காதல் – சாதி – ஆணவப் படுகொலை

You are currently viewing காதல் – சாதி – ஆணவப் படுகொலை

புதிய தலைமுறை இணைய இதழில் ‘ஊனே… உயிரே…’ என்னும் தலைப்பில் சிறு நேர்காணல்கள் வெளியாகி வருகின்றன. இதழாளர் அங்கேஸ்வர் என்னிடம் எடுத்த நேர்காணல் இது. ஒலிப்பதிவு செய்து எழுதிய வடிவம் இதழில் வெளியாகியுள்ளது. அதை ஓரளவு செம்மையாக்கி இங்கே வெளியிடுகிறேன். இதழ்ப் படத்தை இதில் பயன்படுத்தியிருக்கிறேன். இதழுக்கும் நேர்காணல் செய்த அங்கேஸ்வருக்கும் நன்றி.

நவீன இலக்கிய வாசகராகிய அங்கேஸ்வர் என் படைப்புகள் பற்றித் தம் பரவசத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர் பெயருக்கான காரணத்தை நான் கேட்டேன். ‘குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி. அதை ஆண் பெயராக மாற்றிப் பெற்றோர் வைத்திருக்கின்றனர்’ என்றார். குலதெய்வப் பெயருமாயிற்று; நவீனப் பெயருக்கும் பொருந்துகிறது.

இதழ் சுட்டி: https://www.puthiyathalaimurai.com/features/valentines-day-special-interview-perumal-murugan

சாதி கடந்த திருமணங்கள் சமூக அளவில் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது நிதர்சனம். ஆனால் முன்பிருந்த காலக்கட்டத்திற்கும் இப்போதிருக்கும் காலக்கட்டத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? ஏதேனும் முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா?

முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலொன்றும் சந்தேகம் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கூடியுள்ளன. முந்தைய காலத்தில் அந்த வாய்ப்புகள் இல்லை. ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணோ ஆணோ பிறந்தால், அந்தக் கிராமத்திற்குள்ளேயே அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடும். அதிகபட்சம் பத்திருபது கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சொந்தக்காரர்களை சந்திப்பதுதான் அவர்களது உலகின் எல்லை. அவர்கள்  கிணற்றுத்தவளை போலத்தான் வாழ்ந்தார்கள்.

இன்று அப்படி இல்லை. எல்லோருக்கும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. குறைந்தபட்சம் பள்ளிக்கல்வியாவது கற்கின்றனர். அதற்காகப் பொதுவெளிக்குச் செல்கிறார்கள். உயர்கல்விக்கும் வேலைக்கும் வெளியில் வருகிறார்கள். உடலுழைப்பு சார்ந்த வேலைகள் என்றாலும்கூட வெளியூர்களுக்குச் செல்ல நேர்கிறது.  அதனால் ஆணும் பெண்ணும் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. மனம் ஒத்துப்போகின்றவர்கள் காதலிக்கின்றனர். ஆகவே காதல் திருமணம் அதிகரித்துள்ளது. ஊர், சொந்தம், சாதி கடந்து வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் வருவதுதான் இதற்குக் காரணம். ஆகவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சமூகங்கள் காதல் திருமணங்களை அல்லது காதலை எப்படி எதிர்கொள்கின்றன?

நம் நாட்டில் சமூகம் என்றால் அது சாதிதான். பல சந்தர்ப்பங்களில் ஒருவரது சாதியைக் குறிப்பிடச் ‘சமூகம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவார்கள். ‘அவர் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்’ என சொல்லுவது சாதாரணம். அதனால் சமூகம் என்றால் சாதி என்றுதான் பொருள். ஆகவே காதலைச் சாதிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்றுதான் பார்க்க வேண்டும். இன்று ஓரளவு சமூகம் என்னும் சொல்லுக்குப் பொருள் மாற்றம் ஏற்பட்டுள்லது. வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களுடன் பழகுவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று சமூகம் என்றால் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த மக்கள் என்று பொதுவில் பொருள்படுகிறது. எழுத்திலும் அப்படியே பயன்படுத்துகிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆணவக் கொலைகள் சாதியினால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

அப்படியல்ல. ஆணவக் கொலைகளுக்குத் தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல் சாதிதான் காரணம்.  காதலிக்கும் ஆணோ பெண்ணோ இருவரில்  ஒருவர் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தால், கட்டாயம் அது சாதி சார்ந்த ஆணவப் படுகொலையாகத்தான் இருக்கிறது. பொருளாதாரம், குடும்பக் கௌரவம், பிள்ளைகள் தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற பெற்றோரின் தன்னகங்காரம் போன்றவை பத்து விழுக்காடு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து இத்தகைய செய்திகளைக் கவனித்து வருவதால் என் அனுமானம் இது. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த ஆணவப் படுகொலைகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் என் அனுமானம் சரியாகவே இருக்கும்.

