மீனெலாம் களிக்கும் மாதோ!

You are currently viewing மீனெலாம் களிக்கும் மாதோ!

தேனை அடுக்கித் தொகுக்கும் கம்பராமாயண நாட்டுப்படலப் பாடலில் முதலில் ஆலைவாய்க் கரும்பின் தேன். கரும்பு நன்கு விளையும் வயல்கள். அருகில் கரும்புச்சாற்றைப் பிழிந்து வெல்லம் தயாரிக்கிறார்கள். கரும்புச்சாற்றை வேண்டுமளவு பருகலாம். அதன் சுவை தேனைப் போல அத்தனை இனிப்பாக இருக்கிறது. மித மிஞ்சி இருப்பதால் வீணாகிறது என்று யாரும் கவலைப்படவில்லை. கரும்புச்சாறு பெருகி வழிந்து வாய்க்கால் வழியாக ஓடுகிறது. அடுத்துப் பாளைத்தேன். தென்னை, பனைகளின் பாளைகளை அரிந்து கள் கலயங்கள் கட்டியிருக்கிறார்கள். தேன் போன்ற சுவை கொண்ட கள் நிறைந்து வழிந்தோடுகிறது. மரத்திற்குத் தேவையான ஊட்டம் கிடைத்தால்தான் இப்படி அளவற்றுச் சுரக்கும்.

தொடர்ந்து கனியின் தேன். சோலைகளில் பறிக்கவோ உண்ணவோ ஆள் இல்லாமல் வெடித்த கனிகளில் இருந்து தேன் போன்ற சாறு ஒழுகி ஓடுகிறது. அபரிமிதமாகக் காய்த்துக் கிடந்தால் யார் பறிப்பார்கள்? அடுத்து உண்மையான தேன். ஒழுங்குறக் கட்டிய தேன்கூடுகள் நிரம்பிக் கனம் தாங்க இயலாமல் சிந்தும் தேன் பெருகி ஓடுகிறது. தேன்கூடு கனத்திருக்கிறது என்றால் தேனீக்களுக்கு எளிதாகத் தேன் கிடைக்கிறது என்று பொருள். ‘கருங்கோல் குறிஞ்சிப் பூவில் பெருந்தேன் இழைக்கும்’ காட்சி போல.

இன்னொன்று மாலைத்தேன். அதாவது பூமாலைகளில் இருந்து வழியும் தேன். பூக்களில் தேன் ததும்பி நிற்பதால் அவை மாலையாக மாறிய பிறகும் சிந்துவதை நிறுத்தவில்லை. மனிதர் அணிந்திருக்கும் மாலைகளில் இருந்து தேன் கசிந்தோடுகிறது. இவையெல்லாம் ஓரிடத்தில்  ஒன்று கலந்து அளவற்ற வெள்ளம் போல ஓடி அலை ஆரவாரிக்கும் கடலில் போய்ச் சேர்கின்றன.  அவற்றை ஆர்வத்தோடு உண்டு மீன்கள் களித்தாடுகின்றன. எந்தக் கஷ்டமும் இல்லாமல் இனிய தேன் அவற்றுக்குக் கிடைக்கிறது. மீன்கள் தேன் உண்ணுமா எனத் தெரியவில்லை. ஆனால் கம்பர் அப்படித்தான் சொல்கிறார்.

முந்தைய பாடலில் உறக்கம் எல்லாவற்றோடும் தொடர்புபட்டாலும் தனித்தனியாகச் சுட்டிச் சொன்னார். இப்பாடலில் ‘உம்’ விகுதி சேர்த்து ஐந்து தேனையும் தொகுத்து ஓடச் செய்திருக்கிறார். கூடவே உயர்வு நவிற்சி என்னும் உத்தியைப் பயன்படுத்திக் கடலில் சென்று கலந்திருக்கிறார்.  இருபாடல்களும் ஒரே சந்தத்தில் அமைந்தவை.  ‘விளம் மா மா’ என்னும் வாய்பாடு. அறுசீர் ஆசிரிய விருத்தம். அப்பாடல் போலவே விழுமிய நடை. பாடல்:

ஆலைவாய்க் கரும்பின் தேனும்

அரிதலைப் பாளைத் தேனும்

சோலைவாய்க் கனியின் தேனும்

தொடையிழி இறாலின் தேனும்

மாலைவாய் உகுத்த தேனும்

வரம்பிகந் தோடி வங்க

வேலைவாய் மடுப்ப உண்டு

மீனெலாம் களிக்கும் மாதோ.

