கம்பராமாயணத்தில் உலக வழக்கு – 2

You are currently viewing கம்பராமாயணத்தில் உலக வழக்கு – 2

பாலகாண்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ‘தாடகை வதைப் படலம்.’ அதில் பயிலும் சொற்கள் தமிழ் மொழியின் எல்லாவகை அழகும் பொங்க அமைந்தவை.  தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். அப்போது அவள் எவ்வளவு கொடியவள் என விசுவாமித்திரர் இராமனுக்கு எடுத்துச் சொல்கிறார்.  அதில் வரும் ஒரு தொடர்: ‘எமைக் கோது என்று உண்டிலள்.’ அந்த வனத்திலே உள்ள உயிர்களை எல்லாம் தின்றுவிட்ட தாடகை விசுவாமித்திரர் உள்ளிட்ட முனிவர்களை மட்டும் உண்ணவில்லை. காரணம் அவரைக் ‘கோது’ என நினைத்ததுதானாம். அது என்ன கோது?

கோது என்றால் சாரமற்றது, சக்கை எனப் பொருள் தருகின்றனர் உரையாசிரியர்கள். கொங்கு வட்டார வழக்கில் இன்றும் பயின்று வரும் சொல் இது. காய்ந்த புளியின் மேல்தோல் தோடு என்று வழங்கும். தோட்டை எடுத்தபின் உள்ளே உள்ள சதைப் பகுதியைக் கவ்விப் பிடிக்கும் நார்ப் பகுதி காம்போடு இணைந்திருக்கும். அந்த நாரை உருவி எடுத்துவிட்டுக் கொட்டை வாங்குவார்கள். குவிந்த விரல்களைப் போல் நீண்டு புளியைக் கவ்வியிருக்கும் நாருக்குத்தான் கோது என்று பெயர். சாரமற்றது, சக்கை என்னும் பொருள்களைவிட ‘புளிநார்’ என்று பொருள் கொண்டால் இவ்விடத்தில் மிகவும் பொருந்துகின்றது. புளிச் சதையிலிருந்து உருவிப் போட்ட நார் போன்ற உடம்பு கொண்டவர்கள் முனிவர்கள். நாரை என்ன செய்வோம்? எடுத்து வீசிவிடுவோம். கோது என்பதைப் புளிநார் என்று கொண்டால் பொருள் சிறப்புக் கூடுகிறது.

அதே படலத்தில் தாடகை வீழ்ச்சியைத் தெரிவிக்கும் பாடல் ஒன்று இப்படி வருகிறது:

பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த

தடியுடை எயிற்றுப் பேழ்வாய்த் தாடகை

பொடியுடைக் கானம் என்பதற்குப் ‘புழுதி நிறைந்த காடு’ எனப் பொருள் கூறுகின்றனர். பொடி என்பது பலபொருள் ஒருசொல். இவ்விடத்தில் புழுதியை அடக்கும் வகையில் தாடகையின் குருதிநீர் பொங்கிப் பரவியது என்பது கருத்து.  கம்பருக்கு உலக வழக்கு ஞானம் அபரிமிதமாக உண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு இச்சொல்லைக் காணலாம். பொடி என்னும் சொல்லிற்கு இலக்கியங்களிலோ அகராதிகளிலோ காணப்படாத பொருள் ஒன்று கொங்கு வட்டார வழக்கில் உண்டு.  ‘வெம்மை நிறைந்த மண்’ என்னும் பொருளில் ‘பொடிச் சுடும், செருப்புத் தொட்டுக்கிட்டுப் போ’, ‘தை மாசத்திலயே இப்பிடிப் பொடிச்சுடுது’ என்பன போலப் பல வழக்குத் தொடர்கள் உண்டு. இப்பாடலுக்கு ‘வெம்மை நிறைந்த மண்ணை உடைய காடு’ எனப் பொருள் கொண்டு பார்த்தால் வெகு பொருத்தம் தோன்றுகின்றது.