சாதி கடந்து திருமணம் செய்துகொள்பவர்களது குழந்தைகள் எம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்?

சாதி கடந்து திருமணம் செய்தவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் அதேசமயம் அவர்களது பிள்ளைகளும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். சாதிச் சான்றிதழ் வாங்குவதில் இருந்து பிரச்சினை ஆரம்பிக்கும். தந்தையின் சாதி அல்லது தாயின் சாதியைக் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு சொல்கிறது. எந்தச் சாதியும் இல்லை என்று வாங்க முடியாது. சாதி இல்லை என்று சான்றிதழ் அளிப்பதும் இல்லை. விதிவிலக்காக ஓரிருவர் போராடி அத்தகைய சான்றிதழை வாங்கி இருக்கிறார்கள்.  சாதி இல்லை என்று சான்றிதழ் வாங்கினாலும் பயனில்லை. அப்போது நீங்கள் முற்பட்ட வகுப்பில்தான் சேருவீர்கள். இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களுக்குச் சாதிச் சான்றிதழ் வேண்டும். அப்போது தாயின் சாதியோ  தகப்பன் சாதியோ ஏதாவது ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். பெரும்பாலும் ஆணின் சாதியைத்தான் குறிப்பிடுகிறார்கள்.  ஆணை வைத்தே பிள்ளைகளை அடையாளப்படுத்தும் ஆணாதிக்கச் சமூகம் இது.

அடுத்ததாகப் பிள்ளைகளுக்கு உறவுகள் பெரிதாக இருப்பதில்லை. பெரும்பாலும் காதல் திருமணங்களை இரு குடும்பங்களும் புறக்கணிக்கின்றன. பிள்ளைகள் உறவுகள் என்ற வாசனையே இல்லாமல் வளர்கின்றன. நண்பர்கள் சாதி கடந்து உதவுவார்கள். ஆனால் நட்பு உறவாவது என்பது நம் சமூகத்தில் கிடையாது. சாதி கடந்து திருமணம் செய்தவர்களது குழந்தைகளை நண்பர்களது குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினால், பெரும்பான்மையான நண்பர்கள் தங்களது சாதிகளில் இருந்து வெளியில் வரமாட்டார்கள். இம்மாதிரியான பல சிக்கல்கள் அந்த பிள்ளைகளுக்கு ஏற்படுகின்றன. அவற்றை நாம் பொதுத்தளத்தில் பேசுவதுகூட இல்லை. விரிவாகப் பேச வேண்டும்.

ஆணவக் கொலைகளை அரசியல் கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே கடந்து செல்கிறதா?

ஆணவக் கொலை மட்டுமல்ல.. சாதி சார்ந்த பிரச்சினைகளையே சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகத்தான் அரசும் பார்க்கிறது, அரசியல் கட்சிகளும் பார்க்கிறார்கள். எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாளை ஆட்சிக்கு வருவார்கள். அவர்களது பார்வை எல்லாம்  சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதுதான். சமூக அமைதிக்கான அளவுகோல் அந்த அளவில் நின்றுவிடுகிறது. ஆணவக் கொலைகளை மூடி மறைக்கிறார்கள்; சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று குரல் எழுப்புகிறார்கள்.  அதனால் ஆணவப் படுகொலை அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஆணவப் படுகொலைகள்  ஒழிய வேண்டுமானால் அரசியல் கட்சிகள் சாதி கடந்து திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் பெரியாரைப் பேசக்கூடிய, கம்யூனிசம், தலித் அரசியல் பேசக்கூடிய கட்சிகளாவது காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது மிக முக்கியம். உறவுகள் எல்லோரும் கைவிட்டு விடுகிறார்கள். அவர்களுக்குச் சரியான வேலை அமைவதில்லை. காதல் திருமணங்களில் பெரும்பாலானோர் கஷ்டப்படுவதற்குக் காரணம் பொருளாதார நெருக்கடிதான். எனவே, அரசியல் கட்சிகள் சாதி கடந்து திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாகத் தற்போது வாழும் சூழலில் இருந்து வேறு ஒரு சூழலுக்கு அவர்கள் சென்று வசிப்பதற்கான உதவிகளையும் செய்ய வேண்டும். இவற்றை எல்லாம் சாதி ஒழிப்புக் கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் முன்வந்து செய்ய வேண்டும். ஆனால் எந்த அரசியல் கட்சிகளும் அதைச் செய்வதில்லை.

