கள் மணக்கும் பக்கங்கள்

You are currently viewing கள் மணக்கும் பக்கங்கள்

 

2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது ஆய்வு நூல் ஒன்றுக்குக் கிடைத்திருக்கிறது. புனைவல்லாத நூலுக்கு எப்படி வழங்கலாம் என்று சில முணுமுணுப்புகள் எழுந்தன. அது இலக்கிய விமர்சன நூல் அல்ல, வரலாற்று ஆய்வு நூல் என்று சிலர் கண்டுபிடித்துச் சொன்னார்கள். விருதுகள் எல்லாம் புனைவுகளுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பது போன்ற எண்ணம் எப்படித் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடுருவியது என்று தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தாலே புனைவல்லாத நூல்களே அதிகம் எழுதப்படுகின்றன என்பது தெரியும். எத்தனையோ துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறை சார்ந்தும் பல்வேறு நூல்கள் வருகின்றன. இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் புனைவல்லாத நூல்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுக்கே மிகுதியான வாசகர் உள்ளனர்.

ஆய்வு நூல், திறனாய்வு, விமர்சனம் என்றால் புறங்கையால் ஒதுக்கும் மனோபாவமும் நம்மிடம் உண்டு. பழந்தமிழ் இலக்கியத்தை இன்றைய தலைமுறை வரைக்கும் எடுத்து வந்திருப்பவை புனைவல்லாத நூல்களே. இருபதாம் நூற்றாண்டில் வெளியான நூல் பட்டியல் எடுத்தால் கணிசமாக இத்தகைய நூல்கள் இருக்கும். அவை கண்ணுக்குத் தெரியாமல் பல கருத்தோட்டங்களை உருவாக்கியுள்ளன; உருவாக்குகின்றன. ‘இயற்கையோடு இயைந்த வாழ்வைச் சங்க இலக்கியம் பேசுகிறது’ என்னும் கருத்து இன்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மிக இயல்பாகப் பொதுத்தளத்தில் பேசும் கருத்தாக இது இருக்கிறது.

ஆனால் அக்கருத்துப் பரவலுக்குப் பின்னணியில் பெரும் ஆய்வுகளும் பல நய நூல்களும் உள்ளன. ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் பொருளில் தனிநாயகம் அடிகள், மு.வரதராசனார் முதலியோர் ஆய்வு செய்தனர். அதன் பிறகே அக்கோணத்தில் சங்க இலக்கியத்தைக் காணும் பார்வை வளர்ந்தது. வ.சுப.மாணிக்கம் தம் ‘தமிழ்க் காதல்’ நூலில் இக்கருத்தை விரிவாகப் பேசியிருக்கிறார். அதன்பின் எத்தனையோ நூல்கள் பேசித்தான் இக்கருத்து இயல்பாகியிருக்கிறது.  இன்று ஏதேனும் ஒருபாடலை எடுத்துத் தாமே எல்லாவற்றையும் கண்டடைந்தது போலப் பேசுவோருக்கு இந்தப் பின்னணி பற்றி எதுவும் தெரிவதில்லை. ‘சங்க இலக்கியத்தில் சூழலியல்’ என்றெல்லாம் இன்றைய கருத்தோட்டத்தை ஏற்றிப் பார்ப்போருக்கு முன்னோரின் தோள் மேல் நின்றே நாம் பேசுகிறோம் என்னும் உணர்வு வராமைக்கு புனைவல்லாத நூல்கள் பற்றிய அசட்டையே காரணம்.

நவீன இலக்கியம் பற்றி எழுதியவர்கள் வரிசையும் பெரிது. மதிப்புரை எழுதும் வழக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றியிருக்கிறது. மணிக்கொடி கால எழுத்தாளர்களாகிய புதுமைப்பித்தன், கு.ப.ரா., கு.அழகிரிசாமி முதலியோர் தமது புனைவு எழுத்துக்களுக்கு நிகராகவோ அதைவிட அதிகமாகவோ புனைவல்லாத எழுத்துக்களையும் கொடுத்திருக்கின்றனர். அதன் பின் ‘விமர்சகர்கள்’ என்றொரு பெருவரிசையைப் பட்டியலிட முடியும். வெவ்வேறு சிந்தனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் விமர்சனத்தில் தீவிரமாக இயங்கியுள்ளனர். அவர்களது எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்துதான் நவீன இலக்கியம் பற்றிய பல கருத்துருவாக்கங்களைச் செய்திருக்கின்றன.

இன்று நவீன இலக்கியத்தில் ஒருவகைமையாகக் கருதும் தலித் இலக்கியம் உருவாவதற்கு அ.மார்க்ஸ் உள்ளிட்ட நிறப்பிரிகை குழுவும் ராஜ்கௌதமன் போன்ற விமர்சகர்களும் செய்த கருத்துருவாக்கம் முக்கியமானது. முந்தைய படைப்புகளில் தலித் மக்கள் எவ்வாறு சித்திரிக்கப்பட்டனர் என்பதை எடுத்துக்காட்டும் கட்டுரைகளும் நூல்களும் 1990களில் பரவலாக வெளியாயின. ஆதிக்க சாதிப் பார்வை சார்ந்த சித்திரிப்புகளின் போதாமை விரிவாகப் பேசப்பட்டது. தலித் இலக்கியத்திற்கான வரையறைகள்கூட உருவாக்கப்பட்டன. ‘தலித்துகள் தான் தலித் இலக்கியம் எழுத வேண்டுமா?’ என்னும் விவாதம் எழுந்தது. இவற்றை எல்லாம் முன்னெடுத்தோர் விமர்சகர்களே.

ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் புனைவல்லாத நூல்கள் மீதும் எனக்குக் கவனம் உண்டு. அவற்றில் சிலவற்றையேனும் விரும்பி வாசிப்பேன். அவற்றைக் கவனப்படுத்தவும் செய்வேன். இவ்வாண்டு அப்படிக் கவனப்படுத்த விரும்புவது க.காசிமாரியப்பன் எழுதிய ‘கள் மணக்கும் பக்கங்கள்’ என்னும் ஆய்வு நூல். துணைத் தலைப்பு ‘தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழ்ப் பொருளிலக்கண அக மரபு ‘நிலமும் பொழுதும்’ முதற்பொருள் என வரையறுக்கின்றது. உழவு செய்யும் வயல் என்னும் பொருளுக்கு இப்போது ‘நிலம்’ மாறிவிட்டது. ஆகவே ‘களம்’ என்று நவீன இலக்கிய விமர்சனத்தில் கையாள்வர்.

கோட்பாட்டு அடிப்படையில் ‘வெளி’ என்பதைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். இலக்கிய உருவாக்கம் வெளியையும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. படைப்புகளில் அவை சாதி, அரசியல், பாலினம் முதலிய பல பரிமாணம் கொள்கின்றன. எழுத்தாளரின் புரிதலுக்கும் பார்வைக்கும் ஏற்பவோ சமகாலச் சூழலின் வெளிப்பாடாகவோ அப்பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. அந்நோக்கில் பழந்தமிழ் இலக்கியம் முதற்கொண்டு நவீன இலக்கியம் வரைக்கும் தம் ஆய்வுப் பார்வையை விரித்து இக்கட்டுரைகளைக் க.காசிமாரியப்பன் எழுதியிருக்கிறார்.

பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் வெளி எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி முதல் மூன்று கட்டுரைகள் விரிவாகப் பேசுகின்றன. அதன் பின்னுள்ள எட்டுக் கட்டுரைகள் நாவல்களில் வெளி பற்றியவை. தி.ஜானகிராமன், பூமணி, பாமா, இமையம், சோலை சுந்தரப்பெருமாள் ஆகியோர் நாவல்களைப் பற்றி ஒவ்வொரு கட்டுரை. என் நாவல்களைப் பற்றி இரண்டு கட்டுரைகள்.

கோட்பாட்டை விவரித்து  அயர்ச்சியை ஏற்படுத்தவில்லை. கோட்பாட்டையும் நாவல் களத்தையும் சூத்திரம் போல எடுத்து வைத்துப் பொருத்தவில்லை. படைப்புகளின் களத்திலிருந்தே கோட்பாட்டை நோக்கி நகர்கிறார். அதன் மூலம் கட்டுரைகளை வாசிப்புத்தன்மை கொண்டவையாக ஆக்கியுள்ளார்.  மொழியிலும் சொல்முறையிலும் இக்கட்டுரைகள் சுவை கூடித் திகழ்கின்றன. எழுத்தாளர்கள் இக்கட்டுரைகளை வாசித்தால் சில திறப்புகள் கிடைக்கும். இலக்கிய நுட்பத்தை அறிந்துகொள்ளும் பார்வை ஒன்று வாசகருக்குக் கிடைக்கும்.

கள் மணக்கும் பக்கங்கள்

காசிமாரியப்பன் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மாணவர் மனம் கவர்ந்த நல்லாசிரியர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் எனக்கு அவருடன் நட்புண்டு. என் படைப்புகள் வெளியானவுடன் முதலில் வாசித்துக் கருத்துச் சொல்பவர் அவர். சிலசமயம் நூல் வெளியாவதற்கு முன்னரே பிரதியை அவரிடம் கொடுத்துக் கருத்துக் கேட்பதுண்டு. நுட்பமான பார்வையோடு தம் கருத்துக்களைத் தயக்கம் இல்லாமல் சொல்வார். நான் ஏற்கவில்லை என்றாலும் அக்கருத்தை அவருடன் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும்.

‘கொம்பமாடசாமி’ என்னும் புனைபெயரில் 1990களில் பல பத்திரிகைகளில் கவிதை எழுதியவர் அவர்.  முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் காலம், வெளி பற்றி ஆய்வு செய்து வருகிறார். நிறைய எழுதவில்லை. எழுதியவற்றையேனும் தொகுத்து வெளியிடுங்கள் என்று பலமுறை வலியுறுத்தியதற்கு இப்போதுதான் செவிசாய்த்திருக்கிறார். இது அவரது முதல் நூல்.

நூல் விவரம்: க.காசிமாரியப்பன், கள் மணக்கும் பக்கங்கள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2024, விலை ரூ.260/-

—–  03-01-25.

Latest comments (2)

ஆனந்த்-தமிழணங்கு

ஆய்வு நூல்கள் அலமாரியை அலங்கரிப்பவைகள் அல்ல. அடுத்த தலைமுறை சிந்தனையாளர்களை வழிநடத்துபவை.
முந்தைய தலைமுறை ஆசிரியர்கள் நிறைய ஆய்வுநூல்களை தந்துள்ளனர். இந்த தலைமுறையில் அது அறவே இல்லையோ என்று சற்று முன்பு தான் சிந்தித்து கொண்டிருந்தேன். முகநூலை திறந்ததும் தங்களின் இந்த கட்டுரை கண்ணில் பட்டது.
நன்றி.

கள் மணக்கும் பக்கங்கள் குறித்து உங்கள் மதிப்புரை அறிமுகவுரை அருமை. ‘கள் மணக்கும் பக்கங்கள்’ , ‘தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும்’ எனும் இரு தலைப்புகளும் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன.