எவ்வளவு காலம் ஆகும்?

You are currently viewing எவ்வளவு காலம் ஆகும்?

கடந்த வாரம் மதிய உணவுக்காக உணவகம் ஒன்றுக்குச் சென்றேன். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் என்னை நோக்கி ஒருவர் வந்தார். ‘பெருமாள்முருகன் சார் தானுங்களா?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். நாமக்கல்லிலும் இலக்கிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்ப வேண்டும் என்பதற்காகவே எப்போதாவது இப்படி நடக்கும். என்னை எழுத்தாளராக இவ்வூரில் அடையாளம் கண்டிருப்போர் விரல் விட்டு எண்ணத்தக்கவர்களே. ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் அறிந்தோர் வேண்டுமானால் கணிசமாக இருப்பர். அவர்களுக்கு ‘முருகன்’ நான்.

இந்த  நண்பர் ‘பெருமாள்முருகன்’ என்று விளித்ததால் வாசகர் என்று தோன்றிற்று. அரசுப்பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் அவர். நண்பர் ஒருவர் வீட்டில் ‘கூளமாதாரி’ நாவலைப் பார்த்திருக்கிறார். ‘மாதாரி’ என்னும் சொல் அவரை ஈர்த்திருக்கிறது. நண்பரிடம் கேட்டு வாங்கி வந்து வாசித்திருக்கிறார்.  ‘எங்கப்பா அம்மாவெல்லாம் இந்த மாதிரி பண்ணயத்துல இருந்தவங்கதான்’ என்றார். இந்நாவலை வாசித்த பலபேர் தம் முன்னோரை நினைவுகூர்வது வழக்கம். இவருக்கும் தம் பண்ணயத்து வாழ்வைப் பற்றி பெற்றோர் நிறையச் சொல்லியிருக்கிறார்களாம். நாவலைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினார். அவர் மனைவியும் குழந்தைகள் இருவரும் உடன் வந்திருந்தனர். புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

என்னிடம் பேசும் விருப்பம் கண்களில் ஒளிரக் கண்டேன். அவசரமில்லை என்பதால் அவரைப் பற்றி விசாரித்தேன். அவரது சொந்த ஊர் நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்த, நகரத்திற்கு அருகில் உள்ள கிராமம்தான். அவரை அறிமுகம் கொண்டதும் சம்பந்தம் இல்லாமல் ஒன்றைச் சொன்னார்.

‘எனக்குக் குடிக்கற பழக்கம் கெடையாது சார்’ என்றார்.

தம் சாதியைச் சேர்ந்தவர்களைப் பற்றிய பொதுமனப் பதிவு அப்படி இருப்பதால் அதை உடைப்பதற்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன். இதில் இன்னொரு கோணமும் உண்டு.  அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகம். அன்றாட வேலை நேரமும் குறைவுதான். வீட்டிலும் பெரிதாக வேலை இருக்காது. கை நிறைய ஊதியம். என்னதான் செய்வது? மதுவருந்தப் பழகிக் கொள்வார்கள். பலர் மதுவடிமைகளாக மாறிப் போவதும் உண்டு. நான் பல்லாண்டுகள் பணியாற்றிய நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வாசலில் பிச்சைக்காரரா பைத்தியகாரரா என்று தீர்மானிக்க முடியாத கோலத்தில் அமர்ந்திருந்த குடிநோயாளி ஆசிரியர் ஒருவரை நானறிவேன். அவரை எதனாலும் மீட்க முடியவில்லை. மரணம்தான் தீர்வாயிற்று. ஆகவே ஆசிரியர்கள் என்றால் குடிகாரர்கள் என்னும் நோக்கிலும் அவர் சொல்லியிருக்கலாம் என எண்ணினேன்.

‘சரி, அப்படியானால்  எப்படிப் பொழுது போகிறது?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

விளையாட்டில் அவருக்கு இருக்கும் ஆர்வம் பற்றிச் சொன்னார். தன்னுடைய ஒருநாளைப் பள்ளியில் மாணவர்களுடன் கழிக்கும் விதம், விளையாட்டு, உடற்பயிற்சி, குடும்ப வேலைகள் என்று பகுத்துக் கொள்ளுதல் பற்றிச் சொன்னார். தம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது பற்றியும் பேசினார். அவரது நேர ஒழுங்கைக் கேட்க வியப்பாக இருந்தது. எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவர் கையைப் பற்றிக் கொண்டேன். மேலும் நவீன இலக்கியம் வாசிக்கும் அறிவியல் ஆசிரியர் என்பதும் வியப்பை அதிகரித்தது.

‘சார், சாதி ஒழிய  எவ்வளவு காலம்  ஆகும்?’ என்று சட்டெனக் கேட்டார்.

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. குழப்பத்தோடு பார்த்தேன். அவர் தன் அனுபவம் எதையோ சொல்வதற்கான தொடக்கம்தான் இந்தக் கேள்வி என்பது அவர் முகத்தில் தெரிந்தது. கேட்கத் தயாரானேன். வேறு மாவட்டத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய அவருக்குச் சமீபத்தில்தான் இடமாறுதல் கிடைத்திருக்கிறது. சொந்த ஊருக்கு வந்துவிட விரும்பியிருக்கிறார். பெற்றோரையும் மாமனார் மாமியாரையும் கவனித்துக்கொள்ள முடியும் என்பது முக்கியமான காரணம்.

எவ்வளவு காலம் ஆகும்?

நகரத்திற்குள் இருந்த பள்ளியில் அவருக்குப் பணி. அருகிலேயே வாடகைக்கு வீடு பார்த்திருக்கிறார். ஒருவீடு கிடைத்தது. வீட்டுச் சொந்தக்காரர் அருகில் இல்லை. வேறு ஊரில் இருந்தார்கள். அவர்களிடம் செல்பேசியில்  வாடகை, முன்பணம் எல்லாம் பேசி முடிவாயிற்று. அரசுப் பள்ளியில் ஆசிரியர் என்றதும் அவர்கள் வேறேதும் கேட்கவில்லை. வாடகை ஒழுங்காக வந்துவிடும் என்று நினைத்திருப்பார்கள். முன்பணத்தை ஜிபே மூலம் அனுப்பிவிட்டார். பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்களிடம் சாவி இருந்தது. வாங்கிக் குடியேறிவிட்டார்.

பத்து நாட்கள் கழிந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை. ஆசிரியரின் மாமனார் மாமியார் வந்திருந்தார்கள். கறி சமைத்துச் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் ஓய்வாகப் பேசிக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுச் சொந்தக்காரர் வந்து வாசலில் நின்றிருக்கிறார். நாமக்கல்லுக்கு ஏதோ வேலையாக வந்தவருக்குப் புதிதாகக் குடியேறியவர்களை நேரில் பார்த்துவிட்டுப் போகலாம் எனத் தோன்றியதாம். ஏதோ வேலையாக அன்றைக்கு வந்தாரோ, பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதேனும் சொல்லிப் பார்க்க வந்தாரோ உண்மை தெரியவில்லை. ஆனால் வந்தவர் இவர்கள் பேச்சையும் மாமனார் மாமியாரையும் பார்த்துச் சாதியைத் தெரிந்துகொண்டார் அல்லது உறுதிப்படுத்திக் கொண்டார்.

அடுத்த நாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. தங்கள் மகனிடம் கேட்காமல் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டதாகவும் இப்போது அவன் சண்டை போடுகிறான் என்றும் சொன்னார். சென்னையில் இருக்கும் அவன் விடுமுறைக்கு வந்து குடும்பத்தோடு தங்கப் போவதால் வீட்டைக் காலி செய்து தர வேண்டும் என்று கேட்டார். ஆசிரியருக்கு நிலைமை புரிந்தது. சச்சரவு வேண்டாம் என்று கருதி விரைவில் இன்னொரு வீடு பார்த்து மாற்றிக்கொண்டார். அந்த அனுபவத்தைச் சொல்லிவிட்டுக் கேள்வியை மீண்டும் கேட்டார்.

‘சார், சாதி ஒழிய  எவ்வளவு காலம்  ஆகும்?’

—–  30-10-24

Latest comments (5)

வணக்கம் ஐயா. வெறுமனே சிறப்பான கட்டுரை ஐயா என்று சொன்னால் இந்தக் கேள்விக்கான பதில் முற்றுப் பெறாது.
சாதி அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்று செல்லவில்லை. சில இடங்களில் அனல்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர்கள் reserve சீட்டு பெற்று வெற்றிப் பெற்ற பின்பும் பிற சாதியினரால் தாங்கள் பெறும் பாடுகளையும், அவமானங்களையும் நந்தன் திரைப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.

Bharath Thamizh

‘சாதியும் நானும்’இந்தப் புத்தகத்தில் உள்ள பல அனுபவக் கட்டுரைகளை நான் வாசித்திருக்கிறேன் ஐயா.

சாதி ஒழியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது ஐயா.