பெங்களூருக்கு உள்ளும் புறப்பகுதிகளிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் பல இருக்கின்றன. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவர்கள் பெங்களூரு வருகின்றனர். அவற்றில் ஒன்று ‘அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.’ கிட்டத்தட்டத் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டியிருக்கும் இதன் வளாகம் நூற்றுப் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாத நிலையில் 16 பிப்ரவரி 2025 அன்று அங்கு பயிலும் ரோகன்குமார் வாக்லே என்னும் மாணவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘சாவித்திரி அம்பேத்கார் பண்பாட்டு மையம்’ (Savitri Ambedkar Cultural Club)’ அங்கே செயல்படுவதாகவும் அதன் சார்பாக ஏப்ரல் 11 முதல் 15 வரை ‘பூலே, அம்பேத்கார் வாரம்’ கொண்டாடப்படுவதாகவும் அதில் ஒருநாள் பங்கேற்றுப் பேச வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். அப்பல்கலைக்கழகத்தின் ‘வளர்ச்சித் துறை’யில் முதுகலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர் அவர். நிகழ்ச்சி முழுவதும் மாணவர்களே ஏற்பாடு செய்கின்றனர் எனத் தெரிந்தது.
அவர் மின்னஞ்சல் வந்தபோது பெங்களூருவில் ஒருநிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன். கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ராவும் ஆட்டாகலாட்டா புத்தகக் கடை உரிமையாளர் சுபோத்சங்கரும் உடன் இருந்தனர். அவர்களிடம் அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பற்றிக் கேட்டேன். ‘நல்ல பல்கலைக்கழகம். நிகழ்ச்சி நன்றாக நடத்துவார்கள். உங்களுக்குத் தேதி ஒத்துவரும் என்றால் தாராளமாகப் பங்கேற்கலாம்’ என்றார்கள். ஒத்துக்கொண்டேன். ஏப்ரல் 13 அன்று எனது நிகழ்ச்சி. ஒரு தலைப்பும் கொடுத்திருந்தனர். கால்மணி நேர உரை. அதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குக் கால்மணி நேரம். அதன்பின் மாணவர்களுடன் கலந்துரையாடல். மொத்தமாக ஒருமணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேர நிகழ்வு.
ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை. அன்று மாலைதான் நிகழ்வு. மாணவர்கள் வருவார்களா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்கள், கொஞ்சம் பேர் வெளியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர், இந்த மையத்தில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர், அதனால் கூட்டத்திற்குக் குறைவிருக்காது என்று சொன்னார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வரும் அதிசயத்தைப் பார்க்கும் ஆர்வமும் எனக்கு உருவாயிற்று.
ஏப்ரல் 12 அன்று மாலை பெங்களூரு, சம்பகா புத்தகக் கடை நிகழ்வில் பங்கேற்று முடித்து இரவே அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சென்றுவிட்டேன். நகரத்திற்குள் இருந்து இரண்டு மணி நேரப் பயணம் செய்து உடல் சோர்வுடன் போய்ச் சேர்ந்தேன். கார் ஓட்டுநர் அத்தனை விவரமானவர் அல்ல. கூகுள் வரைபடத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு பல்வேறு வழிகளில் சுற்றிச் செல்பவர். பெங்களூருவின் குண்டும் குழியுமான சாலைகளில் எங்கெங்கோ சுற்றியடித்து அழைத்துச் சென்றார். ஒருகட்டத்தில் நானே வரைபடம் பார்த்து வழிகாட்டத் தொடங்கிவிட்டேன். நற்பயணத்திற்கு வாகனம் மட்டும் போதாது, நல்ல ஓட்டுநரும் வேண்டும்.
