சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் நூல்களில் கவிதைத் தொகுப்புகள் இவ்வாண்டு குறைவாக இருப்பதாக அறிகிறேன். சட்டென்று தமிழ்நாட்டில் கவிஞர்கள் குறைந்துவிட்டார்களா? கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ ஒரு பதிப்பகம் ‘இனிக் கவிதை நூல்களை வெளியிட மாட்டோம்’ என்று அறிவித்தார்கள். அறிவிக்கவில்லை என்றாலும் பல பதிப்பகங்கள் அப்படித்தான் நினைக்கின்றன. முடிந்தவரைக்கும் கவிதை நூல்களைத் தவிர்க்கின்றன. வெளியிட்டாலும் ‘தேவையச்சு’ (பிஓடி) முறையில் நூறு அல்லது இருநூறு பிரதிகள் அச்சிட்டு இலக்கியக் கடமையை ஆற்றிவிட்ட திருப்தி கொள்கின்றன. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுக அட்டையை நீட்டுவது போலக் கொடுத்துக் கவிஞர்களும் திருப்தியடைகிறார்கள்.
ஆகவே கவிஞர்கள் வேறு வழியில்லாமல் உரைநடைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் நேர்கிறது. இரண்டாயிரம் ஆண்டுக் கவிதைத் தொடர்ச்சி கொண்ட மொழியில் கவிதையின் இந்நிலை வருத்தத்திற்கு உரியது. இதற்கு வாசகர்கள்தான் காரணமா, கவிஞர்களும் காரணமா, காலச்சூழல் இப்படி ஆக்கிவிட்டதா என்று பலவிதங்களில் யோசித்துப் பார்க்கிறேன். தெளிவான ஒன்றில் நின்று விடைகாண முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் உலகளவிலும் கவிதைக்கான வரவேற்பு இப்படித்தான் இருக்கிறது என்பதால் நாம் பின்தங்கிப் போய்விடவில்லை என்று தேற்றிக் கொள்ளலாம்.
தமிழில் கவிதைப் பித்துக் கொண்டவர்களாக பெரும் இளைஞர் கூட்டம் இருக்கும். எழுதுவோர் இப்போதும் கவிதையில் தான் தொடங்குகிறார்கள். ஆனால் வெகுசீக்கிரம் அதை விட்டு வெளியேறியும் விடுகிறார்கள். இது முழுக்க முழுக்க உரைநடைக் காலமாக இருக்கிறது. கவிதை மொழி இலகுவாகிப் பெரும்பாலும் உரைநடையாகவே மாறிவிட்டது. அதைக் கவிதையாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத குழப்பம் பலரிடம் இருக்கிறது. புரியாத மொழிச்சிடுக்கைக் கட்டமைத்து விட்டால் கவிதையாகி விடும் என்னும் மூட நம்பிக்கை ஒன்றும் நிலவுகிறது. புரிந்தது போலப் பாவனை செய்பவர்கள் எளிதாகக் கவிதை வாசகர் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.
இந்நிலையில் கவிதைத் தொகுப்பு வெளியிடுவது தைரியமான செயல்தான். இவ்வாண்டு றாம் சந்தோஷின் கவிதைத் தொகுப்பை வாசித்துப் பிற்குறிப்பு எழுதிக் கொடுத்தேன். அதற்கு முதன்மைக் காரணம் அவர் தமிழ் இலக்கிய மாணவர் என்பதுதான். சமீபத்தில் வாசித்த அவர் கவிதைகள் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருந்தன என்பது அடுத்த காரணம். இலக்கியம் பயிலும் மாணவர்களை நவீன இலக்கியத்தின் பக்கம் திருப்புவதற்குப் பெரும்பாடு பட்டுப் பெரும்பாலும் தோற்றவன் நான் என்பதால் றாம் சந்தோஷ் போன்றவர்கள் மீது இயல்பாகவே அன்பு வந்துவிடுகிறது. மொழிமுதல் வராத றகரத்தைத் தம் பெயராக்கியும் வடசொற்களை அங்கங்கே பெய்தும் தமிழுக்கு அவர் ‘துரோகம்’ செய்தாலும் என் அன்பு குறையவில்லை. கூடுதலாகப் பெயரோடு ‘வடார்க்காடு’ என்பதையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். வடார்க்காடு, தென்னார்க்காடு எல்லாம் இப்போது வழக்கில் இல்லை. எனினும் நினைவில் இருக்கின்றன. எண்கணித நம்பிக்கையோ என்னவோ தெரியவில்லை. அதைப் புதிர் போல வைத்துக்கொண்டு ‘சொல்கிறேன்’ என்று சிரிக்கிறார்.
குப்பம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கிய முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் றாம் சந்தோஷ் ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். கதைகள் எழுதுகிறார். கல்விப்புலம் சார்ந்தவர் என்பதால் ஆய்வு நூல்கள் எழுதுகிறார். தெலுங்கு, கன்னட மொழிகளைக் கற்றவர். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இளம் வயதில் பரந்த தளத்தில் செயல்படும் இவர் ‘சண்முக விமல்குமார்’ என்னும் தம் இயற்பெயரிலும் எழுதுகிறார். இன்னும்கூடப் புனைபெயர்கள் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றை எல்லாம் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகமான நபர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டவர் யார் என்று கணக்கெடுத்துப் பரிசளித்தால் முதலிடம் பெறுபவர் றாமாகத்தான் இருக்கும். ஒருநாளுக்குக் குறைந்தபட்சம் நூறு பேருடன் புகைப்படம் எடுப்பாரா? அத்தனை பேர்களையும் எப்படித்தான் நினைவில் வைத்திருக்கிறாரோ? இந்தப் புத்தகக் காட்சியில் முந்திக்கொண்டு அவருடன் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். காரணம் இப்போது வந்திருக்கும் ‘சட்டை வண்ண யானைகள்’ நூலில் எனக்குப் பிடித்த கவிதைகள் நிறைய இருப்பதுதான்.
முகநூல் பதிவுகளிலும் நேரிலும் ஜாலியான இளைஞனாகத் தோற்றம் தரும் அவர் கவிதைகளில் படிந்திருக்கும் துயரம் என்னைத் தொந்தரவுக்கு உள்ளாக்கும். சந்தோஷ் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படிப் பிழிகிறாரே என்றிருக்கும். இந்தத் தொகுப்பிலும் துயரத்தோய்வு இருப்பினும் என்னை ஆறுதல் படுத்தும் வகையில் சந்தோசத் தருணங்களைப் பிடித்து வைத்திருக்கும் சில கவிதைகள் இருக்கின்றன. அவை இதழ்களில் வெளியான போதே வாசித்திருந்தேன். சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்டன. ‘ஆகா! என்ன ஒரு வெளிப்பாடு’ என்று உவந்தேன். துயரத்தை யாரும் சொல்லிவிடலாம். மகிழ்ச்சியைப் பிறர் மனம் கொள்ளுமாறு சொல்வதற்குத் தனித்திறன் வேண்டும்.
‘எனது ஒருநாள்’ கவிதையை வாசித்ததும் ‘இது போதுமே’ என்று தோன்றியது. ‘எனது அரிதின் ஒருநாள் மிக மிக எளிது’ என்று கவிதை தொடங்குகிறது. எளிதாகக் கடந்து செல்ல முடியும் நாள் எல்லாம் அரிய நாட்கள்தான். தம் அன்றாடத்தைப் பட்டியலிட்டு ‘இவை போதும் எனது ஒருநாளைப் பூரணமாக்க’ என்று கவிதை முடிகிறது. அதில் ‘போதும்’ என ஒற்றை மேற்கோள் இட்டிருக்கிறார். அது தேவையில்லை. வேறென்ன வேண்டும்? ஒவ்வொரு நாளும் இப்படியே அமைந்துவிட்டால் வாழ்நாளுக்கும் ‘போதும்’ என்று சொல்லிவிடலாம்.
இந்த மனநிலையைத் தக்க வைத்துக் கொண்டு அவர் எழுதிய சில கவிதைகள் இத்தொகுப்பின் தொடக்கத்திலேயே இருக்கின்றன. குறிப்பாகப் ‘பெருஞ்சோதியே’ என்று முடியும் மூன்று கவிதைகள். ‘அருட்பெருஞ்சோதி’ நமக்கு அறிமுகமான தொடர். அது இறையைக் குறிக்கிறதா, இறைக்குப் பதிலியாகும் சுடரைக் குறிக்கிறதா, பஞ்சபூதங்களில் ஒன்றைச் சுட்டி இயற்கையை விளிக்கிறதா என்பதெல்லாம் அவரவர் மனப்பாடு. அருளை விட்டுவிட்டுப் ‘பெருஞ்சோதி’யைப் பற்றியிருக்கிறார் சந்தோஷ். அவர் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் இயற்கையை விளிப்பதாகவே தோன்றுகிறது. இல்லை, அனைத்தையும் விஞ்சும் பிரபஞ்சத்தைக் குறிப்பதாகவும் விரிக்கலாம்.
