’அறம்’ இணைய இதழில் 24 ஏப்ரல் 2025 அன்று பேராசிரியர் கி.கதிரவன் என்பார் எழுதிய ‘கல்லா கட்டும் அரசு கல்லூரி முதல்வர்கள்’ என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. கி.கதிரவன் எக்கல்லூரியில் பணியாற்றுகிறார் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லை. அரசு கல்லூரியில் பணியாற்றுபவராக இருப்பின் இப்படி ஒரு தலைப்பைத் தந்திருப்பாரா என்று எனக்கு ஐயமாக உள்ளது. கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சொற்கள் படுமோசமானவை. கல்லா கட்டுதல், வசூல் வேட்டை, அநியாயக் கட்டண வசூல் முதலிய சொற்களைக் கையாள்வதற்கு எத்தகைய ஆய்வு நடத்தினர் என்று தெரியவில்லை. இவ்விதழின் ஆசிரியரான மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் இத்தகைய கட்டுரையின் தகவலைக் குறைந்தபட்சம் சரிபார்க்காமல் எப்படி வெளியிட்டார் என்பது எனக்கு வியப்பாக உள்ளது. கட்டுரை எடுத்தவுடன் இப்படித் தொடங்குகிறது:
‘அரசு கல்லூரி முதல்வர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். ஆனாலும் அதில் திருப்தி அடையாமல் ஏழை, எளிய மாணவர்களிடம் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பேனரில் வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டி வருகின்றனர்.’
ஒரு கல்லூரி முதல்வர் ‘பெற்றோர் ஆசிரியர் கழகம்’ என்னும் பேனரில் வசூல் வேட்டை நடத்தி அப்பணத்தை எடுத்துக்கொள்வது சாத்தியமா? அதுவும் ரசீது கொடுத்துப் பெறும் பணத்தைக் கல்லூரி முதல்வர் தன் பைக்குள் போட்டுக்கொள்ள முடியுமா? கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் இவையெல்லாம் அதை அனுமதிப்பார்களா? கட்டுரையை வெளியிடும் முன் இந்த அடிப்படைக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்க வேண்டாமா?
கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் செயல்படுகின்றன. பெரும்பாலானவை முறையாகப் பதிவு செய்து ஆண்டுதோறும் தணிக்கைக்கும் உட்படுகின்றன. அவற்றில் உறுப்பினர் ஆவதற்குக் குறைந்தபட்ச சந்தாத்தொகை நூறு அல்லது இருநூறு என நிர்ணயிக்கப்படுகிறது. பெறும் தொகைக்கு முறையாக ரசீது தருகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தலைவர், செயலர் உள்ளிட்ட பதவிகளும் உள்ளன. பெற்றோரில் ஒருவரே செயலராக இருப்பர். பொருளாளர் பதவி பெரும்பாலும் ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது. ஆசிரியர் அன்றாடம் கல்லூரிக்கு வருபவர் என்பதால் காசோலை வழங்குதல், கையொப்பம் இடுதல் முதலிய வேலைகள் எளிதாக நடக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு. செலவழிக்கும் தொகை காசோலையாகத்தான் வழங்கப்படுகிறது.
பெற்றோர் ஆசிரியர் கழகமும் முன்னாள் மாணவர் சங்கமும் இல்லை என்றால் அரசு கலைக்கல்லூரிகள் இத்தனை தரமாகச் செயல்பட வாய்ப்பில்லை. சமீபத்தில் வெளியான அரசாணையை அனைவரும் கவனித்திருப்போம். இனி D பிரிவுப் பணிகளுக்கு நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதில்லை என்பது அவ்வாணை. ஏற்கனவே பல ஆண்டுகளாக அப்படித்தான் நிலை இருக்கிறது. இப்பணிகளுக்கு வெளிமுகமை மூலம் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம் என்கின்றது அரசு. அதற்கென ஒருநாள் ஊதியமாக நிர்ணயித்திருக்கும் தொகை மிகவும் குறைவு. நூறுநாள் வேலைத்திட்டத்தில் வழங்கும் ஊதியத் தொகையை விடவும் குறைவு. அதற்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். அதுவும் நாமக்கல் போன்ற தொழில் மாவட்டங்களில் நாள் ஒன்றுக்குச் சாதாரணமாக ஐந்நூறு ரூபாய் ஊதியம் பெற முடியும். அப்படியிருக்கும் போது நூறுக்கும் இருநூறுக்கும் பணியாளர்கள் எங்கிருந்து கிடைப்பார்கள்?
ஆகவே வெளிமுகமை மூலம் பணியாளர்களை அமர்த்துவது இயலாது. அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை அரசு அமர்த்தாத நிலையில் அவற்றைக் கல்லூரிகளே சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. கௌரவ விரிவுரையாளர்களையும் போதுமான அளவில் அரசு நியமிப்பதில்லை. இவையெல்லாம் இல்லாமல் கல்லூரியை நடத்த முடியுமா? அரசின் கொள்கை சரியல்ல என்பதே என் எண்ணம். அதைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை. இத்தகைய நிலைமையைக் கல்லூரி நிர்வாகம் எப்படிச் சமாளிக்கிறது என்பதை விளக்க முயல்கிறேன்.