அக்காட்டைக் கம்பர் தொடக்கத்திலிருந்தே வெம்மையோடு தொடர்புபடுத்தியே வருணிக்கிறார். ‘சுடுசுரம்’ என்பார். அக்காட்டில் உள்ள வெம்மையைப் பற்றிச் சொன்னாலே சொல்லும் நாக்கு வெந்துபோகும் என்பார். அந்த வெம்மையில் வேகாதவை எதுவுமில்லை. அப்படிப்பட்ட காட்டின் வெம்மையைத் தாடகையின் குருதிநீர் தணிக்கிறது என்று சொல்வது கம்பர் எண்ணம். அதற்கு மிகவும் பொருத்தமான சொல் பொடி என்பதுதான். அடி எடுத்து வைக்க இயலாத அளவுக்குச் சூடு கொண்ட வெம்மை மண். இந்த வழக்குப் பொருளை அச்சொல்லுக்கு இயைப்பது மிகப் பொருத்தம்.

கம்பராமாயணத்தில் உலக வழக்கு - 2

மழை பொழியும்போது சில சமயம் கட்டி கட்டியாக வந்து விழும். அதை ஆலங்கட்டி மழை என்போம்.  இராமனோடு போர் செய்யும்போது தாடகை கற்களை எடுத்து எறிகிறாள். அதைச் சொல்லக் கம்பர் ‘கல்லின் மாரியைக் கைவகுத்தாள்’ எனச் சொல்லாட்சியை அமைப்பார். அப்பாடலில் அல்லின் மாரி, கல்லின் மாரி, வில்லின் மாரி என மூவகை மாரிகளைக் குறிப்பிடுக்கிறார். இவ்விதம் ஒரு கற்பனை தோன்றுவதற்கு மூல காரணம் எதுவாக இருக்கக்கூடும்? ஆலங்கட்டி மழையைக் கொங்குப் பகுதியில் ‘கல்மாரி’ என்று சொல்வதுதான் இன்றுவரை வழக்கம். கல்மாரி என்னும் சொல்லின் அமைப்புக்குள் உள்ள முரண் கவனிக்கத்தக்கது. கல் கடினத்தன்மை கொண்டது. மாரி மென்மையானது. ஆனால் மாரியே வேகமாகப் பெய்யும்போது சாட்டை போல உடலில் வலிமையோடு வந்துவிழும். இப்போது கடினமான கல்லும் மாரியும் இணைந்தால் அதன் வலிமை எத்தகையதாக இருக்கும் என ஊகிக்கலாம். இந்தச் சொல்லிலிருந்து விரிந்த கற்பனை என இப்பாடலைக் காணலாம்.

மேடையில் முதன்முதலாகப் பேசும் பேச்சை ஆங்கிலத்தில் ‘Maiden speech’ என்பர். இதைத் தமிழில் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகின்றனர். ஆங்கிலச் சொல்லின் நேரடித் தமிழாக்கம் இது என்றே பலரும் கருதுகின்றனர். அப்படியல்ல. முதல் என்பதைக் குறிக்கக் ‘கன்னி’ என்னும் சொல்லைப் பயன்படுத்தும் வழக்கம் தமிழில் பல காலமாகவே உண்டு. கன்னிப்பூப்பு, கன்னிப்பொங்கல், கன்னித்தீட்டு, கன்னித்தேங்காய், கன்னிநாகு, கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி முதலிய சொற்களில் கன்னி என்பது முதல் என்னும் பொருளில் வருவதைத் தமிழ் லெக்சிகனில் காணலாம். இதையொட்டிய வழக்கு ஒன்று கொங்குப் பகுதியில் உண்டு. முந்தைய காலத்தில் ஆண்களுக்குத் திருமணத்தின்போதுதான் முகச்சவரம் செய்வது வழக்கம். அதைக் ‘கன்னிச் சவரம்’ என்பர். கன்னியை முதல் என்னும் பொருளில் பயன்படுத்துவது உலகவழக்கு.  இவற்றை ஒட்டித் தாடகையோடு இராமன் செய்த போரைக் ‘காகுத்தன் கன்னிப்போர்’ எனக் கம்பர் கூறுகின்றார். போர் பற்றி வரும் வேறிடங்களில் காணப்படாத சொல்லாட்சி இது.  உலக வழக்கை ஒட்டிக் கம்பர் புனைந்து உருவாக்கிய சொல்லாட்சியாக இதைக் கருதலாம்.