அம்மூன்று கவிதைகளில் என்னைப் பெரிதும் ஈர்த்தது ‘காலையின் சிறுவர்கள்.’ ‘அந்தச் சோம்பலையும் மீறி நான் பள்ளி எழுந்துவிட்டேன்’ என்று தொடங்குகிறது. எந்தச் சோம்பல்? காலையில் யாருக்கும் இருக்கும் வழமையான சோம்பல். அல்லது அன்றைய நாள் வேலைகள் பற்றிய எண்ணச் சோர்வால் எழும் சோம்பல். எழும்போது சூரியன் உதித்துவிட்டது. விழிப்பு கொஞ்சம் முன்னரே வந்துவிட்டாலும் சூரிய ஒளி படும்வரை காத்திருக்கிறது உடல். அப்படிப்பட்ட சோம்பல். அன்றாடம் எழுந்ததும் சிலருக்கு ஏதாவது ஒன்றின் முகத்தில் விழிக்கும் வழக்கம் உண்டு. கண்ணாடியில் தன் முகம், குழந்தையின் முகம், கடவுள் முகம் என ஏதோ ஒன்று.
இந்தக் கவிதைசொல்லிக்குத் தவிட்டுக்குருவி. ஒன்று கண்ணில் தட்டுப்பட்டுவிட்டால் போதும். தவிட்டுக்குருவி கூட்டமாகத்தான் இருக்கும். தனியாகப் பிரிந்தாலும் ஐம்பது அடி தொலைவைத் தாண்டாதவை. அவற்றில் ஒன்றே ஒன்று கண்ணில் பட்டால் போதும். அந்த நாளைக் கடந்துவிடலாம். ஒரு மாடியில் இரண்டு சிறுவர்கள் தென்படுகிறார்கள். அழைத்துச் சிரிக்கிறார்கள். ஒருவன், கருமிளம் பன்றியின் பொசுபொசுக் கன்றைப் போல. இன்னொருவன், ரெட்டைப் புதுப்பல் முளைத்த முசலு போல. கவிஞர் ‘ன்’ விகுதியைப் பயன்படுத்தவில்லை. ஒன்று, இரண்டு என்கிறார். அதாவது தவிட்டுக் குருவி தென்படாவிட்டால் என்ன? பன்றிக்கன்றும், முசலும் தட்டுப்பட்டிருக்கின்றனவே. சிறுவருக்கு உவமையாகப் பன்றிக்கன்றைச் சொல்லும் புதுமையை ரசிக்க முடிகிறது.
ஒன்று மாமா என்றழைக்கிறது. இன்னொன்று அண்ணா என்கிறது. மகிழ்ச்சியை அருளும் சொற்கள். அறிமுகம் இல்லாதவர்கள் சிறுவர்களாகவே இருந்தாலும் ‘யார் அவர்கள்? உனக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?’ என்று கேட்டு மனம் நச்சரிக்கிறது. ‘யார் அவர்களுக்கு நான்?’ என்று வந்துகொண்டேயிருக்கும் கேள்வியைப் பொறுக்க முடியாமல் ‘யாராக இருந்தால் எனக்கென்ன?’ என்று வலுவாகப் பதில் சொல்லி அடக்க வேண்டியிருக்கிறது. அலையும் மனதை இப்படி அடக்கினால்தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். அப்புறம் என்ன, மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது.
சந்தோசமாக இருக்க என்னென்னவோ வழிகளைச் சொல்லும் கார்ப்பரேட் சாமியார்களும் நிதி ஆலோசகர்களும் நேர மேலாண்மை வல்லுநர்களும் ஆதிக்கம் செலுத்தும் காலம் இது. மகிழ்ச்சியைப் பெறக் கட்டணம் செலுத்தி வகுப்புக்கு அல்லவா செல்ல வேண்டியிருக்கிறது! இந்த இரண்டு சிறுவர்கள், அல்ல, தவிட்டுக்குருவிகள், அல்ல, பன்றிக்கன்றும் முயல்குட்டியும் ஒரு கையசைவு அழைப்பில், ஒற்றைச் சொல்லில் சந்தோசத்தைக் கொடுத்துவிட்டனவே. எங்கெங்கோ தேடுகிறோம். இவ்வளவு எளிதாகச் சந்தோசம் கிடைத்துவிடுகிறதே.
இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி? பரம சல்லிசுதான் எம் பெருஞ்சோதியே! காய்கறிச் சந்தையில் ‘விலை சல்லிசு’ எனக் கேட்கும் சொல் எத்தனை அற்புதமாகக் கவிச்சொல்லாக வந்து விழுந்திருக்கிறது. இவ்வளவு சல்லிசா கவிதை? நல்ல கவிதைதான் றாம்சந்தோஷே என்று அழைத்துச் சொல்லத் தோன்றுகிறது. ‘சல்லிசு’ ஒரு கண்டடைதலை, தரிசனத்தைக் குறிப்பதாகவே மாறிவிடுகிறது.
