2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

 

 

2023 ஜனவரி, சென்னைப் புத்தகக் கண்காட்சியின் போது சில நூல்களை அறிமுகப்படுத்தி முகநூலில் குறிப்புகள் எழுதினேன். அது பலருக்கும் பயன்பட்டதாகத் தெரிவித்தனர். இவ்வாண்டும் அப்படி எழுத விரும்பினேன். 2024 புத்தாண்டு எனக்குப் பெருந்துயராக விடிந்தது. அதிலிருந்து மீளாத மனநிலையும் தொடர்பயண அலுப்பும் சேர்ந்து எதையும் எழுத விடவில்லை. எனினும் நண்பர்களது வேண்டுகோளைத் தவிர்க்க இயலாமல் சில நூல்களுக்கு அறிமுகக் குறிப்புகள் எழுதத் தீர்மானித்துள்ளேன். ஓரிரு நாட்களுக்கு இயன்ற அளவு இதைச் செய்வேன். இவை முற்றிலும் என் வாசிப்பு சார்ந்த தேர்வுகள்.

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 1

ஆசிரியர் : ய.மணிகண்டன்

நூல்: பாரதியும் உ.வே.சா.வும்

வெளியீட்டு விவரம்: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை: ரூ.190.

உ.வே.சாமிநாதையர் எழுத்துக்களில் தீவிர ஈடுபாடு கொண்டவன் நான். அவர் பணிகளை முன்வைத்துப் பதிப்பு, பாட வேறுபாடு தொடர்பாகவும் பிற கோணங்களிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றை நூலாக்க வேண்டும். ‘உ.வே.சா.வின் பன்முக ஆளுமை’ என்னும் தலைப்பில் நூல் ஒன்றையும் தொகுத்துள்ளேன். அவரது  ‘என் சரித்திரம்’ குறித்துச் சில உரைகளையும் வழங்கியுள்ளேன். அந்நூல் தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது என்றும் அதை வாசித்தவரையே தமிழ் இலக்கியம் கற்றவர் எனச் சொல்லலாம் என்றும் பல இடங்களில் கூறியிருக்கிறேன். உ.வே.சா. குறித்து புதிதாக ஏதாவது நூல் வருகிறதா என  ஒவ்வோர் ஆண்டும் எதிர்பார்ப்பது வழக்கம். இவ்வாண்டு அப்படி எதிர்பார்த்த நூல் ய.மணிகண்டன் எழுதியது.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவராகப் பணியாற்றுபவர் ய.மணிகண்டன். யாப்பியலில் தேர்ந்தவர். பாரதிதாசன் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுப் புதிய செய்திகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்தவர். ‘பாரதிதாசமும் மணிக்கொடி மரபும்’, ‘மணிக்கொடி கவிதைகள்’ ஆகிய நூல்கள் நவீன இலக்கிய வாசகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

கடந்த சில ஆண்டுகளாகப் பாரதியியலுக்கு இவரால் புத்துயிர் கிடைத்திருக்கிறது.  ‘பாரதியும் காந்தியும்’ என்னும் நூலைக் கடந்த ஆண்டு வெளியிட்டார். இவ்வாண்டு ‘பாரதியும் உ.வே.சா.வும்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பாரதிக்கும் உ.வே.சா.வுக்கும் இடையில் இருந்த நட்பு, ஒருவர் இன்னொருவரைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பு ஆகியவற்றை உரிய ஆவணச் சான்றுகளோடு இந்நூலில் எழுதியுள்ளார். பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் சிறப்பை உ.வே.சா. அறியவில்லை, உரிய வகையில் பாரதியாரை அங்கீகரிக்கவில்லை என்றெல்லாம் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சரியான ஆதாரங்களோடு மென்மையாக மறுத்துரைக்கிறார்.

ஆய்வு நூல் என வாசிக்கத் தயங்க வேண்டியதில்லை. ஓட்டமும் சுவையும் கூடிய எழுத்து முறை. தெளிந்த தொடர்கள். நூலுக்குத் தேவையான பின்னிணைப்புக் கட்டுரைகள். நூல் பாதி; பின்னிணைப்புப் பாதி. இரண்டு பகுதிகளையும் ஒருசேர வாசித்துவிட முடியும். நூறாண்டுக்கு முந்தைய பயணம் செய்து பாரதியையும் உ.வே.சா.வையும் சந்தித்து வந்த அனுபவத்தை வழங்கும் நூல் என்றே சொல்வேன்.

