வீற்றிருக்கும் மருதம்!

You are currently viewing வீற்றிருக்கும் மருதம்!

கம்பராமாயணத்தில் இருந்து அதிகம் மேற்கோள் காட்டிய பாடல் பட்டியல் ஒன்றை எடுத்தால் பாலகாண்டம் நாட்டுப் படலத்தில் மருத நில வருணனையாக வரும் ‘தாமரை விளக்கம் தாங்க’ என்னும் பாடல் முதல் பத்துக்குள் வரும் என்று நினைக்கிறேன். யாப்பிலக்கணத்தில் அறுசீர் ஆசிரிய விருத்தத்திற்குச் சான்றாக இதைக் காட்டுவதுண்டு. இயற்கை வருணனைக்குச் சிறந்த உதாரணப் பாடலாக இது திகழ்கிறது. இலக்கிய நயத்தைப் பலபடப் பேச இது உதவுகிறது. உருவக அணிக்கும் இதை எடுத்துக் காட்டுகின்றனர். சந்தத்தோடு வாசிக்கவும் பாடவும் ஏற்றதாக இருப்பதால் பாடநூல்களில் பலமுறை இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் பத்தாம் வகுப்புப் பாடத்தில் இப்பாடல் உள்ளது. இலக்கிய வரலாற்று நூல்களில் மேற்கோள் பாடலாகக் காணப்படுகிறது. பொதுவாசகர்களுக்கும் உவப்பைத் தருவதாக விளங்குகிறது. முழுப்பாடல்:

தண்டலை மயில்க ளாடத்

தாமரை விளக்கந் தாங்கத்

கொண்டல்கண் முழவின் ஏங்கக்

குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத்

தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட

மருதம்வீற் றிருக்கு மாதோ.

பாடல் அமைப்பு எளிமையானது. ஒவ்வொரு மூன்று சீருக்கும் சந்த நிறுத்தம் வருகிறது. அவ்விடத்திலேயே பொருள் முடிவு பெறுகிறது. ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் பொருள் இயைபு தொடர்ந்து பாடல் இறுதியில் ஒருசித்திரம் உருவாகிறது. பாடலை வாசிப்பதும் எளிது; பொருள் புரிவதும் எளிது. எடுத்துச் சொல்வதும் எளிது. மனம் கொள்ளும் வகையில் எளிய பாடலைப் புனைவது கடினம். இத்தகைய எளிய பாடல்கள் பலவற்றைக் கம்பர் இயற்றியிருக்கிறார். இத்தனை இடங்களில், இவ்வளவு பேர் இப்பாடலை மேற்கோள் காட்ட அப்படி என்னதான் இருக்கிறது?

கோசல நாட்டு மருத நிலத்தைக் கம்பர் வருணிக்கிறார். அங்கே காணும் காட்சிகளில் இருந்து சிலவற்றைத் தேர்வு செய்கிறார். இயற்கை ஆயிரக்கணக்கான காட்சிச் சித்திரங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அனைத்தையும் கவிதைக்குள் அடைத்துத் திணித்துவிட முடியாது. கவிதைக்கென சிலவற்றைத் தேர்வு செய்துதான் ஆக வேண்டும். நீர்வளம் மிகுந்த மருத நிலத்தில் இயற்கை எழிலுக்குப் பஞ்சமில்லை. மருத நிலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தேர்வு செய்பவை அமைய வேண்டும். மயில், தாமரை, மேகம், குவளை, நீர், வண்டுகள் ஆகியவற்றைக் கம்பர் தேர்ந்தெடுக்கிறார்.

மயில் ஆடுகிறது. தாமரை, குவளை ஆகியவை நிற்கின்றன. மேகம் இடிக்கிறது. நீர் அசைகிறது. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. இவற்றை எல்லாம் இணைத்தால் ஒருகாட்சி உருவாகிறது. மயிலை ஆடல் மகளாக உருவகிக்கிறார். அதற்கேற்ற வகையில் மற்றவற்றின் பங்கும் பாத்திரமும் வடிவம் பெறுகின்றன. தாமரை விளக்கேந்துகிறது. மேகம் மத்தளம் வாசிக்கிறது. நீர் திரையாகிறது. வண்டுகள் பாடுகின்றன. குவளை பார்க்கிறது. மருதமாகிய அரசன் இவற்றைக் கண்டு களித்து அரியணையில் வீற்றிருக்கிறான்.

