மீண்டும் 2021இல் திமுக ஆட்சி வந்த பிறகும் ஏனோ அதில் அரசின் கவனம் செல்லவில்லை. மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை என்று கருதினார்களோ என்னவோ. பொறியியல் துறை சார்ந்த துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் சிலர் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவாக இல்லை. அதுவும் காரணமாகலாம். மொழிக் கொள்கையில் அதிகாரிகளை அரசு நம்பக் கூடாது. பொறியியலில் கணினி அறிவியல் உள்ளிட எல்லாத் துறைக் கல்விக்கும் தமிழ் வழியை விரிவாக்கும் நடவடிக்கைகள் தேவை. கூடுதல் மாணவர்கள் சேர்ந்து பாடநூல் விற்பனை பெருகும் என்றால் பதிப்பகங்கள் அதைக் கைப்பற்ற முனைந்து நூல்களைத் தயாரிக்கும். பேராசிரியர்களும் அதில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் வழியாக அரசும் புதிய பாடநூல்களை வெளியிடலாம்.
இப்போது பிரதமர் ‘மருத்துவக் கல்வி தமிழில் இருந்தால் ஏழை மாணவர்களுக்கு உதவும்’ என்று சொல்கிறார். மருத்துவக் கல்வியைத் தமிழில் வழங்குவது இயலாத செயலல்ல. இலங்கையில் முன்னர் தமிழ் வழியில் மருத்துவப் படிப்புகள் இருந்தன. அவற்றுக்குப் பாட நூல்களும் எழுதப்பட்டிருந்தன. இப்போதும் அவை கிடைக்கின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில் அங்கு ஆங்கில வழியிலேயே மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது என்பதை அறிந்தேன். ஈழப் போராட்டத்தின் கண்ணுக்குத் தெரியாத விளைவுகளில் ஒன்றாக இதுவும் இருக்கலாம் என்று தோன்றியது.
அருகில் இருக்கும் நாட்டில் முடிந்தது என்றால் தமிழ்நாட்டில் அது இயலாத காரியமல்ல. தொடங்கி ஓரிரு ஆண்டுகள் சிரமமாக இருக்கும். பிறகு எல்லாம் சரியாகிவிடும். தமிழ் போன்ற வேர்ச்சொற்கள் நிரம்பிய மொழியில் பாடநூல்கள் எழுதுவது கடினமல்ல. தமிழ் வழியில் கல்வி வரும்போது பாடநூல்கள் தயாரிப்பதில் நெகிழ்வான அணுகுமுறைகள் தேவை. எவையெல்லாம் கூடாது என்பதில் தெளிவு வேண்டும். தீவிரத் தனித்தமிழ் ஆர்வலர்களை இதற்குள் நுழைய விடக் கூடாது. தமிழாசிரியர்களையும் அனுமதிக்கக் கூடாது. துறை சார்ந்த பேராசிரியர்கள் பாடநூல்களை உருவாக்கட்டும்.
எத்தனை குறையுடையதாக இருப்பினும் பரவாயில்லை. சில ஆண்டுகளுக்கு ஆங்கில நூலையும் தமிழ் நூலையும் இணையாக வைத்துக்கூடக் கற்பிக்கலாம். எல்லாச் சொற்களையும் தமிழில் ஆக்க வேண்டும் என்றும் கருதக் கூடாது. தமிழில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களைக் கையாளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து கலைச்சொற்கள் அமையலாம். புதிய சொற்கள் நாவுக்கு இலகுவாக இருக்க வேண்டும். அதுவரைக்கும் பெருமளவு ஆங்கிலச் சொற்களையே ஒலிபெயர்ப்பு செய்தே பயன்படுத்தலாம். அதிகபட்சம் ஐந்தாண்டுகள் இதில் நற்கவனம் கொண்டால் தமிழ் வழிக் கல்வியைச் சாதித்துவிடலாம். அதற்குரிய வலு அரசுக்கு வேண்டும்.
தமிழ் வழியில் பயின்றால் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது பாதிக்கப்படும் என்னும் வாதம் மிகவும் பொருட்படுத்தத்தக்கது. பயில்பவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டில் பணி புரிகின்றனர். அதுவும் பன்னாட்டு நிறுவனப் பணியாக இருந்தால் ஆங்கிலம் அவசியம் தேவை. குறைந்த விழுக்காட்டினர் தான் வெளிமாநிலம், வெளிநாட்டுப் பணிகளுக்குச் செல்கிறார்கள் என்றாலும் அவ்வருமானம் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்கும் காரணமாவதால் அவர்களுக்கு உதவும் வகையில் கல்வி இருக்க வேண்டும் என்பதில் மாற்றில்லை.