—–  13-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் 2

நூல்: கந்தர்வன் கதைகள்

வெளியீடு: சீர் வாசகர் வட்டம், சென்னை. விலை: ரூ.200/-

ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கதைகள் என்னும் அளவில் மிகக் குறைவாக எழுதியவர் கந்தர்வன். ஆனால் ஒவ்வொரு கதையும் மனதில் ஆழப் பதியும் சம்பவ வலுக் கொண்டது. மிக நிதானமாகக் கதை சொல்லத் தொடங்குவார். முதல் பத்தியிலேயே அவருக்கு எதிரில் உட்கார்ந்து ‘ம்’ போடும் ஆளாக மாறிப் போவோம். சாதாரணச் சம்பவம் ஒன்றைச் சொல்வது போலத் தோன்றும். அச்சம்பவத்தை விவரிக்கும் கோணமும் அதற்குள் இயங்கும் தனித்த பார்வையும் மாபெரும் அனுபவத்துள் நம்மைக் கொண்டு சேர்க்கும். கதை முடிவில் புதிய அறிதல் ஒன்றையும் பெறுவோம்.

அவர் எழுதியவை 62 கதைகள். இவற்றுக்குள் சில வேறுபட்ட முயற்சிகளையும் அவர் செய்து பார்த்திருக்கிறார். அரண்மனை நாய், கொம்பன் ஆகியவை குறியீட்டுக் கதைகள். ‘காந்தாரி’ என்னும் கதை மகாபாரதப் பாத்திரம் ஒன்றை மறுவாசிப்பு செய்யும் முயற்சி. அப்பாவும் அம்மாவும், தாத்தாவும் பாட்டியும் ஆகியவை தம் முன்னோர் வாழ்வை எழுதிப் பார்க்க முனைந்தவை. ‘பேசுகிறேன்’ என்னும் தலைப்பில் ஒரு சுயசித்திரம். எல்லாமே வெற்றி பெற்ற முயற்சிகள்தாம். விதவிதமான பாத்திரங்கள். வேறுபட்ட களங்கள். அழுத்தமான சம்பவங்கள். ஒருகதைகூட ஏமாற்றம் தராது.

அவர் வாழ்நாளில் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்திருந்த கதைகளை ஒரே தொகுப்பாக ‘வம்சி புக்ஸ்’ வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு அவர் கதைகளை அரசு நாட்டுடைமை ஆக்கியது.  வெவ்வேறு பதிப்பகங்களும் வெளியிட்டன. நன்கொடையாளர் உதவி மூலம் முக்கியமான நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டு வழங்கும் ‘சீர் வாசகர் வட்டம்’ இப்போது  வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 600 பக்க நூலின் விலை நூறு ரூபாய் என வைத்து இரண்டாயிரம் படிகள் விற்பனை முடிந்துவிட்டது. இப்போது ரூபாய் இருநூறுக்குக் கிடைக்கிறது. இதுவுமே குறைவுதான். விலை குறைவு என்பதால் தரம் குறையவில்லை.  நல்ல தாளில் அழகான தயாரிப்பு; கெட்டி அட்டைப் பதிப்பு. கதைகளைக் கால வரிசைப்படுத்தியும் கொடுத்துள்ளனர். இதுவரை தொகுப்பில் சேர்க்கப்படாதிருந்த கதை ஒன்றையும் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.

ஒருபிரதி அல்ல; பல பிரதிகள் வாங்கலாம். நண்பர்களுக்கெல்லாம் பொங்கல் பரிசாக வழங்கலாம்.

—–   14-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 3

நூல்: கவிதை பொருள் கொள்ளும் கலை

ஆசிரியர் : பெருந்தேவி

வெளியீடு: எழுத்து பிரசுரம், சென்னை, விலை: ரூ.200/-

நவீன கவிதை நூல்களை வெளியிடப் பதிப்பகங்கள் தயங்குகின்றன; கவிதை எழுதுவோரைத் தவிர அதற்கு வாசகர்களே இல்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆசிரியராகக் கல்லூரியில் பணியாற்றிய போது ‘கவிதை புரியவில்லை’ என்னும் குரலைப் பெரிதும் எதிர்கொண்டேன். அப்போதெல்லாம் ‘ஒரு கவிதையை இரண்டு முறை வாசித்துப் பாருங்கள். அப்போதும் புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். புரிகிற கவிதையை வாசியுங்கள்’ என்றே சொல்வேன். ‘ஒருகவிதைகூடப் புரியவில்லை’ என்று சிரித்தபடி சொல்லும் மாணவர்கள் உண்டு. என்ன செய்வது?

இத்தகைய நிலைக்கு வாசகர்கள் மட்டும் காரணமல்ல. கவிஞர்களும் திறனாய்வாளர்களும் முதன்மைக் காரணம்.  ‘கவிதை உணர்வதற்கு. விளக்குவதற்கு அல்ல’ என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும் கவிஞர்களும் உண்டு. கவிதையை அணுகும் முறைகள் பற்றிப் பேசும் கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. பட்டியலிட்டால் வெகுகுறைவாகவே நூல்கள் தேரும். அவற்றிலும் அநேகம் கடுமொழியைக் கொண்டவை.

