2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

 

 

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள் 2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 1

2022ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இல்லை என்றாலும் ஓரளவு வாசிக்க முடிந்தது. அவற்றுள் நினைவில் தங்கியவை, நினைவுக்கு வருபவை எனச் சில நூல்களை அறிமுகப்படுத்த உள்ளேன். வாசிக்கும் ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் என்று நினைப்பதுதான்; செயல்படுத்த முடிவதில்லை.

இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்க விரும்புவோருக்கான பரிந்துரையாகவும் இது அமையும். நண்பர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்கி ஓரிரு வரிகளில் இவ்வறிமுகம்.

மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீரா. அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் பல மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் இப்போதுதான் மோ.செந்தில்குமார் மொழிபெயர்ப்பில் வரத் தொடங்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன் நான் வாசித்த நாவல் ‘கபர்.’ மனதை விட்டு நீங்காத படைப்பு. எதிர் வெளியீடு.

 

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 2

தமிழ்ப்பிரபாவின் ‘கோசலை’

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியர் ஒருவரின் மகளாகக் குள்ள உருவத்துடன் மாற்றுத் திறனாளராகப் பிறந்தவர் கோசலை. பல்வேறு துயரங்கள் நிறைந்த வாழ்க்கை. ‘இவர்களுடைய வெறுப்பை எல்லாம் என் ஆற்றலாக மாற்றினேன்’ என்னும் அம்பேத்காரின் வாசகத்தால் உத்வேகம் பெற்றுச் சரியான வழிகாட்டுதலால் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தவர். நூற்றாண்டு கண்ட சிந்தாதிரிப் பேட்டை நூலகராக அமர்ந்து அப்பகுதி மக்களின் கல்விக்கு உதவி, செயற்பாட்டாளராக வாழ்ந்தவர். மக்களால் கொண்டாடப்பட்டு, அரசு நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவரது வரலாறாக இந்நாவல் விரிகிறது. ‘பேட்டை ராணி’யாக வாழ்ந்து மடிந்த ஆளுமை மிக்க பெண் ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தைப் புனைவா வரலாறா என்று தெளிவாக வகைப்படுத்த முடியாத வகையில் நாவலாக எழுதியுள்ளார் தமிழ்ப் பிரபா. வாழ்க்கை வரலாற்று எழுதியலுக்கான தொகுத்துச் சொல்லும் மொழிநடை இந்நாவலை மேலெடுத்துச் செல்கிறது. சென்னை நகரப் பின்னணிக் கதைகளையும் இடையிடையே கொண்டுள்ள இதை வரலாற்று ஆவணம் என்றும் சொல்லலாம். தம்மளவில் பொதுநோக்குடன் செயல்பட்டுச் சுவடில்லாமல் மறைந்த எத்தனையோ மனிதர்களின் வகைமாதிரியாகக் கோசலை இருக்கிறார்.

அச்சுக்கு முன் வாசித்தேன். அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்.

நீலம் வெளியீடு.

 

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 3

‘சாதி தோற்றமும் வளர்ச்சியும் ஓர் அறிமுகம்’

சுரிந்தர் எஸ். ஜோதிகா

தமிழில்: பக்தவத்சல பாரதி

காலச்சுவடு பதிப்பகம்

‘சாதி’ என்னும் தலைப்பிலான அறிமுக நூல் இது. இந்தியர்களுக்கு யாரும் சாதியை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. பிறப்பிலேயே சாதி அடையாளம் ஒட்டிக்கொண்டு வருவதைப் போல வளர்ப்பில் சாதி அறிமுகமும் நடந்துவிடுகிறது. பின்னர் வாழ்நாள் முழுதும் சாதி பலவிதமாகத் தொடர்கிறது. இறப்பிலும் அது தன் அடையாளத்தைப் பதிக்காமல் விடுவதில்லை. ஆனால் சாதியின் அடிப்படைகளையும் அன்றாடத்தில் அதன் செயல்பாடுகளையும் நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம்? அதன் பரிமாணங்களை உணர்ந்திருக்கிறோமா? அவற்றை எல்லாம் இந்த நூல் அறியத் தருகிறது.

சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது. சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.

எளிய முறையில் எழுதப்பட்டுள்ள நூல். சிறந்த மொழிபெயர்ப்பு. கட்டாயம் வாசியுங்கள்.