இரவு பத்து மணிக்குப் பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் திரண்டு நின்றிருந்தனர். இந்நேரத்திற்கு இத்தனை பேர் நிற்க என்ன காரணம் என்று தெரியாமல் விருந்தினர் இல்லம் செல்லும் வழி கேட்கக் கதவைத் திறந்தேன். கூட்டமாக வந்து சூழ்ந்து கொண்டனர். ஒரு எழுத்தாளரை வரவேற்கவா இந்த அகாலத்தில் இத்தனை பேர்? என் சோர்வெல்லாம் ஓடிவிட்டது. வளாகத்துக்குள் நுழைவதற்குச் சில முறைகள் இருக்கின்றன போலும். அவற்றை முடித்துக்கொண்டு விருந்தினர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். பதினைந்து மாடி கொண்ட விருந்தினர் இல்லம். இரவுணவும் ஏற்பாடு செய்திருந்தனர். நல்ல அறை. ஆழ்ந்து உறங்க முடிந்தது.
மறுநாள் பகல் முழுக்க எனக்கு ஓய்வுதான். காலையும் மதியமும் வந்து என்னை உணவுக்கு அழைத்துச் சென்றவர்கள் அனுப்ரியா, திரிவேணி, மதிவதனி ஆகியோர். மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ‘வளர்ச்சித் துறை’ மாணவியர். கோபிசெட்டிபாளையம் அருகே ஒரு மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் அனுப்ரியா. திரிவேணியின் ஊர் தருமபுரிப் பக்கம். மேட்டூர்க்காரர் மதிவதனி. அவர் பெயரைக் கேட்டதும் ‘அப்பா, எந்தக் கட்சிம்மா?’ என்றேன். ‘கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் கழகம்’ என்றார். பெயர் வெறும் பெயரல்லவே.
நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதிக் கட்டிடம் நாற்பது மாடி. ஒருதளம் பால் புதுமையினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பத்து மாடிகளுக்கு மேல் ஆண்களுக்கு. மற்றவை பெண்களுக்கு. அங்கே பயில்வதில் பெண்களின் எண்ணிக்கை கூடுதல் போலும். பையன்களை எல்லாம் பொறியியலில் கொண்டு போய்ப் பெற்றோர் தள்ளிவிடுவதாலோ என்னவோ பெண்களின் எண்ணிக்கை கலைப் படிப்புகளில் கூடுதலாக இருக்கிறது. ஒரே கட்டிடத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறைகள் இருப்பது பெரிய விஷயம்தான். உணவகம் முப்பாலாருக்கும் பொதுவானது. தேர்ந்தெடுத்து உண்ணலாம். அதற்கேற்ற கட்டணம் மாணவரின் கணக்கில் சேரும். ஒரு மேசையில் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து அளவளாவிக் கொண்டே உண்பதைக் காண அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அங்கே தான் நானும் உண்டேன். விடுதிக்கு அருகில் ஒரு ஆம்புலன்ஸ் எப்போதும் நிற்கிறது. சிறுமருத்துவமனை ஒன்றும் உள்ளேயே இருக்கிறது. இலவசமாக மாணவர்களுக்குக் கலந்தாலோசனை வழங்கவும் ஆலோசகர்கள் உள்ளனர். விளையாட்டு இருக்கிறது. இரண்டு மூன்று உணவகங்கள். ஆயிரக்கணக்கானோர் உட்கார்ந்து சாவகாசமாக உண்பதற்கேற்ற விஸ்தாரமான இடம்.
கல்வியியல், பொருளியல், வளர்ச்சி ஆகிய மூன்று துறைகளில் மட்டும் முதுகலைப் படிப்பு இருக்கிறது. இளநிலையில் அடிப்படை அறிவியல் பாடங்களும் கலைப்பாடங்களும் இருக்கின்றன. இளநிலையில்தான் மாணவர் எண்ணிக்கை மிகுதி. கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் அங்கே பயில்வதாகச் சொன்னார்கள். மேல்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கணிசம். சாதாரணர்களும் பயில வாய்ப்புகள் உள்ளன. நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து நூறு விழுக்காடு, எழுபது விழுக்காடு, ஐம்பது விழுக்காடு என உதவித்தொகை தருகின்றனர். அறக்கட்டளை மூலம் பல்கலைக்கழகம் நடப்பதால் இத்தகைய உதவிகளும் இருக்கின்றன.
(தொடர்ச்சி நாளை)
—– 25-04-25
வளர்ச்சித் துறை என்றால் என்ன ஐயா