கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் எனக்குப் பள்ளியில் மனப்பாடச் செய்யுளாக இருந்தது. அப்போது அதன் முக்கியத்துவம், பொருட்சிறப்பு என எதையும் அறியாமல் வெறுமனே மனனம் செய்திருந்தேன். எத்தனையோ மனப்பாடச் செய்யுள்கள் கால ஓட்டத்தில் மனதிலிருந்து கழன்றுவிடுகின்றன. இந்தச் செய்யுள் எப்படியோ ஒட்டிக் கொண்டே வந்திருக்கிறது. இதை மீட்டெடுக்க இன்னொரு காரணமும் வாய்த்தது.
தமிழ் இலக்கியங்கள் பலவும் மங்கலச் சொல்லோடு தொடங்குபவை என்பதற்குச் சான்றுகள் காட்டிய ஆசிரியர் ஒருவர் ‘உலகம் உவப்ப’ (திருமுருகாற்றுப்படை), ‘உலகெலாம் உணர்ந்து’ (பெரியபுராணம்), ‘உலகம் யாவையும்’ (கம்பராமாயணம்) ஆகியவற்றைக் கூறினார். இவற்றில் பெரியபுராணப் பாடலையும் கம்பராமாயணப் பாடலையும் ஒப்பிட்டு ‘உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்’ என்பதில் இருக்கும் கம்பீரம் ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ என்பதில் இல்லை எனச் சைவர்கள் சொல்வார்கள் என்றார். இந்த ஒப்பீட்டுச் செய்தி அறிந்து பெரியபுராணப் பாடலையும் மனனம் செய்தேன். இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன.
‘உலகம்’ என்னும் சொல் தொடக்கம் மட்டும் இரண்டிலும் ஒன்றாக இருப்பினும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை இவை. பெரியபுராணப் பாடல் தெளிவாகச் சிவனின் தோற்றம், செயல்கள் ஆகியவற்றை மையப்படுத்துகிறது. கம்பராமாயணப் பாடல் கடவுளின் பொதுச் செயல்கள் மீதான கவனக் குவிப்பு. ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முச்செயல்கள் கடவுளுக்குரியன என்று சொல்கிறது பாடல். உலகம் யாவற்றையும் தாம் உளவாக்குகிறார். அவற்றை நிலைபெறச் செய்கிறார். பின் நீக்கவும் செய்கிறார்.

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலு நீக்கலு நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே.
சந்தி பிரித்த வடிவம்:
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
பாடற்பொருள்: எல்லா உலகத்தையும் தாமே படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய மூன்றையும் தொடர்ந்து செய்பவர்; அத்தகைய முடிவில்லாத விளையாட்டை உடையவர்; அவரே எல்லா உயிர்க்கும் தலைவர். அப்படிப்பட்ட தலைவராகிய கடவுளுக்கே நாங்கள் அடைக்கலம்.
முதலிரண்டு அடிகளிலும் கடவுளின் முச்செயல்களை விளக்குகிறார். இந்தச் செயல்களைக் கவிஞர் காணும் கோணம்தான் மூன்றாம் அடி. ‘நீங்கலா அலகிலா விளையாட்டு’ அது என்கிறார். அவர் இடைவிடாமல் நடத்தும் விளையாட்டு; முடிவற்ற விளையாட்டு. யாராலும் எதனாலும் அளவிட இயலா விளையாட்டு; அலகிலா விளையாட்டு. இவ்விளையாட்டை நிகழ்த்துபவரைத் தவிர வேறு யார் இவ்வுலகத்திற்குத் தலைவராக இருக்க முடியும்? அவர் தலைவர். அப்படிப்பட்ட இயல்புடையவருக்கே நாங்கள் சரணம்.
இப்பாடலுக்கு முக்கியமான பாட வேறுபாடுகள் இரண்டு உள்ளன. ‘நிலைபெறுத்தல்’ என்பதற்கு ‘நிலைபொறுத்தல்’ என்பது பாடம். நிலையைப் பொறுத்தல் என்பது இறைச் செயலுக்கு ஏற்றதன்று. நிலைபெறுத்தலுக்கு இருக்கும் சொல் வலுவும் பொருள் வலுவும் நிலைபொறுத்தலுக்கு இல்லை. இறுதியில் வரும் ‘சரணாங்களே’ என்பதற்குச் ‘சரணங்களே’ என்னும் பாடம் இருக்கிறது. உலகம் யாவையும் என மென்மையாகத் தொடங்கி விவரித்து ‘சரண் நாங்களே’ என உலக உயிர்கள் எல்லாவற்றையும் உளப்படுத்திச் சரணடையும் அற்புதம் வெறும் ‘சரணங்கள்’ என்பதில் இல்லை.

