இத்தாலி அனுபவங்கள் 6

You are currently viewing இத்தாலி அனுபவங்கள் 6

ஓடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டேயிருக்கிறோம்

பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் எழுத்தாளர் சந்திப்புக்காகவே சென்றோம். அது ஒருநாள் மாலை நேர நிகழ்வு. அதற்காக விமானச் சீட்டு, தங்குவதற்கு மூன்று நாள் இடம், உணவு ஆகிய செலவுகளை விழாக்குழு, புத்தகக் கடை, பதிப்பகம் ஆகிய மூவரும் பகிர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் இத்தாலிக்கு வந்துவிட்டு அதன் தலைநகரும் வரலாற்றுப் புகழ் பெற்றதுமான ரோம் நகரம் செல்லாமல் திரும்ப முடியுமா? உலகத்துச் சாலைகள் எல்லாம் ரோம் நகரை நோக்கித்தானே செல்கின்றன! அங்கே மூன்று நாள் தங்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.

போகும்போது ரோம் நகர விமான நிலையத்தில் இறங்கி இன்னொரு விமானம் மாறித்தான் பிளோரன்ஸ் சென்றோம். மீண்டும் ரோமிலிருந்தே விமானம் ஏற வேண்டும். பிளோரன்ஸிலிருந்து இரண்டு மணி நேர ரயில் பயணத்தில் ரோம் வந்துவிடலாம். ஆகவே ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுத்திருந்தனர். 13-12-24 அன்று காலை 9.30 மணிக்கு ரயில். அன்று ரயில் டிரைவர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எங்களுக்குப் பதிவு செய்திருந்த ரயிலும் ரத்து. அங்கே ரயில் போக்குவரத்திலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஒருசில தனியார் நிறுவன ரயில்கள் வழக்கம் போல ஓடின. அதில் புதிதாகச் சீட்டு வாங்கிக் கொண்டு பயணம் செய்தோம்.

பொதுவாகப் பயணத்தில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சுமை குறைவாக வைத்துக்கொள்வது என் வழக்கம். இயல்பாகவே என் தேவைகளும் குறைவு. குளிர்ப் பிரதேசத்தில் வேர்வை வராது என்பதால் அடிக்கடி உடை மாற்ற நேராது. அளவான உடைகள் போதும். மற்றபடி நான் பயன்படுத்தும் பொருட்கள் சிறுபைக்குள் அடங்கிவிடும். புத்தகங்கள் எடுத்துச் சென்றால் பெருஞ்சுமையாகும். போகுமிடத்தில் ஏதேனும் வாங்கினாலோ நிகழ்வுகளில் எவற்றையாவது வழங்கினாலோ அவற்றைக் கொண்டு பெட்டியை அடைக்க நேரும். அவற்றிலும் தேவையற்றவற்றைக் கழிக்க மனம் வேண்டும். சிறுசுமை பயணத்தை எளிமையாக்குவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

2018ஆம் ஆண்டு ஜெர்மனி, பெர்லின் நகரில் ஓர் இலக்கிய விழாவில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகக் கருத்தரங்கிற்கு நான்கு நாள் பயணமாகச் சென்றேன். மீண்டும் ஜெர்மனி வழியாகவே திரும்பல் என்பதால் அங்கு வசிக்கும் எழுத்தாளர் பிரசாந்தி சேகரம் அவர்களின் வீட்டில் பெட்டியை வைத்துவிட்டு ஒரே ஒரு கைப்பையோடு ஆஸ்டின் புறப்பட்டேன். அப்போது அமெரிக்காவின் பல மாநிலங்களில் புயலால் பெருஞ்சேதம். இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

நான் செல்ல வேண்டிய விமானம் ரத்து. ஒரே விமானத்தில் ஆஸ்டின் செல்ல வேண்டிய பயணம் மூன்று விமானங்கள் மாற வேண்டியானது. பெர்லினிலிருந்து ஸ்பெயின் நாட்டுத் தலைநகரான மாட்ரிட் வரை ஒருவிமானம். அங்கிருந்து அமெரிக்க நகரம் ஒன்றிற்கு (பெயர் மறந்துவிட்டது) அடுத்த விமானம். அங்கிருந்து ஆஸ்டினுக்கு இன்னொரு விமானம். பெர்லினில் ஏறும்போதே மாட்ரிட்டிலிருந்து அமெரிக்க நகரம் ஒன்றுக்குச் செல்லும் பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டனர். அங்கு இறங்கிய பிறகுதான் ஆஸ்டினுக்கான பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அது எனது முதல் அமெரிக்கப் பயணம். உடன் யாருமில்லை. இயல்பாகவே பதற்றம் இருந்தது. விமானக் குழப்பம் அதை அதிகரித்துவிட்டது.  அப்போது எனக்கு முன்னால் நின்றிருந்த இளம்பெண் ஒருவரும் நான் செல்ல வேண்டிய இரண்டு விமானங்களுக்கான பயணச்சீட்டைப் பெறுவதைக் கண்டேன். கல்லூரி மாணவி போலிருந்தார். ஒருவர் உதவி இருந்தால் பதற்றம் குறைந்து இயல்பாக இருக்க முடியும் என்று தோன்றியது.  அப்பெண்ணிடம் நானாகச் சென்று அறிமுகம் செய்துகொண்டு என் நிலையைச் சொல்லி உதவும்படி கேட்டுக் கொண்டேன்.