இயற்கைக்கு மனிதத்தன்மையைக் கம்பர் ஏற்றுகிறார். இயற்கையிலிருந்து செயற்கையைக் கட்டமைத்து இன்பம் பெறும் உயிரிதான் மனிதர். மனிதத்தன்மையை ஏற்றியதும் ஒரு செயற்கைக் காட்சி உருவாகிறது. நம் மனதில் இருக்கும் ஆடலரங்கம் ஒன்றைக் கொண்டுபோய் மருத நிலத்திற்குள் வைத்துவிடுகிறார். நாம் அறிந்தது செயற்கை ஆடலரங்கம். அதைக் கண்ட கண்களை அப்படியே அழைத்துப் போய் இயற்கைக்குள் நிறுத்திப் ‘பார்’ என்று விட்டுவிடுகிறார். மயிலை நாட்டிய மங்கையாகப் பாவித்து ஒரு நிகழ்த்துகலையைக் காண்கிறோம்.

நாட்டியம் நடக்கும் நேரம் மாலை அல்லது முன்னிரவு. அப்போது தாமரை மலர் கூம்பிவிடும். செந்தாமரை. கூம்பிய தாமரை மொட்டு விளக்குச் சுடர் போலிருக்கிறது. தாமரைக்கொடி அந்த விளக்கை ஏந்தி நிற்கிறது. நாட்டிய நிகழ்ச்சிக்கு விளக்கு வேண்டுமே. மேகம் முழங்கும் ஒலி மத்தளம். வண்டுகள் பின்னணி பாடுகின்றன. அவை வெவ்வேறு வகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஒலிக்கும். மகரயாழ் இசை போலச் சில குரல்கள். பின்பாட்டாகச் சில குரல்கள். பின்னணியில் திரைக்காட்சி மாற வேண்டுமே. காற்றில் நீர் அசைந்து திரையாகிறது. மாலையில் குவளை மலரும். குவளையைக் கண்ணுக்கு உவமையாகச் சொல்வது மரபு. குவளை மலர்ந்திருப்பது கண் விழித்து நோக்குவது போலிருக்கிறது. பார்வையாளரும் கிடைத்துவிட்டனர். ஓர் ஆடல் காட்சி இயற்கையில் அரங்கேறுவதை நம்மைப் பார்க்கச் செய்கிறார் கம்பர்.

நேரம் மாலை. நடக்கும் இடம்? சோலை என்கின்றனர் உரையாசிரியர்கள். ‘தண்டலை மயில்கள் ஆட’  என்று வருகிறது. சோலையில் மயில்கள் ஆடுகின்றன என்று உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர். ‘தண்டலை’ என்பது சங்க இலக்கியத்தில் பயின்று வருகிறது. அவ்வாறு வரும் மூன்று இடங்கள் இவை:

தண்டலை கமழும் கூந்தல் (அகம்.204)

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி (மதுரைக்.341)

தாழ் தாழைத் தண் தண்டலை (பொரு.181)

இவற்றிற்குச் சோலை, தேன், பூந்தோட்டம், மரச்சோலை எனப் பொருள் தருகின்றனர். தண் + தலை எனப் பிரித்துக் குளிர்ச்சியான இடம் எனப் பொதுப்பொருள் கொள்கின்றனர். பண்புத்தொகையாகிய அது சந்தர்ப்பத்திற்கேற்ப அன்மொழித்தொகையாகிப் பொருள் தரும். கம்பராமாயணப் பாடலில் சோலை என்பதாகவே அனைவரும் பொருள் எடுத்துக்கொள்கின்றனர். சோலையில்தான் மயில் ஆடும் என்று கருதி அவ்வாறு கொண்டனர் போல.  தாமரை, குவளை எல்லாம் நீர்த் தாவரங்கள். அவை எப்படிச் சோலையில் இருக்கும்? சோலைக்குள் ஒரு பொய்கையைக் கொண்டு வந்து பொருத்தி இயைக்கின்றனர். அந்த இயைபு அவ்வளவு பொருந்தவில்லை.

வீற்றிருக்கும் மருதம்!