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 4

செவியன், இரா. பிரபாகர்

சிறுகதைத் தொகுப்பு

நம் பதிப்பகம்

இரா. பிரபாகரின் முதல் நூல். கவனம் பெற வேண்டிய நூல். வாங்கி வரவேற்போம்.

இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளேன். அதிலிருந்து சிறுபகுதி:

இத்தொகுப்பில் உள்ள பதினான்கு கதைகளும் நன்றாக வடிவம் பெற்றுள்ளன. ‘தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி’ என்னும் சம்பந்தர் தேவாரத்திலிருந்து தலைப்பெடுத்த ‘செவியன்’ அவருடைய அனுபவம் செறிவாக ஊடாடும் கதை. காது கேளாமைப் பிரச்சினை உள்ளோரைச் ‘செவிடு’, ‘செவிடர்’ என்று சொல்வது இழிவுபடுத்துவதாக மாறிவிட்டது. மாற்றுத்திறனாளர், திருநர் எனச் சொற்களை மாற்றிச் சமூக அங்கீகாரம் கொடுக்கும் காலம் இது. ‘செவிடு’ என்பதற்குப் பதிலாகக் ‘காது கேளாதோர்’ என்பதைக் கையாண்டு வருகிறோம். அதுகூட நேரடி விளக்கமாக இருக்கிறது. ‘செவியர்’ என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இந்த எண்ணம் பிரபாகர் இந்தக் கதைக்குத் தலைப்பு வைத்த போது என் மனதில் ஏற்பட்டது. ஒருவகை உடல் குறைபாடு உடையோர் அதை மறைத்துக்கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதையும் அதற்குப் படும் பாடுகளையும் அதுவே மனப்பிரச்சினையாக மாறுவதையும் இக்கதை ஆழமாகப் பேசுகிறது. செவியர்களைப் பற்றி இவ்விதம் ஒருகதை இதுவரை எழுதப்பட்டதில்லை.

 

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 5

செபாஸ்டியன் குடும்பக் கலை

டி. எம். கிருஷ்ணா

தமிழில்: அரவிந்தன்

காலச்சுவடு பதிப்பகம்

தமிழ் இலக்கியத்தில் இசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன. இசை நூல்கள் பலவும் இருந்தன என்று அறிகிறோம். ‘பஞ்சமரபு’ மட்டுமே இப்போது கிடைத்திருக்கிறது. நவீன காலத்திலும் அதிகமான நூல்கள் வரவில்லை. உ. வே. சாமிநாதையர் எழுதியவை, யாழ் நூல், கருணாமிர்த சாகரம் எனச் சிலவற்றைச் சுட்டலாம். இசைக் கலைஞர்கள், திரையிசை என ஓரளவு நூல்கள் சமீபமாக வருகின்றன. இவ்வரிசையில் வைத்துப் பார்க்கும்போது ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ மிகவும் வேறுபட்டதாகவும் முக்கியமானதாகவும் விளங்குகிறது.

மிருதங்கம் உருவாக்குபவர்களைப் பற்றியது இந்நூல். இன வரைவியல், விளிம்பு நிலை ஆய்வு, இசை வரலாறு, இசை சார்ந்த சமூக வரலாறு எனப் பல கோணங்களில் காண்பதற்குரிய கள ஆய்வு. சாதி உட்பட எல்லாக் கட்டுக்களையும் மீறி உள்ளார்ந்த அன்பு செலுத்தக் கலை உதவும் என்னும் நம்பிக்கையையும் இந்நூல் தருகிறது.

அரவிந்தனின் மொழிபெயர்ப்பு வாசிப்புத்தன்மையை இலவாக்குகிறது.

ஆங்கிலத்தில் வெளியாகி மிகுந்த கவனம் பெற்றது. தமிழில் இன்னும் கூடுதலாகக் கவனம் பெற வேண்டும். அறிதலுக்கும் விவாதத்திற்கும் ஒருசேர உட்படுத்த இதில் பல விஷயங்கள் உள்ளன. விலையடக்கப் பதிப்பாக மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

இந்நூலைப் பற்றி இன்று திருச்சியில் பேச உள்ளேன்.