மாட்ரிட் நகரில் இறங்கியபோது வெவ்வேறு விமானங்களில் இறங்கிய பயணிகள் ஆடுமாடுகள் போல ஓடுவதைக் கண்டேன். பல நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும்  விமானங்கள் அந்நகர் வழியாக மாற்றிவிடப்பட்டிருந்தன. ஓடுதளங்களைத் தவிரப் புழுதி பறக்கும் செம்மண் நிலம் விமான நிலையம் முழுவதும் பரவியிருந்தது. புல்வெளிகள்கூட இல்லை. ஓடுதளத்திலிருந்து நிலையத்திற்குள் செல்ல வாகன வசதி ஏதுமில்லை. இறங்கிய இடத்திலிருந்து நுழைவாயிலை நோக்கி ஓட்டம்தான்.  பெட்டிகளைச் சுமந்து வந்தோர் வாயில் நுரை தள்ள ஓட வேண்டியிருந்தது.

இத்தாலி அனுபவங்கள் 6

கடவுச்சீட்டைப் பரிசீலித்து அனுப்பும் குடியேற்றப் பகுதியில் பெருங்கூட்டம். வரிசை சீர்குலைந்து மக்கள் அலைபாய்ந்தனர். பணியாளர்கள் ஸ்பானிஷ் மொழியில்தான் பேசினர். ஆங்கிலம் பேசத் தடுமாற்றம். ஒருவரை அனுப்பச் சில நிமிடம் எடுத்துக் கொண்டனர். எனது அடுத்த விமானத்திற்குக் குறைவான நேரமே இருந்தது. இந்தச் சடங்குகளைக் கடந்து போய் விமானத்தைப் பிடிக்க முடியுமா என்று சந்தேகமாயிற்று. நிதானமாக அணுகும் சூழல் இல்லை. எங்கும் மக்கள் திரள். பலவிதச் சத்தம். ஒருவிமான நிலையத்தில் இப்படிப்பட்ட காட்சியை நான் கண்டதேயில்லை.

‘பிதுமாரு கெட்டுப் போனேன்’ என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். என்ன செய்வதென்று தெரியாத நிலை. பெரிதும் தடுமாறிப் போனேன். வரிசையிலிருந்து நகர்ந்த அந்தப் பெண் தன்னுடன் வரும்படி அழைத்தார்.  கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரத்தில் நின்றிருந்த பணியாளர் ஒருவரைக் கண்டுபிடித்துப் பேசி விமான நேரத்தைச் சொல்லி எங்களை முன்னால் கூட்டிப் போகச் செய்தார். என்னை முன்னால் அனுப்பி அவர் பின்னால் வந்தார். குடியேற்றச் சடங்கு எளிதாக முடிந்தது. எதுவுமே கேட்கவில்லை. கடவுச்சீட்டின் ஒருபக்கத்தைத் திருப்பி முத்திரை பதித்து அனுப்பினார்கள். உடனே விமான வாயிலை நோக்கி ஓட்டம்.

எந்தத் திசை, எத்தனாம் வாயில் என்பதையெல்லாம் நான் பார்க்கவேயில்லை. அப்பெண்ணின் பின் கண்ணை மூடிக்கொண்டு சென்றேன். அவர் வேகத்துக்கு என்னால் நடக்கவும் முடியவில்லை; ஓடவும் முடியவில்லை. ஒருபெட்டியை இழுத்துக்கொண்டு கைப்பை ஒன்றை மாட்டிக்கொண்டு அத்தனை வேகமாக ஓடினார். இருபது வயதில் இருப்பவருக்கு நிகராக ஐம்பதைக் கடந்த நான் ஓட முடியுமா? சிறிது தூரம் ஓடித் திரும்பிப் பார்த்து எனக்காக நிற்பார். நான் அருகில் வந்ததும் முன்னால் ஓடுவார். அந்த வாயிலைச் சென்றடைய இப்படியே வெகுதூரம் ஓடினோம். பன்னாட்டு விமான நிலையங்களில் ஒரு வாயிலை அடைவதற்குக் கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகிவிடும். அதற்காகவே இரண்டு மூன்று மணி நேரம் முன்னால் வரச் சொல்கிறார்கள். சீக்கிரம் போய்விட்டால் நல்ல நடைப்பயிற்சி செய்யலாம்; வேடிக்கை பார்க்கலாம்.

ஓடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டேயிருக்கிறோம், வாயிலையே காணவில்லை.

—–   04-03-25

Latest comments (1)

கோபாலகிருஷ்ணன்

தங்கள் ஓட்டம் சிறப்பாக இருந்தது. வெளியில் சென்றால் நம் கால்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் போல!