தற்போது இறைவணக்கப் பாடல் நிலையிலிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க விஷயம். இதையொட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்’ பாடலை முழுமையாகப் பாட ஏற்பாடு செய்ய வேண்டும், அதுதான் மனோன்மணீயம் சுந்தரனாருக்கு மரியாதை செய்வதாகும் என்னும் குரல்கள் எழுகின்றன. சுந்தரனார் எழுதியுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பகுதியை வாசிக்காத அறியாமை காரணமாக இப்படிப்பட்ட கோரிக்கை வைக்கப்படுகிறது.
‘மனோன்மணீயம்’ நாடகத்தின் பாயிரப் பகுதியில் சிவபெருமானுக்குக் கடவுள் வணக்கம் செலுத்திவிட்டு ‘தமிழ்த்தெய்வ வணக்கம்’ செய்கிறார் சுந்தரனார். அவர் எழுதியுள்ள வணக்கப் பகுதி ‘பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா’ என்னும் பாவகையால் ஆனது. ஆறடித் தரவுகள் இரண்டும் இரண்டடித் தாழிசை பன்னிரண்டும் பன்னிரண்டு அடி கொண்ட ஆசிரியச் சுரிதகமும் நடுவில் தனிச்சொல் பெற்று வருவதாக இந்தக் கலிப்பாவை அவர் அமைத்துள்ளார். முழுமையான பாடல் என்றால் தரவு பன்னிரண்டு அடி, தாழிசை இருபத்து நான்கு அடி, சுரிதகம் பன்னிரண்டு அடி என நாற்பத்தெட்டடி கொண்டது.
நாற்பத்தெட்டடிப் பாடலைப் பாடி முடிக்க ஏறத்தாழ எட்டு நிமிடம் ஆகும். ஒரு நிகழ்வில் இத்தனை பெரிய வாழ்த்து அமைவது பொருத்தமில்லை. முழுவதையும் ஒருவர் மனனம் செய்வதும் சாத்தியமில்லை.
தமிழ்த் தெய்வ வணக்கத்தில் சுந்தரனார் கொண்டுள்ள சில கருத்துகள் பொருத்தம் இல்லாதவையாகவும் சர்ச்சைக்கு உரியவையாகவும் கருதப்பட வாய்ப்புகள் மிகுதி. ‘கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தவை’ என்கிறார். இக்கருத்தை பிற திராவிட மொழியார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழின் பழமையைக் காட்ட ‘உலகின் முதல் மொழி தமிழே’ என்போர் வேண்டுமானால் இதனால் உவப்படையலாம்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் மூலதிராவிட மொழி என்னும் தாயிலிருந்து பிறந்த சேய்கள். இவை சகோதர மொழிகள். தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் உள்ளது சகோதர உறவு; தாய் சேய் உறவல்ல. இதைக் கால்டுவெல் தொடங்கி மொழியியலாளர்கள் நிறுவியிருக்கின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் இக்கருத்து இடம்பெற்றால் பிற திராவிட மொழியினர் தமிழ்நாட்டின் மேல் சினம் கொள்வர். மாநில உறவுகள் பாதிக்கப்படும். ஏற்கனவே இருக்கும் எல்லைப் பிரச்சினை, நதிநீர்ப் பிரச்சினை ஆகியவற்றுக்கிடையே மொழிப்பிரச்சினையும் சேர்ந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது.
அதே போல ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாதது உன் சீரிளமை’ எனச் சுந்தரனார் கூறுகிறார். இதைத் தமிழ்த்தாய் வாழ்த்தில் சேர்த்தால் மத்திய மாநில உறவே சிதைந்துவிடும். ‘ஆரியம்’ என்று சுந்தரனார் குறிப்பிடுவது சமஸ்கிருத மொழியை. அது உலக வழக்கில் இல்லை; அழிந்து ஒழிந்து போய்விட்டது என்கிறார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு ‘சமஸ்கிருதம் போல் உலக வழக்கு அழியாமல் இளமையோடு நீ இருக்கிறாய்’ எனத் தமிழைப் போற்றுகிறார். சமஸ்கிருதம் இன்னும் பேசப்படும் மொழி என்று கூறுவோர் உள்ளனர். மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்குச் சில நூறு கோடிகளை ஒதுக்குகிறது. இந்நிலையில் அம்மொழியை உலக வழக்கு ஒழிந்தது எனத் தமிழ்த்தாய் வாழ்த்தில் கூறினால் பெரும் சர்ச்சை உருவாகும்.
இவ்விரு பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கத்தோடும் வாழ்த்துப் பாடல் ஒரு நிமிடத்திற்குள் பாடப்படுவதாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்திலும் இப்போதைய தமிழ்த்தாய் வாழ்த்து அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய வடிவத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாச் சொற்களும் சுந்தரனார் எழுதியதே. அவர் எழுதிய முதல் ஆறடித் தரவுப் பகுதியை அப்படியே வைத்துக்கொண்டு இரண்டாம் தரவின் கடைசி அடி ஒன்றை எடுத்து இணைத்து ‘வாழ்த்துதுமே’ என்னும் சொல்லை அடுக்கி ஓரடியாக்கி எட்டடிப் பாடலாகப் பாடப்படுகிறது.
விவாதத்தையும் சர்ச்சையையும் தவிர்க்கும் வகையில் தமிழின் பெருமையை மட்டும் சொல்லும் இந்த எட்டடிப் பாடல் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ எனப் பாட மிகவும் பொருத்தமானது. இதை இவ்விதம் அமைத்து நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடும்படி 1970ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவரது சமயோசிதம் இதில் செயல்பட்டுள்ளது. அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் இருக்காது என்னும் அவரது எண்ணம் பாராட்டத்தக்கது.
—– 17-12-21
Comments are closed.