இந்நிலையில் பெருந்தேவி எழுதிய ‘கவிதை பொருள் கொள்ளும் கலை’ என்னும் நூல் ஆசுவாசம் தருகிறது. நூலின் தலைப்பு  ‘கவிதை: பொருள் கொள்ளும் கலை’ என ஒரு முக்காற்புள்ளியோடு இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது. நிறுத்தற் குறிகளுக்கு எதிரானவர்கள் கவிஞர்களாயிற்றே எனச் சமாதானம் கொண்டேன். இந்நூலில்   ‘கவிதையைப் பொறுத்தவரை வாசிப்பின் சாத்தியங்கள் முடிவற்றவை’ என்று கூறும் அவர் சிலரது கவிதைகளை முன்னிறுத்தி அச்சாத்தியங்களில் சிலவற்றை நமக்குக் காட்டுகிறார். அவ்வப்போது இதழ்களில் எழுதிய கட்டுரைகளை விரிவுபடுத்தி நூலாக்கியுள்ளார். ஆத்மாநாம், நகுலன், அபி, பிரம்மராஜன், சேரன், மனுஷ்யபுத்திரன் (தம் கவிதைகளைப் பற்றி யாரும் எழுதுவதில்லை என்று வருந்தும் மனுஷ்யபுத்திரன் மகிழ இக்கட்டுரை ஒன்றே போதும்), பாரதி, திரிசடை (ஏன் ஒரே ஒரு பெண்கவிஞர் தேவி? சும்மா கேட்டு வைப்போம்.), ஞானக்கூத்தன் ஆகியோர் கவிதைகளை முன்வைத்து இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஹைடெக்கர், தெரிதா, ஜோனதான் கல்லர் முதலியோரின் கோட்பாடுகளையும் சாக்த, தாந்திரீக வழிபாட்டு மரபுகளையும் கவிதையை விளக்கப் பயன்படுத்தியிருக்கிறார். தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் மொழியும் கவிதைக் கோட்பாடுகள் பக்கமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. வெவ்வேறு கோட்பாடுகளைப் பயன்படுத்திய போதிலும் வாசிப்புக்கு இடறாத மொழியில் அவற்றை எழுதியுள்ளார்.  ஒரு சொல், ஒரு தொடர்  கவிதையில் எத்தனை முக்கியத்துவம் கொண்டவை என்பது இவர் விளக்கும்போது தெரிகிறது. பிரம்மராஜனின் ஒரு கவிதையின் முதல் பகுதி அடிகள் ‘ஆக’ என்னும் ஒட்டைக் கொண்டு முடிகின்றன. அதைத் தொடர்ந்து வரும் அடுத்த அடிகள் ‘ஆய்’ என்னும் ஒட்டைக் கொண்டு முடிகின்றன.  ‘ஆய்’ ஒலிகள்  ‘பெருக்குகிற சுருள் சுருளான குற்றலை அர்த்தச் சலனங்களின் தொகுதிகள்’ என்று சொல்லி அதை விளக்குகிறார். இப்படிப் பல சான்றுகளைக் காட்டலாம்.

கவிதையை அச்சமில்லாமல் அணுகுவதை ஊக்கப்படுத்தும் அரிய கருவி நூல் இது என்று தாராளமாகச் சொல்லலாம்.

—–   14-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 4

நூல்கள்: இசூமியின் நறுமணம், பதிமூன்று மோதிரங்கள்

ஆசிரியர்: ரா. செந்தில்குமார்

வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை. விலை: முறையே 170/-, 185/-.

ரா.செந்தில்குமார் எழுதிக் ‘கனலி’ இதழில் வெளியான ‘இசூமியின் நறுமணம்’ என்னும் கதையைத்தான் முதலில் வாசித்தேன். பெரிதும் ஈர்த்த கதை அது.  இரண்டு மூன்று ஆண்கள் சந்திக்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுவது வழக்கம். என்ன பேசுவார்கள், எப்படிப் பேசுவார்கள் என்பவை ஆண்களுக்கெல்லாம் தெரிந்த ரகசியம்தான். அப்படிப்பட்ட தருணங்களில் உடனடியாக நினைவுக்கு வரும் கதையாக ‘இசூமியின் நறுமணம்’ மாறிப் போயிற்று. ஜப்பானைக் களமாகக் கொண்டிருந்தாலும் உலகெங்கும் பொருந்தும் கதை அது.