இப்பாடலின் அமைப்பு பற்றிப் பார்க்கப் பல விஷயங்கள் உள்ளன. நன்கு தேர்வு செய்யப்பட்ட சொற்கள். இறைச் செயல்களை உணர்த்தும் முதல் பகுதிக்கும் அதன் இயல்பை உரைக்கும் இரண்டாம் பகுதிக்கும் இக்காரணங்களால் அவரே தலைவர் என்று சொல்லும் மூன்றாம் பகுதிக்கும் அன்னவர்க்கே சரண் எனப் போற்றிப் பணியும் நான்காம் பகுதிக்கும் ஏற்ற சொற்களைச் சுண்டி எடுத்துப் பெய்திருக்கிறார் கம்பர். அதனால் தானோ என்னவோ சில இடங்களில் சீர் பிரிக்கும்போது இயல்பாக இல்லை. குறிப்பாக இரண்டாம் அடியில் ‘நிலை பெறுத்தலும்’ என்பதை ‘நிலைபெ றுத்தலும்’ எனப் பிரிக்க வேண்டியுள்ளது. மூன்றாம் அடியில் ‘அலகிலா விளையாட்டு’ என்பதை ‘அலகி லாவிளை யாட்டு’ எனப் பிரித்தால்தான் சீர்ப் பொருத்தம் வருகிறது. நான்காம் அடியில் ‘அன்னவர்க் கேசரண்’ எனப் பிரிப்பு அமைகிறது.
கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் தம் முதல் பாடலில் சொற்களே இயல்பான சீர்களாக அமையும் விதத்தில் பாடியிருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு. இரண்டாம் அடியைச் சீர் பிரித்து எழுத நேரும் போதெல்லாம் எனக்குக் குழப்பம் வரும். ‘நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா’ என்று பிரித்தால் முதல் சீர் ஓரசைச் சீராகிவிடும். சரி, ‘நிலைபெறுத் தலும் நீக்கலும் நீங்கலா’ எனப் பிரித்தால் இரண்டாம் சீர் ஓரசைச் சீராகிவிடும். இந்தக் குழப்பம் எனக்கு நெடுநாள் நீடித்தது. பின்னர் இதன் அமைப்பைத் தெளிவாக அறிந்துகொண்டேன். எனினும் என் ஆதங்கம் நீடிக்கத்தான் செய்கிறது.
முதல் அடியைப் போல இரண்டாம் அடியும் இயல்பான சீர்களாக அமைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! ஏன், கம்பருக்கு வேறு பொருத்தமான சொற்கள் கிடைக்கவில்லையா? கம்பருக்கேவா? கிடைக்காமல் இருந்திருக்கலாம். கிடைத்திருந்தாலும் தம் கருத்தை நிலைநிறுத்த இவைதான் வலுவானவை எனக் கருதியிருக்கலாம். ‘நிலைபெறுதல்’ வழக்கில் உண்டு. ‘நிலைபெறுத்தல்’ என்னும் பிறவினை வழக்கு அரிதான ஒன்று. அதை இங்கே பயன்படுத்துகிறார் என்றால் உணர்வுப் பூர்வமாக இப்பாடலை அவர் உருவாக்கியிருக்க வேண்டும் என்றே பொருள்.
தாம் சொல்ல வருவதை உணர்த்தப் பொருத்தமான சொற்கள் அமைந்தால் போதும். அதன்பின் யாப்பு வழங்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி எவ்விதம் வேண்டுமானாலும் சீர் பிரித்து அமைத்துவிடலாம் என்று கவிஞர் துணிந்திருக்கிறார். ஆகவேதான் இப்பாடலின் சீர் பிரிப்பு இப்படி எனச் சமாதானம் கொள்கிறேன்.
ஒரு கவிதையில் வரும் சொற்கள் அனைத்தும் ‘கவிதைச் சொற்கள்’ ஆகிவிட மாட்டா. ஒரு சொற்கூட்டத்தைக் கவிதையாக்குவதற்கு என்று சில சொற்கள் இருக்கும். இந்தக் கவிதையில் ‘அலகிலா விளையாட்டு’ என்பவைதாம் கவிதைச் சொற்கள். கம்பரின் முத்திரை பெற்ற இச்சொற்களே இதைக் கவிதையாக்கியுள்ளன. இப்பாடலை நினைக்குந்தோறும் ‘அலகிலா விளையாட்டு’ என்னும் சொல்லாட்சியே முதலில் மனதில் தோன்றும். முன்பின் இருக்கும் சொற்களைப் பிறகு நினைவுக்குக் கொண்டு வந்து பொருத்திக் கொள்ளலாம்.
சுந்தர ராமசாமியின் ‘புளிய மரத்தின் கதை’ நாவலின் முதல் அத்தியாயத்தில் இப்படி ஒரு வரி வருகிறது: ‘மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மௌன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதா?’ கடவுளின் செயல்களை அலகிலா விளையாட்டு எனக் கண்ட காலம் இன்றைக்கில்லை. அலகிலா விளையாடல்களுக்கு மனிதன் ஆட்பட்டுவிட்ட நவீன காலம் இது. காலத்தை உணர்த்தும் முன்பின் சொற்கள் மாறலாம். நடுவில் நின்று முன்னும் பின்னும் பார்த்து எல்லாவற்றையும் தனக்குள் கொண்டு வந்து அடக்கிக்கொள்ளும் அலகிலா விளையாட்டுக்கு எந்தச் சேதமும் ஒருபோதும் இல்லை.
—– 12-11-24


அருமை, ஐயா!
எம் தமிழாசிரியர் நாகலிங்க ஐயாவிற்கும் இது மிகவும் பிடித்தமான பாடல். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய சொற்களுக்குப் பதிலாக கம்பன் முறையே ஆக்கல், நிலைபெறுத்தல், நீக்கல் ஆகிய சொற்களைப் பெய்திருக்கும் பாங்கை அவர் வியந்து போற்றுவார்.
கம்பனின் கவிதை வரிகளுக்கான தங்களது நீண்ட பதிவு அருமைங்க ஐயா
சிறப்புங்க ஐயா! வாசித்தேன்.