‘தண்டலை மயில்கள் ஆட’ என்னும் கம்பராமாயணப் பாடலைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு என் மாணவர் அ.ஜெயக்குமார் (தமிழ் உதவிப் பேராசிரியர், மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி, காளிப்பட்டி) அதைப் போன்ற வருணனை வரும் இரண்டு இடங்களைக் கவனப்படுத்தினார். அவருக்கு நன்றி தெரிவித்து அவ்விடங்களைக் காணலாம்.
முதலாவது அகநானூறு 82ஆம் பாடல். குறிஞ்சித்திணை. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது என்னும் துறையில் அமைந்தது. கபிலர் பாடியது. கையில் வைத்திருக்கும் வில்லில் அம்பு பூட்டிக் குறி பார்த்துக்கொண்டே வந்தான் தலைவன். அவனோடு போராடித் தாக்க வந்த யானை சென்ற வழித்தடத்தை வினவிக் கொண்டு வந்து தினைப்புனத்தருகே நின்றானாம். அவனைப் பலபேர் பார்த்தார்களாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஒன்றும் ஆகவில்லையாம். இவள் மட்டும் நள்ளிரவில் தூக்கம் வராமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாளாம். அது ஏன் என்று தோழியைப் பார்த்துத் தலைவி கேட்கிறாள்.
இருவரும் சந்தித்துக் காதல் கொண்டுவிட்டனர் என்பதை அவள் நேரடியாகச் சொல்லவில்லை. எந்தச் சந்தர்ப்பத்தில் அவனைக் கண்டேன் என்று மட்டும் சொல்கிறாள். அதன் பின் இருவருக்கும் நேர்ந்த சந்திப்பு, காதல் ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துவதற்கு ஒரு உத்தியைக் கையாள்கிறாள். அத்தலைவனின் மலைநாடு எப்படிப்பட்டது என்பதை விவரிக்கும் உத்தி அது. அப்படியானால் அவன் ஊர் முதலியவற்றை அறிந்து கொண்டிருக்கிறாள் என்றாகிறது. அவனைச் சந்திக்காமல், பேசாமல் எப்படி அறிந்துகொள்ள முடியும்? எங்களிடையே காதல் மலர்ந்துவிட்டது, ஆகவே அவனை நினைத்து எனக்குத் தூக்கம் வரவில்லை என்பதைத் தோழிக்கு உணர்த்தி அவனையும் அவன் மலைநாட்டையும் அறிமுகப்படுத்துகிறாள். தோழிக்குத் தலைவி தம் காதல் செய்தியைத் தெரிவிப்பது அறத்தொடு நிற்றல் துறையின் முதல் படிநிலை.
தலைவனின் மலைநாட்டைத் தலைவி நேரில் சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பற்றித் தலைவனே சொல்லியிருக்கலாம். அல்லது அதைப் பார்த்தவர்கள் வாயிலிருந்து தலைவி கேட்டிருக்கலாம். தலைவன் சொல்லிக் கேட்டால்தான் இத்தனை உறுதியோடு தலைவி அந்நிலக் காட்சியைச் சொல்ல முடியும். அப்படி என்ன காட்சி அது? மூங்கிலில் வண்டுகள் துளையிட்டிருந்தன. காற்றில் மூங்கில் அசைகிறது. அப்போது காற்று அத்துளைகளுக்குள் புகுந்து வெளியேறுகிறது. அது இனிய புல்லாங்குழல் இசையாக உருப்பெறுகிறது. அருவியிலிருந்து நீர் கொட்டும் ஒலி கேட்கிறது. அது மத்தளம் போலத் தாளத்தைத் தருகிறது. மேய்ந்து கொண்டிருக்கும் மான் கூட்டத்திலிருந்து ஒரு கலைமான் தலையுயர்த்திக் கத்துகிறது. அது கொம்பு என்னும் இசைக்கருவி ஊதுவது போலிருக்கிறது. மலைச்சாரலில் மலர்ந்திருக்கும் பூக்களை மொய்க்கும் வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. அவ்வோசை யாழின் நரம்புகள் எழுப்பும் இசை போல வருகின்றது. இந்தப் பின்னணியில் மயில் ஆடுகிறது. அது ஆடல் மகளான விறலி நடனமாடுவதைப் போலிருக்கிறது. மரக்கிளைகளில் அமர்ந்துகொண்டு அந்நடனத்தைக் குரங்குகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நாட்டைச் சேர்ந்தவன் அவன் என்கிறாள் தலைவி.