பின்னர் அவர் கதைகள் வெளியாகும் போதெல்லாம் தவறாமல் வாசித்துவிடுவது வழக்கம். பல்லாண்டுகள் ஒரு நகரத்தில் வாழ்ந்தாலும் இளவயது கிராமத்தைக் கடந்து செல்ல முடியாத மனோபாவம் கொண்டவர்கள் நாம். வெளிநாடுகளில் குடியேறி வசிப்போரும் அப்படித்தான். ஆனால் தான் வசிக்கும் ஜப்பானைக் களமாகக் கொண்டே செந்தில்குமார் பெரும்பாலான கதைகளை எழுதியுள்ளார். அந்நியத்தன்மை இன்றி அக்களத்திற்குள் இயல்பாகச் செல்ல முடிவதற்குக் காரணம் அவரது எழுத்து முறைதான். குறிப்பாகச் செறிவான உரையாடல். இப்போது ஜனவரி 2024  ‘கனலி’யில் வெளியாகியிருக்கும் ‘விபத்து’ கதை வரைக்கும் இவர் பயன்படுத்தியிருக்கும் உரையாடலைத் தனித்தெடுத்துச் சுவைக்கலாம்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு மெல்லிய சஸ்பென்ஸ் வைத்து எழுதுவதும் இவரது இயல்பு. அதை எளிமையும் அடர்த்தியும் கொண்ட ஒற்றை வாக்கியத்தால் கதை இறுதியில் உடைத்து வேறொரு தளத்திற்கு மாற்றிவிடுகிறார். தமிழ்ச் சிறுகதை எந்தக் காலத்தையும் விட இப்போது வளமாக இருக்கிறது. ஏராளமான பேர் விதவிதமான களங்களில் எழுதுகின்றனர். அப்படிப் புதிய வளம் சேர்க்கும் ரா.செந்தில்குமாரின் கதைகள் இருதொகுப்புகளாக வெளியாகியுள்ளன. பன்னிரண்டு கதைகளைக் கொண்ட ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பு 2021இலும் பதினொரு கதைகளைக் கொண்ட ‘பதிமூன்று மோதிரங்கள்’ தொகுப்பு 2023இலும் வெளியாகியுள்ளன.

இவ்விரு தொகுப்புகளும் அவசியம் வாசிக்க வேண்டியவை.

—–  14-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 5

நூல்: எழுத்தெனப்படுவது

ஆசிரியர்: பூவிதழ் உமேஷ்

வெளியீடு: எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. விலை ரூ.150/-.

‘முந்தைய தலைமுறை நன்றாக இருந்தது; இந்தத் தலைமுறை சரியில்லை’ என்னும் வகையில் பேச்சு வந்தால் நமக்கு வயதாகிவிட்டது என்று பொருள். இளவயது மாணவர்களைக் கல்லூரியில் அன்றாடம் சந்தித்து வந்ததால் அந்தத் தொனி வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாகவே இருப்பேன். மொழியில் நேரும் பிழைகளைப் பற்றிப் பேசும் போது இளைய தலைமுறை மேல் குறை சொல்வதைத் தவிர்க்க முடியவில்லை.

இன்று எழுதும் எழுத்தாளர்களில் (கவிஞர்களும் அடக்கம்) பெரும்பாலானோருக்கு மொழியைப் பிழையின்றிச் செம்மையாகப் பயன்படுத்தும் திறம் இல்லை. அதைச் சுட்டிக் காட்டினால் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என அசட்டையாகப் பார்க்கிறார்கள். மொழிச் செம்மையில்லாத பிரதியை என்னால் வாசிக்கவே இயலாது. சில பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் மீதுகூட அவ்வகையில் எனக்கு ஒவ்வாமை உண்டு. பிழையின்றி எழுத முடியாதவர்களுக்கு நல்ல மொழிநடை ஒருபோதும் அமையாது என்பது என் நம்பிக்கை.

மிகவும் அதிசயமாக நவீனத் தமிழ்க் கவிஞர் ஒருவர் மொழியைப் பிழையின்றிப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். சமகாலத்தில் கவனம் பெற்றுள்ள கவிஞரான பூவிதழ் உமேஷ்தான் அவர். தமிழ் இலக்கண நூல்களையும் அ.கி.பரந்தாமனார் எழுதிய ‘நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’ முதலிய நூல்களையும் அதற்குப் பயன் கொண்டுள்ளார். இத்துறையில் அவரது விரிவான வாசிப்பு வியப்பளிக்கிறது.

மொழியைப் பற்றி ஏராளமான மேற்கொள்கள் நூலில் இடம்பெறுகின்றன.  ‘செத்துக் கொண்டிருந்தேன், யாரோ என் தாய்மொழியில் பேசினார்கள், எழுந்துகொண்டேன்’ என்னும் ரசூல் கம்சுதேவ் மேற்கோள் ஒரு இயலில் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதுபோல ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும் மேற்கோள்; உள்ளேயும் கவிஞர்கள், மொழியியலாளர்கள் எனப் பலரது மேற்கோள்கள். கொஞ்சம் அதீதமாகத் தோன்றினாலும் வாசிக்கச் சுவையாகவே இருக்கின்றன.

நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி மயங்கொலிகளைப் பற்றிப் பேசுகிறது. இரண்டாம் பகுதி வல்லினம் மிகும் இடங்களைப் பற்றியது. பிழை நேரும் இடங்களைத் தொகுத்தெடுத்து முடிந்த வரைக்கும் எளிதாக அறிந்துகொள்ளும்படி வரையறைப்படுத்தி விளக்கியுள்ளார். பள்ளியாசிரியராக இருப்பதால் மாணவர்களுக்கு எளிய வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கும் அனுபவம் கைகொடுத்துள்ளது. ஞர் – நர் – னர் இந்த மூன்று விகுதிகள் வருமிடங்களை விளக்கி ஞர் – உயர்வு விகுதி, நர் – வினை (கட்டளை) விகுதி, னர் – பன்மை விகுதி என வரையறுத்துக் காட்டுகிறார். ஓரளவு அடிப்படை இலக்கணம் தெரிந்திருப்பவர் உமேஷின் பின்னால் தடையின்றிப் போகலாம்.