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத பலர் வெளிநாடுகளுக்குச் சென்று அப்படிப்பைப் படிக்கின்றனர். அவ்வெண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் தொடங்கியபோது அங்கே மருத்துவம் பயிலச் சென்ற மாணவர்கள் பலரது குரலைக் கேட்க முடிந்தது. அவர்களை இங்கே அழைத்து வர அரசு உதவியதையும் கண்டோம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் ஆசிய நாடுகளுக்கும் மருத்துவம் பயிலத் தமிழ்நாட்டிலிருந்து செல்வோர் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளனர். அப்படிச் செல்வோர் பெரும்பாலும் ஆங்கில வழியில் கற்பதில்லை. அந்தந்த நாட்டின் தாய்மொழியில்தான் கற்கிறார்கள். முதலில் சில மாதங்கள் அம்மொழியைப் பயில்வதற்கு ஒதுக்குகிறார்கள். அதன் பிறகு அம்மொழி வழியில் மருத்துவக் கல்வி பயில்கிறார்கள்.
ஆகவே மொழியை ஒரு தடையாகக் கருத வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் வழியில் பயில்வோருக்கு ஆங்கிலம் அவசியம் தேவை. அதற்கு ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுப்பதில் மாற்றம் தேவை. இப்போது அரசுப் பள்ளிகளில் இருக்கும் ஆங்கில மொழிப் பாடம் இலக்கியப் பாடமாக இருக்கிறது. பத்தி பத்தியாக மனப்பாடம் செய்து எழுதும் வகையில் மொழிப்பாடம் இருப்பது பெரும்சுமை. தம் சிந்தனைத் திறனை அம்மொழியில் வெளிப்படுத்தும் வகையில் கற்பித்தலும் தேர்வும் அமைய வேண்டும்.
இப்போதைய பாடத்திட்டம் எழுதுதல், வாசித்தல், பேசுதல் முதலிய திறன்களை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இல்லை. அவற்றை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும்; தேர்வு முறையைத் திருத்தியமைக்க வேண்டும். இருபத்தைந்து விழுக்காடு இலக்கியத்திற்கு ஒதுக்கிவிட்டு எழுபத்தைந்து விழுக்காடு பயன்பாட்டு மொழிப் பாடமாக அது விளங்க வேண்டும். மருத்துவமோ பொறியியலோ பயிலும் காலத்திலும் ஆங்கில மொழிப்பாடம் இணையாக வந்துகொண்டே இருக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் பல ஆங்கிலம் கற்பித்தலை இணைய வழியில் சிறப்பாகச் செய்கின்றன. அவற்றில் கற்பிப்போர் போன்ற திறன் கொண்டோரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தலாம். மாணவர் திறனை மதிப்பிட்டு அவ்வாசிரியருக்கு ஊதியம் வழங்கலாம். ஒருதாள் மொழிப்பாடம் வைப்பதில் எந்தச் சிரமமும் இல்லை. அத்தாள் அவர்கள் பயிலும் துறையோடு பொருந்தும் வகையில் பாடத்திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவாகப் பேசுவதைச் சாதகமாகக் கொண்டு கூடுதல் நிதி கேட்கலாம். பாடத்திட்டக் குழுக்கள் அமைத்தல், பாடநூல்களைத் தமிழில் ஆக்குதல், ஆங்கில மொழி கற்பிக்கக் கூடுதல் ஆசிரியர்களை நியமித்தல் ஆகிய காரணங்களைக் கூறி ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதி கேட்கலாம். அப்படிக் கேட்பது அரசியல் ரீதியாகவும் அவர்களை எதிர்கொள்ள சரியான வழியாகும். உயர்கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை இன்னும் வலுவாக்கலாம். மாற்றங்களை அங்கீகரிக்கும் மனநிலையும் சூழலைச் சாதகமாக்கும் திறனும் இருந்தால் தமிழ் வழிக் கல்வி சாத்தியம்தான்.
—– 14-04-25
Add your first comment to this post