சிவனது நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனின் உடல் வெந்து உதிர்ந்ததைப் ‘பூளை வீ அன்ன’ என்று கம்பர் சொல்வார். பூளைப்பூ என்பது இன்றும் காணப்படும் பூண்டுச்செடி வகை. சாம்பல் நிறம் பூசிய தண்டுகளுடன் வெண்ணிறப் பூக்கள் சடைசடையாய் நீண்டிருக்கும். பூளைப்பூவைப் பறித்துக் குவித்துப் பார்த்தால் சாம்பல் குவியல் போலவே காணப்படும். தாடகையைக் குறிக்கும்போது ‘தாடகை என்பது அச்சழக்கி நாமமே’ என்கின்றார். சழக்கி என்னும் சொல்லின் அடியாகிய ‘சாழக்கம்’ என்பது கொங்கு வழக்கில் உள்ளது. சாழக்கம் என்பதற்குப் பலவிதமான தந்திரங்கள் எனப் பொருள். அதனோடு இணைத்துப் பார்த்தால் முதற்குறைந்து சழக்கி உருவாகியிருப்பதை அறியலாம்.

ஒரே ஒரு படலத்தில் மட்டுமே கம்பர் கையாண்டுள்ள சொற்களில் உலக வழக்காக இவ்வளவு கண்ணில் படுகின்றன. இன்னும் பிற வட்டார வழக்குகளோடும் பேச்சுமொழியோடும் கம்பராமாயணத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வளவோ கிடைக்கக்கூடும். தமிழ் மொழியின் சாத்தியங்களை எல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது கம்பராமாயணம் என்பதற்கு இந்த உலக வழக்கு ஒரு சான்று.

—–  07-02-25

(2014ஆம் ஆண்டு தமிழ் இந்து மலரில் வெளியான கட்டுரையின் இறுதிப் பகுதி.)

Latest comments (4)

ஜகந்நாதன்

கன்னி என்பது புரட்டாசி மாதத்தைக் குறிக்கும் வடசொல். புரட்டாசி மாதத்தில் வரும் விஜயதசமி நாளில் இன்றும் கல்வி முதலிய கலைகளை கற்க தொடங்கும் வழக்கம் உள்ளது.
இந்த அடிப்படையில் முதல் என்பதைக் குறிக்க கன்னி என்னும் சொல் பயன்பாட்டிற்கு வந்தது.

GOPI SELVARAJ

கோது, சாழக்கம், பொடி சுடும், பொடி அப்போது போன்ற சொற்கள் இன்று இளமை மாறாமல் வழக்கில் உள்ளன ஐயா.

ப தனபால்

புளிக் கோது எடுத்தாச்சா என்பதும் முதல்முறையாக கோயிலுக்கு மாலை போடுபவர்களை கன்னிச்சாமி என்றும் அழைப்பார்கள் பொடிச் சுடுதல் பொடி அப்புது என்றும் என்னடி சாழக்கம் என்று பெரியவர்கள் கேட்பதும் உண்டு தங்கள் கட்டுரை மூலம் வட்டார வழக்கின் மீது கவனம் பெறச் செய்துள்ளது மேலும் கொங்கு வட்டாரவழக்குச் சொற்கள் கம்பராமயணத்தில் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியளிக்கிறது உலக வழக்குத் தொடரட்டும் ஐயா நன்றி.

Savithri Tamilmani

கோது, பொடி, கல்மாரி, கன்னி, பூளைப்பூ குறிப்பாக சாழக்கம் என அனைத்து வட்டார வழக்குச் சொற்களையும் நீங்கள் ஊன்றிக் கவனித்து அளித்துள்ளீர்கள். படிக்கும்பொழுது மகிழ்வாக இருந்தது.