இயற்கை வளம் பொருந்திய மலைநாடு அவனுடையது. செல்வச் செழிப்பு உடையவன் அவன். அவனோடு சேர்ந்து வாழ்ந்தால் குறையேதும் வராது என்பவற்றை எல்லாம் உட்பொருளாக வைத்துத் தம் காதல் செய்தியைத் தோழிக்கு வெளிப்படுத்துகிறாள். அவ்வருணனைப் பகுதி இது:
ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை யவ்வளி குழலிசை யாக
பாடின் அருவிப் பனிநீ ரின்னிசை
தோடமை முழவின் துதைகுர லாக
கணக்கலை இகுக்கும் கருங்குரற் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டுயா ழாக
இன்பல் இமிழிசை கேட்டுக்கலி சிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து இயலி யாடுமயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன் (அகம். 2)
மணிமேகலைக் காப்பியத்தில் ‘பளிக்கறை புக்க காதை’ பகுதியில் வரும் காட்சிச் சித்திரம் ஒன்றும் இத்துடன் இணை வைத்து நோக்கத்தக்கது. மலர்வனக் காட்சிகளைச் சுதமதியும் மணிமேகலையும் கண்டு ரசித்துக் கொண்டுள்ளனர். அப்போது மணிமேகலையைத் தேடி உதயகுமாரன் வருவதை அறிந்து அங்கிருக்கும் பளிங்கு அறைக்குள் மணிமேகலை புகுந்து ஒளியும் நிகழ்ச்சியைச் சொல்லும் காதை இது. தொடக்கத்தில் மலர்வனத்தை வருணிக்கும்போது இப்பகுதி இடம்பெறுகிறது.
சூரியக் கதிர்கள் உள்ளே விழாத அளவு அடர்ந்து இருண்ட சோலை. அங்கே தும்பிகள் ரீங்காரமிடுவது குழலோசை போலிருக்கிறது. பிற வண்டுகளின் ஓசை யாழிசை ஆகிறது. வெயில் நுழையாத அந்த இயற்கைப் பந்தலுக்குள் குயில் மறைந்திருந்து பாடுகின்றது. அரங்கில் ஆடும் பெண்ணைப் போல மயில் ஆடுகிறது. குரங்குகள் காண்கின்றன. சம்பங்கோழி கத்துவது மத்தளமென ஒலிக்கிறது. அங்கே விரிந்திருந்த தாமரை மலர் மேல் அன்னம் அமர்ந்திருந்தது. அது சிம்மாசனத்தில் அரசன் வீற்றிருப்பது போலத் தோன்றியது. இப்படி ஒரு காட்சியைச் சீத்தலைச் சாத்தனார் விவரிக்கிறார்.
பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு
இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில
குழல்இசைத் தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில்நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர்
மயில்ஆடு அரங்கில் மந்திகாண் பனகாண்;
மாசுஅறத் தெளிந்த மணிநீர் இலஞ்சிப்
பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று
ஒருதனி ஓங்கிய விரைமலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்குஇனிது இருப்பக்
கரைநின்று ஆலும் ஒருமயில் தனக்குக்
கம்புள் சேவல் கனைகுரல் முழவாக்
கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்
அகநானூற்றுக் காட்சியைச் சற்றே விரித்துத் தாமரைச் சிம்மாசனத்தில் அன்னம் வீற்றிருப்பதைச் சேர்த்து மணிமேகலை காட்டுகிறது. இவற்றின் தாக்கத்தால் கம்பர் தம் மருதநில வருணனையை உருவாக்கியிருக்கலாம். குறிஞ்சி நிலம் மருத நிலமாகும்போது சோலையும் வயலாவதுதானே பொருத்தம். தமக்கு முந்தைய காலத் தமிழ் இலக்கியத்தில் தோய்ந்த புலமை கொண்டவர் கம்பர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. அக இலக்கிய மரபையும் புற இலக்கிய மரபையும் கற்றுத் தேர்ந்த வல்லாளர் அவர். கபிலரின் கற்பனையை எடுத்து மணிமேகலைக்குப் பொருத்தினார் சீத்தலைச் சாத்தனார். அவ்விரண்டையும் உட்செரித்து மேலும் தெளிவுபடுத்தி இன்னோசையுடன் சித்திரமாக்கியிருக்கிறார் கம்பர். இது இலக்கிய மரபில் இயல்பான செய்திதான். மூன்றையும் ஒப்பிட்டுக் காண்பதும் சுவை பயக்கும் அனுபவம்.
—– 03-03-25
உங்கள் மாணவர் என்றால் சும்மாவா ஐயா