ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகிய எல்ஐசியின் இணையதளம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழிக்கு மாறியுள்ளது. ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ஏதோ ஒருமூலையில் இருக்கும் சுட்டியைக் கண்டுபிடித்துச் சொடுக்க வேண்டுமாம். அந்தச் சுட்டியின் பெயரும் இந்தியில்தான் இருக்கிறதாம். ‘இந்தியை யாரும் திணிக்கவில்லை’ என்றும் ஒன்றிய அரசு ‘தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறது. பிரதமர் எல்லா இடத்திலும் தமிழின் உயர்வைப் பேசுகிறார்’ என்பவர்கள் இந்த எல்ஐசி இணையதளப் பிரச்சினைக்கு என்ன பதில் சொல்வார்கள்?
இதுபோல இந்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிக்கும் இடங்கள் பல உள்ளன. தொடர்வண்டி நிலையங்களில் ஊர்ப்பெயர்கள் இந்தியில் இருக்கின்றன. அறிவிப்புகள் இந்தியிலும் வருகின்றன. தமிழ்நாட்டுக்குள் ஓடும் ரயில்களிலேயே ஊர்ப்பெயர்கள் இந்தியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
வங்கிப் படிவங்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கின்றன. மக்கள் அப்படிவங்களை நிரப்புவதற்கு யாரையாவது நாட வேண்டியிருக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் பலவும் ‘யோஜனா’ என்று முடிகின்றன. பிரதான் மந்திரி சடக் யோஜனா, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்றெல்லாம் திட்டங்களின் பெயர்கள். இவற்றைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியும் வகையில் தமிழ்ப்படுத்துவதில் என்ன சிரமம்?
திருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு விமானங்களில் செல்வோர் பெரும்பாலும் தொழிலாளர்கள். ஆனால் எல்லா அறிவிப்புகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே இருக்கின்றன. என்ன சொல்கிறார்கள் என்று யாருக்கும் புரிவதில்லை. ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் வங்கிகளிலும் பணியாற்றுவோர் பலர் இந்தி மட்டும் தெரிந்தவர்கள். அவர்களிடம் தமிழில் கேட்டாலும் பதில் வராது. ஆங்கிலத்தில் கேட்டாலும் பதில் வராது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தும் இந்திய அளவுக்கான தேர்வுகளிலும் ஒன்றிய அரசின் தேர்வாணையம் (யுபிஎசி) நடத்தும் தேர்வுகளிலும் வினாத்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே இருக்கின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் வசிப்போர் தம் தாய்மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்கிறது. பிற மாநிலத்தவர் தமக்கு அந்நியமான ஆங்கிலத்திலோ இந்தியிலோ எழுத வேண்டியிருக்கிறது. ஒருபிரிவினருக்குத் தாய்மொழி, இன்னொரு பிரிவினருக்கு அந்நிய மொழி என்றால் இது எப்படிச் சமமான போட்டித் தேர்வாகும்?
தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்படிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தகவல்கள் கேட்டு ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு எழுதிய கடிதங்களுக்கு இந்தியில் பதில் கடிதம் வருகிறது. அதை வாசிக்க இயலாமல் திருப்பி அனுப்பிய செய்திகளைப் பார்க்கிறோம். சமீபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவுக்கு அப்படி இந்தியில் வந்த கடிதத்திற்கு அவர் தமிழில் பதில் அனுப்பிய செய்தியைக் கண்டோம்.
எல்ஐசி இணையதளம் இந்திக்கு மாறியது குறித்துத் தமிழ்நாட்டு முதல்வர் ‘இது இந்தியாவின் பன்முகத்தன்மையை அவமதிப்பது; மொழித் திணிப்பு’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ‘ஒற்றைத்தன்மையைத் திணிப்பது நாட்டின் சமநிலையைப் பாதிக்கும் செயல்’ என்று கூறியுள்ளார். அரசியல் கட்சியைச் சேர்ந்த இன்னும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
‘தொழில்நுட்பப் பிரச்சினை காரணம். உடனடியாகச் சரிசெய்யப்படும்’ என்று எல்ஐசி நிர்வாகம் விளக்கம் அளித்தது. பிறகு ‘சரிசெய்யப்பட்டது’ என்றும் கூறியது. ஆனால் இரண்டு நாட்கள் கடந்தும் இன்னும் இந்தியில்தான் இணையதளம் உள்ளது. மாறுமா மாறாதா என்று தெரியவில்லை. ஒருநாள் கண்டனத்திற்குப் பிறகு யாரும் இதில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று முடிவு செய்திருப்பார்களோ?
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கான மாற்றம் என்பது என்ன? அந்தந்த மாநில மொழி மட்டுமே தெரிந்த பல லட்சம் பேர் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் இணையதளத்தைப் பயன்படுத்தும் மாற்றத்தைச் செய்திருந்தால் அதை வளர்ச்சி என்று சொல்லலாம். ஏற்கனவே இருந்த வசதியையும் பறித்துக்கொண்டால் அந்த நிறுவனம் எப்படி வளரும்? எல்ஐசி நிறுவனத்தைப் படிப்படியாக முடக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தித் திணிப்பும் இருக்குமோ? தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இத்துறையில் கால் பதித்து முன்னேறி வருகின்றன. அவற்றுக்கு ஆதரவான செயல்பாடுகளில் ஒன்றாக இதுவும் இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
ஏற்கனவே இணையதளம் எந்தெந்த மொழிகளில் இருந்தது? ஆங்கிலம் முதன்மை மொழியாகவும் தேர்வு செய்துகொள்ளும் மொழியாக இந்தியும் இருந்திருக்கிறது. பல மொழிகள் பேசும் நாட்டில் தேர்வு மொழியாக இந்தியை மட்டும் வைத்தால் அது மொழிச் சமநிலை ஆகுமா? இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி அனைத்து மொழிகளையும் தேர்வு மொழியாக வைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்குரிய மொழியை முதன்மை ஆக்கிவிட்டு ஆங்கிலம் உட்பட அனைத்தையும் தேர்வுமொழிகளாக வைக்க வேண்டும். அது இயலாத காரியமல்ல.
மொழி ஜனநாயகம் கொண்ட நாடு என்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழியில் எல்லாம் கிடைக்க வேண்டும். அதை நோக்கி நகர்வதுதான் வளர்ச்சி; மாற்றம். நாமும் கண்டனம் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டால் போதாது. இணையதளத்தில் தமிழ் வேண்டும் என்று எல் ஐசி நிறுவனத்தை நிர்ப்பந்திக்கும் கோரிக்கை எழுப்ப வேண்டும். இனி மொழி சார்ந்த எதுவாக இருந்தாலும் தாய்மொழியில் வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்க வேண்டும். ஆங்கிலம் இருந்தால் போதும் என்று நிறைவடைந்துவிடக் கூடாது. இந்தியை வைக்க முடியும் என்றால் தமிழைச் சேர்க்க முடியாதா?
இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் பல பேர் தம் உயிரை விட்டுப் போராடிய மாநிலம் தமிழ்நாடு. நாம் உயிரை விட வேண்டாம். மொழி ஜனநாயகம் வேண்டிக் கோரிக்கையாவது வைப்போமே.
—– 21-11-24
எங்கள் ஊரிலும் இந்தியன் வங்கியின் மேலாளர்,மற்றும் இதர பணியாளர்கள் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வருகிற பெரியோர்கள் / தாய்மார்கள் மிகவும் இன்னல் படுகிறார்கள்.
நமக்கு இந்தி தெரியாது
அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது தமிழும் தெரியாது.
ரொம்ப கஷ்டம் ஐயா