மொழியைப் பற்றிப் பேசுகையில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அப்படித்தான் இந்நூல் சொல்லும் சிலவற்றை ஏற்கலாம்; சிலவற்றை மறுக்கலாம். அது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் மொழிப்பிழைகள் பற்றிய ஒருநூல் இத்தகைய சுகமான நடையில் இதுவரை எழுதப்பட்டதில்லை. கறார்த்தன்மை இல்லாமல் இயல்பாக விளக்கிச் சான்றுகளைக் காட்டிப் பதியச் செய்யும் கற்பித்தல் முறை இதற்குள் செயல்படுகிறது. அவ்வின்பத்தை அனுபவிப்பதற்காகவே இந்நூலை ஒருமுறை வாசிக்கலாம்; கருவி நூலாகக் கொண்டு எப்போதும் பயன்படுத்தலாம்.

—–   15-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 6

நூல்கள்: வல்லிசை, தகப்பன் கொடி, சின்னக்குடை, யாம் சில அரிசி வேண்டினேம்.

ஆசிரியர்: அழகிய பெரியவன்

வெளியீடு: நீலம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

விலை: முறையே 470/-, 300/-, 180/-, 250/-.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் அழகிய பெரியவன். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என அவரது எழுத்துப் பயணம் தொடர்ந்து வருகிறது. வெவ்வேறு பதிப்பகங்களில் வெளிவந்திருந்த அவரது நான்கு நாவல்களையும் நீலம் பப்ளிகேஷன்ஸ் சமீபத்தில் மிகவும் அழகிய பதிப்புகளாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வகையில் முக்கியமானவை.

‘தகப்பன் கொடி’ அவரது முதல் நாவல். தம் முன்னோர் பெற்றிருந்த நிலவுடைமை வாழ்வை ஆழ்ந்து அகழ்ந்து அந்நாவலில் எழுதினார்.   ‘யாம் சில அரிசி வேண்டினோம்’ நாவல் அவரது சொந்த அனுபவம் ஒன்றை விரித்து எழுதியது. சமகாலத்தின் மேல் அவர் வைக்கும் விமர்சனமாக இதைக் காணலாம். கனகாங்கி என்னும் பாத்திரத்தின் அலைக்கழிதலாகச் ‘சின்னக்குடை’ அமைந்திருக்கிறது.

பறையிசை பற்றிய வேறொரு கோணத்தை முன்வைக்கும் நாவல் ‘வல்லிசை.’ அழகிய பெரியவனின் சாதனை என்று இதைச் சொல்லலாம். பறை அடிக்கக் கூடாது என்பதையே இயக்கமாக எடுத்துத் தம் வாழ்நாள் முழுக்கப் போராடிய களப்போராளி ஒருவரின் வாழ்க்கைப் பயணம்தான் இந்நாவல். தம் கள ஆய்வில் திரட்டும் தகவல்களை வைத்து வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வது ஆய்வாளர்கள் பணி. அதே தகவல்கள் ஒரு புனைவாசிரியர் கையில் கிடைத்தால் உயிருள்ள பாத்திரங்களாகிவிடும் என்பதற்கு இந்நாவல் சான்று.

போராட்ட வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல. அதை வரவேற்கும் குடும்பமும் ஊரும் மக்களும் ஒருகட்டத்தில் எதிராகவும் மாறிவிடக் கூடும். அப்போது போராளியின் சுயம் எத்தனை காயப்படும் என்பதை இந்நாவல் காட்டுகிறது. திருவேங்கடம் என்னும் பாத்திரம் பெரும்போராளியாக இருந்து இறுதியில் அவல நாயகனாக மாறுவதைக் காணும்போது வெறுமை மிஞ்சுகிறது. அழகிய பெரியவனின் அரிய உழைப்பில் உருவான இந்நாவல் பரவலாக வாசிக்கவும் விரிவாக விவாதிக்கவும் உகந்தது.

நான்கு நாவல்களையும் ஒருசேர வாசிக்கலாம்; அழகிய பெரியவனின் கதையுலகில் சஞ்சரிப்பது நல்ல அனுபவமாக அமையும்.

—–   15-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 7

நூல்கள்: கு.அழகிரிசாமி கட்டுரைகள், தொகுதி 1 : நவீனத் தமிழ்; தொகுதி 2 : பழந்தமிழ்.