உழவர்கள் தமக்குரிய உணவைச் சேகரிப்பது தொடர்பான ஓர் அடுக்குமுறைப் பாடலும் உண்டு. எங்கெங்கு எவை உள்ளன என்று அடுக்குகிறார். இறுதியில் அவற்றை எல்லாம் எப்படிச் சேகரிக்கிறார்கள் என்று முடிவு கொடுக்கிறார். முதிர்ந்த கதிர்கள் சாய்ந்து கிடக்கும் வயல்களில் இருந்து தானியங்கள்; மணம் கமழும் பொழில் இருக்கும் பகுதியில் நறுமணப் பொருட்கள்; முதிர்ந்து நிற்கும் பல மரங்களில் இருந்து கனிகள்; வயல்களுக்குப் புறத்தே உள்ள காடுகளில் இருந்து பருப்பு வகைகள்; தரையில் ஓடும் கொடிகளில் உள்ள காய்கறிகள்; மண்ணில் குழி தோண்டினால் கிடைக்கும் கிழங்குகள்.

தானியம், நறுமணப் பொருள், கனி, பருப்பு, காய்கறி, கிழங்கு ஆகியவற்றை எல்லாம் உழவர்கள் சேகரிப்பார்கள். எப்படி? கடுமையாக ஆண்டு முழுதும் உழைத்தா? இல்லை, தேன் மணக்கும் வனத்தில் பூத்திருக்கும் மலர்களை நாடிச் சென்று எந்தச் சிரமமும் இல்லாமல் தேனுறிஞ்சும் வண்டுகள் போல உழவர்கள் சேகரிப்பார்களாம். விளைவிக்கும் வேலை அவர்களுக்குக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். விளைந்தவற்றை எளிதாகச் சேகரித்து எடுத்துச் செல்வார்களாம்.

கதிர்படு வயலின் உள்ள;

கடிகமழ் பொழிலின் உள்ள;

முதிர்பல மரத்தின் உள்ள;

முதிரைகள் புறவின் உள்ள;

பதிபடு கொடியின் உள்ள;

படிவளர் குழியின் உள்ள;

மதுவன மலரில் கொள்ளும்

வண்டென மள்ளர் கொள்வார்.

முந்தையை இருபாடல்களைப் போலவே இதுவும் அதே சந்தம். விளம் மா மா. அறுசீர் ஆசிரிய விருத்தம். ஆற்றொழுக்கு.  ‘கடிகமழ் பொழிலின் உள்ள முதிர் பல மரத்தின் உள்ள’ என ஒரே தொடராகக் கொண்டு ‘மணம் வீசும் பொழில் பகுதியில் உள்ள முதிர்ந்த பல மரங்களில் கிடைக்கும் கனிகள்’ என்று பொருள் கூறுவதும் உண்டு. அனைத்து இடத்திலும் ‘உள்ள’ என்பது வினையாலணையும் பெயராக வருவது சிறப்பு. வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தம் உரையில் ‘கடிகமழ் பொழிலின் உள்ள’ என்னும் இடத்தில் வரும்  ‘உள்ள’ என்பது மட்டும் குறிப்புப் பெயரெச்சம் என்பார். செய்யுள் அமைப்புக்குப் பொருந்தும் வகையில் இருதொடர்களாகக் கொள்வதே சரியாக இருக்கும். அங்கும் வினையாலணையும் பெயர் வருவதே பொருத்தம். அப்படியே நான் பொருள் கொள்கிறேன். குறிப்புப் பெயரெச்சம், வினையாலணையும் பெயர் ஆகிய இலக்கணக் குறிப்புகளைக் கற்றுக்கொள்ள விழைவோர் நன்னூலை நாடிச் செல்க.

