிலோ மீட்டர் பயணம் செய்து சென்ற என்னை ‘வீதி’ நண்பர்கள் ஏமாற்றவில்லை. ஒருமணி நேரம் ‘வீதி’யில் உலாவினேன். பேசப் பேச உருவானதுதான் பேச்சின் சாரம். அதன் ஒருபகுதியைச் சிறுகட்டுரை ஆக்கலாம் என்றிருக்கிறேன்.

அன்பும் கனிவும் நிறைந்த புதுக்கோட்டை ‘வீதி’ நண்பர்களுக்கு நன்றி. இன்னும் இவ்வமைப்பு பல நூறு கூட்டங்களை நடத்திச் சிறக்கட்டும்.
—– 03-10-22