பதிப்பாசிரியர்: பழ.அதியமான்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

விலை: ரூ. 1950/-

புனைவு எழுத்தாளர்கள் பலர் சுவையான கட்டுரை எழுதுபவர்களாகவும் இருந்துள்ளனர். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் எனப் பலரை இப்பெருவரிசையில் அடக்கலாம். அதில் குறிப்பிடத்தக்கவர், தவிர்க்க இயலாதவர்  நூற்றாண்டு கண்ட கு.அழகிரிசாமி.

சிறுகதை ஆசிரியராக மட்டுமே அவரைச் சுருக்கிக் காணக் கூடாது. நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலமுகம் கொண்டவர். அவர் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவை சுவாரசியமானவை என்பதோடு ஆவணத்தன்மை மிக்கவை என்பதும் காரணம். அவர் எழுதியுள்ள ஒருகட்டுரைகூட ஏமாற்றம் தராது. ஒவ்வொன்றிலும் ஏதேனும் புதிய செய்திகள், அறிதல்கள் கட்டாயம் இருக்கும். நோக்கு நூலாகும் தன்மை கொண்டவை.

நவீன இலக்கியம் பற்றி அவர் எழுதிய அதே அளவில் பழந்தமிழ் இலக்கியம் பற்றியும் எழுதியுள்ளார். குறிப்பாகத் தனிப்பாடல் பற்றி அவர் எழுதியவை ஐந்து நூல்களாக ஏற்கனவே வந்திருக்கின்றன. பல தனிப்பாடல்களை அவரே கண்டறிந்து கொடுத்துள்ளார். ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் எழுதும் அறிமுகம், கதை,  விளக்கம் அனைத்தும் அப்பாடலை அணுக நல்ல வழிகாட்டியாக விளங்கும்.

நூலாக்கம் பெற்ற கட்டுரைகள் மட்டுமல்லாமல், இதழ்களின் பக்கங்களில் தேடிக் கண்டடைந்த 35 புதிய கட்டுரைகளையும் சேர்த்து இருதொகுதிகள் வெளியாகியுள்ளன. நவீன இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் மட்டும் ஒருதொகுதி; பழந்தமிழ் இலக்கியம் பற்றியவை இன்னொரு தொகுதி. செயற்கரிய இச்செயலைச் செய்து முடித்திருப்பவர் பழ.அதியமான் அவர்கள். ஏற்கனவே கு.அழகிரிசாமியின் ஒட்டுமொத்தச் சிறுகதைகளைத் தொகுத்தளித்தார். கு.அழகிரிசாமி எழுதிய ‘நான் கண்ட எழுத்தாளர்கள்’ என்னும் நூலைக் கடந்த ஆண்டு பதிப்பித்தார்.

நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த கு.அழகிரிசாமியின் கட்டுரைகளை இப்போது நூலாக்கம் செய்திருக்கிறார். ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு தொடர்பான பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றுக்கொண்டே இப்பணியையும் செய்திருக்கிறார். இருநூற்றாண்டுகளை ஒருசேரக் கண்டு பணியாற்றும் ஆய்வாளர் பழ.அதியமான். மிக அழகான தயாரிப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிறுசிறு நூல்களாகவும் அச்சுத் தரம் இன்றியும் வந்திருந்த அழகிரிசாமியின் கட்டுரைகளை இப்போது செம்பதிப்பில் வாசிக்க வாய்த்திருக்கிறது.

வாழ்க அழகிரிசாமி! வாழ்க அதியமான்!

—–   15-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 8

நூல் : இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா?

ஆசிரியர் : எஸ்.வி. ராஜதுரை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

விலை: ரூ.540/-

எஸ்.வி.ராஜதுரை எழுதிய எந்த நூலாக இருந்தாலும் அதைக் கற்றல் நோக்கோடு அணுகுவது என் வழக்கம். அவசியமான தகவல்கள், உரிய கோட்பாட்டு விளக்கம், அதைப் பொருத்துதல், சுயமான பார்வை என அனைத்தும் சேர்ந்து ஒரு பெட்டகம் போன்ற தன்மையுடன் அவரது ஒவ்வொரு கட்டுரையும் அமைந்திருக்கும். சிறுகட்டுரை என்றாலும் அப்படித்தான். உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக அறிவுத்தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர் ஆளுமை வியப்பளிக்கக் கூடியது.

கடந்த நான்கு ஆண்டுகளில்  ‘மின்னம்பலம்’ உள்ளிட்ட இதழ்களில் அவர் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த 54 கட்டுரைகளைக் கொண்ட  நூல் ‘இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா?’ என்னும் தலைப்பில் 2023இல் வெளிவந்துள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம் எனப் பலதரப்பட்ட களங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உடனடி எதிர்வினையாக இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரை நூல் எதிலும் இல்லாத வகையில் சொந்த அனுபவங்கள் கூடுதலாக இடம்பெற்றிருக்கும் தொகுப்பு இது என்னும் எண்ணம் தோன்றியது.

