கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள்

கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள

2026 ஜூலை 17 முதல் 28 வரை கோவையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நூல்கள் மூன்றும் மறுபதிப்பு ஒன்றும் வெளியாகின்றன.  என் நேர்காணல்கள் ’எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ என நூலாகியுள்ளன. தொகுத்தவர் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் பிரேம்குமார். இந்நூலுக்குக் கோவையில் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அதில் பிற நூல்களையும் வெளியிடலாம் எனவும்  நிகழ்வின் ஒருபகுதியாகத் தேர்ந்தெடுத்த வாசகருடன் உரையாடுவதையும் வைக்கலாம் எனவும் தீர்மானித்தோம்.

என்ன செய்ய? இன்று புத்தகப் பண்பாடு சிறந்து விளங்குவதாகத் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் கோவை மாநகரிலே அரங்கே கிடைக்கவில்லை.  ’எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ என நூலுக்குத் தலைப்பிட்டது பொருத்தம் தான் போல.

ஆகவே காலச்சுவடு அரங்கில் 19-07-26 ஞாயிறு மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் நூல் வெளியீட்டு நிகழ்வில் என் இருநூல்கள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாளர் புராணம் (கவிதைத் தொகுப்பு) நூலை மோகனரங்கன் வெளியிட்டுப் பேச இசை பெற்றுக்கொள்கிறார். ’எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ (நேர்காணல்கள்) நூலைச் சுகுமாரன் வெளியிட்டு உரையாற்ற டாக்டர் கோவிந்தராஜ் சுப்பிரமணியம் பெற்றுக்கொள்கிறார்.

வாய்ப்புள்ள நண்பர்கள் வருக!

வெளியாகும் நூல்கள் பற்றிச் சிறுஅறிமுகம்:

  1. திருவாளர் புராணம் (கவிதைத் தொகுப்பு)

நாம்தான் இந்தக் கவிதைகளில் திருவாளராக வெளிப்படுகிறோம். இந்தத் திருவாளர் நாம்-திருவாளராக வெளிப்படுகிறார்; நான்-திருவாளராக அல்ல. அவதானிப்பவரும் நாம்-அவதானிப்பவராக வெளிப்படுகிறார்; நான்-அவதானிப்பவராக அல்ல. நாம் நம்மையே பகடிசெய்துகொள்கிறோம்; நாம் நம்மீதே கோபப்படுகிறோம். நாம் இந்தத் திருவாளர் இல்லை என்று கோருகிறோம். அதனால், நம்மிடம் உள்ள நாம்-திருவாளர் குணத்தை நாம் வெறுக்கிறோம். இந்தக் கவிதைகள் நம்முள் இருக்கும் நாம்-திருவாளர் குணத்தை நமக்கு அடையாளம்காட்டுகின்றன.

-அணிந்துரையில் சீனிவாச ராமாநுஜம் 

கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள்

2. எழுத்துக்கு அஞ்சும் சமூகம் (நேர்காணல்கள்) 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து 1990களில் வெளியான ‘கேப்பியார்’ இதழில்தான் என் முதல் நேர்காணல் வெளியாயிற்று. அது இத்தொகுப்பின் இறுதியில் உள்ளது. அக்காலத்திலேயே என்னைப் பொருட்படுத்தி அட்டையிலேயே என் ஓவியத்தையும் வெளியிட்ட ‘கேப்பியார்’ இதழை மறக்க முடியாது. ‘மாதொருபாகன்’ சர்ச்சைக்கு முன் வெளியான நேர்காணல்கள் சில. 2016க்குப் பிறகு நிறைய வந்தன. பெருமளவு இதில் சேர்ந்துள்ளன. சிலவற்றில் வந்த செய்திகளே திரும்ப வருவதால் வேண்டாம் என விட்டிருக்கிறோம். என் நினைவில் இல்லாமல் சில எங்கேனும் பதுங்கியிருக்கலாம்.  பக்க எண்ணிக்கை கூடினால் விலை கூடும், நூலை வாங்கும் மாணவர்கள் தயங்குவர் என்று மாணவர் நோக்கிலிருந்து பிரேம்குமார் எச்சரிக்கை செய்து கொண்டேயிருந்தார். இளந்தலைமுறையின் குரலுக்குச் செவிசாய்த்தல் நல்லது என்பதைச் சமூகமே உணரும் காலமிது. நானும் சாய்த்திருக்கிறேன்.

-முன்னுரையிலிருந்து.

கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள்

3. ஓரிரு சொட்டுத் தூறல் (நவீன இலக்கியக் கட்டுரைகள்)

இத்திரட்டின் முழுமையிலும் ஒரு விமரிசகராகவே பெருமாள்முருகன் வெளிப்பட்டுள்ளார். இலக்கிய விமரிசனம் என்பது ஏதேனும் ஒரு இலக்கிய வகைமையின் நயம் பாராட்டலும் அதன் அல்நயம் பழித்தலும் என்பதாக மட்டுமே நின்றுவிடுவது இயல்பு. ஆனால் பெ.மு. அவற்றை மட்டுமல்லாது, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, நூல்களின் உள்ளடக்கத்தில் வெளிப்படும் போலிக் கரிசனம், பதிப்பாளர்களின் பொறுப்பின்மை, வாசகர்களின் சோம்பல், வாசிப்பின் பிரச்சினைப்பாடுகள், புனிதங்களைக் கட்டுடைத்தல், பிரச்சாரக் கதைகளின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி அதில் எஞ்சிய முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுதல், இடக்கரடக்கல் உள்ளடக்கங்களை ஆராய்தல், இலக்கியத்தில் சாதி எனும் உள்ளடக்கம் குறித்துப் பேசிப் பார்த்தல், வட்டார இலக்கியங்களையும் விமரிசித்துக் காட்டுதல், வரலாற்று விடுபடல்களைக் களைதல், சில புனைவுகளின் அலுப்பூட்டும் எடுத்துரைப்புகளைக் கவனத்திற்குக் கொண்டுவருதல், இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் தகுதியின்மை, பாடத்திட்டக் குழுக்களின் போதாமை உள்ளிட்டவற்றைப் பேசுதல் என விரிவுகொள்கிறார்.

– அணிந்துரையில் றாம் சந்தோஷ் வடார்க்காடு. 

கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள்

4. பீக்கதைகள் (மறுபதிப்பு) 

பதினான்கு கதைகளுடன் முதல் பதிப்பு வந்தது. இப்போது இருகதைகளைச் சேர்த்திருக்கிறேன். ‘சிறிது நிழல்’ என்னும் கதை ஏற்கனவே என் மொத்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. அது இத்தொகுப்புக்கும் பொருந்தும் கதையாகத் தோன்றியதால் சேர்த்தேன். அக்கதையை வாசித்த போது அது எழுந்த அதே களத்தில் இன்னொரு கதை எனக்குள் உருக்கொண்டது. அதையும் சமீபத்தில் எழுதிப் பார்த்தேன். திருப்தியாக இருந்ததால் ‘குப்பை’ என்னும் புதிய கதையையும் இதில் சேர்த்துள்ளேன். ஆக இப்பதிப்பில் பதினாறு கதைகள்.

– முன்னுரையிலிருந்து.

கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள்

Add your first comment to this post