நான் கிராமத்துக் கல்லூரி இரண்டில் முதல்வராகப் பணியாற்றி இருக்கிறேன். இரண்டுக்கும் பகல் காவலர்களை முதலில் நியமித்தேன். வழக்கமாகக் கல்லூரி நுழைவாயில் திறந்தே கிடக்கும். யார் வேண்டுமானாலும் வரலாம்; போகலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. வெளியாட்கள் உள்ளே வருகிறார்கள் என்றால் விசாரித்து அவர்கள் பெயர் விவரங்களைப் பதிவு செய்து அனுப்ப வழி செய்தேன். அது கல்லூரி ஒழுங்குக்குப் பெரிதும் பயன்பட்டது. இருசக்கர வாகனங்களில் கல்லூரிக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்னும் நிலை இருந்தது. அதை மட்டுப்படுத்திக் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தும்படி செய்தேன். இதற்கெல்லாம் பகல் காவலர் நியமித்தது பேருதவியாக இருந்தது.
கல்லூரிக்குள் போதுமான அளவு கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் அவை சுத்தமாக இருப்பதில்லை. வகுப்பறைகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்தாலே பெரிது. பள்ளிகளில் மாணவர்களே இந்தப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். தூய்மைக் குழு, குடிநீர்க் குழு, கரும்பலகைக் குழு என்றெல்லாம் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்திருப்பர். அவை முறை மாற்றி மாற்றி ஒவ்வொரு வேலையைச் செய்வர். இப்போது இத்தகைய வேலைகளை மாணவர்களைச் செய்யச் சொல்லக் கூடாது என்று கட்டுப்பாடு வந்துவிட்டது. கல்லூரிகளில் மாணவர்கள் செய்ய வாய்ப்பே இல்லை.
அரசு ஆண்டுதோறும் புதிய கட்டிடங்களைக் கட்டுகிறது. துப்புரவுப் பணிச்சுமை கூடிக் கொண்டே செல்கிறது. நான் பணியாற்றிய கல்லூரியில் மூன்று பணியாளர்கள் மட்டும் இருந்தனர். மூவாயிரம் மாணவர்கள் பயிலும் முதல்நிலைக் கல்லூரி வகுப்பறைகள், முற்றம், கழிப்பறைகள், வளாகம் அனைத்தையும் பராமரிக்க மூவர் எப்படிப் போதும்? போதாமையால் அவர்கள் மீதும் தினமும் புகார்கள் வரும். அவர்கள் விளக்கம் சொல்வர். பணியாளர் பற்றாக்குறைதான் காரணம் என்பதை உணர்ந்து அதை ஆறாக உயர்த்தினேன். அதன் பின் வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் பெருமளவு சுத்தமாகப் பராமரிக்க முடிந்தது. அலுவலக உதவியாளர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். அதனால் பல வேலைகள் சுணங்கின. நேரத்தைப் பின்பற்றவே முடியாத நிலை இருந்தது. இரண்டு உதவியாளர்களைக் கூடுதலாகப் பணியமர்த்தினேன்.
இத்தனை பணியாளர்களை எப்படி நியமிக்க முடிந்தது?
(தொடர்ச்சி நாளை)
—– 01-05-25
நல்ல கட்டுரை ஐயா. அரசுக் கல்லூரிகளுக்கு எதிரானவர்களுக்குத் தக்க பதில். அதோடு நீங்கள் சிறந்த எழுத்தாளர் போல் சிறந்த முதல்வராக இருந்ததற்கு வாழ்த்துகள்.
ஐயா, ஒரு மொழி தொடர்பான சந்தேகம் : “அரசுக் கல்லூரிகளின் நிலை” என்று ஒற்று மிகாதா?
தொடரட்டும் சார்
ஐயா 🙏 கல்லூரிகள் மட்டும் அல்ல. பள்ளிகளிலும் இதே நிலைதான். இருப்பினும் உதவி புரியும் மனம் உள்ள ஆசிரியர்களாலும் பெற்றோர்களால் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அரசியல்வாதிகள் பெட்டி பெட்டியாக வாங்கிக் கொண்டு தனியாருக்கு கல்வியைத் தாரைவார்த்து விட்டார்கள். அதன் பின்னர் அரசியல் வாதிகளின் படைகளே ஆக்ரமிப்பு. இது புரியாத பெற்றோர் மரமண்டைகள் பாவம் தனியார்களே கட்டடம் மேல் கட்டடம் என்று தம் குழந்தைகளை அங்கேயே சேர்க்கிறார்கள்.என்ன செய்ய? யாரை நோக?