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

 

நூல் 6

கொடுங்கோளூர் கண்ணகி ஏன் ‘தெறி’ பாடுகின்றாள்?

சத்தியப்பெருமாள் பாலுசாமி

நடுகல் பதிப்பகம்

ஆய்வுக்கென்று இருக்கும் வரையறைகளை எல்லாம் உடைத்து எழுதிய நூல். கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்கோளூர் கண்ணகி கோயிலில் பாடப்படும் ‘ஆபாசப்’ பாடல்களையும் விழா நிகழ்வுகளையும் கள ஆய்வு மூலம் திரட்டி அவற்றைப் பெரியாரியப் பார்வையில் விவரிக்கும் நூல். தெறிப் பாடல்களின் வெளிச்சத்தில் சிலப்பதிகார மறு வாசிப்பு என்று சொல்லலாம்.

தர்க்கமும் எள்ளலும் கூடிய துள்ளல் மொழி நடை நூலுக்குள் இழுத்துச் செல்கிறது. இப்படியெல்லாம் ஆய்வு நூலை எழுத முடியுமா என்னும் வியப்பைத் தருகிறது. மரபு மனம் கொண்டவர்கள் தடுமாறிப் போவார்கள். திறந்த மனத்தோர் சுவைத்துப் படிப்பர்.

வாசித்து விவாதிக்க வேண்டிய நூல்.

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 7

வ. உ. சி. : வாராது வந்த மாமணி

தொகுப்பும் பதிப்பும்: ஆ. இரா. வேங்கடாசலபதி

காலச்சுவடு பதிப்பகம்

கப்பலோட்டியவர்; செக்கிழுத்த செம்மல்; பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர் முதலிய பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவர் பிறந்த நூற்றைம்பதாம் ஆண்டில் வெளியாகியிருக்கும் நூல் இது.

அவர் வாழ்ந்த காலத்தில் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ரகசியப் போலீஸ் குறிப்புகள், பிறர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றையும் அவர் இறந்தபோது இதழ்களில் வெளியான இரங்கலுரைகளையும் தொகுத்துத் தருகிறது.

வ.உ.சி. தொடர்பான ஆய்வில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக ஈடுபட்டு வருபவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. வ.உ.சி. கடிதங்கள், திலக மகிரிஷி, சிவஞானபோத உரை முதலிய வ.உ.சியின் எழுத்துக்களை மிகச் சிறப்பாகப் பதிப்பித்தவர்.

‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்’ என்னும் முக்கியமான ஆய்வு நூலையும் நீண்டகாலமாக இருந்த சர்ச்சை ஒன்றைத் தீர்க்கும் வகையில் உரிய ஆதாரங்களோடு ‘வ.உ.சி.யும் காந்தியும் : 347 ரூபாய் 12 அணா’ நூலையும் சலபதி எழுதியுள்ளார்.

வரலாற்று ஆய்வில் தனித்த பார்வையும் புதுச்சுவை தரும் எழுத்து முறையும் கொண்டவர். வ.உ.சி. தொடர்பான பயணத்தில் ‘வாராது வந்த மாமணி’க்கும் முக்கிய இடம் உண்டு.

வாசிப்போருக்குத் தேவைப்படும் அனைத்தையும் திரட்டித் தரும் அவரது பதிப்புமுறை இந்நூலிலும் பின்னிணைப்பு, படங்கள் உள்ளிட்டவற்றுடன் மிளிர்கிறது. முன்னுரை தகவல் களஞ்சியமாகவும் பெரும் ஆய்வுரையாகவும் திகழ்கிறது.

மாபெரும் ஆளுமையைப் பற்றி இந்நூலை ஒருவரும் தவறவிடக் கூடாது.

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

 

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 8

கறிச்சோறும் கவுளி வெற்றிலையும்

(சாதியினாற் சுட்ட வடு), கட்டுரைகள்

திருக்குமரன் கணேசன்

காலச்சுவடு பதிப்பகம்

2012ஆம் ஆண்டு ‘சாதியும் நானும்’ கட்டுரைத் தொகுப்பைப் பதிப்பித்தேன். முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகள். சாதியைத் தங்கள் வாழ்வில் உணர்ந்த அனுபவப் பதிவுகள். முன்னுதாரணமற்ற வகையிலான இந்நூல் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் சாதி பிரிக்க முடியாமல் புரையோடிப் போயிருக்கிறது என்பதை வெளிப்படையாகப் பேசியது. இவ்வகையில் நிறைய நூல்கள் வெளிவர வேண்டும் எனவும் சாதியத்தின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள அன்றாடம் சார்ந்த அனுபவங்கள் பெரிதும் உதவும் என்றும் பலர் பேசினர். ஆனால் நூல்கள் எதுவும் வரவில்லை.

