பெற்றோர் ஆசிரியர் கழக நிதி நிலை உயர்ந்தால் அதைக் கொண்டு கல்லூரிக்குச் சில நன்மைகளைச் செய்ய முடியும். கூடுதல் மாணவர்கள் படித்து வெளியேறினால் முன்னாள் மாணவர் சங்கமும் சிறப்பாகவும் நிதி வசதியுடனும் செயல்பட முடியும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதோடு முன்னாள் மாணவர் சங்கத்திலும் கவனம் கொண்டேன். நாமக்கல் கல்லூரி ஐம்பதாண்டுகளைக் கடந்த கல்வி நிறுவனம். அதில் பலர் அக்காலத்தில் பயின்றுள்ளனர். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அமைச்சராக இருந்த செ.காந்திச்செல்வன் இக்கல்லூரி மாணவர். நாமக்கல் நகராட்சித் தலைவராக இருந்து சிறப்பாகச் செயல்பட்ட கரிகாலன் இக்கல்லூரி மாணவர். இன்னும் பல தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் இக்கல்லூரி மாணவர்கள்.
கல்லூரியின் பொன்விழாவை ஒட்டி முன்னாள் மாணவர் சங்கம் கட்டிக் கொடுத்த ‘மகளிர் ஓய்வறை’ பெரிதும் பயன்படுகிறது. இப்போதைய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரின் உறவினரும் தொழிலதிபருமான நடராஜன் அவர்கள் அதைக் கட்டிக் கொடுப்பதில் முன்னின்றார். பெண்கள் ஓய்வெடுக்கப் படுக்கைகள் உட்படப் பல வசதிகளையும் கொண்டது அக்கட்டிடம். முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்குச் செய்தவற்றைக் கொண்டு தேசியத் தரக் கட்டுப்பாடுக் குழு மதிப்பெண் வழங்குகிறது. அந்த அளவு இன்று முன்னாள் மாணவர் சங்கத்திற்குத் தேவை இருக்கிறது. ஆகவே அதன் உறுப்பினர் எண்ணிக்கையைக் கூட்டவும் நிதி வசதியைப் பெருக்கவும் முயன்றோம்.
படித்து முடித்துச் செல்லும் ஒவ்வொரு மாணவரையும் அதில் உறுப்பினராக்கினோம். எப்போதோ பயின்று வேறு எதற்காகவோ கல்லூரிக்கு வரும் பழைய மாணவர்களை அதில் உறுப்பினராக்கியதோடு அவர்களின் நன்கொடையைக் கேட்டுப் பெற்றோம். பலர் மனமுவந்து உதவினர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து லண்டனுக்குச் சென்று வேலை செய்வோர் எண்ணிக்கை கணிசம். உயர்கல்விக்காகச் செல்வதாக விசா பெற்றுச் சென்று உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்வர். அப்படிச் செல்வோருக்கு ஆங்கிலம் பேசத் தெரியும் என்று ஒரு சான்றிதழ் தேவை. அவர்கள் படித்த கல்லூரி முதல்வர் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வர். அச்சான்றிதழ் தருமாறு கேட்டு முன்னாள் மாணவர் பலர் வருவர். வெளிநாடு செல்ல லட்சக்கணக்கில் செலவு செய்கிறீர்கள், உங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, ஆனால் நம் மாணவர் என்பதால் பேசத் தெரியும் என்று பொய்ச்சான்றிதழ் தருகிறேன், முன்னாள் மாணவர் சங்கத்திற்கு நன்கொடை கொடுக்கலாமே என்று சொல்வேன். ஐந்நூறோ ஆயிரமோ நன்கொடை வழங்குவார்கள். இப்படிக் கேட்ட பிறகு என்னிடம் மறுத்தோரே இல்லை.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் வேதியியல் பயின்ற மாணவர் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் கல்லூரிக்கு வந்து சந்திக்க விரும்புகிறோம், உட்கார்ந்து பேச ஓர் அறை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டனர். நான் வைத்த ஒரே நிபந்தனை ‘கல்லூரிக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்பதுதான். அவர்களுக்குள் பேசித் திரட்டி ஒருதொகையைக் கொடுத்தனர். மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் கொண்ட நல்ல அறை ஒன்றை அவர்கள் சந்திப்புக்கு வழங்கினோம். சம்பந்தப்பட்ட துறைத்தலைவரை அந்நாளில் வரச் செய்து அவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டேன். அவர்கள் வழங்கிய தொகையை முன்னாள் மாணவர் சங்க நிதியில் சேர்த்து அவர்கள் துறைக்கே பயன்படும்படி செய்தேன். இப்படி எல்லாம் அதன் நிதியைப் பெருக்கியதால் கல்லூரிக்கு நன்மைகள் கிடைத்தன.
கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு கல்வியாண்டுத் தொடக்கத்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக ஊதியம் வரவில்லை. பெரும்பாலான ஆண்டுகளில் ஓரிரு மாதம் தாமதமாகும். நான்கு மாதம் என்பது நீண்ட காலம். ஊதியத்தை நம்பிக் குடும்பம் நடத்துவோர் என்ன செய்ய முடியும்? மொத்தமாகத் தொகை சேர்ந்து கிடைத்துவிடும் என்றாலும் அந்தந்த மாதச் செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடனோ கைமாற்றோ வாங்கித்தான் சமாளிக்க முடியும். நிரந்தரப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் தம்மாலான உதவியைச் செய்து கொண்டிருந்தனர். தனிநபர் ஒருவர் எல்லோருக்கும் உதவ முடியாது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ஐயாயிரம் கொடுக்கலாம் என்றும் தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஏற்பாடு செய்தோம். பெரும்பாலோர் பெற்றனர். அவர்களுக்கு ஊதியம் வந்ததும் திரும்பச் செலுத்தினர்.
பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து ஆண்டுக்கு இருதுறைகளில் ஒருநாள் கருத்தரங்கு நடத்துவதற்கு நிதியுதவி செய்தோம். ஒதுக்கிய தொகை போதாது எனினும் அந்தந்தத் துறைத்தலைவரும் ஆசிரியர்களும் தம் பங்காக ஒருதொகையைப் போட்டுச் சிறப்பாகக் கருத்தரங்குகளை நடத்தினர். தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர் சிலருக்குப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து உதவியதும் உண்டு. அரசின் முடிவுகள் அனைத்தையும் நாம் மாற்ற இயலாது. வெளியிலிருந்து விமர்சிக்கலாம். உள்ளிருப்போருக்கு அதற்கும் வாய்ப்பில்லை. இருக்கும் அமைப்புகளைச் சக மனிதர்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தும் பார்வை இருந்தால் போதும்.
பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இல்லை என்றால் கல்லூரியை நல்ல முறையில் நடத்தியிருக்க முடியாது. விதிகளுக்கு உட்பட்டு அவற்றைச் செயல்படுத்த வேண்டும். நிதியைப் பெருக்குவது மட்டுமல்ல, தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும் அவசியம். மாணவர் சேர்க்கை நடக்கும் நாட்களில் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் இருவேளை நொறுக்குத் தீனி, தேநீர் வழங்குவதும் சேர்க்கைப் பணியில் இருப்பவர்களுக்கு மதிய உணவு வழங்குவதும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கடமை, அதன் நிதியில் இருந்து பணம் எடுத்துச் செலவழிக்க வேண்டும் என்று ஒருகல்லூரியில் நடைமுறை இருந்தது. அது மட்டுமல்ல, மாணவர் சேர்க்கைப் பணி முடிந்ததும் அனைவருக்கும் மதிய விருந்து ஒன்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் நடைபெற்று வந்தது. அவற்றை முற்றிலுமாக நிறுத்தினேன்.
பெற்றோர் ஆசிரியர் கழக நிதி என்பது மாணவர்களிடம் பெறும் பணம். ஏழை எளிய மாணவர்கள் தாம் பயிலும் கல்லூரி தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அளிக்கும் சிறுநிதியுதவி. அது அவர்கள் நலன் சார்ந்த அடிப்படை வசதிகள் உள்ளிட்ட நற்செயல்களுக்குப் பயன்பட வேண்டுமே தவிர ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் விருந்தளிப்பதற்காக அல்ல. இவற்றுக்கே கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகியிருப்பதை அறிந்தேன். மாதம் ஐயாயிரம் ரூபாய் பெறும் பணியாளர் ஒருவருக்கு ஓராண்டு ஊதியம் அது. ஒருவரின் ஓராண்டு ஊதியத்தில் விருந்து சாப்பிட்டால் அது செரிக்குமா? ஒருவேளை உணவைத் தம் செலவில் உண்ண முடியாத அளவு ஏழைகளா ஆசிரியர்கள்?
(தொடர்ச்சி நாளை)
—– 05-05-25
சிறப்பு. அனைத்து அரசு கல்லூரிகளிலும் தங்களைப் போலவே கல்லூரி முதல்வர்கள் இருப்பார்களானால் கெளரவ விரிவுரையாளர்களின் பாடுகள் குறைந்துவிடும் நன்றிங்க ஐயா