காலைக்காட்சி ஒன்றைக் காட்டும் அடுக்குப் பாடலும் உண்டு. அதில் அனைத்தையும் இணைக்கும் ஒற்றைச் சொல் இல்லை. ஒவ்வொரு செயலைச் சொல்லி அனைத்தையும் நூலில் பூக்களைக் கோப்பது போல இன்னொரு செயலோடு பொருத்தி இணைப்பார். அதிகாலையில் குயில்கள் கூவுகின்றன; அக்குரல்களில் காதல் ததும்புகிறது. காலையிலேயே அவை காதல் செய்கின்றன. ‘காலை அரும்பி’ என்கிறார் வள்ளுவர். காலையிலேயே அவ்வுணர்வு தோன்றிவிடும்.

மீனெலாம் களிக்கும் மாதோ!

மரக்கொம்புகளில் அமர்ந்திருக்கும் மயில்கள் நாட்டியப் பெண்கள் போலச் சோலையாகிய நாட்டிய அரங்கை அழகு செய்கின்றன. தாமரை மலர்களில் முந்தைய மாலை நேரத்திலேயே படுத்துறங்கி விட்ட அன்னப் பறவைகள் இப்போது துயில் எழுந்து தம் அடர்ந்த சிறகுகளை விரிக்கின்றன. இவை எல்லாம் ஏன் நடக்கின்றன? அங்கிருக்கும் தும்பிகள் காலையில் பாடும் செவ்வழிப் பண்ணைப் பாடுவதால். அதாவது தும்பிகள் பாடிச் சோலையையே உயிர்ப்பிக்கின்றன.

குயிலினம் வதுவை செய்யக்

கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை

அயில்விழி மகளிர் ஆடும்

அரங்கினுக் கழகு செய்யப்

பயில்சிறை அரச அன்னம்

பன்மலர்ப் பள்ளி நின்றும்

துயிலெழத் தும்பி காலைச்

செவ்வழி முரல்வ சோலை.

இந்தப் பாடலும் அறுசீர் ஆசிரிய விருத்தம். விளம் மா மா என்னும் வாய்பாடுதான். வதுவை செய்ய, அழகு செய்ய, துயிலெழ ஆகிய செயல்கள்தான் இதில் அடுக்கு. முந்தைய பாடல்களில் முச்சீர் முடியும் இடத்தில் கொடுக்கும் நிறுத்தம் பொருள் முடிவு பெற்றுவிடுவதால் சற்று கூடுதலாக இருக்கும். இப்பாடலில் நிறுத்தம் சற்றுக் குறைவாகத்தான் அமையும். மூச்சு வாங்கிக் கொள்ள அவகாசம் இல்லாமல் தொடர்ந்து வாசிக்கும்படி சந்தம் செலுத்தும்.

இதில் ஒற்று மிகுந்திருக்கும் இடங்களையும் கவனித்துப் பார்க்கலாம். செய்யக் கொம்பிடை, கொம்பிடைக் குனிக்கும், செய்யப் பயில்சிறை, பன்மலர்ப் பள்ளி, துயிலெழத் தும்பி, காலைச் செவ்வழி என ஆறிடங்களில் ஒற்று மிகுகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஏன் மிகுகிறது என்று காண்பதும் செய்யுளைக் கற்பதன் ஒருகூறுதான்.

—–   22-04-23

Latest comments (2)

T. LAKSHMAN

சிறப்பான கட்டுரை பிழைகளை களைவதற்கும் பிழை இல்லாமல் எழுதி கற்றுக் கொள்வதற்கும் அருமை ஐயா.

எல் கோபாலகிருஷ்ணன்

எப்படி சொல்ல என்று தெரியவில்லை. என்னையும் பழந்தமிழ் இலக்கியத்துக்குள் இழுத்துப் போட்டு விடுவீர்கள் போலத் தெரிகிறது.
கம்பராமாயணத்தைக் குறித்து மிகவும் நயமான விவரிப்புகள் இவை.