முழுக்கவிதை:
காலையின் சிறுவர்கள்
அந்தச் சோம்பலையும் மீறி நான் பள்ளி எழுந்துவிட்டேன்
சூரியன் உதிக்கிறது என் மேனியைத் தீண்டுகிறது
அல்லது
அது என் மேனியைத் தீண்டும் மட்டும்
தன்னை முறிக்காமல் காத்திருக்கிறது
அவ் உடற் சோம்பல்
நான் காலையை ஒரு தவிட்டுக் குருவியில் தேடிச் செல்கிறேன்
வழியில் வழமை போல் ஒரு அறிமுகம் இல்லாத மாடியில்
இரண்டு அறிமுகம் இல்லாத சிறுவர்கள்
என்னை அழைத்துச் சிரிக்கின்றனர்
யார் அவர்களுக்கு நான்?
ஒன்று, கருமிளம் பன்றிக் கன்றின் பொசுபொசு
மற்றொன்று, ரெட்டைப் புதுப்பல் முளைத்த முசலு
அது சிரிக்கையில் கொண்டலாத்தியின் தலைச்சிலிர்ப்பு
யார் அவர்களுக்கு நான்?
மாவா என்கிறது ஒன்று, அண்ணா என்கிறது மற்றொன்று
யார் அவர்களுக்கு நான்?
பால்கனியில் நின்று ஒரு மகிழ்ச்சியை நமக்கருளும்
இரட்டைச் சிறுவர்கள் யாராக இருந்தால் எனக்கென்ன?
இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி
பரம சல்லிசுதான் எம் பெருஞ்சோதியே!
000
நூல் விவரம்: றாம் சந்தோஷ் வடார்க்காடு, சட்டை வண்ண யானை, கொம்பு பதிப்பகம், சென்னை, விலை ரூ.150/-
இத்தொகுப்புக்கு நான் எழுதியிருக்கும் பிற்குறிப்பு இது:
சமீபத்தில் நான் மனம் கலந்து வாசித்த கவிதைகள் ‘றாம் சந்தோஷ் வடார்க்காடு’ எழுதியவை. ‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி’ என்று ஒரு கவிதை முடிவை வாசித்ததும் துள்ளி அடங்கினேன். இது தானே வாழ்க்கைப் பார்வை! எளிய காட்சி ஒன்றிலிருந்து இந்தப் பார்வை உருவாகிறது. சல்லிசு என்னும் மக்கள் வழக்கு கவிச்சொல்லாக மாறுவது விந்தை. றாமின் கவிதை ஒவ்வொன்றும் நம்முடன் உரையாடுவது போலத் தோன்றும். மிரட்டாத, சமதளத்திலான உரையாடல். ஏதோ ஓரிடத்தில் அதிலிருந்து எம்பி வியப்பில் கொண்டு நிறுத்தி விடும். சமகால உணர்வு, தார்மீகக் கோபம், சுய பார்வை, கவிமொழி, வாசிப்பின்பம் எல்லாம் கூடி வந்திருக்கும் கவிதைகள் இவை.
—– 10-01-25
புரியாமல் எழுதுவதே கவிதை என்றான பின் அது புதிராகவே போனது.
எளிய வார்த்தைகள் பேசும் உணர்ச்சிமிகு பரிமாற்றம்.
உயர் கவிதை.நன்று ஐயா. ❤️
சிறப்பான பதிவீடு wonderful literature sir
ஆகா…. சிறப்பான மதிப்புரைப் பதிவுங்க ஐயா. றாமானந்தருக்குப் புத்தாண்டு பொலிவுடன் தொடங்கியிருக்கிறது. 👌💐❤️
சிறப்பான அறிமுகம் ஐயா!
ஒர் எழுத்தாளர் தம் படைப்புகளை வெளியிடுவது மட்டுமன்று அவரது பணி. இளந்தலைமுறைகள் எழுத வந்தால் அவர்களின் படைப்புகளை அங்கீகரித்து, அது குறித்து ஓர் உரையாடலை உருவாக்குவதும்தான்.
றாம் சந்தோஷ் வடார்க்காடு அவர்களின் ‘சட்டை வண்ண யானை’ கவிதைத் தொகுப்பு நூல் குறித்த தங்களின் பதிவு அவருக்குக் கிடைத்த அங்கீகாரம்.
ஆம் அவ்வளவு சல்லிசுதான் ஒரு நல்ல படைப்புக்குத் தங்களின் அங்கீகாரம்.