முந்தைய காலம் போலக் கலப்பு மணங்களை, சீர்திருத்தத் திருமணங்களைக் கட்சிகள் இப்போது பிரச்சாரம் செய்கின்றனவா?

சாதி மறுப்புப் திருமணங்கள் பெரியார் திடல் போன்ற இடங்களில் சீர்திருத்தத் திருமணங்களாக மிக எளிமையான முறையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளில் சிறிய அளவிலேனும் மேடைகளிலும், கூட்டங்களிலும் நடக்கின்றன. முந்தைய காலத்தில் சுயமரியாதைத் திருமணம் குறித்துப் பிரச்சாரம் செய்வதற்கான தேவை இருந்தது. ஆனால் அந்தக் காலக்கட்டம் இன்று இல்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல் ஆண் பெண் சந்திப்பதற்கான வெளிகள் இன்று அதிகரித்துள்ளன. எனவே திருமணங்களை சாதி கடந்து செய்துகொள்ளுங்கள் எனப் பரப்புரை செய்வதற்கான தேவை இல்லாமல் போய்விட்டது என்று தோன்றுகிறது. அதேவேளையில் சாதி ஒழிவதற்கான முக்கியமான வழி கலப்புத் திருமணங்கள்தான் எனப் பேசும் கட்சிகள் இருக்கின்றன. இம்மாதிரியான பேச்சுக்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

சாதி கடந்த திருமணங்கள் நெடுங்காலமாக நடக்கின்றன. அவர்களது குழந்தைகளை இங்குள்ள சாதிய அமைப்புகள் அதன் கட்டமைப்புக்குள்ளேயே கொண்டு வந்துவிடுகின்றனவே?

நான் முன்பே சொன்னதுபோல், சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களது குழந்தைகள் ஏதாவது ஒரு சாதிக்கு உட்பட்டுத்தான் வாழ வேண்டி இருக்கிறது. தமிழ்நாடு அரசில் கலப்பு திருமணங்கள் செய்தவர்களுக்கான இடஒதுக்கீடு என்று இருந்தது. தற்போது அது நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. கலப்புத் திருமணம் செய்தவர்களில் ஆணோ, பெண்ணோ பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அந்த இடஒதுக்கீட்டைப் பெறலாம். கலப்புத் திருமணம் செய்தவர்கள் எனச் சான்றிதழ் கொடுப்பதையும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதையும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அந்த இடஒதுக்கீட்டின் அளவைக் கூட்ட வேண்டும். அப்படி வந்தால்தான் சமூக சூழல் மாறும்.

கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் இடஒதுக்கீட்டுக்காகவோ  வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ ஏதேனும் ஒரு சாதியின் கீழ் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. காலப்போக்கில் சாதி அவர்களை உள்வாங்கிக் கொள்கிறது. அதைக் குறைக்க இடஒதுக்கீடு உதவும்.

சங்க இலக்கியம் காட்டும் காதலுக்கும் தற்போதைய காதலுக்கும் இடையில்  ஒற்றுமைகள் இருக்கிறதா?

ஒற்றுமைகள் அதிகம்; வேற்றுமைகள் குறைவு. காதல் என்பது ஆதிகாலத்தில் இருந்து இருப்பது; இயல்பான உணர்வு அது. இருவரும் பார்த்துக் கொண்டவுடன் காதல் வருவதெல்லாம் புதுமை அல்ல; சங்க இலக்கியத்திலேயே இருப்பதுதான். பிரிவில் தவிப்பது போன்றவை எல்லாம் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன. காதலுக்குரிய பொதுமையில் மாற்றம் இல்லை. தற்போது காதலுக்குச் சமூக ஏற்பு இல்லை என்பதுதான் வேற்றுமை. சங்க இலக்கியத்தில் காதலுக்குச் சமூக ஏற்பு இருந்தது. இன்று சாதி சார்ந்தும் பொருளாதாரச் சூழல் சார்ந்தும் சமூக ஏற்பு கிடைப்பதில்லை.

இறுதியாக, உங்களைப் பொருத்தவரை காதல்?

காதல் என்பது உயிர்களின் இயல்பான உணர்வு. காதலை வெளிப்படுத்தினாலே குற்றம் என்று சொல்லும் ஒழுக்கப்பார்வை தடையாக இருக்கிறது. அப்படி இருக்கக்கூடாது. காதல் இயல்பாக மலர்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.

காதல் - சாதி - ஆணவப் படுகொலை

—–   04-02-25

Latest comments (1)