இப்போது திருக்குமரன் கணேசன் எழுதியுள்ள ‘கறிச்சோறும் கவுளி வெற்றிலையும்’ அவ்வகையில் மிகவும் முக்கியமான நூல். அன்றாட வாழ்வில் சாதி எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தம் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கட்டுரையின் முடிவும் மனக்காயத்தின் வலியை வெளிப்படுத்துகிறது.

எந்தச் சாதியில் பிறந்தவராக இருந்தாலும் சரி, தம் அனுபவங்களை இப்படி வெளிப்படையாக எழுத வேண்டும். ஓராயிரம் புத்தகங்கள் வர வேண்டும். சாதி ஒழிய அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது உதவும் என்பது என் நம்பிக்கைகளில் ஒன்று. ஆகவே திருக்குமரன் கணேசனின் இந்நூலை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

வாசியுங்கள்; பேசுங்கள்.

—–

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 9

ஆநிரை கவர்தல், மீட்டல், ஏறு தழுவுதல் =

மாட்டுப் பொங்கல்

ஆறு. இராமநாதன்

மணிவாசகர் பதிப்பகம்.

பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கூறும் ஆநிரை கவர்தல், மீட்டல், ஏறுதழுவுதல் ஆகியவற்றையும் இன்று மக்கள் வழக்கில் நிலவும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்தையும் ஒப்பிட்டு ஆயும் நூல் இது. அவற்றின் தொடர்ச்சியே மாட்டுப் பொங்கல் என இந்நூல் நிறுவுகிறது. தை மாதம் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டா என்னும் வினாவுக்கும் ஆய்வு ரீதியான விடை இதில் இருக்கிறது.

நாட்டுப்புறவியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்குபவர் ஆறு. இராமநாதன். கள ஆய்வில் தரவுகள் திரட்டுவதிலும் அவற்றை முறையான நாட்டுப்புறவியல் கோட்பாடுகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்வதும் அவரது இயல்பு. அவர் தேர்வு செய்யும் ஆய்வுக் களங்களும் பார்வையும் தனித்தன்மை கொண்டவை. அவர் எழுதிய எந்த நூலும் ஏமாற்றம் தராது.

‘மாட்டுப் பொங்கல்’ வாசித்துப் பொங்கல் கொண்டாடுங்கள்.

—–

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

நூல் 10

நான் கண்ட எழுத்தாளர்கள்

கு. அழகிரிசாமி

தமிழ்ச் சிறுகதையில் சாதனை படைத்த எழுத்தாளர்களில் ஒருவர் கு. அழகிரிசாமி. அவரது நூற்றாண்டு இப்போது தொடங்கியுள்ளது.

பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். நாடகம், நாவல், பதிப்பு எனப் பல துறைகளில் ஈடுபட்டவர்.

தம் சமகால எழுத்தாளர்களைப் பற்றி அவர் எழுதிய சுவாரசியமான நூல் ‘நான் கண்ட எழுத்தாளர்கள்.’ படைப்புகளை வாசிப்போர் அவற்றை உருவாக்கிய எழுத்தாளர்களைப் பற்றி அறிய ஆவல் கொள்வது இயல்பு. அவ்வாவலை நிறைவு செய்யும்

அருமையான

நூல். புதுமைப்பித்தன், ச. வையாபுரிப்பிள்ளை, டிகேசி, ரகுநாதன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் மிகச் சிறந்தவை.

பல ஆண்டுகளாக அச்சில் இல்லாத இந்நூலைப் பழ. அதியமான் நவீனப் பதிப்பு முறைகளைக் கைக்கொண்டு தெளிவுறப் பதிப்பித்துள்ளார்.

நம் நாயக எழுத்தாளர்களைப் பற்றி அறிந்து மகிழ வாசியுங்கள்.

 

—–