தண்டலைக்கு ‘வயல்’ எனப் பொருள் கொள்கின்றேன். அப்போதுதான் நாற்று நட்ட வயல். அல்லது ஒருபுறம் நாற்று நட்டும் ஒருபுறம் பயிர்கள் வளர்ந்தும் இருக்கும் வயல்களைக் கொண்ட நிலப்பரப்பு. வயலில் தேங்கி நிற்கும் நீர் திரையாகும். அதில் களைகளாக வளரும் தாமரை, குவளை ஆகியவை பூத்திருக்கும். சரி, வயலில் மயில் ஆடுமா? நிச்சயம் ஆடும். மயில்கள் மனிதர்களோடு இயைந்து வாழும் பறவை. தானியங்கள், தாவரங்கள், பூச்சி புழுக்கள் ஆகியவையே அவற்றின் உணவு. அவை உழவர்களுக்குப் பெரும் தொந்தரவு தருபவை. அவற்றைக் கொல்லக் கூடாது என்று சட்டம் இருப்பதால் இன்று பெருகி விவசாயத்திற்கு எதிரியாக உருப்பெற்றிருக்கின்றன. வயல்களின் நடுவே அவை தோகை விரித்தாடும் காட்சியை எங்கள் ஊரில் பலமுறை கண்டிருக்கிறேன். வயல்களில் களையாக நிற்கும் பூக்களை மொய்க்க வண்டுகள் வரும். தண்டலை என்பதை வயல் என்று கொண்டால் அனைத்தும் பொருந்தும். ‘மகர யாழ்’ என்று சொல்வதும் வயலுக்கு ஒத்தது. வயல் நீரில் மீன்கள் துள்ளுவது இயல்பு.

இப்பாடலின் பொருளை இப்படி எழுதத் தோன்றுகிறது:  ‘மொட்டுக்களை விளக்காகத் தாமரைக் கொடிகள் தாங்கி நிற்கின்றன. வயலில் தேங்கித் தெளிந்திருக்கும் நீர் காற்றில் அசைந்து திரையாகத் தோன்றுகிறது. மேகங்கள் இடிக்கும் ஒலி மத்தள இசையாகிறது. பிழிந்தெடுத்த தேன் என இசை தரும் மகரயாழ் போல வண்டுகள் இனிதாக ஒலிக்கின்றன; பின்பாட்டுப் பாடுகின்றன. குளிர்ச்சி பொருந்திய வயல் நடுவில் மயில்கள் ஆடுகின்றன. இவ்வாடல் காட்சியை ரசித்தபடி மருத நில அரசன் தம் இருக்கையில் வீற்றிருக்கின்றான். ஆகா!’

‘மருதம் வீற்றிருக்கும்’ என்று பொதுவாகச் சொல்வதால் அதை அரசன் என்பதா, அரசி என்பதா என உரையாசிரியர்களுக்குள் சிறுவேறுபாடு உள்ளது. எப்படியும் கொள்ளலாம். இப்பாடலில் ஒரே ஒரு பாடவேறுபாடுதான். ‘தாமரை விளக்கம் தாங்க’ என்பதற்குப் பதிலாகத் ‘தாமரை விளக்கம் ஏந்த’ என்று பாடம் இருக்கிறது. தாமரை – தாங்க என மோனை நோக்கி அனைவரும் பாடம் கொண்டுள்ளனர். விளக்கு கனமானது. அதைத் தாங்கி நிற்க வேண்டும். தாமரைக் கொடிக்கு மொட்டு பாரமல்ல. ஆகவே ஏந்தி நிற்கிறது என்றாலும் தவறில்லை. பழங்காலத்துப் பாவை விளக்கு பெண் தம் கைகளில் விளக்கேந்தி நிற்பதாகவே அமைந்திருக்கும். ஆகவே ‘ஏந்த’ என்பது மிகப் பொருத்தமான பாடம் என்று கருதுகிறேன். ‘மாதோ’ என்பது வியப்பைக் குறிக்கும் அசைச்சொல். ‘ஆகா’ என்று இன்றைய மொழியில் அதைச் சொல்லலாம். வயல், மாலை என மருதத்திற்குப் பொருத்தமான முதற்பொருள்களாகிய நிலமும் கருப்பொருள்கள் பலவும் விளங்கச் சந்தி பிரித்த வடிவில் இப்போது பாடலை வாய்விட்டு வாசித்துப் பாருங்கள்.

தண்டலை மயில்கள் ஆடத்

தாமரை விளக்கம் ஏந்தத்

கொண்டல்கள் முழவின் ஏங்கக்

குவளைகண் விழித்து நோக்கத்

தெண்திரை எழினி காட்டத்

தேன்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட

மருதம்வீற் றிருக்கும் மாதோ!

—–   02-03-25

Latest comments (4)

பாரத் தமிழ்

வணக்கம் ஐயா!

கம்பராமாயணம் வாசிக்க வேண்டும் போல் இருக்கிறதே! காலையில் ஒரு நல்ல பதிவு கண்ணில் பட்டது. நன்றி