வி.பி.சிங்கைப் பற்றி எழுதிய ‘மறக்கப்பட்டு விட்டாரா அந்த மாமனிதர்?’, ‘காந்தியாரின் மறைவும் தந்தை பெரியாரும்’ ஆகிய கட்டுரைகள் வெளியான போது படித்தவை; பிடித்தவை. இத்தொகுப்பில் உள்ள தனிமனிதர்கள் பற்றி அஞ்சலியாகவோ வேறு காரணத்திற்காகவோ எழுதப்பட்ட கட்டுரைகளும் மிகவும் முக்கியமானவை. நீதிநாயகம் சுரேஷ், கி.ப. என்னும் பேராசான், சுவாமி அக்னிவேஷ் முதலியவை அவை. இணைப்பாக இரண்டு இரங்கல் கட்டுரைகள் உள்ளன.  ‘தோழர் பெருஞ்சித்திரனார்’ என்னும் இரங்கல் கட்டுரை சிறப்பானது. அக்கட்டுரை ‘1988’இல் வெளியானதாகக் குறிப்பு உள்ளது. பெருஞ்சித்திரனார் இறந்த 1995இல் எழுதிய கட்டுரையாக இருக்கும் எனக் கருதுகிறேன். கோமல் சுவாமிநாதன் பற்றிய கட்டுரையும் நன்று.

‘மா இசை போற்றுதும்’ என விதந்து இளையராஜாவின் இசை பற்றி அவர் எழுதிய கட்டுரை வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது. இசை ரசனை சார்ந்த கட்டுரைகளில் முக்கியமானது. அதை ஒட்டி வந்த எதிர்வினைகளுக்குப் பதில் சொல்லி எழுதிய இன்னொரு கட்டுரையும் இந்நூலில் உள்ளது. இப்படி இன்னும் பல கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லிக்கொண்டே போகலாம். நூலை வாசியுங்கள். எந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டுச் சொல்வது என்னும் குழப்பம் உங்களுக்கும் நேரும்.

—–   17-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 9

நூல் : காடு விளையாத வருஷம்

ஆசிரியர் : மு.சுயம்புலிங்கம்

வெளியீடு: மணல் வீடு, சேலம்.

விலை: ரூ.100/-

மு.சுயம்புலிங்கத்தின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பா.செயப்பிரகாசம். அது நடந்தது 1988இல். மனஓசை இதழ்த் தொகுப்பை வாசித்துப் பார்க்கும்படி என்னிடம் கொடுத்த அவர் ஓரிதழில் வெளியாகியிருந்த சுயம்புலிங்கத்தின் படைப்புகளைக் காட்டி ‘சுயம்புலிங்கம்ங்கிற பெயருக்கு ஏற்ற மாதிரி சுயம்பு இவர்’ என்றார். பின்னர் கல்குதிரை இதழிலும் அவர் படைப்புகள் வெளியாயின.  ‘நாட்டுப்பூக்கள்’ என்னும் தலைப்பில் நூலாகவும் வந்தது. சமீப காலத்தில் அவர் எழுதிய முப்பத்து மூன்று கதைகள் ‘காடு விளையாத வருஷம்’ நூலில் இடம்பெற்றுள்ளது. மிக நேர்த்தியாக நூலை வடிவமைத்து ‘மணல் வீடு’ வெளியிட்டுள்ளது.

தம் கிராமத்து வாழ்க்கை அனுபவங்களை, நினைவுகளைத் தனித்த வடிவத்தில் எழுதுபவர் சுயம்புலிங்கம். அவருக்கு முன்னால் எந்த மாதிரியும் இல்லை. தனக்குத் தோன்றுகிற விதத்தில் எழுதுவார். அதில் ஓர் அழகு வந்து சேர்ந்துவிடும். ஒற்றை வரியை ஒரு பத்தியாக அமைத்துவிடுவார். பெரும்பாலும் மிகச்சிறு கதைகள்; அல்லது குறிப்புகள். எளிதாக வாசிக்கலாம். ஆனால் பல கதைகள் மனதைக் கனக்கச் செய்துவிடும்.

இந்தத் தொகுப்பில் ‘சித்திரம்’ என்றொரு படைப்பு. ஒரு பாட்டியைப் பற்றிய சித்திரம். ‘மண் சுவர். ஓலைக்கூரை. மண் திருணை. இது…பாட்டி வீடு’ என்று தொடங்குகிறார். அவ்வீட்டைப் பாட்டி எப்படிப் பராமரிப்பாள் என்று சொல்கிறார். பாட்டி காலமானாள். அதன் பிறகு அவ்வீடு எப்படிக் கிடக்கிறது என்று சில வரிகள். இறுதியில் இப்படி எழுதுகிறார்,  ‘ஒரு பெரிய ஜீவன் இல்லாது அந்த வீட்டின் சித்திரமே அழிந்துவிட்டது.’

மணிக்கொடி காலத்தில்  ‘நடைச் சித்திரங்கள்’ என்று வ.ரா. எழுதினார். வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றி எழுத்தில் உருவாக்கிய சித்திரங்கள் அவை. சுயம்புலிங்கத்தின் எழுத்துக்கும் ‘சித்திரம்’ என்று பெயர் கொடுக்கலாமோ? மாபெரும் மனிதர்களுக்குத்தான் சித்திரங்கள் தீட்ட வேண்டுமா? எத்தனை எத்தனையோ அற்புதமான மனிதர்கள் ‘சாதாரணமானவர்கள்’ என்னும் பெயருக்குள் அடைபட்டு அடையாளம் இல்லாமல் போகிறார்கள். அவர்களில் சிலரையேனும் சுயம்புலிங்கம் போல எழுத்தில் பிடித்து வைத்துவிட்டால் போதும். வேறென்ன எழுத்து வாழ்க்கையில் சாதிக்கப் போகிறோம்?

—–   17-01-24

2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம். 2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

நூல் : 10

நூல் : வா.மு.கோமு சிறுகதைகள், இருதொகுதிகள்.

ஆசிரியர் : வா.மு.கோமு

வெளியீடு: உயிர்மை, சென்னை.

விலை: முதல் தொகுதி – ரூ.770/-, இரண்டாம் தொகுதி – ரூ.680/-

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் வா.மு.கோமு. ஏராளமான சிறுகதைகளையும் பல நாவல்களையும் எழுதியிருக்கிறார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘அழுவாச்சி வருதுங் சாமி’ 2006இல் ‘சுகன் வெளியீட்டகம்’ மூலமாக வெளியாயிற்று. அத்தொகுப்பில் உள்ள ‘திருவிழாவுக்குப் போன மயிலாத்தாள்’ கதையைப் பல மேடைகளிலும் பயிலரங்குகளிலும் விரிவாக எடுத்துச் சொல்லிப் பேசியிருக்கிறேன். கு.ப.ரா.வின் ‘விடியுமா?’, அமெரிக்க எழுத்தாளர் ஒருவரின் ‘ஒருமணி நேரத்தின் கதை’ ஆகியவற்றோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளேன்.  ‘நீங்க பண்றது அட்டூழியமுங்க சாமி’ என்னும் கதையும் அத்தொகுப்பில் உள்ள நல்ல கதை.

இப்போது ஜனவரி 2024 உயிர்மை இதழில் வெளியாகியுள்ள ‘மாமன் எங்கீங்க ஆயா?’ என்னும் கதை வரைக்கும் இதழ்களிலோ தொகுப்புகளிலோ வா.மு.கோமுவின் கதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொழில் நகரமான திருப்பூர், அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நவீன கால வாழ்முறைகள், இளந்தலைமுறையின் விழுமியப் பார்வைகள், உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் இயல்புகள் எனப் பலவற்றை நிகழ்வுகளாகவும் பாத்திரங்களாகவும் அவர் கதைகள் பதிவு செய்துள்ளன.

கொங்குப் பகுதிப் பேச்சு மொழியின் உயிர்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துபவர் அவர். பெரும்பாலும் பேச்சுமொழியின் கூறுகளே மிகுந்திருக்கும். நிறைய உரையாடல்களைக் கொண்ட கதைகள். கொங்கு வட்டார வழக்குச் சொற்களை அவர் கையாளும் விதம் பற்றி அறியும் நோக்கிலும் நான் வாசிப்பதுண்டு. ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதிய அதே களத்தைக் கிட்டத்தட்டப் பின்னணியாகக்  கொண்டு வா.மு.கோமு எழுதுகிறார். ஆனால் வாழ்விலும் மொழியிலும் எத்தனை எத்தனையோ மாற்றங்கள்.

‘தனிவழி’ நாவலில் நூற்பாலைகளில் தொழிலாளர்களான மக்கள் வாழ்க்கையைப் பார்த்து அதிர்ந்து நிற்கும் ஒரு பாத்திரத்தை ஆர்.ஷண்முகசுந்தரம் காட்டியிருப்பார். கிட்டத்தட்ட அவர் மனநிலையும் அதுதான். ஆனால் வா.மு.கோமு அப்படி அதிர்ந்து நிற்பவரல்ல. அவ்வாழ்வில் இருக்கும் கொண்டாட்டம் உள்ளிட்ட சகலத்தையும் அதே மனநிலையில் காண்பவர். அவர் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அவற்றைக் காணலாம்.

அழுவாச்சி வருதுங் சாமி, தவளைகள் குதிக்கும் வயிறு, சேகுவேரா வந்திருந்தார், அப்புச்சி வழி உள்ளிட்ட வெவ்வேறு தலைப்புகளில் வந்திருந்த அவர் கதைகளை ஒருசேரத் தொகுத்து இருதொகுதிகளாக இப்போது ‘உயிர்மை’ வெளியிட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஜாலியாக வாசிக்க உகந்த கதைகள் போலத் தோற்றம் தந்து ஏமாற்றி உள்ளார்ந்து துயர்களையும் பாடுகளையும் சொல்லும் வா.மு.கோமுவின் கதைகளை வாசித்துப் பாருங்கள்.

—–   17-01-24